நித்தி தீவிரமாக தேடபடுகின்றார்

நித்திசாமி மேல் ஏகபட்ட வழக்குகள் பாய்கின்றன, நித்தி தீவிரமாக தேடபடுகின்றார்.

ஐன்டீனின் தியரி தவறு, செவ்வாய்கிரகத்தில் இருந்து மனிதர் வந்து இங்கு கல்வி கற்றார்கள், விலங்கு சமஸ்கிருதம் பேச வைப்பேன், நான் ஆணையிட்டால் சூரியன் உதிக்காது என்றெல்லாம் சவால்விட்ட நித்தியானந்தா இப்பொழுது கடலடியில் ஒளிந்திருக்கின்றார்

அவரிடம் பணம் கொடுத்து இழந்தோர், இன்னும் எதெல்லாமோ இழந்தோரின் அழுகுரல்கள் கேட்க தொடங்கியிருக்கின்றன‌

இதற்கெல்லாம் காரணம் இரண்டுதான்

ஒன்று பணத்துக்கு ஆசைபடும் துறவி, ஆம் கை நீட்டி காசுவாங்கிவிட்டால் அவன் வியாபாரி ஆகின்றான் அவன் துறவி அல்ல‌

இரண்டாவது பணம் கட்டினால் ஞானமும் அமைதியும் கிடைக்கும் என அப்பாவியாய் என்னும் மட ஜென்மங்கள்

ஆம் பணம் கொடுத்து வாங்க ஞானம் ஒன்றும் தமிழக வாக்குகள் அல்ல, ஞானமும் ஆன்மீகமும் கடை சரக்கும் அல்ல‌

எந்த ஞானவானும் அதை விற்க முடியாது, யாரும் அதை பணம் கொடுத்து வாங்கவும் முடியாது

ஒருவன் உண்மையான ஞானத்தை தேடினால் அவனை இழுத்து செல்ல பிரபஞ்ச சக்திகளும் தெய்வங்களும் தயாராய் இருக்கின்றன, அவை காற்றை போல நீரை போல இலவசமானவை

தன்னில் விழும் பொருளை எல்லாம் கடலில் சேர்க்கும் நதி போல அந்த சக்தி ஞான கடலில் சேர்க்க தயாராக இருக்கின்றது, உண்மையான தேடல் இருந்தால் சரியான இடத்துக்கு அந்த சக்தியே அழைத்து செல்லும்

மாறாக போலி துறவிகளிடம் காசை கொட்டினால் அவமானமும் கண்ணீருமே மிஞ்சும். நமக்கு தேவையானது இந்த உலகத்தில் இலவசமாக கொட்டி கிடக்கின்றது அதை தேடிபிடிப்பதில்தான் மனிதன் சறுக்கிவிடுகின்றான்