நமக்கு ஏது முகமூடி?

ஒருமாதிரி சீண்டுகின்றார்கள், தூற்றுகின்றார்கள், அன்று இவன் எழுதியதை பாருங்கள் என முகத்திரையினை கிழிப்பதாக சொல்கின்றார்கள்

நமக்கு ஏது முகமூடி? இல்லா முகதிரையினை எப்படி கிழித்தார்கள்.நாம் என்றுமே திறந்த புத்தகம்

நல்லவேளையாக இவர்கள் அன்றே இருந்தால் வால்மிகியினை ராமாயணம் எழுத விட்டிருக்கமாட்டார்கள், காளிதாசனை ஆடுமேய்ப்பனாகவே இரு என வைத்திருப்பார்கள் சாகுந்தலையும் கிடைத்திருக்காது

1960களில் இருந்தால் நீ அன்னாளைய கறுப்பு சட்டை என கண்ணதாசனை விரட்டியிருப்பார்கள்,
அர்த்தமுள்ள இந்துமதம் எனும் பொக்கிஷமும் கிடைத்திருக்காது

புராணத்தில் ஒரு கதை உண்டு

ஒரு முனிவர் அவர்போக்கில் தவமிருப்பார், யாருடைய வம்புக்கும் செல்லமாட்டார். உலக நன்மையும் அமைதியும் கருதி கடவுளை நோக்கி தவமிருப்பார்

அப்பொழுது தேவர்களின் அரசனான இந்திரனும் அவர் அடிப்பொடிகளும் சம்பந்தமே இல்லாமல் அவரை போட்டு அடிக்கடி அடிக்கும், ஏ மானுடா நீ மாமிச மானுடன் என்பதை மறக்காதே என சொல்லி சொல்லி அடித்துவிட்டு எச்சரித்துவிட்டு செல்லும்

முனிவருக்கோ ஒன்றும் விளங்காது, தேவர் குல அரசன் நல்லவன் தானே அசுரன் இல்லையே பின்னர் ஏன் என் தவத்தை கலைக்கின்றான் , ஒருவேளை அசுரன் தேவர்குல வடிவில் வருவானோ என சிந்தித்தபடியே தவத்தை தொடர்ந்தார்

ஒருநாள் இந்திரனின் அட்டகாசம் உச்சத்தை எட்டிற்று, அன்று முனிவரின் பர்ணசாலை, தண்டம்,கமண்டலம், புலிதோல் வரை சிதைத்துவிட்டு சென்றுவிட்டான் இந்திரன்

மனமொடிந்த முனிவன் நான் கடவுளை நினைத்து தவமிருந்ததை தவிர என்ன செய்தேன் என கண்ணீருடன் அமர்ந்திருந்தபொழுது அவர் முன்னால் பகவான் தோன்றினார்

வெடித்து அழுத முனிவர் முறையிட்டார்

” பகவானே நான் உன் வழி தவிர எவர் வழியும் செல்லவில்லையே ஆயினும் இந்த இந்திரன் என்னையே அடிப்பது ஏன்?

மானிடா, உன் தவமும் பிரார்தனையும் வானுலகில் பிரசித்தம், உன் தவத்தை பற்றி பேசா தேவர்கள் இல்லை கடவுளர் இல்லை, அதி இந்த இந்திரனுக்கோ எங்கே தன் பதவியினை அவனுக்கு கொடுத்துவிடுவார்களோ , தன் சிம்மாசனம் பறிபோய்விடுமோ? மானிடன் ஒருவன் தன் அருகில் அமர்ந்துவிடுவானோ எனும் அச்சத்தில் உன்னை வந்து தொந்தரவு செய்கின்றான்”

“பகவானே நான் அப்படி கனவிலும் நினைக்கவில்லையே, அவன் வழிக்கே செல்லவில்லையே இது உனக்குமா தெரியாது, தவம் எம் சுதர்மம் நாம் அதனைத்தானே செய்கின்றேன், மனம் மாறிய அசுரனுக்கும் சொர்க்கவாசல் திறந்தவன் நீ, என் மனமுமா உனக்கு தெரியாது?

முனிவரே அது எமக்கு தெரியும், ஆனால் இந்திரனின் மனமே அஞ்சும்படி உம் தவம் வானோரை மகிழ்ச்சியடைய வைத்தது என்பதை வேறு எப்படி உமக்கு உணர்த்தமுடியும், உன் தவத்தை மெச்சவே அவனை அனுமதித்தோம், தொடர்ந்து உம் தவத்தில் நீர் நிலைத்திருப்பீர், உரிய நேரம் வரும்பொழுது உமக்கு உரிய வரம் கொடுக்கபடும்.

பகவானே நான் வரத்துக்கு ஆசைபட்டோ இல்லை இந்திரனின் கிரீடத்துக்கு ஆசைபட்டோ தவம் இயற்றவில்லை, இது என் கர்மா. என் சுதர்மம், இது நானே வகுத்துகொண்ட விதி. உன்னிடம் ஏதும் எதிர்பார்த்து நான் தவமியற்றவில்லை”

அக்கணமே அங்கு இந்திரனை அழைத்த பகவான் அவனை முறைத்துவிட்டு சென்றாராம், தலை குனிந்து நின்றான் இந்திரன்

இந்த கதை ஏனோ இப்பொழுது நினைவுக்கு வருகின்றது.

எமக்கு தெரியும், எமக்கு கட்சி பலம் இல்லை. மத பலமும் இல்லை, பெரும் பண பலமும் இன்னும் சாதி பலமும் எதுவுமே இல்லை

பாய்மர கப்பல் காற்றை நம்பி கடலில் தனியே பயணிப்பது போல் கடவுளின் காற்றால் இயக்கபடும் கப்பல் இது

இந்த பட்டம் எந்த வானில் எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும் என்பதை அந்த நூலே முடிவு செய்கின்றது

இது செல்ல வேண்டிய திசையும் இலக்குக்கும் அவன் கையிலே இருக்கின்றது, அவனே இக்கப்பலின் சூத்திர சக்தி

தீபம் எண்ணெயினை நம்பி எரிவது போல இம்மனம் அவனால் எரிக்கபடுகின்றது

எது நடக்க வேண்டுமோ அது அவன் சித்தபடி நடக்கும், எம் சுதர்மத்தை நாம் செய்து கொண்டே இருப்போம்.

கடமைக்கு நான் பொறுப்பு விளைவுக்கு அவனே பொறுப்பு..

“என்னால் இனி ஆவது ஒன்றுமில்லை, தெய்வமே உன் செயல் என உணரபெற்றேன்” எனும் மனநிலைக்கு வந்தவனை எதுவுமே பாதிக்காது