பகவத் கீதை 10
கீதையின் 10 அத்தியாயம் “விபூதி அத்தியாயம்” விபூதி என்றால் கடவுளின் தன்மை என்பது பொருள், அந்த பரம்பொருளின் தன்மையினை ஆழ விளக்குகின்றான் கண்ணன்
அர்ஜூனா நீ எனக்கு உகந்தவன் என்பதால் நீ தெளிவுற வேண்டி இன்னும் சொல்கின்றேன்
வான தேவர்கள் கூட என் மகிமையை உணராதவர்கள், முனிவர்களுக்கு கூட தேவலோகத்தை தாண்டி என்னை பற்றி தெரியது ஆனால் வானவர்களுகும் ரிஷிகளுக்கும் மூலம் நானே
நான் பிறப்பில்லாதவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என உணர்பவன் மனிதரில் தெளிவுபெற்றவன் பாவம் அனைத்தும் அகன்றவன்
மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும் துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், எல்லாம் என்னிடம் இருந்தே உலக உயிர்கல் பெறுகின்றது
சப்த மகரிஷிகள் ஏழுபேரும், நான்கு மனுக்களும் மனத்தால் என்னை அடைந்தனர் அதனால் காலத்தை வென்று நிற்கின்றனர்
அவர்களுடைய வழிவந்ததே மானிட இனம். ஆக மானிட இனமும் என் இயல்பே
நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இதை புலவர் என்னை அன்புடன் தொழுவார்.
உள்ளத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, உணர்வோன் அழியாத இடமடைவான்.
எப்போதும் ஒருவன் என்னை சிந்திப்பானென்றால் அன்புடன் என்னை வழிபடும் அவனுக்கு நான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் அவன் என்னை அடைவான்
அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.
இதனால் தெளிவுற்ற அர்ஜுனன் சொல்கின்றான், “கண்ணா நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மையனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே “நிரந்தமானவன்” என்றும் ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைவனென்றும் கடவுளென்றும் முனிவர்கள் சொல்கின்றார்கள்
மகரிஷி நாரதரும் அப்படியே சொல்கின்றார். வியாசரும் அப்படியே சொல்கின்றார்
இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய். நீ சொன்னதெல்லாம் உண்மை என உணர்ந்தேன் மெய்யெனக் கொண்டேன். இது விண்ணவருக்கும் கிடைக்கா பாக்கியம்
கண்ணா, உன்னை நீயே அறிவாய் எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த உன் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.
கண்ணா, யோகி எப்போதும் உன்னையே சிந்தித்து உன்னை உணருமாறு எப்படி நான் உன்னை காண வேண்டும்? உன் யோகத்தையும், பெருமையையும் விரித்து மற்றொரு எனக்கு சொல்வாயா?. நீ சொல்வது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி
கண்ணண் சொல்லுகிறான் ” அர்ஜூனா என் ஆத்மப் பெருமைகள் தெய்வ த்தன்மை உடையனவே, அவற்றுள் பிரதானமானவற்றை உனக்குச் சொல்லுகிறேன்
அர்ஜுனா! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் நானே.
பெருங்கடவுளில் நான் விஷ்ணு, ஒளிகளில் நான் சூரியன் காற்றுகளில் மாருதி, நக்ஷத்திரங்களில் சந்திரன்.
வேதங்களில் யான் சாமவேதம், தேவரில் இந்திரன், புலன்களில் மனம் நான், உயிர்களிடத்தே உணர்வு நான்.
ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் நான் குபேரன்; வசுக்களில் நான் தீ, மலைகளில் மேரு.
புரோகிதர்களில் தலைவனாகிய பிருகஸ்பதி நான் என்றுணர்வாயாக. படைத் தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.
மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் “ஓம்” என்ற ஓரெழுத்து. வழிபாட்டில் நான் ஜபம் மலைகளில் நான் இமாலயம்.
மரங்களனைத்திலும் நான் அரசமரம்; தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்தரகுப்தன்; சித்தர்களில் கபிலமுனி.
குதிரைகளினிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவம் என்று உணர், யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.
ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.
நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் உணர்ந்தோரில் நான் யமன்.
அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குவனவற்றில் காலம் நான், விலங்குகளில் சிங்கம், பறவைகளில் கருடன்.
தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான் (யாக தீயின் நெருப்பு), படை தரித்தோரில் நான் ராமன், மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.
படைப்புக்களின் ஆதியும் அந்தமும் நான், அர்ஜுனா! வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.
எழுத்துக்களில் நான் ‘அகரம்’;, புணர்ப்புக்களில் இரட்டைப் புணர்ப்பு (ஹரிகரன். சிவசங்கரன்) நான் அழிவற்ற காலம்
எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை, ஸ்திதி, பொறுமை (பெண்களின் பெருங்குணம் நானே)
அப்படியே, சாமங்களில் நான் “பிருகத்சாமம்” என்ற பெரிய சாமம்; மந்திரங்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர்சான்ற இளவேனில்.
வஞ்சகரின் சூது நான்; ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி, நான் நிச்சயம்; உண்மையுடையோரின் உண்மை நான்.
விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் அர்ஜூனன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிரகவி.
ஆள்வோரிடத்தே செங்கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மெளனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.
எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா! சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றில்லை.
என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.
எதெல்லாம் பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர், தவிரவும் இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது?
எனது இயக்கம் என்ற ஒன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்…”
இந்த அத்தியாயம் புரிந்து கொள்ள மிக மிக எளிதானது, கடவுளின் தன்மை (விபூதி) எதுவென கேட்க உலகில் காணும் காணாத பொருளெல்லாம் நான், சுருக்கமாக ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உயிரிலும் இருப்பவன் நான் என தெளிவாக சொல்கின்றான் கண்ணன்’
இதுதான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றானது, காணும் காணாத பொருளெல்லாம் அவனே என்றும் பழமொழியாய் சொல்லபட்டது
பைபிளில் கூட “தொடக்கமும் முடிவும் நானே, எனனில் நிலைத்திருப்பவன் பேறுபெற்றவன்” என தெய்வம் சொல்லும் வரி இந்த கீதையின் சாயலே
இந்த அத்தியாயத்தின் சுருக்கம் இதுதான்
பரம்பொருளே இவ்வுலகை படைத்தான், பரம்பொருளே அதை இயக்கி கொண்டிருக்கின்றான், அவனின்றி அணுவும் அசைவதில்லை
மழைக்கும் வறட்சிக்கும் வளமைக்கும் செழுமைக்கும் அவனே பொறுப்பு, காரணமின்றி காரியங்களில்லை அவன் அனுமதியின்றி இங்கு எதுவும் நடப்பதில்லை
நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் நடக்க போவதும் அவன் எடுத்த முடிவன்றி வேறல்ல
நோயும் அவனே மருந்தும் அவனே, அரசனும் அவனே அமைச்சரும் அவனே ஆட்சியும் அவனே மக்களும் அவனே படையும் அவனே எல்லாமும் அவனே
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியாக சொல்கின்றார் கண்ணன்
அர்ஜூனா, என் பெருமைகளில் குறைந்தவற்றைத்தான் சொன்னேன், இன்னும் ஏராளம் உண்டு
என் பெருமை எல்லாம் உணர்ந்து என்ன செய்யபோகின்றாய்? அதனால் உனக்கென்ன பயன்? இல்லை எனக்கு என்ன பயன்? நீ எனக்கு உதவமுடியுமா? என் சுமையினை சுமக்க முடியுமா?
நீ என்னை சரணடையவே சில விஷயங்களை சொன்னோம், நீ தெளியவேண்டும் அவ்வளவுதான், அதற்கு உனக்கு என்ன தேவையோ அதை சொன்னோம் , அதற்கு மேலுள்ள விஷயம் உனக்கு அவசியமில்லாதது
இதிலிருந்து மானிட இனம் கற்க வேண்டியது ஒன்று உண்டு, காணும் காணா பொருளில் உள்ளவன் அவனே, அணு முதல் அண்டம் முழுக்க அவனின் இயக்கமே
அவனை பற்றி மானிடன் முழுக்க அறிந்து கொள்ள நினைப்பது கடல் நீரை சிப்பியில் அள்ளுவதும், குருவி தன் அலகில் யானையினை தூக்க முயல்வது போன்றது
எது புரியாதோ, எதை முழுக்க அறிய முடியாதோ அதில் சிந்தனையினை செலுத்தாமல் அவனிடம் சரணடைவதே சரி
அவனவன் பூலோக கடமைக்கு எவ்வளவு புரியுமோ எவ்வளவு புரிகின்றதோ அவ்வளவு போதும்
ஆம், நிம்மதியான வாழ்வுக்கு அதுதான் வழி, எதிர்ப்பார்பின்றி அவன் பாதம் சரணடைதலே வழி
இந்த அத்தியாயத்தில் இருந்து ராணுவ அமைப்பும் , கம்பெனி நிர்வாகமும் குறித்து கொண்டது ஒன்றுதான்
ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொருவனுக்கு எவ்வளவு தெரிய வேண்டுமோ அவ்வளவு போதும், சகலத்தையும் போட்டு அறிய வைப்பது அவனுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும், எது தேவையோ அது போதும்
ஆம் மானிட வாழ்வுக்கும் இது பொருந்தும் அது பணமோ, புகழோ, ஆரோக்கியமோ, செல்வமோ எது தேவையோ அவ்வளவு போதும், தேவைக்கு அதிகமான எல்லாமும் துன்பமே..