பகவத் கீதை-3
கண்ணன் யோகியாக மாறி கடமையினை விருப்பு வெறுப்பின்றி செய் என சொன்னதும் அர்ஜூனன் மனதை மறுபடி மயக்கமேகம் மூடுகின்றது, அவன் தடுமாறி கேட்கின்றான், “கண்ணா, பெரும் யோகியாக இருக்கும் ஒருவனால் இந்த போர் எனும் படுபயங்கர கர்மத்தை செய்யமுடியுமா? நீ அதற்கு என்னை தூண்டலாமா?”
“அர்ஜூனா யோகங்கள் பலவகை, நான் உனக்கு கர்ம யோகத்தை பற்றி சொல்கின்றேன். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஏற்றுகொண்ட கடமையே கர்மம், அவன் அதற்காகவே படைக்கபட்டிருகின்றான். அதை அவன் ஒரு யோகிக்குறிய மனநிலையில் செய்ய வேண்டும்
புலன்களை அடக்கி, பந்த பாசங்களை அகற்றி, மாயையில் சிக்காமல் அவன் தன் கடமையின் கர்மத்திலே கருத்தாய் இருக்க வேண்டும், புலன்களை அடக்காமல் அடக்கியதாக காட்டிகொள்பவன் பொய்யன் அவனால் முழு கர்மத்தில் ஈடுபட முடியாது, லௌகீக பலவீனம் அவனை வீழ்த்தும்
அர்ஜூனா வேள்விகள் எழுப்பபடுகின்றன, வேள்வி அதற்குரிய தேவதைகளிடமிருந்து ஆசியினை பொழிகின்றது , அது போகமாய் வரும், அந்த போகத்தை சுயநலுக்காக பயன்படுத்துபவன் கர்மாவில் தவறுகின்றான்
இவ்வுலகில் சூரியன் அதன் கர்மாவினை செய்கின்றது, அதனால் மழை பொழிகின்றது, மழையே எல்லா உயிர்க்கும் மூலம், மனிதனை தவிர எல்லா படைப்பும் அதனதன் கர்மாவினை மிக சரியாக செய்கின்றது, அதில் சுயநலம் காணமுடியுமா?
பரம்பொருள் படைப்பில் எல்லாமே சுழற்சி, சூரியனில் இருந்து தொடங்கி மழை பயிர் என எல்லாமும் சுழற்சி அந்த சுழற்சியில்தான் இவ்வுலகம் இயங்கும், மனிதனும் அப்படி தன் கடமையினை கர்மமாக ஏற்று மிக் சரியாக செய்ய வேண்டும் , அப்படி செய்யாதவன் பாவி
எவன் தன் கர்மத்தை விடுத்து புலன் வழியும், லவுகீக வழியிலும் சறுக்குவானோ அவன் பாவி
எம்மனிதன் ஆத்மாவினை உணர்ந்து தன் கர்மத்தை செய்வானோ அவனே கர்ம யோகி, லவுகீக வாழ்க்கையின் மேடு பள்ளமும், புலன்களின் உணர்ச்சியும் அவனை கட்டுபடுத்தாது அவன் தன் கர்மத்தை மிக நேராக செய்து கொண்டே இருப்பான்
கர்மத்தின் யோகத்தில் ஆத்மாவினை கடவுளுடன் கலந்தவனுக்கு எல்லாம் எளிதே, அவன் ஆத்மா மகிச்ச்சியாய் இருக்கும், அவனால் எந்த சூழலிலும் எச்செயலையும் செய்யமுடியும், எந்நிலையும் எந்த கடமையும் அவனை பாதிக்காது, அவன் சூரியன் போன்றவன் அவனால் அடுத்தவருக்கு பயனே தவிர அடுத்தவரால் அவனுக்கு பலனே இல்லை. இது கர்மங்களில் எல்லாம் மகா உச்சமான கர்மம், ஆத்மம் பரம்பொருளில் கலந்துவிட்ட நிலையில் மட்டுமே இது சாத்தியம்
ஆகவே அர்ஜூனா உலக பற்று இன்றி, ராஜ்யங்களை எண்ணாமல், சொந்த பந்தங்களை எண்ணாமல் நீ ஒரு வீரன் என்ற வகையில் கடமையினை மட்டும் கர்மமாய் செய், கர்ம யோகமாய் செய்
இவ்வுலகில் ஜனகர் போன்றவர்களும் இன்னும் பலரும் எப்படி அழியாமல் உண்டு? கர்மத்தை மிக சரியாக செய்ததால் அன்றோ? அவர்களும் புலன் நுகர்ச்சியில் பந்த பாசத்தில் சிக்கியிருந்தால் அந்நிலை எட்டியிருப்பாரோ? சராசரி மானிடனாய் முடிந்திருப்பார்களே தவிர வரலாற்றில் நின்றிருப்பாரோ?
அர்ஜூனா நீ பாண்டவரில் உயந்தவன், அரசுகள் உற்று கவனிக்கும் பெரும் இடத்தில் இருக்கின்றாய், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் செய்வதை உலகமே செய்யும், பின்பற்றி செய்யும். நீ அவர்களுக்கு வழிகாட்டி பெருமை சேர்க்க கர்மவழியில் போரிட போகின்றாயா? இல்லை கோழை என பெயரெடுக்க போகின்றாயா
கர்மமே முக்கியம் என அவர்களுக்கு வழிகாட்டு
அர்ஜூனா என்னைபார், எனக்கு மூவுலகிலும் செய்ய வேண்டியது எதுவுமில்லை, ஆனால் மானிட பிறப்பில் கர்மத்தை செய்து உன்னுடன் இங்கு தேரோட்டியாய் இருகின்றேன், என் கர்மத்தை நான் செய்கின்றேன் உன் கர்மத்தை நீ செய், என் கர்மத்தை நான் செய்யுமாறு வில்லை எடு
இந்த போர் நிகழாவிட்டால் நான் என் கர்மத்தை செய்யமுடியாமல் போகும், அதர்மத்தை வாழவைத்தவாகிவிடுவேன், என் கர்மத்தில் இருந்து தவறிவிடுவேன்
அஞ்ஞானி அவன் கர்மத்தினை செய்யும் பொழுது தத்வஞானிகளும் சாஸ்திரம் அறிந்தவர்களும் தன் கர்மத்தை செய்வதும் அவசியமாகின்றது
மானிடர் அரைகுறை மயக்கத்தில் கர்மத்தை மறந்து அவர்களே கர்த்தா என நினைத்து கொண்டு குழம்பி தவிப்பர், அர்ஜுனா நீ என்னை சரணடை, எல்லாம் அறிந்தவனாவாய்
என்னை சரண்டைவோர் எல்லா தெளிவும் பெற்று எல்லா கட்டுகளிலிருந்தும் தெளிவு பெற்று கர்ம விடுதலை அடைவர், என்னிடம் சரணடையாமல் அவரவர் பலத்தில் வாழ்வதாக கர்மம் தவறுவோர் சீரழிவர், இது எல்லா உயிர்க்கும் பொதுவான தத்துவம்
அரஜூனன் அப்பொழுதும் தெளியவில்லை “கண்ணா, மனிதன் ஏன் தான் விரும்பாவிட்டாலும் பாவத்தை செய்கின்றான் அல்லது தூண்டபடுகின்றான்?”
(அர்ஜூனன் இதை எதிரணியில் துரியனால் தூண்டபடும் பீஷ்மர், கர்ணன், துரோணர் போன்றவர்களை நினைவில் வைத்து கேட்கின்றான், சாஸ்திரத்திலும் அறிவிலும் சிறந்தவர்களே இப்படி வந்து நிற்பது அவனுக்கு குழப்பத்தை கொடுத்தது)
கண்ணன் சொல்கின்றான் ” அர்ஜூனா ரஜோ குணங்களில் ஒன்றான ஆசைதான் இவர்கள் இப்படி வந்து நிற்க காரணம், ஆசையே கோபத்தின் பிறப்பிடம், அந்த கோபத்தில் அவர்கள் கிளம்புவார்கள்
பெருந்தீனியும் பெரும் தீயும் ஆபத்தானது, போதும் என சொல்லாத தீ போன்றது பேராசை, அந்த பேராசையின் உடன்பிறப்பு கோபம், கோபத்தின் குழந்தை போர்
புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கபடுவது போல் சாஸ்திரம் அறிந்தவர்களையும் இந்த கோபமும் ஆசையும் மறைக்கின்றது..
(துரியனுக்கு பேராசை இருந்தது. பீஷ்மருக்கும் துரோணருக்கும் ஒரே அஸ்தினாபுரம் மட்டும் ஆளவேண்டும் எனும் ஆசை இருந்தது, அதில் பிரிவு வர சம்மதமில்லை, எந்த அழிவுக்கும் அதை முன்னிட்டு செல்ல தயாராய் இருந்தனர், அவர்களின் வீண் கவுரவம் கொடுத்த மயக்கம் அது)
அர்ஜூனா புலன், மனம், புத்தி இவைகளில்தான் ஆசை அடங்கியிருக்கின்றது, ஆசைகளை அவை அடக்க வேண்டும், மாறாக ஆசை அவைகளை அடக்கினால் அவர் கர்மம் சிதையும்
உடலை புலன்கள் ஆட்டி வைக்கும், புலன்களை மனம் ஆட்டி வைக்கும், மனதை புத்தி ஆட்டி வைக்கும் இவை மூன்றையும் ஆட்டி வைக்கும் சக்தியும் மேலானதுமானது ஆத்மா
இதனால் சொல்கின்றேன், ஆத்மாவினை கொண்டு இம்மூன்றையும் அடக்கி ஆசையினை ஒழித்து, மாயையினை வென்று கர்மத்தை செய்வாய்”
இதுதான் கர்ம யோகத்தின் சுருக்கம்
நிர்வாக இயலில் இதைத்தான் இப்படி குறித்தார்கள், ஊழியன் ஒவ்வொருவனுக்கும் இதுதான் உன் வேலை என சொல்லிவிடு, அவன் உழைப்பதை பொறுத்து அவனுக்கு வெற்றி
அவனவனுக்கு கொடுக்க பட்ட வேலையே அவனின் கர்மா
“ஆம் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவன் தலைவனுக்கு அருகில் அமர்வான்..” இதுதான் கர்மம்
வெற்றிபெற்ற வரலாற்றில் நின்ற ஒவ்வொருவனையும் பாருங்கள், அவன் பந்த பாசங்களில் சிக்கியதில்லை, வீண் மயக்கத்தில் புரண்டதில்லை, கர்மம் ஒன்றே அவனை நடத்திற்று
அது அலெக்ஸாண்டர் முதல் ராப்ர்ட் கிளைவ் வரை கவனியுங்கள் , சாக்ரடீஸ் முதல் மார்க்ஸ் வரை கவனியுங்கள், புத்தன் முதல் இயேசு வரை கவனியுஙகள், விஞ்ஞானிகளில் கலிலீயோ முதல் எடிசன், ஐன்ஸ்டீன், ராமானுஜன் வரை கவனியுங்கள்
அவர்களுக்கு இருக்க்கும் பெரும் ஒற்றுமை, அவர்கள் கருமமே கண்ணாயினர் எந்த பாசமும் பந்தமும் இன்னபிற லவுகீக விஷயங்களும் அவர்களை பாதிக்கவில்லை
மானிட உணர்வுக்கு ஆட்பட்ட அசோகன் தன் கர்மத்தை தவிர்த்தான் அவன் அரசு அழிந்தது, கர்மத்தை கலங்காமல் செய்த அலெக்ஸாண்டரின் அரசு பெருகியது இது அரச கர்மம்
தன் கர்மத்தில் உறுதியாய் இருந்து உறவு, சாஸ்திரம் சொந்தங்களை மீறி கடல் கடந்தான் ராமானுஜம், அவற்றில் சிக்கியிருந்தால் அவன் ஒரு பூசாரியாக ஜோதிடகாரனாக யாருக்கும் தெரியாமலே செத்திருப்பான்
என் கர்மம் இது, இதில் செத்தாலும் கவலையுறேன் என கப்பலேறிய கொலம்பஸும் வாஸ்கோடகாமாவும் சாதித்தார்கள், பந்தம் பாசம் உணவு என சிக்கியவர்கள் ஊருக்குள்ளே இருந்தார்கள்
செத்து பிழைத்த கிளைவ் தன் கர்மம் யுத்தமே என உணர்ந்தான் மாபெரும் பிரிட்டிஷ் இந்தியாவினை அவனால் உருவாக்க முடிந்தது
ஆனால் புலன்வழி கிளியோபாட்ராவிடம் மனதை கொடுத்த சீசர் மாண்டான்
கர்மத்தை உணர்ந்தவனே கர்மத்தை சோதனையிலும் கைவிடாமல் காத்தவனே சரித்திரமானான்
மிகபெரும் உதாரணம் காந்தி, தன் பிள்ளை உருப்படாமல் போனாலும் மனைவி பிரிந்தாலும் அவர் கர்மத்தில் சரியாக இருந்தார், தேசமே விடுதலைபெற்றது, காந்தி தனிபெரும் தலைவரனார்
வழக்குக்கு ஆயிரகணக்கான சம்பளம் வாங்கும் வக்கீலாக கர்மத்தை விட்டிருந்தால் காந்தி யாரென தெரியாமல் போயிருக்கும்
காந்தி, வ.உ.சி, கட்டபொம்மன் என எல்லா வகையினரையும் பாருங்கள் கர்மம் அவர்களை நடத்திற்று, கர்மமே கண்ணாக இருந்தனர், வரலாறானார்கள்
மனைவி வீடு சொந்தம் என இருந்தால் சாதாரண கணக்கு ஆசிரியராக இருந்து செத்திருப்பான் ஐன்ஸ்டீன்
காது கேளா நிலையிலும் கர்மம் ஆராய்ச்சி என இருந்த எடிசன் எதை எல்லாமோ கொடுத்தான், அதில் பொது நலமும் இருந்தது
நொடியில் யூதர்களின் அரசனாகியிருக்கலாம், கலிலேயா கவர்ணாராகியிருக்கலாம் ஆனால் என் கர்மம் இது என சிலுவை சுமந்தார் இயேசு, அதனால் தெய்வமானார்
பொல்லார் கூட கர்மங்களில் உறுதியாய் இருந்த விளைவு நன்விளைவே, உதாரணம் ஹிட்லர் அவன் கர்மத்தில் அவன் கொடியவனே, ஆனால் அவனின் கர்மத்தாலே இந்தியா போன்ற நாடுகளின் விடுதலை சாத்தியம், யூத நாடு அமைய அவனே முழு முதல் காரணம்
இதுதான் கடமையினை செய் பலனை எதிர்பாராதே என்பது
தமிழகம் கண்ட ரிவர்ஸ் கர்ம யோகி கருணாநிதி நிச்சயம் வசனமும் சில வார்த்தைகளும் தமிழும் தவிர அவருக்கு ஏதும் தெரியாது, பரம்பரை , பெரும் கல்வி நிலபுலம் என எதுவும் கிடையாது
ஆனால் இது என் கர்மம் என ஏற்றுகொண்டார் அதிலே நீந்தினார் உடலோ, கட்சியோ, குடும்பமோ, சொந்தமோ எதுவும் அவரை பாதிக்காமல் அவர்போக்கில் இருந்தார், அந்த கர்மமே அவரை மகா உச்சிக்கு உயர்த்தியது, அதன் விளைவுகள் பிற்காலத்தில் ஹிட்லரின் விளைவுகள் போல் தமிழகம் தெரிந்து கொள்ளும்
ஏற்ற கர்மத்தை அப்படி கொஞ்சமும் பிசகாமல் செய்தவர் கருணாநிதி
கவிஞர்கள் சுமந்த கர்மமே அழியா காவியம், சிற்பிகள் சுமந்த கர்மமே இன்று காணும் ஆலயம், ஒவ்வொரு தமிழ் தொழிலாளியும் சுமந்த கர்மமே இன்றைய நெல்வயல்கள்
கர்மமே கண்ணானவர் யாராயினும் அவரின் தொழிலால் நிலைப்பார்கள் இல்லை கர்மத்தின் சத்தியத்தால் நிலைப்பார்கள்
அனுசுயா, வாசுகி , சாவித்திரி என குடும்ப பெண்கள் வரலாறு ஆனதும் கணவனை காக்கும் கர்மத்தில் நிலைத்ததாலே
புலன்களில் சிக்காமல், லவுகீக வாழ்க்கையில் கவிழ்ந்துவிடாமல் எவன் தன் கர்மத்தை சரியாக செய்தானோ அவனின் ஆத்மா தெய்வத்தில் கலந்துவிடுகின்றது, அவனை தெய்வம் வழிநடத்துகின்றது
கர்மயோகத்தில் பகவான் சொல்லும் விஷயங்களில் கவனிக்கதக்கது சில உண்டு
கர்மத்தை ஏற்றவன் புலன்வழியில் உலக வாழ்வில் சறுக்கிவிட கூடாது, சறுகியவன் சாதிக்க முடியாது அவன் அவன் கர்மத்தை செய்து கொண்டே இருத்தல் வேண்டும், சூரியனை போல இருத்தல் வேண்டும்
கர்மம் செய்யவே அவனுக்கு கடமை, விளைவுக்கு கடவுளே பொறுப்பு, பலனை எதிர்பார்த்து செய்தல் கர்மம் ஆகாது, மழை போல் பொழிவதே கர்மம்
ஆத்மாவில் கடவுளோடு ஒன்றியவனுக்கு கர்மம் எளிதானது , மண்டேலா போல காந்தி போல ஒருமாதிரியான யோகி நிலை அவனுக்கு வரும், இயேசு மிகபெரும் உதாரணம் அந்த மகானுக்கு கடவுளும் ஒன்று அவரின் சீடர்களின் பாதங்களும் ஒன்று
காமராஜரிடம் அந்த தன்மை இருந்தது, நேருவிடம் காட்டிய அதே சிரிப்பினை இந்தியாவின் ஏழை தொழிலாளி வரை வஞ்சகமின்றி தோளில் கைபோட்டு காட்ட முடிந்தது, இரண்டும் அவருக்கு ஒன்றே..
விருப்பு வெறுப்பு கலந்து எல்லாவற்றையும் ஒன்றாய் கருதும் தெய்வமனதின் கர்மம் அது
பகவான் அழுத்தி சொல்லும் விஷயம் என்னை சரண்டை, நானே எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா, இயக்குபவன் நானே, உன் ஆத்மாவினை என்னிடம் ஒப்படைத்துவிடு, கர்மாவினை நானே நடத்தி தருவேன்
பகவான் சொல்லும் பெரும் விஷயம், அர்ஜூனா உலகால் கவனிக்கபடும் நீ நல்ல வழி காட்டி கடமையினை செய்யவேண்டும், மேலிடத்தில் இருப்போரை உலகம் கவனிக்கும் அவர்கள் செய்வதை அப்படியே செய்யும்
இதுதான் மகா கவனித்துகுரியது, அரசியல்வாதியோ , கவிஞனோ, தொழிலதிபரோ கால காற்றில் உயர பறக்கும் நடிகர் கூட்டமோ இதை கவனித்தில் கொள்ள வேண்டும்
எமக்கு தெரிந்து அதை சரியாக செய்தவர் ராம்சந்திரன்., அவரின் கர்மா சினிமாவில் இருந்தது அதை சரியாக செய்தார், தவறான வழியினை அவர் சினிமாவில் காட்டவே இல்லை, அது அவருக்கு அரசியல் உச்சத்தையும் கொடுத்தது
அங்கும் எதற்கும் அடிமையாகாமல் தன் கர்மத்தில் சரியாக இருந்தார், தவறான வழி என தமிழகத்துக்கு அவர் காட்டியதே இல்லை
இன்று சினிமா அட்டகாசம் செய்யும் கும்பல் இதை மனதில் கொள்ளுதல் நலம் தங்கள் கலை கர்மத்தை கண்ணதாசன் போல பீம்சிங் போல நல்ல கர்மமாக செய்தால் நிலைப்பார்கள்
இல்லை கர்மத்தை கைவிட்ட்ட எல்லோரும் எப்படி அழிந்தார்களோ அப்படி அழிவார்கள், இது சினிமாகாரர்களுக்கு மட்டுமல்ல பத்திரிகை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்
எழுத்தை கர்மம் என ஏற்று எவன் எழுதுவானோ அது நிலைக்கும், காசுக்கும் சூழலுக்கும் உலகுக்கும் மாறினால் அது நிலைக்காது
நிர்வாகங்களில் கூட மேல் இடத்தில் இருப்பவர்கள் வழிகாட்டிகளாய் இருத்தல் வேண்டும், கீதை அதை அழுத்தி சொல்கின்றது
இது பொதுவாழ்வு என்றல்ல, குடும்பத்திலும் தலைமகனுக்கு அது தந்தையோ அல்லது மூத்த மகனுக்கோ இருத்தல் வேண்டும், அக்குடும்பம் அவனையே நோக்குவதால் அவன் மிகபெரும் உதாரண கர்மயோகியாக இருந்த்தல் வேண்டும்
அக்குடும்ப பெண்களில் மூத்தோரும் அப்படி வழிகாட்டும் கர்மயோகத்தில் சாவித்திரி, அனுசுயா போல உறுதியிடன் இருந்தால் அக்குடும்பம் எல்லா பேறுகளையும் தலைமுறை தலைமுறையாய் பெற்று வரும்
குடும்பம், சமூகம் , நிர்வாகம், பொதுவாழ்வு என சமூகத்தில் வாழும் எல்லோருக்கும் பின்பற்ற வேண்டியது இந்த கர்ம யோகம், அப்படி பின்பற்றபட்டால் அந்த குடும்பம், சமூகம், அலுவலகமே சிறக்கும்
பகவத் கீதை ஏன் எக்காலமும் பொருந்துகின்றது என்றால் அது மானிடனின் ஒவ்வொரு சுபாவத்தையும் பலத்தையும் பலவீனத்தையும் அழகாக சொல்லும்
பலமிருப்பவன் எப்படி இருக்க வேண்டும், பலவீனமானவன் எப்படி சூழலை கையாள வேண்டும் என தோழனாக நின்று சொல்லும், குருவாக போதிக்கும், தாய் போல் ஞானத்தை ஊட்டும்
கர்மயோகத்தில் கரைந்துவிட்ட எவனுக்கும் எந்த சூழலும் அவன் வாழ்வினை பாதிக்காது, குடும்பமோ சொந்தமோ நட்போ கலமோ எதுவுமே அவன் கடமையினை பாதிக்காது, எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அவன் தன் கடமையினை செய்து கொண்டே இருப்பான் சூரியனை போல…
ஆம் இக்கடமைக்காக நாம் படைக்கபட்டிருகின்றோம் அதை செய்வோம் விளைவு நமக்கு தேவையில்லாதது என மழை பெய்யுமே அதைப்போல.