நீதிநெறி விளக்கம் : 84
“பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார்
கண்ணோடு நெஞ்சுறைப்ப நோக்குறார் – பண்ணோடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார்”
பெண்மையின் அழகை கண்டு வியக்கமாட்டார், பெண் அழகின் சிறப்பை தன் வாயால் சொல்லமாட்டார், பெண்களை தன் நெஞ்சில் பதியுமாறு நோக்கமாட்டார், பெண்களின் அழகிய குரலின் பாடல்களை கேட்கமாட்டார், உயர்ந்த செயல் அல்லாததை பாராட்டமாட்டார், தன் ஐம்புலன்களையும் அதன் போக்கில் விடாமல் (வீடில்) அதனை அதன் செயலுக்கு விரோதமாக்கி (பகையினர்) அடக்கி வைத்திருப்பார் நல்ல துறவிகள்
துறவி என்பவன் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் என்பதை சொல்லும் பாடல் இது
புலன்கள் பல இடங்களில் மயங்கும், மயங்கி பின் செல்லும் இது இயல்பு அந்த இயல்புக்கு பகையாகி அதனை அடக்குவோரே உண்மை துறவிகள் என்கின்றார் குமரகுருபரர்
முற்றும் துறந்த துறவியின் கண்கள் பெண்களின் அழகை வியக்காது, அவர்களை நோக்காது, வாய் அவர்கள் பெயரை சொல்லாது, காது அவர்கள் பாடலை கேட்காது, ஐம்புலன்களையும் பெண்களிடம் இருந்து விலக்கி அடக்கி வைத்திருப்பர் என்கின்றார் குமரகுருபரர்