நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது, எங்கள் கிராமங்களில் அதனை காணம் என்பார்கள்.
குதிரைகளுக்கு அது பிராதான உணவு, இன்றைய மோட்டார்களாக அன்று குதிரைகள் இருந்தவரை அதற்கான விளைச்சல் தேவை இருந்தது
அதாவது இன்றைய இஞ்சின் ஆயில்களாக அன்று கொள்ளு இருந்தது, அந்த இடத்தினைத்தான் இன்று எந்திர ஆயில்கள் பிடித்துகொண்டன
அக்காலத்தில் அது கிராமங்கள் தோறும் விளையும், ஒரு மழை பெய்துவிட்டால் புஞ்சை நிலத்தில் உழுது விதைத்துவிடுவார்கள், அவ்வப்போது பெய்யும் மழையினிலே அது விளைந்துவிடும்
விளைந்த பின் வீடுகள் தோறும் அது நிரம்பிகிடக்கும், அவித்தோ அல்லது வறுத்து துவையல் செய்தோ சாப்பிடுவார்கள், அதுவும் அந்த துவையல் அவ்வளவு மணமும் சுவையும் நிறைந்தது
தேங்காய், வத்தல், இன்னும் சில வகையறாக்களை வைத்து, வறுத்த கொள்ளினை இட்டு அரைத்தால் அப்படி ஒரு சுவை
அன்று வயல் வரப்பிலும், தோட்டங்களிலும் அதுதான் மணமணத்துகொண்டிருந்தது, வாரத்தில் 3 நாட்களாவது அது கஞ்சி கலையத்தின் ஓரம் ஒட்டிகொண்டிருந்தது.
அவித்தோ, வறுத்தோ கருப்பெட்டி போட்டு இடித்து உருண்டை பிடித்து ஓலைபெட்டியில் போட்டு குழந்தைகள் கையில் கொடுத்துவிடுவார்கள், அது காலை ஆகாரமாக கூட இருந்த காலங்கள் உண்டு.
அந்த கொள்ளினை கண்டதும், அக்கால நினைவுகள் வந்தன. இன்று யாரும் அதனை தேடுவாரில்லை
பழைய நினைப்பில் அதனை வாங்கி துவையல் செய்து நாக்கில் வைத்தால் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன
பாட்டனும், பாட்டியும் அதனைத்தான் உண்டார்கள், தந்தை காலத்தில் அது குறைந்தது, என் காலத்தில் மறைந்தே விட்டது, இன்று அதெல்லாம் விளைவதில்லை, அது விளைந்த நிலங்கள் எல்லாம் கல் ஊன்றபட்டு வீட்டுமனைகளாகிவிட்டன
அந்த சுவை அந்த கிராமத்தை கண்ணில் கொண்டுவந்தது, எத்தனை மனிதர்களை இழந்திருக்கின்றோமோ, எத்தனை பேரோடு அதனை பகிர்ந்து சுவைத்தோமோ, எத்தனை கிழவிகள் அதனை மணக்க மணக்க அரைத்தார்களோ அத்தனை பேரும் நினைவுக்கு வந்தார்கள்
எப்படிபட்ட உணவுகளை எல்லாம் இழந்திருக்கின்றோம்?, எவ்வளவு தூரம் தள்ளி வந்துவிட்டோம்?
இது போக பெரும்பயிறு, சிறுபயிறு என ஏகபட்ட புன்செய் பயிர்கள் விளைந்தன, அவற்றிற்கெல்லாம் ஒரு செலவுமில்லை, உரம், களை,நோய் இன்னபிற அழிச்சாட்டியம் இல்லை
விதைத்து போட்டால் தானக விளைந்து காலடியில் கிடந்தன..ஆனால் தரமான உணவாக அமைந்தன
இன்றைய மருத்துவ உலகம் ஒப்புகொள்கின்றது, கொள்ளு தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் என அது சொல்கின்றது
“கொழுத்தவனுக்கு கொள்ளு..” என அன்றே சொன்னார்கள் நம் முன்னோர்கள், நாம் தான் மறந்துவிட்டோம்
உறுதியாக சொல்லலாம், காண துவையல் எனும் கொள்ளு துவையலும், கொள்ளு ரசமும், அவித்த கொள்ளு பண்டமும் இருந்தவரை அந்த கிராமத்தில் யாரும் மாரடைப்பால் சாகவே இல்லை
கொள்ளு விடைபெற்றபின், நாகரீக காலம் வந்தபின் சிலர் மாரடைப்பிலும், பலர் பைபாசிலும் சிக்கிகொன்டிருக்கின்றனர்
கண் கூடாக பார்க்கமுடிகின்றது
ஆக உடல் எடையினை குறைத்து, ரத்த நாளங்களை அடைப்பில்லாமல் வைத்திருக்க கொள்ளு அருமையான உணவு என்பது இப்பொழுது புரிகின்றது
இந்த நவீன காலத்தில் நவீன துரித வாழ்க்கை வாழ்ந்தாலும், முடிந்த அளவு உணவால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வாழமுயற்சித்தால் சிக்கல் இல்லை என்ற ஞானம் உதித்திருக்கின்றது
உறுதியாக சொல்லமுடியும்
காணம் புழக்கத்தில் இருந்தவரை மாரடைப்பு என்பது அங்கு யாருக்கும் வந்ததாக தெரியவே இல்லை..
உடல் அரோக்கியம் என்பது தொலைத்துவிட்ட உணவுகளிலும் இருக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.