நல்ல நண்பன் Vella Pandi
எத்தனை காலம் வந்தாலும் கல்லூரி காலம் ஈடில்லாதது, அதில் கிடைத்த நண்பர்களும் மறக்க முடியாதவர்கள்
அவ்வகையில் எமக்கும் பெரும் நண்பன் உண்டு, அவன் ஒருவன் தான் ஆனால் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்
Vella Pandi
படித்து முடித்து ஊரைவிட்டு செல்லவே மாட்டேன் என பாரதிராஜா படத்தின் பெரிசுகள் போல நாம் சுற்றிகொண்டிருந்த பொழுதே டெல்லி, நொய்ட்டா, ஐதரபாத் பெங்களூர் என சுற்றிவிட்டு அப்படியே அமெரிக்கா பறந்துவிட்டவர் அவர்
அத்தேசமும் அவரை விடவில்லை சிக்கென பிடித்து வைத்து கொண்டது
அமெரிக்காவின் முண்ணணி கணிணி பொறியாளர் அவர். அவர் முறைத்தாலே கணினி தானாக புரோகிராம் எழுதும் என சொல்கின்றார்கள்
கல்லூரி கால நட்பு அது, இன்று அவன் அமெரிக்காவில் குடியேறிவிட்டாலும், டிரம்ப் வந்து பொடரியில் போடும் வரை அவன் சீமான் கோஷ்டியாக இருந்தாலும் எம் நட்பு பாதிக்கபட்டதே இல்லை
மிக உயர்ந்த அன்புக்கும், பண்புக்கும் சொந்தகாரன் அவன், நட்பு என்றால் என்ன எனக்கு சொல்லிகொடுத்ததே அவன்.
உண்மையான நட்பு என்ன என்பதை அனுபவ பூர்வமாக அவனிடமிருந்தே அறிந்துகொண்டேன்
குகனோடு ஐவரானோம் என்ற கம்பன் வரியும், கர்ணனுக்கு இருந்த நட்பு எனும் உணர்வும் அவனாலே இம்மனம் உணரபெற்றது
யாரிடமும் அதிகம் ஒத்துபோகாதவனும் பொல்லாத முன்கோபத்தில் ஏகபட்ட எதிரிகளை உருவாக்கி கொள்பவனுமான எனக்கு அவன் நெருக்கமான நண்பனானது மகா ஆச்சரியமே
எமக்கிருக்கும் மிக சிறிய நட்பு வட்டத்தின் பிதாமகன் அவனே
அவனை நண்பனாய் பெற்றதில் ஆயிரம் யானை பலம் இருப்பதாகவே மனம் கருதுகின்றது, என்ன ஆனாலும் அவன் எனக்கு பலமாக இருப்பான் என்பதிலே மனம் புதுதெம்பு பெறுகின்றது
நல்ல நண்பன் அமைவது மிகபெரும் ஆசீர்வாதம் அவ்வகையில் இறைவனின் ஆசி எமக்கு இருக்கின்றது
ஒரு ஆச்சரியமான குணம் அவனுடையது, அமெரிக்காவில் பென்ஸ் காரில் சுற்றிகொண்டிருப்பவன், அங்கு அவன் வாழ்வே வேறு
ஆனால் ஊருக்கு வந்துவிட்டால் பழைய சைக்கிளிலும் ஏன் முதன் முதலில் டிவிஎஸ் தயாரித்த அந்த எஸ்.எல் எனும் வாகனத்திலுமே காணலாம்
அதில் கொஞ்சமும் வருத்தமோ அசவுகரியமோ இருப்பதாக அவன் கருதுவதே இல்லை
ஏன் என்றால் அப்படித்தான், எக்காலமும் பழைய விஷயங்களை மறக்கா மனம் அவனிடம் இருக்கின்றது
வாழ்வில் யாம்பெற்ற மிகபெரிய விஷயங்களில் அவனுக்கு எந்நாளும் இடம் உண்டு
அவனுக்கு இன்று பிறந்த நாள், வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அவன் பெறட்டும்
அவன் சந்ததி அமெரிக்காவின் கொடி போல உயர பறக்கட்டும்
அவனுக்கு ஜப்பான் முதல் அமெரிக்கா வரை ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், எமக்கு ஒரே நண்பர் அவர்தான்
அவன் அனுதினமும் வணங்கும் கண்ணனிடம் அவனுக்காக வேண்டிகொள்வதை தவிர எந்த கைமாறும் அவனுக்கு எம்மால் செய்ய முடியாது
அவன் வாழ்வாங்கு வாழட்டும்…
தன் கையில் இருக்கும் புல்லாங்குழல் போல கண்ணன் அவனை காத்துகொள்ளட்டும்..
சந்தேகமே இன்றி அவன் கிருஷ்ணன், அவனின் மனமும் குணமும் அவ்வளவு உயர்வானது,
ஆனால் நான் குசேலன் என சொல்லகூட தகுதி இல்லாதவன்
குசேலனாவது அவல் கொடுத்தான் என்பார்கள், நான் அந்த அவலை கூட அவனுக்கு கொடுத்ததில்லை
