நாச்சியார் திருமொழி 23
ஆண்டாள் நாளெல்லாம் கண்ணனை தேடினாள் அவன் வரவில்லை, அவனை அவள் மிகவும் தேடுகின்றாள் என்பதை அறிந்ததால் கண்ணனும் வரவில்லை, அவன் வரமாட்டான் என தெரிந்தாலும் அவள் மனம் தேடுவதை நிறுத்தவில்லை
அணைகட்டினாலும் கசியும் நீர்போல் மனம் அவனை தேடிகொண்டுதான் இருந்தது
அவன் நினைவுகளோடு கண்ணன் சிலைமுன் அப்படியே கண் அயர்ந்தாள் ஆண்டாள், மெல்லிய தென்றல் அவளை தீண்ட அந்த சுகந்தத்தில் தன்னை அறியாமல் தூங்கினாள், அந்த தூக்கத்தில் அவளுக்கு கனவு வந்தது
அந்த கனவில் அவள் களத்தில் குளித்து கொண்டிருக்கின்றாள், தோழிகளோடு குளித்து கொண்டிருக்கின்றாள், கதையும் சிரிப்பும் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தவர்கள் திடீரென குருந்தை மரத்தை நோக்கி அலறினர்
அங்கு அவர்கள் ஆடைகளோடு அமர்ந்திருந்தான் கண்ணன்
ஆண்டாள் சற்று ஆத்திரம் கொண்டவளாக தென்னக பாணியில் “எலேய்..” என்ற வார்த்தையுடன் பாடுகின்றாள்
“எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணிலொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமேபோவோம்
பட்டைப் பணித்தருளாயே”
(எலேய்…இது என்ன சிறுபிள்ளைத்தனமான செயல்.என் வீட்டு மக்கள் பார்த்தால், மீண்டும் எங்களை இங்கே வர விடமாட்டார்கள்.நீ செய்யும் செயல் போக்கிரித்தனமனது என் நீ உணரவில்லையா?
குருந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து இருப்பவனே, வில்லால் இலங்கையை அழைத்தவனே, நீ கேட்டது எல்லாம் தருவோம்.எங்கள் பட்டாடைகளைத் தந்து அருள்வாயாக, யாரும் பார்க்கும் முன் எங்கள் வீடு செல்ல அருள்வாயாக)
அவள் எல்லோர் முன்னிலையிலும் ஏலேய் என சொன்னதை கேட்டதும் கண்ணனின் கண்கள் சிவந்தன, அவனுக்குள் ஒரு அவமானம் குடிகொண்டது, ஆத்திரத்தில் உடைகளை வீசிவிட்டு அவன் போக்கில் சென்றுவிட்டான்
ஆண்டாளுக்கு கவலையும் அச்சமும் உண்டாயிற்று, கண்ணன் எவ்வளவுக்கு சிரிப்பானோ அவ்வளவுக்கு கோபபடுவான் என்பது அவளுக்குத்தான் தெரியும்
கரைக்கு வந்து ஆடைகளை அணிந்தவளுக்கு மனம் ஒப்பவில்லை, குளத்து நீர் உடலில் இருந்து துடைக்கபட்டாலும் கண்களில் நீர் வழிந்துகொண்டே இருந்தது
நனைந்த ஆடைகளை பிழியும் பொழுது அவள் கண்ணீரும் சேர்ந்து கொண்டது
ஈரதுணிகளை தோளில் போட்டு கொண்டவள் தோழியரை செல்ல சொன்னாள், குறிப்பறிந்து அவர்களும் அகன்றனர்
அந்த குளகரையிலே “கண்ணா…” என அழுதபடி அழைதாள் ஆண்டாள், அவன் வரவில்லை
மறுபடி மறுபடி அழைத்தவள் அப்படியே கால்மடக்கி அமர்ந்து அழுதாள், “கண்ணா… நான் உன்னை செல்லமாகத்தான் அழைத்தேன்…” என சொல்லி சொல்லி மருகினாள்
அவன் வரவில்லை, கண்ணா என அவள் ஓங்கி கத்தி அழுதபொழுது குருந்தை மரத்தடியில் இருந்து குழலோசை கேட்டது, ஆண்டாள் மகிழ்ந்து மரம் நோக்கி ஓடினாள்
அந்த குருந்தை மரத்தடியில் குழலிசைத்தபடி அவளை நோக்கி சிரித்தான் கண்ணன், ஆண்டாள் கண்களை துடைத்து கொண்டு பார்த்தாள், அவன் சிரிப்பது தெரிந்தது
ஓடிவந்து அவனை கட்டி கொண்டாள், அவள் முந்தானையால் அவள் கண்களை துடைத்து நெற்றியில் முத்தமிட்டான கண்ணன்
அவள் அவனை இன்னும் இறுக பற்றிகொண்டாள்
சில நொடி மவுனத்துக்கு பின் கண்ணன் கேட்டான், ஏன் அப்படி சொன்னாய் ஆண்டாளே?
மூக்கை உறிஞ்சியபடி கண்ணீர் வற்றும் குரலில் சொன்னாள் ஆண்டாள் “மன்னித்து கொள், ஒரு குழந்தையினை சொல்லும் வேகத்தில் சொல்லிவிட்டேன்”
கண்ணன் சிரித்து கொண்டான், “என்னை மாயன், மாயாவி, கருப்பன், அப்படித்தான் அழைப்பார்கள், எலேய் என அழைத்தது நீதான்” என்றான்
“உனக்கு கோபம் வரவில்லையா..” என்றாள் ஆண்டாள்
“உன்மெல் எப்படி ஆண்டாளே வரும்..” என்றவன் அவள் கழுத்தோடு கைவைத்து அணைத்துகொண்டான், ஆண்டாளுக்கு உற்சாகம் பெருகிற்று
“அந்த பாடலுக்கு அர்த்தமென்ன ஆண்டாளே” என்றான் கண்ணன்
“இப்படி சிறுபிள்ளை தனமாய் செய்தால் நாங்கள் எப்படி வீடு செல்லமுடியும், எங்கள் வீட்டில் உள்ளோர் இதை கண்டால் இங்கு விடுவார்களா? அதனால்தான் எங்கள் ஆடைகளை தா என வேண்டினேன்.. அப்படியே..” என்றவள் கண்ணனை விடுவித்து ஒதுங்கி நின்று சிரித்தாள்
“என்ன சிரிக்கின்றாய் ஆண்டாளே” என்றான் கண்ணன்
“இல்லை..” என தலையாட்டியவளை நோக்கி சொல் என அவள் கைகளை விலக்கினான் கண்ணன்
“இப்படியெல்லாம் ஏன் ஒளிந்திருக்கின்றாய், என்னை மணம் செய்ய பட்டாடடையுடன் வந்து பேசி முடித்துவிடலாமே, பட்டு கட்டி மணவறையில் அமர்ந்தபின் ஏன் நீ இப்படி ஒளியவேண்டும்? அதானால் பட்டாடை தா” என வேண்டினேன்” என்றாள், அதை சொல்லும்பொழுது நாணம் அவளை முழுக்க ஆட்கொண்டிருந்தது
“நேரம் வரும்பொழுது பட்டும் நகையுமாக உன்னை சந்திக்க இல்லம் தேடி வருவேன்” என்றான் கண்ணன், அவளுக்கு மகிழ்ச்சி ஒவ்வொரு அணுவிற்கும் கலந்தது
“என்னை ஏன் வில்லால் இலங்கையினை அழித்தவன் என்றாய்?” என்றாள் ஆண்டாள்
“நீ வில்லால் இலங்கையினை அழித்த வல்லவன் அல்லவா? தொலைவில் இருந்தே எதிரிகளை அழித்த நீ, இப்படி இந்த அற்ப காரியத்தை இங்கு குளக்கரையில் செய்யலாமா” என்றேன் என்றவள் சிரித்துகொண்டாள்
கண்ணன் அமைதியாக அமர்ந்திருந்தான், அவன் அருகில் அமர்ந்தபடி அவன் மடியில் தலைவைத்து படுத்து கொண்டாள் ஆண்டாள், கண்ணனின் அமைதி தொடர்ந்தது
“என்ன யோச்னை கண்ணா.. ” என்றாள் ஆண்டாள்
“ஒவ்வொரு பாடலிலும் எனக்கொரு செய்தியும் உலக மாந்தருக்கொரு செய்தியும் சொல்பவள் நீ, இப்பாடலில் எனக்கு எதுவுமே பிடிபடவில்லை” என்றான் கண்ணன்
“கீதை சொன்னவனுக்கு இந்த கோதை சொன்னது புரியவில்லையா” என மெல்ல நகைத்தவள் அவன் மடியில் தலைவைத்தபடியே கேட்டாள்
“புரியவில்லை ஆண்டாளே” என அவன் சொன்னதும் மெல்ல எழும்பி தன் தலைமுடியினை சரிசெய்தவள் கால்களை மடக்கி அமர்ந்து அணைத்தபடி சொன்னாள்
“கண்ணா இந்த குளம் போன்றது இந்த உலகம், குளத்தில் நீராட வருவது போல வந்திருப்பது மானிட பிறப்பு
எங்கிருந்து ஆத்மா வந்தது ஆண்டாளே
அதான் சொன்னேனே, வீட்டில் இருந்து என்று? வீடு என்றால் மோட்சம் வேறு லோகம் என உனக்கு தெரியும் அல்லவா?
ஆமாம் ஆண்டாளே
கண்ணா இந்த மானிட பிறப்பில் ஆன்மாவானது இந்த பிறவி குளத்துக்கு வருகின்றது, அது உரிய ஞானம் எனும் ஆடை அணிந்தால்தானே மறுபடி வீட்டுக்கு செல்லமுடியும்
ஆமாம்
அந்த ஞானத்தைத்தானே உன்னிடம் கேட்டு மன்றாடுகின்றது இந்த உலகம்
அதற்கு ஏன் என்னை எலேய் இளம்பயலே என்றாய்?
உனக்கு தெரியாதா கண்ணா இளமையிலே ஞானத்தை தேட வேண்டும் இளமையிலே ஆத்மா ஞானத்தை தேடி தன்னை காக்க வேண்டும் என்பதைத்தான் அப்படி சொன்னேன்
அப்படியா ஆண்டாளே
ஆமா, வானலோகத்து பரம்பொருளிடம் இருந்து இந்த ஜீவாத்மா பிரிந்து வருகின்றது, அதாவது இந்த லவுகீக குளத்துக்கு சில கர்மா களைய வருகின்றது
ஓ.. மானிடர் உடல் அழுக்கை களைய வருவது போல ஆத்மா தன் கர்ம அழுக்கை தீர்க்க வருகின்றது அல்லவா?
ஆமாம் கண்ணா அதேதான்
இங்கே ஏன் வில்லாளன் என சொன்னாய் ஆண்டாளே
கண்ணா வில் என்பது மன்மதனின் அடையாளமும் கூட, அந்த மன்மதனின் தன்மைகளால் இளம் வயதில் பல தடுமாற்றங்கள் வரகூடும், அதையும் தாண்டி உன்னிடம் இருந்து அருள் வேண்டும் அல்லவா? அந்த ஞானம் தானே அவமானங்களை தடுக்கும் கவசம்
சொல் ஆண்டாளே.
அந்த உடலுக்கு ஆடைதானே மானம், அப்படி இந்த ஆத்மாவுக்கு ஞானம் ஒன்றுதானே மானம், அதைத்தான் உன்னிடம் கேட்கின்றோம், எங்களுக்கு ஞானம் தான் நாங்கள் வீடுபேறு எனும் மோட்சம் அடைய ஞானம் தா என மறுபடி மறுபடி கேட்கின்றோம்
ஏதோ வீட்டில் இருந்து ஆட்கள் வருவார்கள் மறுபடி குளத்துக்கு நீராட விடாமாட்டார்கள் என்றாயே?
ஆமாம், ஞானமில்லா ஆன்மா இறைவனுக்கு உவப்பானது அல்ல, ஆடையில்லா மானிடரை சமூகம் விரும்பாது அல்லவா? அப்படி ஞானமில்லா ஆன்மாவினை பரம்பொருள் நல்லகதியில் பிறக்க வைக்காது அதாவது மறுபிறவி மானிட பிறவியாக இராது
ஆம் கண்ணா, இந்த பிறவி எனும் குளத்தில் விழுந்துவிட்டோம் இந்த பிறவியில் இருந்து ஈடேற ஆன்மாவுக்கு ஞானம் எனும் ஆடை தேவை, அந்த ஆடை அணிந்துத்தான் வீடு எனும் மோட்சத்துக்கு செல்லமுடியும், நல்ல ஆடை அணிந்தால் இங்கு கவுரவம் அதிகம் அல்லவா? அப்படி பெரும் ஞானம் பெற்றால் ஆத்மா கவுரவமாக மோட்சம் செல்லும், பரம்பொருளும் மகிழ்வார்
சரியாக சொன்னாய் ஆண்டாளே..
கண்ணா இளமையிலே மனிதன் தெய்வத்தை தேட வேண்டும், குளத்தில் நிற்கும் நிலை போன்றது ஆத்மாவின் நிலை, அது கரையேறி வீடு செல்ல ஞானம் எனும் ஆடை வேண்டும், அறிவு எனும் அணிகலன் வேண்டும், நீ அந்த ஞானத்தை தா கண்ணா, ஆடையின்றி நிற்கும் உடல் போல ஞானமற்று நிற்கும் ஆத்மா கூனி கூறுகி நிற்கும் அல்லவா? அது வீடு எனும் மோட்சம் செல்ல ஞானத்தை ஆடையாக தா கண்ணா, இளம் வயதிலே உன்னிடம் ஏங்கி தவிக்கும் எங்களுக்கு ஞானம் அருளி மோட்சம் கொடு கண்ணா ..
ஆண்டாளே
கண்ணா, இந்த ஆத்மா நிலை அப்படியானது அது ஞானமற்று இருப்பின் அருவெருப்பானது காண சகியாதது, உன்னிடம்தான் ஞானம் இருக்கின்றது, அந்த ஞானத்தைத்தான் ஆத்மாவின் ஆடையாக கேட்கின்றோம் தந்து மோடசத்துக்கு செல்ல வை..”
இப்படி கனவுசென்று கொண்டே இருக்கும்பொழுது ஆண்டாளுக்கு தன் அருகே நின்று தன் தலையினை கோதுவது புரிகின்றது, சட்டென கண்விழித்தவள் யாருமில்லைஎன்பதை உணர்ந்து கண்ணன் சிலையினை பார்த்தாள்
அச்சிலை மெல்ல புன்னகைத்தது, ஆண்டாளும் புன்னகைத்தாள், மாய கரங்கள் ஒன்று அவள் ஆடையினை சரிசெய்து தோளுக்கு போர்த்தியது, ஆண்டாள் அப்படியே தன்னை மூடி உள்ளம் சிலிர்த்து கொண்டாள்
(இளம் வயதிலே ஞானம்பெற்று வீடுபெறு எனும் மோட்சம் செல்லும்படி கண்ணனை வேண்ட வேண்டும் பிறவி கடலை தாண்ட முயல வேண்டும், இளவயது ஆசைகளை புறந்தள்ளி ஞானம் நோக்கி மனதை கண்ணன்பால் செலுத்ததல் வேண்டும்
அதையெல்லாம் முதிந்த வயதில் பார்த்து கொள்ளலாம் என பிற்போட கூடாது என்பதே பாடலின் பொருள்)