பகவத் கீதை 4ம் அத்தியாயம்

Image may contain: 4 people

கர்மயோகத்தை கேட்ட அர்ஜூனன் , கண்ணன் தன்னை போரில் ஈடுபட மட்டும் தூண்டுவதாக எண்ணி குழம்பியிருந்தான், இதை அறிந்த கண்ணன் 4ம் அத்தியாயத்தில் தொடர்கின்றான்

“அர்ஜூனா இந்த‌ யோகத்தை நான் சூரியனுக்குச் சொன்னேன், சூரியன் மனுவிற்குச் சொன்னான் ,மனு இக்ஷ்வாகுவிற்குச் சொன்னான், இந்த யோகம் பரம்பரை பரம்பரையாக சொல்லபட்டது, அரசர்களும் ரிஷிகளும அதை அறிந்திருந்தார்கள், பின் இந்த யோகம் வெகு காலமாக மறைந்து போய் விட்டது.

நீ என் சீடனும் என்னை சரணடைந்தவனுமாய் இருகின்றாய் அதனால் இந்த யோகத்தை
இப்பொழுது உனக்குச் சொன்னேன, இது உயர்ந்த ரகசியம்.

தன் சந்தேகத்தில் உறுதியான அர்ஜூனன், கிருஷ்ணன் பொய் சொல்வதாக எண்ணி சட்டென கேட்கின்றான் “
“கண்ணா, உன்னுடைய பிறப்பு பிந்தி ஏற்பட்டது.சூரியனுடைய பிறப்போ முந்தி ஏற்பட்டது.
அப்படியிருக்க முதலில் நீ சூரியனுக்கு உபதேசித்தாய் என்பதை நான் எப்படி அறிவது ?”

கண்ணன் சொல்கின்றான் “அர்ஜுனா , எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும் அப்படியே. அந்த ஜென்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன் .
நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவனாகவும்,அழிவற்றனாகவும் எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரனாக இருந்த போதிலும் ,
என்னுடைய மாயையினால் என்னுடைய இயற்கையை வசமாக்கிக்கொண்டு அவதாரம் செய்கிறேன்.

எவ்வெப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ,
அவ்வப்பொழுதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

சாதுக்களைக் காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.

திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய செயல்களையும் எவனொருவன் இவ்வாறு தெரிந்து கொள்கிறானோ, அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைந்து விடுவான்.

விருப்பு ,பயம் ,கோபம் ,இவைகளற்றவர்களும் என் மயமாகிவிட்டவர்களும், என்னையே சரணம் என அடைந்தவர்களுமான பலரும் ஞானமென்ற தவத்தினால் மோக்ஷத்தை அடைந்திருக்கிறார்கள்.

யார் என்னை எந்த விதமாகச் சரணமடைகின்றார்களோ , அவர்களுக்கு விரும்பிய உருவத்தில் என் தரிசனத்தை அளிக்கிறேன். மனிதர்கள் எல்லாவகையிலும் நான் வகுத்த வழியையே பின்பற்றி நடக்கிறார்கள்.
மனிதர்கள் கர்மங்களுக்குப் பலன் கிடைக்க வேண்டுமென்ற ஆசையால் தேவதைகளை ஆராதிக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த பூவுலகில் கர்மத்தினால் வெகு விரைவில் பலன்கள் கிடைக்கின்றன.

குணங்கள் கர்மங்கள் என்ற இவைகளின் பாகுபாட்டை ஒட்டி பிரம்ம,க்ஷத்ரிய,வைஸ்ய ,சூத்ர ,என்ற நான்கு வர்ணங்களை சிருஷ்டி செய்திருக்கிறேன். என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை.

கர்ம பலனில் எனக்கு ஆசை கிடையாது என்று எவனொருவன் என்னை அறிகிறானோ அவன் கர்மங்களால் கட்டுப்படுவதில்லை.

மோக்ஷத்தை அறிய விரும்பிய முன்னோர்கள் இப்படித் தெரிந்து கொண்டே கர்மத்தை அனுஷ்டித்தார்கள்.
ஆகவே, முன்னோர்கள் அநுஷ்டித்த புராதனமான கர்மாவையே நீயும் அநுஷ்டிப்பாயாக .

எது கர்ம மார்க்கம்? எது கர்மத்தை அநுஷ்டிக்காத மார்க்கம்? என்ற இந்த விஷயத்தில் அறிஞர்களும் மயக்கமுற்றிருக்கிறார்கள்.

அத்தகைய கர்மத்தைப் பற்றி உனக்குச் சொல்லப்போகிறேன். அதை அறிந்தபின் சம்சாரமாகிய அசுபத்திலிருந்து நீ விடுபடுவாய். சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டு அநுஷ்டிக்க வேண்டிய கர்மத்தைப் பற்றி அறிய வேண்டும். இவ்வாறு விலக்க வேண்டிய கர்மத்தைப் பற்றியும் நீ அறிய வேண்டும்.

கர்மத்தை அநுஷ்டிக்காமல் சும்மாயிருப்பதென்ற அகர்மத்தையும் அறிய வேண்டும். கர்ம மார்க்கமானது மிகவும் ஆழமானது. அதை அறிவது சுலபமல்ல.

கர்மத்தில் கர்மமில்லாத தன்மையை எவன் காண்கிறானோ, அவ்விதமே கர்மமில்லாத் தன்மையில்
கர்மத்தை எவன் காண்கிறானோ, அவன் மனிதர்களில் புத்திசாலி. அவன் யோகி.

அவன் அனைத்து கர்மங்களையும் அநுஷ்டித்தவன். எவனொருவனுடைய கர்மங்களெல்லாம்
ஆசையும் ஸங்கல்பமும் இல்லாமல் அநுஷ்டிக்கப்படுகின்றனவோ, ஞானமென்ற அக்னியால் சுடப்பட்ட கர்மங்களையுடைய அத்தகையவனைப் பண்டிதன் என அறிஞர்கள் கூறுவார்கள்.

கர்ம பலனில் பற்று வைக்காமல் எப்போதும் திருப்தி உடையவனாய் , எதையும் சாராமல் ஒருவன் கர்மத்தில் இறங்கிய போதிலும் , அவன் எந்த கர்மத்தையும் செய்தவனாக மாட்டான்.

ஆசையற்றவனாய் , மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து , தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் சரீர யாத்திரைக்குத் தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன்
ஸம்சாரத்தை அடைய மாட்டான்.

எவனொருவன் தானாக வந்த லாபத்தால் மகிழ்பவனாய் , சுகம் மற்றும் துக்கத்தை பொருட்படுத்தாமல், பொறாமையை நீக்கி, காரியம் நிறைவேறினாலும் ,நிறைவேறாவிட்டாலும் சம நிலையில் இருக்கிறானோ,

அவன் கர்மத்தை அநுஷ்டித்தாலும் ஸம்சாரமென்ற பந்தத்தை அடைவதில்லை.

பற்றுதலை நீக்கி ,எந்த பந்தத்திலும் அகப்படாமல் ஞானத்திலேயே நிலைத்த மனத்துடையவனாய் ,
யக்ஞத்திலேயே கர்மத்திலேயே அநுஷ்டிப்பவனுக்கு முன்வினையெல்லாம் முற்றிலும் அற்றுப் போகும்.

யஜ்ஞத்தில் அர்ப்பணம் செய்தலென்ற செயலும் பிரம்மமே அர்ப்பிக்கப்படும் அவிஸும் பிரம்மமே;
பிரம்மமாகிய அக்கினியில் ,பிரம்மமாகிய யஜமானனால் செய்யப்படும் ஹோமமும் பிரம்மமே

எல்லாம் பிரம்மமயம் என்று நினைப்பவன் சேர வேண்டிய இடமும் பிரம்மமே.

சில கர்மயோகிகள் தேவதராதனமென்று யக்ஞத்தைச் செய்கிறார்கள். வேறு சிலர்
பிரம்மமாகிய அக்கினியில் யக்ஞத்தால் யக்ஞத்தையே ஹோமம் செய்கிறார்கள்.
சிலர் செவி முதலிய புலன்களை அடக்குதலென்ற ஸம்யாக்கினியில் ஹோமத்தைச் செய்கிறார்கள்.
மற்றும் சிலர் சப்தம் முதலான இந்திரிய விஷயங்களை, இந்திரியங்களாகிய அக்கினியில் ஹோமம் செய்கிறார்கள்.

வேறு சிலர் , ஞானத்தால் வளர்க்கப்பட்டதான மனத்தை அடக்குதலென்ற அக்கினியில் சகல இந்திரியங்களுடைய தொழில்களையும் பிராணவாயுவின் தொழில்களையும் ஹோமம் செய்கிறார்கள்.

திரவியத்தை அளிப்பதையே யக்ஞமாகக் கொண்டவர், தவத்தையே யக்ஞமாகக் கொண்டவர்;

யோகத்தையே யக்ஞமாகக் கொண்டவர்; வேத அத்யயனத்தையே யக்ஞமாகக் கொண்டவர்,
வேதத்தை அறிவதையே யக்ஞமாகக் கொண்டவர் , என்ற வகையில் முயற்சியுடையோரும்,
உறுதியான ஸங்கல்பம் கொண்டவர்களுமாகச் சிலர் இருக்கிறார்கள்.

வேறு சிலர் பிராணாயாமத்தை மேற்கொண்டு ஆகார நியமமுள்ளவர்களாகி அபானத்தில் பிராணனை ஹோமம் செய்கிறார்கள். சிலர் பிராணா பானங்களின் போக்கைத் தடுத்து நிறுத்தி , பிராணனில் பிராணனை ஹோமம் செய்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் யக்ஞத்தை அறிந்தவர்கள். யக்ஞத்தால் மாசு நீங்கப் பெற்றவர்கள்.இவர்கள்
யக்ஞத்தில் மிகுதியான உணவாகிய அமிருதத்தை உண்டவர்கள்.

அதனால் ஸநாதனமான ப்ரம்மத்தை அடைகிறார்கள்.

யக்ஞம் செய்யாதவனுக்கு இந்த உலகத்திலேயே சுகமில்லையெனில் சொர்க்கத்தில் ஏது சுகம் ?
இப்படி பலவிதமான யக்ஞங்கள் வேதத்தில் சொல்லப்படுகின்றன. அந்த யக்ஞங்களெல்லாம் கர்மத்தால் உண்டானவை என அறிவாயாக . இப்படி அறிந்தால் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாய்.

பொருள்களால் செய்யப்படுகின்ற திரவ்ய யக்ஞத்தைக் காட்டிலும் ஞான யக்ஞமே சிறந்தது.
ஏனென்றால் , சகல கர்மங்களும் ஞானத்தில் அடங்கி விடுகின்றன.

அந்த ஆத்ம ஞானத்தைத் தத்துவமறிந்த ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள். நீ அவர்களை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தும் , அடிக்கடி கேள்விகள் கேட்டும் ,அவர்களுக்கு பணிவிடைகள் செய்தும்
ஆத்ம ஞானத்தைப் பற்றி அறிவாயாக.

அந்த ஆத்மா ஞானத்தை நீ அடைந்தாயானால் , இப்படி மோகமடைய மாட்டாய். அப்போது ஸகல பூதங்களையும் உன்னிடத்திலேயே காண்பாய். என்னிடத்திலும் காண்பாய் .ஸகல பாபங்களிலும் பெரும் பாபம் செய்தவனாக இருந்தாலும் ஞானமென்ற ஓடத்தால் பாப சமுத்திரத்தை நீ கடந்து விடுவாய்.

நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடுமோ , அப்படியே ஞானம் என்ற அக்கினியானது எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கிவிடும்.இவ்வுலகில் ஞானத்தைப் போல் சுத்தம் செய்யக்கூடிய பொருள் எதுவுமில்லை.

கர்மயோகத்தால் திருந்தப்பட்டவன் வெகு காலத்திற்குப்பின் தானாகவே அந்த ஞானத்தை அடைவான்.
ஞானத்தை சம்பாதிப்பதிலேயே நோக்கம் கொண்டு , புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன்
ஞானத்தை அடைவான்.

ஞானத்தை அடைந்தபின் வெகு சீக்கிரத்திலேயே உயர்ந்த சாந்தி நிலையான மோக்ஷத்தை அடைகிறான்.

அறிவில்லாதவனும், சிரத்தை இல்லாதவனும் சந்தேகமுள்ளவனுமழிந்து விடுவான்.
சந்தேகப் பிராணிக்கு இந்த உலகமோ,வேறு உலகமோ ,சுகமோ கிடையாது.

தனஞ்ஜயனே, தத்துவ ஞான யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும்,
ஆத்மா ஞானத்தால் சந்தேகத்தைத் துண்டித்தவனும், சுய நிலையிலுள்ள மனிதனைக்
கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.

ஆகவே , அக்ஞானத்தால் உதித்து, உன் மனதில் குடி புகுந்த இந்த உன் சந்தேகத்தை,
ஆத்ம ஞானம் என்ற கத்தியினால் துண்டித்துவிட்டு கர்மயோகத்தை அநுஷ்டிப்பாயாக, எழுந்திரு”

இப்படி சொல்கின்றது ஞானகர்மஸந்யாஸ யோகம், இது கீதையின் மகா முக்கிய பகுதியில் ஒன்று

கர்மயோகம் என்பது ஜென்மஜென்மாக இருந்தது என்பதையும், சூரியனே அந்த தத்துவபடி இயங்குகின்றது என்பதையும், மனுகுலம் நெடுங்காலம் பின்பற்றி வந்தது என்பதும் இடையில் அது கைவிடபட்டது என்பதும் தெரிகின்றது

ஆதியில் இருந்து இடையில் நின்று போனதைத்தான் கண்ணன் மீளுரைக்கின்றான், சூரியனை போல எதையும் எதிர்பாராமல் கர்மத்தை செய் என தூண்டுகின்றான்

எங்கெல்லாம் தர்மம் வீழ்ந்து அதர்மம் தலைவிரித்தாடுமோ, எங்கெல்லாம் அகங்காரம் அடக்க ஆளில்லாமல் ஆடுமோ அங்கெல்லாம் தான் வந்து அவதரிப்பதாக சொல்கின்றான் கண்ணன், வரலாற்றின் ஒவ்வொரு காட்சியிலும் இதை நீங்கள் காணலாம்

அஸ்தினாபுர அரசு என்றல்ல, ஆட்டம் போடும் எல்லா அரசுகளுமே ஒரு எதிசக்தி பெற்று தோற்றிருக்கின்றன, இரண்டாயிரம் ஆண்டில் கிரேக்கருக்கு ரோமர், ரோமருக்கு அராபியர், அராபியருக்கு செங்கிஸ்கான், செங்கிஸ்கான் சந்ததிக்கு பிரிட்டிசார், பிரிட்டிசாருக்கு அமெரிக்கா , அமெரிக்காவுக்கு ரஷ்யா என ஒரு சமநிலையினை காணலாம்

யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை.

எல்லா சக்திக்கும் எதிர்சக்தி இவ்வுலகில் எல்லா காலமும் உண்டு, அதுவன்றி உலகம் இயங்காது.

(யுத்தம் முடிந்ததும் பாண்டவரை இமயமலைக்கு கண்ணன் கிளம்ப சொன்னதே அப்படியே, இல்லாவிட்டால் ஒற்றை சக்தி மிஞ்சிவிடும்)

அரசோ, தொழிலபதிரோ, அரசியல்வாதியோ, கொள்ளைக்காரனோ யாரும் காலம் தோறும் நிலைப்பதில்லை. அவர்களுக்கு எதிரான ஒரு சக்தி எழும்புகின்றது அல்லவா?. அன்றே துரியனுக்கு எதிரான அர்ஜூனனிடம் இதைத்தான் சொன்னான் கண்ணன்.

நானே அதர்மத்தை அழிக்கும் சூத்திரதாரி

நான் வகை வர்ணத்தை நானே உருவாக்க்கினேன் என்கின்றான் கண்ணன், இதன் பொருள் என்ன? அவன் சாதியினை உருவாக்கினான் என்பதா? இல்லை. நாடு இயங்க வேதம் சொல்பவன், ராணுவத்தான், வியாபாரி, உழைக்கும் மக்கள் என எல்லோரையும் உருவாக்கி நாட்டை இயங்க வைப்பவன் நான் என்கின்றான்

இதில் 4 வகை பிரிவும் அவனவன் கர்மாவினை சரியாக செய்தால் நாடு பொன்விளையும் தேசமாய் மாறும் , ஆம் அவர்களின் கர்மயோகம் அவ்வளவு முக்கியம், படைப்பின் நோக்கத்தை ஒவ்வொருவனும் உணர்தல் வேண்டும்

கண்ணன் சொல்வதில் சில விஷயம் கவனிக்கதக்கவை, “கர்மத்தில் கர்மமில்லாத தன்மையை எவன் காண்கிறானோ, அவ்விதமே கர்மமில்லாத் தன்மையில் கர்மத்தை எவன் காண்கிறானோ, அவன் மனிதர்களில் புத்திசாலி. அவன் யோகி” என்பதன் பொருள் என்ன?

கர்மம் செய்யும் பொழுது பஞ்சமா பாதகங்களை விலக்க வேண்டும், கர்மம் என்றாலும் அதை ஆத்மாவுக்கும் அறிவுக்கும் கட்டுபடு செய், பாதகம் என்பதை விலக்கு

குறிப்பாக ராணுவத்தான் யுத்த களத்தில் எதிரியினை கொன்றால் அது கர்மயோகம், மாறாக அடுத்த வீட்டுகாரனை கொன்றால் அது அதர்மம்

கசாப்புகடைக்காரன் ஆட்டை வெட்டுவது தர்மம், பொழுது போகாமல் தெருநாயினை அடித்து கொன்றால் அதர்மம்

இதைத்தான் “செயலில் செயலின்மை” என்கின்றான் கண்ணன், இந்த “செயலின்மையில் செயல்” என்பது என்ன?

சில விஷயங்கள் நம் கையில் இல்லை, பிறப்பு இறப்பு குடும்பம், செல்வம், பரம்பரை , உடல் உறுப்பு பலம் அல்லது குறை இதெல்லாம் நம்மை பொறுத்தது அல்ல, அது கடந்த ஜென்மாவின் கர்ம பலன்

அதை உணர்ந்தவன் ஞானி, அதை அனுபவித்து தீரவேண்டும் என அறிபவன் புத்திசாலி என்கின்றார் கண்ணன்

ஆம் அர்ஜூனன் ஒரு வில்லாளி, அவ்வகையில் களத்துக்கு வந்துவிட்ட அவன் யுத்தம் செய்ய வேண்டும் அது கர்மம், அதே நேரம் யுத்தம் அல்லா இடத்தில் அவன் கொலை செய்ய போவதில்லை இது போர்களம் இதுதான் கர்மத்தில் விலக்க வேண்டியதை விலக்கு என்பது, செயலில் செயலின்மை (பாவங்களை நோக்காதே) என இது பாவத்தில் சேராது

அதே நேரம் அர்ஜூனன் இங்கு பாண்டுவுக்கு பிறந்து திருஷ்டிராசன் மகனை எதிர்க்க வேண்டும் என்பது அர்ஜூனன் விரும்பியது அல்ல, அதை அவனால் மாற்ற முடியாது, இதுதான் செயலின்மையில் (அவனால் மாற்றமுடியாத விஷயத்தில்) செயல் என்பது

ஆம் எப்படி பார்த்தாலும் அர்ஜூன போரிட்டு ஆக வேண்டியவன் என்கின்றான் கண்ணன்

தொடர்ந்து வாருங்கள், யக்ஞம் என்றொரு வார்த்தை வரும். யஞ்யம் என்பது வேறொன்றுமல்ல வழிபாடு

கர்மம், தர்மம், யக்ஞம் என்பார்கள்.

இதை கண்ணன் தெளிவாக சொல்கின்றான் யாகம் முதலான வழிபாட்டில் , நெய்யினை ஊற்றி செய்யும் வழிபாட்டினை விட ஞானத்தில் செய்யும் வழிபாடே சிறந்தது

யாகத்தில் பொருட்களை அர்பணித்து பிரம்மத்தை அடைவதை விட ஞானத்தில் தீ வளர்த்து பிரம்மத்தை அடைதல் வேண்டும்

யாகதீ எல்லாவற்றையும் எரித்துவிடுவது போல, ஞானத்தால் எரியும் மனம் கர்மாக்களை எரித்துவிட்டு ஒருவனை விடுதலையடைய செய்கின்றது

அர்ஜூனா கர்மத்தை ஞான வழிபாட்டால் கரைப்பார், ஞானம் என்பது ஒன்றுமல்ல என்னை சரணடைவதே ஞானம், சந்தேகமின்றி என்னை அடைபவன் ஞானம் பெறுவான், மீறி சந்தேகம் கொண்டு திரிபவன் வீழ்வான்” என அவனை எச்சரிக்கவும் கண்ணன் தயங்கவில்லை

இந்த அத்தியாயத்தில் இருந்து நிர்வாக மேலிடம் கற்றது சில உண்டு

முதலாவது யுத்தம் என்பது மக்களை காக்கும் இடத்தில் தவறே அல்ல, இது மானிட தர்மமே. அதர்மத்தை வெல்ல ஒரு வீரன் போரிட்டே ஆகவேண்டும், அது குற்றம் ஆகாது

(இன்றும் உலகம் பின்பற்றும் தத்துவம் இது, வீரன் உள்நாட்டில் செய்தால் கொலை என்பது போர்களத்தில் எதிரியினை கொல்லும் பொழுது தியாகமாகின்றது)

நால்வகை வர்ணத்தை நானே படைத்தேன் என்கின்றான் கண்ணண், நிர்வாக இயலில் இது மிக அருமையான தத்துவம்

அலுவலகத்தில் ஆட்களை பிரித்து வேலை வாங்கு , ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வேலையினை சரியாக கொடு, ஒருவன் வேலையில் இன்னொருவன் தலையிடுதல் கூடாது, அதில் நுழைதலும் கூடாது. அவனவன் வேலையினை சரியாக செய்தால் அலுவலகமோ தொழிற்சாலையோ வருமானம் கொட்டும்

நாட்டுக்கும் இது அவசியம், வேதம் சொல்லுதல் ஒருவர் வேலை, உழைப்பது ஒருவர் வேலை, பாதுகாப்பது ஒருவர் வேலை, வியாபாரம்ச் செய்வது ஒருவர் வேலை, அதுவன்றி உற்பத்தியினால் பிரயோஜனமில்லை

இது சாதி அடிப்படை என்பதெல்லாம் அபத்தம், மானிடர் இயங்க தெய்வமே ஆத்மபலத்தில் மனிதனை இப்படி சிந்திக்க வைத்திருக்கின்றது என்பதே சரி

சாதியென்பது தவறு, வியாசர் வேதம் ஓதினார், பரசுராமன் ஆயுதம் எடுத்தார், வால்மீகி ராமாயணம் பாடினார், அவரவர் கர்மாவினை அவரவர் சரியாக செய்தனர் சாதி இதில் குறுக்கே வரவில்லை

இந்த நால்வகை வர்ணம் என்பது நிர்வாக இயலில் மிக பெரும் அடிப்படை பாடம், பிரித்து வேலைவாங்கு ஒருவன் வேலை ரகசியம் ஒருவன் அறிய கூடாது, என ஏக நுட்பங்கள் உண்டு

இந்த நால்வகை வர்ணமே பின்னாளில் நிர்வாக பாடமாகி, கிழக்கிந்திய கம்பெனிக்கும் அடிப்படையாகி அவன் இந்தியா வந்து அதில் விஷம் தடவி “பிரிதாளும் சூழ்ச்சி” என நமக்கே தந்தான்

ஒரு வகையில் கீதை அன்றே உலகெல்லாம் பரவியிருந்து ராணுவ மார்க்கம், ஞான மார்க்கம் என எல்லா இடத்திலும் இருந்திருகின்றது, அலெக்ஸாண்டரின் ராணுவம், கிரேக்க சிந்தனை, யூத சிந்தனைகளில் கீதையின் தாக்கம் நிரம்ப உண்டு

இயேசு கண்ணனுக்கு பின் பல லட்சம் வருடம் கழித்து வந்தவர் அவரின் போதனையில் கண்ணன் அர்ஜூனனுக்கு சொன்ன கீதையின் சாயல் இருக்கின்றது,

“ஆத்மாவினை கொல்லமுடியாமல் உடலை கொல்வோருக்கு அஞ்சாதீர்கள்.

என்னிடம் சரணடையுங்கள், நான் உங்களுக்கு ஆறுதல் தருவேன். என்னை அறிந்தவன் எல்லாம் வல்லவரை அறிந்தவனாவான்..

என்னை சேர்ந்தவனுக்கு ஒரு காலமும் அழிவே இல்லை..”

இன்னும் ஏராளம் உண்டு, கீதையின் சாயல் அப்படியே இயேசுவின் போதனையில் இருந்தது, அவர் ஞானிகளின் தொடர்ச்சி என்பதால் கீதையினை அவர் உணர்ந்திருக்கலாம், கீதை ஞான சூரியன் என்பதால அந்த ஞான ஒளி அவரின் இதயத்தை தொட்டிருக்கலாம்

இந்த அத்தியாயத்தில் பகவான் சொல்லும் இன்னொரு வரி கவனிக்கதக்கது “அர்ஜூனா ஒருவன் எந்த வடிவில் என்னை வழிபட்டாலும் நான் அவனுக்கு அந்த வடிவாகவே தோன்றுவேன்”

ஆம் கண்ணனோ குருவாயூரோ வாமனனோ ராமனோ பிள்ளையாரோ முருகனோ, அம்மனோ யாரோ யாரை நம்பிக்கையுடன் வழிபட்டாலும் அவர்கள் என்னையே வழிபடுகின்றார்கள் என்கின்றான்

இது இந்து தெய்வங்களுக்கு மட்டுமல்ல உலகின் எல்லா மதத்தவருக்கும் பொருந்தும்

அது இயேசுவோ புத்தனோ அந்தோணியாரோ யார் வடிவில் நீங்கள் அந்த பரம்பொருளை வணங்கினாலும் அவர் உங்களுக்கு அப்படியே காட்சி தருவார். அப்படியே அவரை காண்பீர்கள்

பாத்திர வடிவில் தண்ணீர் காட்சி அளிப்பது போல ஒருவன் பிடித்து வைக்கும் வடிவில் அந்த பரம்பொருள் தெரியும்

அர்ஜூனனுக்கு அப்படி கண்ணன் தெரிந்தான்

ஆறுகள் பல கடல் ஒன்று என்பது போல எல்லா மதங்களின் அடையாளமும் பரம்பொருளில் முடியும்

இந்துக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மாந்தருக்கும் பொதுவானது கீதை, கடலில் பிரிவில்லை எல்லா மீன்களுக்கும் கடல் சொந்தம் என்பது போல, கீதையின் வரிகள் எல்லா மானிடரும் நோக்க வேண்டியது

அதிலும் இந்த 4ம் அத்தியாயம் எல்லோரும் வாசிக்க வேண்டியது