நாச்சியார் திருமொழி 2.2

அந்த அழகான மாலையில் மெல்லிய இளம் வெயில் எழுந்திருந்தது, நீரும் பசுமையும் நிறைந்த வயல்கள் ஊடாக‌ இதமான காற்று வீசிகொண்டிருந்தது, ஆவினங்கள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன தாய்பசுக்களை கன்றுகள் அழைத்து கொண்டிருந்தன‌

ஆண்டாள் அந்த பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள், மரத்தில் பறவைகள் பேசிகொண்டிருந்தன, ஆண்டாள் அச்சிறுமிகள் கட்டும் மணல் வீட்டை பார்த்து கொண்டிருந்தாள்

ஒரு ஆலிலை மெல்ல அவள் மடியில் விழுந்தது, காண்பவை காணாதவை எல்லாவற்றிலும் கண்ணனையே தேடும் அவள் அந்த இலையிலும் அவனையே கண்டாள், அந்த உற்சாகத்தில் பாடினாள்

“இன்று முற்றும் முதுகு நோவ
இருந்து இழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும்
ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலைமேல்
துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்றனக்கு எங்கள்மேல்
இரக்கம் எழாதது எம் பாவமே”

பாடலை “எம் பாவமே” என பாடி முடிக்கும் பொழுது அவள் குரல் லேசாக விம்மிற்று, அந்த சோகத்துடன் மரத்தடியில் சாய்கின்றாள்

அவள் நினைவுகள் கண்ணனை சுற்றுகின்றன, அந்நேரம் ஒரு விழுது மெல்ல ஆடுகின்றது ஆண்டாள் அதை கண்டும் காணாதவள் போல் இருக்கின்றாள்

இன்னொரு விழுது அதோடு சேர்ந்து இணையாக ஆடுகின்றது, ஆண்டாள் அதனை கூர்ந்து நோக்குகின்றாள் அந்த ஊஞ்சலில் கண்ணன் உருவம் தெரிகின்றது

ஆண்டாள் கண்ணன் வந்ததை அறிந்தும் அவள் போக்கில் இருக்கின்றாள், கண்ணன் தன் வழக்கமான சிரிப்புடன் ஊஞ்சலில் ஆடியபடியே கேட்கின்றான்

“ஆண்டாளே, என்ன பாடலில் சோகம் தெறிக்கின்றது?”

ஆண்டாள் முகத்தில் சலனமின்றி சொன்னாள், “காலையில் இருந்து தேடிகொண்டிருக்கின்றேன், நீயோ என்னை பற்றி கவலைபடாமல் உன் சவுகரியத்துக்கு வந்திருக்கின்றாய்” என அலுத்து கொண்டாள்

கண்ணன் சிரித்து கொண்டே கேட்டான் “இந்த மண் வீடு கட்டியா முதுகு வலித்துவிட்டது?”

‘கண்ணா நான் பாடிய பாடலின் பொருள் புரியவில்லையா?” என கொஞ்சம் போலி கோபம் அடைந்தாள் ஆண்டாள்

“ஆமாம், மண் வீட்டை விழுந்து விழுது கட்டினேன், அதனால் முதுகுவலி என்கின்றாய். இதை ஏன் கட்ட வேண்டும்? இப்பொழுது நோக வேண்டும்” என சொல்லிவிட்டு அவன் போக்கில் ஆடிகொண்டிருந்தான் கண்ணன்

“கண்ணா…” என்றவளை ஊஞ்சலை நிறுத்தி பார்த்தான் கண்ணன், அவளும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்

மெல்ல ஊஞ்சல் ஆட ஆட அவர்கள் பேச்சும் தொடர்ந்தது

“ஏன் இன்று நான் ஆலிலை மேல் மிதந்து வந்ததை இன்று பாடினாய்?

ஆலிலை என் மேல் விழுந்தது, அதை கொண்டு பாடினேன்

எதை கண்டாலும் என் நினைவுதான் வருமா ஆண்டாளே?

உன்னை தவிர வேறு எதை காணமுடியும் கண்ணா, காண்பவை எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன் நீ அல்லவா?” சொல்லிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஆண்டாள். கண்ணன் மெல்லிய மூச்சுடன் பேசினான்

“அந்த பாட்டுக்கு நான் பொருள் சொல்லட்டுமா?

ம்ம்.. சொல் கண்ணா

அனுதினமும் குனிந்து பூ பறிந்து, குனிந்து பூ தொடுத்து, என் குட்டி சிலையினை குனிந்து அலங்கரித்து, உன் வீட்டு குட்டி தேரில் என்னை குனிந்து இழுத்து, எனக்கு குனிந்து பூஜை செய்து, குனிந்து என்னை வணங்கியதைத்தானே பாடினாய்?” என அர்த்தமான புன்னகை பூத்தான் கண்ணன்

கண்களை விரித்த ஆண்டாள் “கண்ணா…” என அவனை தழுவிகொண்டாள்

“சொல் ஆண்டாளே, அதானே…

கண்ணா, மண் வீட்டை நிஜவீட்டாக கட்டும் குழந்தைகளை போல உன்னை நான் நினைத்து வீண் கணவு காண்கின்றேன் என்பது எனக்கு தெரியும் ஆனாலும் அந்த கற்பனையிலும் ஒரு பரமசுகம் உண்டு கண்ணா, நீ வந்து என் மயக்கள் தெளிவிப்பாய் என்றால் நீயும் வரவில்லை என்னை மணக்கவுமில்லை

ஆண்டாளே இதோ வந்துவிட்டேனே?

நீ எப்பொழுதும் விளையாடுவாய் கண்ணா, என்னை ஊரறிய மணக்கவும் மாட்டாய், அப்படியே இந்த சிறுமதிகாரியின் மனகோட்டை பலிக்காது என்பதை புரியவைக்கவும் மாட்டாய்

இன்னும் சொல் ஆண்டாளே..

என்ன சொல்வது, அன்று உலக உயிர்களுக்காக ஆலிலையில் பாலகனாய் வந்தாய், அப்பொழுது உனக்கு எல்லா உயிர்மேலும் பாசம் இருந்தது, என் மேல் உனக்கு பாசமும் அக்கறையும் இருந்தால்தான் எப்பொழுதோ வந்து என்னை மணந்திருப்பாயே, நான் என்ன பாவம் செய்தேனோ எனக்கு தெரியவில்லை, பாவத்தால் சாபம் பெற்று உன் அருள் இன்னும் பெறாமல் இருகின்றேன், கண்ணா எனக்கொரு வரம் கொடுப்பாயா?

என்ன ஆண்டாளே

பாவிகளெல்லாம் இறைவனுக்கு விருப்பமானவர்கள் இல்லையாம், ஊழிகாலத்தில் பாவிகளை எல்லாம் அழித்துவிட்டு புதிய உயிர்களை பகவான் படைப்பானாம். என்னை இப்பொழுதே தண்டித்துவிட்டு அடுத்த பிறப்பில் உனக்கு ஏற்ற பெண்ணாக படைப்பாயா கண்ணா?”

அங்கே அமைதி நிலவிற்று, ஆண்டாளிடம் இருந்து வந்த விசும்பல் மட்டும் கேட்டது. கண்ணன் அவளை தொட்டு அந்த மண் வீட்டை பார்க்க சொன்னான், அது பெரும் அழகான மாளிகையாக ஒளிவீசிற்று.

ஆண்டாளே இப்படி உன் மனகோட்டையும் ஒரு நாள் நிஜமாகும் என்றான், ஆனந்தமாக அவன் தோள் பற்றி சாய்ந்து கொண்டாள் ஆண்டாள்.

கண்ணன் சிரித்து கொண்டே சொன்னான், “இந்த ஏக்கபாடலிலும் ஒரு தத்துவம் அழகாய் சொன்னாய் ஆண்டாளே

என்ன தத்துவம் கண்ணா?

மானிடர்கள் இந்த மண்ணில் குனிந்து குனிந்து பொருள் தேடுகின்றார்கள். வயலோ, தங்க சுரங்கமோ, காடோ, மேடோ, கிணறோ, ஆற்றங்கரையோ எல்லா இடங்களிலும் குனிந்து குனிந்து முதுகு நோக பாடுபடுகின்றார்கள்

அப்படி பாடுபட்டு இந்த பூமியில் பெரும் வீடும் மாளிகையும் கட்டுகின்றார்கள், நிரந்தரமாக இந்த உலகிலே தங்க போவது போலவும், இந்த பூமி அவர்களுக்கு நிரந்தரம் என்பது போலவும் பாடுபட்டு கட்டுகின்றார்கள், இதெல்லாம் நிரந்தரமில்லை என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை

சிறுமணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்? இந்த மணல் வீடு ஒரே நாளில் அழியும் அவர்கள் கட்டிய வீடு சில காலம் கழித்து அழியும் அவ்வளவுதான்” என சொல்லி புன்னகைத்தான்

ஆண்டாள் மெல்ல சொன்னாள் “நானும் ஒரு தத்துவம் சொல்லட்டுமா?”

“சொல் ஆண்டாளே” என்றான் கண்ணன்

“ஊழிகாலம் என்றால் உலக முடிவு என்பது ஒருபக்கம் இருக்கட்டும் கண்ணா, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் கடைசிகாலம்தான் அவன் ஊழிகாலம். அவனுக்கென இருக்கும் உலகம் அன்றோடு அவனுக்கு அழிந்துமுடிகின்றது அதுதான் அவனுக்கு ஊழிகாலம்

அந்த கடைசி காலத்திலாவது ஆலிலை மேல் நீ வந்தது போல வந்து அதை அவன் கண்டால் அவன் முக்தி அடைவான், கடைசி காலத்திலாவது ஆத்மா உன்னை தேட வேண்டும் கண்ணா..”

“ஆண்டாளே.. ” என அவளை அணைத்து கொண்டான் கண்ணன்

இருவரும் ஊஞ்சலில் இருந்து இறங்கினார்கள், மணல் வீடாய் இருந்து மாளிகையான வீட்டுக்குள் நுழைந்தார்கள், ஆண்டாள் மெல்ல கண்ணன் கையினை பற்றியிருந்தாள், அதிலிருந்து மெல்ல கரைந்தான் கண்ணன், அந்த மாளிகையும் மெல்ல மறைந்தது

மாயம் நீங்கியதில் தன்னிலைக்கு வந்த ஆண்டாள் மெல்ல சிரித்து கொண்டு நடந்தாள்

( பாடலின் நேரடி பொருள் இதுதான்

இன்று முழுவதும், குனிந்து, நிமிர்ந்து, முதுகு நோக, மணல் வீடு கட்டினோம் நாங்கள். நீ இங்கே வந்து, கண் குளிரப் பார்த்து எங்களது மனத்தினை மகிழ்வடைய செய்ய வேண்டும் பெருமானே. முன்பொருநாள், ஊழிக்காலத்தில், ஆலிலையில் துயின்ற ஆதியே! என்றும் எங்கள் மேல் இரக்கம் உனக்கு வராதது (அதாவது எங்கள் சிற்றிலைக் காண வராதது), நாங்கள் செய்த பாவமே. வேறென்ன சொல்வது? என பொருள்

இதன் உள்ஞான பொருள் வேறு

மானிடர் இந்த உலகில் வயலில் இருந்து எல்லா இடத்திலும் குனிந்து இடுப்பு நோக பாடுபட்டு பொருள் சேர்க்கின்றனர், அப்படி சேர்த்துவிட்டு தங்கள் கடைசி காலத்தில் மரண தருவாயில் இறைவன் வருவானா என தவிக்கின்றனர்,

வாழ்வில் புண்ணியம் செய்தோரும் அவனை நம்பியோரும் தேடும்பொழுது பகவான் வருகின்றான், ஊழிகாலத்தில் வந்தது போல் வந்து காட்சி கொடுத்து அணைக்கின்றான். அவனை நம்பாதோர் செய்த பாவத்துக்காக அவன் வருவதில்லை இன்னொரு பிறப்புக்கு தள்ளிவிடுகின்றான்)