நிச்சயம் இது பெரும் குழப்பத்துக்கே இட்டு செல்லும்

எங்கள் ஆட்சியில் காஷ்மீர் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கபட்ட பகுதி என்றார்கள், அதையும் மீறி குண்டு வெடித்தபொழுது எல்லை தாண்டி தாக்கியாயிற்று என்றார்கள்

இப்பொழுது பாகிஸ்தானும் சரி அவர்களின் சகலபாடி தீவிரவாதிகளும் சரி எல்லாம் கட்டாந்தரையில் மல்லாக்க படுத்தாயிற்று, சில துண்டுபீடி குடித்தபடி பழம் நினைவுகளில் மூழ்கி கிடக்கின்றன‌

பாகிஸ்தானே தள்ளாடி கிடக்கும் நிலையில் காஷ்மீரில் எந்த பெரும் கலவரங்களுக்கும் வாய்ப்பே இல்லை

இந்நிலையில் ஏன் படை குவிக்க வேண்டும்? புது புது பரபரப்புகளை உருவாக்க வேண்டும்?

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்யும் அடாவடிகளுக்கு கொஞ்சமும் குறையாதது இந்தியா காஷ்மீரில் ஆரம்பித்திருக்கும் புதிய அட்டகாசம்

நிச்சயம் இது பெரும் குழப்பத்துக்கே இட்டு செல்லும்

நெப்போலியன் தன் கடைசி காலங்களில் வாய்விட்டு சொன்னான்

“பல இனம் பல மொழி பல கலாச்சாரம் கொண்ட ஐரோப்பாவினை ஏன் என்னால் நிரந்தரமாக ஆளமுடியவில்லை என்றால் ராணுவ பலம் ஒன்றை கொண்டு பல இனங்களையும் மொழி மக்களையும் ஆள நினைத்தது

அதுதான் நான் செய்த தவறு”.

ராணுவ பலாத்காரங்கள் இங்கு எந்த தீர்வினையும் கொண்டு வராது, காஷ்மீரிகளின் அச்சத்தை போக்கி அவர்களை வாழவைத்து அரவணைக்க வேண்டுமே தவிர ஏற்கனவே அச்சத்தில் இருப்பவர்களை இன்னும் அச்சமூட்டினால் அது நற்பலனை தராது