நாச்சியார் திருமொழி 1.8

நாச்சியார் திருமொழி 1.8
ஆண்டாள் கண்ணனின் நினைவுகளில் எப்பொழுதும் போல் மூழ்கிகிடந்தாள், அவன் சிலைக்கு மாலையிட்டாள், பூஜைகள் செய்தாள், அவனை அழைத்து பார்த்தாள் அவன் வரவில்லை
வெகுநேரம் காத்திருந்த அவள் சிறுமியர் விளையாடும் இடத்துக்கு சென்றாள், அவர்கள் மணல் வீடு கட்டி சொப்பு வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள்
மணல் வீடு கட்டி, பல அறைகள் கட்டி அதனில் சமையலறையும் கட்டி சொப்பு பாத்திரங்கள் வைத்து சமையல் பாவனை செய்து உற்சாகமாக விளையாடினார்கள்
ஆண்டாள் அவர்களை உற்று கவனித்தாள், அந்த சிறுமியர் வீட்டில் எப்படியெல்லாம் பெரியவர்கள் சமைப்பார்களோ அந்த பேச்சு பேசியபடி உற்சாகமாக சமைத்தன, சில சிறுமியர் அவர்கள் வீட்டு பெரியவர்கள் போல திட்டி திட்டி சமைத்தார்கள்
எல்லாம் சமைத்தாகிவிட்டது என அவர்கள் சொன்னதும் சிறுமியரெல்லாம் அமர்ந்தார்கள், அவர்களுக்கு ஆலம் இலை முன்னால் வைக்கபட்டது
ஆலம் இலையில் சாதமிட்டு குழம்பு ஊற்றுவது போல சிறிய சொப்பு பாத்திரத்தில் குச்சியினை இட்டு காட்டினார்கள், சாப்பிடுவது போல பாவனை செய்தார்கள்
அவர்கள் நடத்திய நாடக விளையாட்டினை பார்த்து புன்னகைத்தாள் ஆண்டாள், சிறுமியராய் இருக்கும் பொழுது பெரியவர்களாகி சமைக்க துடிப்பதும் பெரியவர்களான பின் அலுத்து அந்த சிறுமியராய் இருந்த காலத்தை நோக்கி ஏங்கி தவிப்பதும் மானிடர் சுபாவம் என உணர்ந்து சிரித்தும் கொண்டாள்
அந்த சிறுமியர் விளையாட்டை கண்டதும் அதை போலவே விளையாட அவளுக்கு ஆசை வந்தது, சிறுமியர் அருகில் மணல் வீடு கட்டி அவளும் சமைக்க தொடங்கினாள்
“நீ யாருக்கு சமைக்கின்றாய்?” என கேட்டனர் சிறுமியர்
“என் கண்ணனுக்கு” என்றாள் ஆண்டாள்
“அவன் வந்தால் மணல் வீட்டை இடிப்பானே, இடிக்காமல் இருக்க பாட்டு ஒன்று பாடு” என்றார்கள் சிறுமியர்
ஆண்டாள் பாடினாள்
“வட்டவாய்ச் சிறுதூதையோடுசிறுசுளகும் மணலும் கொண்டுஇட்டமா விளையாடுவோங்களைச்சிற்றில் ஈடு அழித்து என்பயன்?தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்கட்டியும் கைத்தால் இன்னாமைஅறிதியே கடல் கண்ணனே”
(வட்டமான வாயுடைய சிறிய பானையைக் கையில் ஏந்தி, அதில் மணல், சிறு குச்சிகள் ஆகியவற்றை வைத்து, வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கும் எங்களது சிற்றில்லை களைப்பதினால் என்ன பயன்? அதனைத் தொட்டு, உதைத்து, எங்கள் மனத்தை இடித்துவிட வேண்டாம் கண்ணா! கையில் சுடர் விடும் சக்கரம் ஏந்தியவனே! கசந்த நெஞ்சத்தோடு நாங்கள் இருந்தால், எங்களுக்கு, கரும்புக்கட்டியும் ருசிக்காது என்பதை நீ அறிவாய் அல்லவா?)
ஆண்டாள் பாட பாட எல்லோரும் பாடினார்கள், பாடி முடித்ததும் சிறுமியர் கேட்டார்கள் “கண்ணன் வராமல் எப்படி பரிமாறுவாய்”
ஆண்டாள் சொன்னாள் “அவன் நான் அழைத்தால் வருவான்” என்றாள், அப்படியானால் “அழைத்து பார்” என சிறுமியர் சொல்ல “கண்ணா கண்ணா ” என அவள் அழைத்தாள் அவன் வரவில்லை
தொடர்ந்து அழைத்தாள் அவன் வரவே இல்லை
ஆண்டாளை பரிகசித்தபடி சிரித்தனர் சிறுமியர், ஆண்டாளுக்கு வெட்கமும் அவமானமும் வந்தது, கண்ணனை நினைந்து அழுதபடி அப்படியே அமர்ந்திருந்தாள்
சிறுமியர் விளையாடி முடித்து சென்றனர், ஆண்டாள் அங்கே அமர்ந்திருந்தாள், “அவனால் நாம் அவமானபடுவது புதிதா என்ன?” என கண்களை துடைத்து கொண்டவளுள் ஒரு வைராக்கியம் தலை தூக்கிற்று
அவனுக்கு வகை வகையாய் சமைத்து வைத்து அழைத்து பார்ப்போம் என எண்ணியவள் வீட்டுக்கு சென்று பலவகை உணவுகளையும் அவனுக்கு பிடித்த வெண்ணையும் அவலையும் மறக்காமல் எடுத்து வந்து அவன் சிலை முன் வைத்தாள்
“சிறுமியர் முன் என்னை அவமானபடுத்தியாய், அதாவது விளையாட்டு கூடம் உண்ண ஒன்றுமில்லை, இதோ பல வகையாக சமைத்திருக்கின்றேன் வா” என அழைத்தாள்
கண்ணன் வரவில்லை, பலமுறை அழைத்தும் அவன் வரவில்லை
அப்படியே படுத்திருந்தவள் தன்னை அறியாமல் தூங்கினாள், அப்பொழுதுதான் அந்த கனவு வந்தது
அழகிய ஆற்றங்கரையின் செழித்த புற்களை பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன, ஆண்டாள் கண்ணனுக்கு அதே உணவுகளை எடுத்து செல்கின்றாள், புல்லாங்குழல் இசைத்துகொண்டிருக்கும் கண்ணன் ஆண்டாளை கண்டவுடன் மரத்தடியே அமர்கின்றான், ஆண்டாள் கலயம் கலயமாக கொண்டுவந்திருக்கும் உணவுகளை ஒவ்வொன்றாக படைக்கின்றாள்
கண்ணன் ஆசை ஆசையாக வாங்கி உண்கின்றான், அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ஆண்டாள், அவர்கள் சம்பாஷனை தொடங்கிற்று
“என்ன பார்க்கின்றாய் ஆண்டாளே?
நமக்கு பிடித்தவர்களுக்கு சமைப்பதும் அவர்களை உண்ண வைத்து பார்ப்பதும் எவ்வளவு சுகம் தெரியுமா கண்ணா?
நமக்கு பிடித்தவர்கள் தரும் உணவு எவ்வளவு சுவை தெரியுமா ஆண்டாளே?
அதனால்தான் நான் அவ்வளவு அழைத்தும் வரவில்லையா, என்னை அவமானபடுத்துவதே உனக்கு வாடிக்கை” என்றவள் முகம் சிவந்தாள்
“ஆண்டாளே என்னாயிற்று” என்றான் கண்ணன்
ஆண்டாளிடம் பதிலே இல்லை , முகம் திருப்பி கொண்டாள்
புன்னகைத்த கண்ணன் கேட்டான் “அதென்ன இன்று பாடலெல்லாம் பாண்டம், சமையல் என இருந்தது?” என்றான்
“மனதுக்கு பிடித்தவனுக்கு சமைத்து போடுவதை விட பெண்ணுக்கு என்ன ஆசையும் கனவும் இருக்கமுடியும், ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை” என்றவள் செல்லமாக தலையாட்டிகொண்டாள்
“அதனால்..” என்றான் கண்ணன்
“உனக்கு சமைப்பகடாத பாத்திரங்கள் ஏன் இருக்க வேண்டும்? நீ வந்து உண்ணாத வீடு எதற்கு இருக்க வேண்டும், அதனால் வா வந்து இடித்துவிடு ” என அழைத்தேன் என்றாள்
கண்ணன் அவளை தொட்டு அணைத்து கொண்டான், கோபம் மறந்து அவன் நெஞ்சில் சரிந்து சொன்னாள் ஆண்டாள்
“கண்ணா என் தோழியரெல்லாம் மணமுடித்துவிட்டனர், ஒவ்வொருவரும் அவளவள் கணவனுக்கு சமைத்து பரிமாறும் கதையெல்லாம் அவ்வளவு சுவாரஸ்யம்,எவ்வளவு பாசம்? எவ்வளவு அன்பு? எவ்வளவு அன்னோன்யம், சில நேரம் அவள் கணவன்கள் அவளுக்கு ஊட்டியும் விடுவார்களாம்
எனக்கு மட்டும் ஏன் கண்ணா ஒன்றுமே அப்படி நடக்கவில்லை, நானும் பெண் அல்லவா? எனக்கும் ஆசை உண்டல்லவா? நான் உன்னை நினைத்துத்தானே இப்படி நாளை இழந்து கொண்டிருக்கின்றேன், இன்னும் எத்தனை நாளைக்கு கண்ணா
சமையலறையில் சமைக்கும் பொழுதெல்லாம் உன் நினைவு, உன்னைவிட்டு உண்கின்றோம் எனும்பொழுது எனக்கு கரும்புகட்டியும் கசக்கின்றது கண்ணா
கண்ணா இனியும் என்னால் தாமதிக்கமுடியாது” என்றவளை தலையினை கோதியபடியே பார்த்து கொண்டிருந்தான் கண்ணன்
“கண்ணா நான் செய்வது தவறு அதனால் திருத்திகொள்வேன் என்றுமட்டும் நினைக்காதே, நினைவு தெரிந்த நாள்முதல் உன்னை மட்டுமே அறிந்து நினைந்து வளர்ந்தவள் நான், என் மனதில் உன்னை தவிர வேறு சிந்தனை வந்தால்தான் தவறு
என்னை ஊரறிய மணம் செய்து உன் அருகே வைத்துகொள் கண்ணா, நான் உனக்கு சமைத்து பரிமாறி உன்னை கவனித்து என் பிறவியினை தீர்க்க வழிசெய் கண்ணா இல்லாவிடில் இந்த ஆசைபட்டது தவறு என என்னை கொன்றுவிடு கண்ணா..” என்றவள் அதற்கு மேல் பேசமுடியாமல் கேவினாள்
கண்ணன் அவளை வாஞ்சையுடன் நோக்கினான், அவன் மார்பில் புதைந்து அழுதாள் ஆண்டாள்
“நான் வெறும் மானிட பாண்டம் கண்ணா, வெறும் தோல்பாண்டம் சில எலும்பு குச்சிகளில் நிற்கின்றது. இந்த வெறும் பாண்டம் உனக்கு ஏங்குவது தவறென்றால் அந்த பாண்டத்தில் நிறைந்திருக்கும் உன் நினைவுகளை கலைத்துவிடு, சிதைத்துவிடு
உன் கையில் இருக்கும் சக்கரம் எல்லாவற்றையும் அறுக்கும் அல்லவா? என்னில் இருந்து உன் நினைவினையும் அகற்றிவிடு, தினம் தினம் கசந்த வலியோடு என்னால் வாழமுடியவில்லை கண்ணா”
கண்ணன் தன் மூச்சுகாற்று அவள் முகத்தில் படும்படி அருகே வந்து சொன்னான் ” ஆண்டாளே எனக்காக ஒரே ஒரு துளசி இலை வைத்து வணங்கினாலே மறக்காதவன் நான், எனக்கு இலையிட்டு சோறிடவேண்டும் என்ற உன் விருப்பத்தை மறுப்பேனா
எல்லாவற்றுக்கும் காலம் வரவேண்டும் ஆண்டாளே, ஒருநாள் நிச்சயம் உன்னை ஊரறிய நான் ஏற்றுகொள்வேன் அன்று பானை பானையாக ஊருக்கே விருந்தளிக்கலாம்” என்றான்
“சத்தியமாக..” என்றாள் ஆண்டாள்
அவள் கையினை பிடித்து அதில் தன் புல்லாங்குழலை வைத்து “சத்தியமாக” என சொன்னான் கண்ணன், “கண்ணா…” என ஓங்கி அவன் மேல் சரிந்தாள் ஆண்டாள்
கனவு முடிந்தது, தான் இவ்வளவு நேரம் உறங்கியிருகின்றோம் என்பதை உணர்ந்தவள் ஏறிட்டு பார்த்தாள், அவள் சமைத்து வைத்த எல்லாமும் காலியாகி இருந்தது, உணவு இருந்த பானையில் பூமாலை இருந்தது
புன்னகைத்த ஆண்டாள் அந்த மாலையினை எடுத்து தலையில் சூடிகொண்டாள், அவள் மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருந்தது, கண்ணன் சிலை எடுத்து தன்னோடு அணைத்து கொண்டாள்
(இப்பாடலின் பொருள் சித்தர்களும் ஆன்றோர்களும் சொன்ன பொருளேதான் உடலை “ஒன்பது வாசல் பாண்டம்” என்பார்கள் சித்தர்கள், ஒன்பது வட்ட வடிவ துளைகள் கொண்ட உடல் இது, அந்த உடலை பாண்டம் என்றும் அதில் இருக்கும் எலும்புகளை குச்சிகளாகவும் கொண்டு சொல்லபடும் தத்துவம் இது
இந்த சதைபாண்டத்தின் விருப்பத்துக்கு , எலும்புகள் தாங்கிய அந்த ஒன்பது வாயில் பாண்டத்தின் விருப்பத்துக்கு ஆடும் அறியாமை வாழ்வு இது, இந்த பாண்டம் உடையும் என்றோ இது அழியகூடியது என்றோ கருதாமல் மானிடர் ஆடிகொண்டே இருக்கின்றனர்
கண்ணா பற்றருக்கும் உன் சக்கரத்தை வீசி இந்த பாண்டத்தில் இருந்து பற்றை விலக்குவாயாக, எந்த சுவைக்கும் அடிமையாகாத கசப்பையும் இனிக்கும் சர்க்கரையும் ஒரே நோக்கில் எடுக்கும் பக்குவத்தை எமக்கு தருவாயாக‌
இந்த உடலின் எந்த சுவைக்கும் சுகத்துக்கும் எங்களை அடிமையாக்காதே, உடலுக்கும் சுவைக்குமான (எல்லா இன்பங்களையும்) உன் சக்கரத்தால் அறுத்து போடு. எல்லா நிலைகளையும் எல்லா விஷயங்களையும் சமமாக நோக்கும் மனதை கொடு, துன்பம் இன்பம் கண்ணீர் மகிழ்ச்சி அழுகை சந்தோஷம் என எல்லாவற்றையும் ஒன்றே போல் எடுக்கும் பக்குவத்தை கொடு
அந்த பக்குவத்தில் இந்த உடல்பாண்டம் நிலையற்றது என்பதையும் நிலையானது உன் திருவடி எனும் ஞானத்தையும் அருள்வாயாக என்பது பொருள்)