பகவத் கீதை- 5

Image may contain: 2 people

அர்ஜூனக்கு கர்ம யோகமும் ஞான யோகமும் விளங்கிற்று, அவனை பொறுத்தவரை கடமையினை செவ்வனே செய்து கடவுளை காண்பது எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என நினைத்து அமைதி கொள்வது கர்மயோகம், கடவுளை சரணைந்து அவரிலே இளைவது ஞான சந்நியாக யோகம்

இதில் குழம்பிய அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா, கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். மேலும் கர்ம யோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இவ்விரண்டிலும் எது உயர்ந்ததோ, அந்த ஒன்றைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முடிவு செய்து எனக்குச் சொல், நான் எதை பின்பற்ற வேண்டும்?

ஸ்ரீபகவான் சொல்கிறார் “அர்ஜூனா கர்ம சந்நியாஸம் , கர்ம யோகம் இவ்விரண்டுமே மோட்சத்தை அளிப்பவை. ஆனால் அவ்விரண்டில் கர்ம சந்நியாஸத்தைவிட கர்மயோகமே சிறந்தது.

எவனொருவன் விருப்பு ,வெறுப்பு இவைகளை மேற்கொள்வதில்லையோ,அவன் என்றும் நித்திய துறவி என அறிய வேண்டும்.

அத்தகையவன் சந்தேக மனப்பான்மையினை நீக்கியவனாதலால் கர்ம பந்தத்திலிருந்து கஷ்டமில்லாமல் சுகமாக விடுபடுகிறான்.

அர்ஜூனா, ஸாங்கியம் (ஞானம் )வேறு , யோகம் வேறு என்று அறியாமையால் சிக்கியவர்கள் சொல்வார்கள். நன்கு அறிந்தவர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். இவ்விரண்டு மார்க்கங்களில் எந்த ஒன்றை நன்றாகக் கடைப்பிடித்தாலும், இவ்விரண்டு மார்க்கங்களின் பலனான மோக்ஷத்தை அடையலாம்.

இரண்டும் இரு வழிகளே அன்றி வேறல்ல..

ஸாங்கியம் என்ற ஞான யோகத்தைமேற்கொண்டவர்கள் அடையும் மோட்சமென்ற‌ நிலையையே கர்ம யோகிகளும் அடையலாம். எவனொருவன் ஸாங்கியமும் ,யோகமும் ஒன்றெனக் காண்கிறானோ
அவனே உண்மையினை உணர்ந்தவன்.

கர்ம யோகமில்லாமல் ஸந்நியாசத்தை அடைய முடியாது. கர்ம யோகத்துடன் கூடிய முனிவன் வெகு சீக்கிரத்தில் பிரம்மத்தை அடைகிறான். கர்ம யோகத்தை கடைப்பிடித்து, ஆத்ம சுத்தியை அடைந்து , மனத்தையும் மற்ற புலன்களையும் வெற்றி கொண்டு, எல்லா பூதங்களின் ஆத்மாவாக உள்ளவனை தன் ஆத்மாவாகக் கருதுபவன் , கர்மங்களை அநுஷ்டித்தாலும் அவைகளில் ஒட்டுவதில்லை.

யோக முறையில் ஆத்ம தத்துவத்தை அறிந்தவன் பார்ப்பது,கேட்பது, தொடுவது, நுகர்வது , உண்பது , விடுவது, எடுப்பது, நடப்பது, உறங்குவது , மூச்சு விடுவது, பேசுவது , கண்களைத் திறப்பது, மூடுவது என எந்தச் செயலையும் தான் செய்த போதிலும் புலன்கள் அவைகளுக்குரிய விஷயங்களில் இருக்கின்றனவென்று முடிவு செய்து “நான் எதையும் செய்யவில்லை ” என்று நினைப்பான்.

எவனொருவன் கர்மங்களை பிரம்மத்திடம் ஒப்படைத்து, பற்றுதலில்லாமல் கர்மங்களைச் செய்கிறானோ ,
அவனை தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல் பாவ‌ம் ஒட்டுவதில்லை.

சரீரத்தாலும் ,மனத்தாலும்,புத்தியினாலும் , புலன்களாலும் ,பற்றுதலில்லாமல் ஆத்ம சுத்திக்காகவே யோகிகள் கர்மத்தை அநுஷ்டிக்கிறார்கள்.

கர்மயோகி, கர்ம பலனைத் துறந்து, நிலையான சாந்தியை அடைகிறான்.

அப்படி இல்லாதவன், ஆசையால் தூண்டப்பட்டு ,பலனில் பற்று கொண்டு ,கர்மங்களால் கட்டுப்படுகிறான்.
புலன்களை வெற்றி கொண்டவன் ,ஸகல கர்மங்களையும் மனத்தால் துறந்து , எதையும் செய்வதோ,
செய்விப்பதோ இல்லாமல் ஒன்பது வாயில்களைக் கொண்ட பட்டினமான தேகத்தில்
சுகமாக இருப்பான்.

ஆத்மாவானது, கர்மங்களைச் செய்யும் அதிகாரத்தையோ, கர்மங்களையோ உண்டாக்குவதில்லை.
கர்ம பலன்களுடன் சேர்த்து வைத்தலையும் உண்டு பண்ணுவதில்லை.

இயற்கையே எங்கும் இயங்குகிறது. ஆத்மாவானது எவனுடைய பாபத்தையும் எடுத்துக் கொள்வதில்லை.
புண்ணியத்தையும் எடுத்துக்கொள்வதில்லை.

ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது.அதனால் பிராணிகள் மயக்கமடைந்திருக்கின்றன. எவர்களுடைய ஆத்மஞானத்தால் அந்த அஞ்ஞானமானது அழிக்கப்பட்டதோ, அவர்களுடைய ஞானம் சூரியனைப் போல்
அந்த பரம்பொருளைப் பிரகாசிக்கச் செய்கிறது.

அந்த பரமாத்ம தத்துவத்தில், புத்தி ,மனம்,பற்றுதல்,நோக்கு, இவர்களை வைத்து,ஞானத்தால் மாசுகளைத் தீர்த்துக் கொண்டவர்கள் மீளாத ஒரு நிலையை அடைகிறார்கள்.

கல்வி, அடக்கம் ,இவை நிறைந்த அந்தணாரிடமும், பசுவிடமும்,யானையிடமும், நாயைத் தின்னும் நீசனிடமும் அறிஞர்கள் சமமான நோக்கு கொண்டிருப்பார்கள்.

எவருடைய உள்ளமானது ஸகல பூதங்களிலும் சமமான நோக்குடன் இருக்குமோ, அவர்கள்
இந்த பிறவியிலேயே ஜனன மரண ரூபமான சம்சாரத்தை வென்றவர்கள்.

ஏனென்றால், எத்தகைய தோஷமும் இல்லாதது எங்கும் சமமானது பிரம்மம்.

ஆகவே அவர்கள் பிரம்மத்திலேயே இருக்கிறார்கள். பிரம்மத்தில் நிலைத்த புத்தியுள்ளவனும், மோகமற்றவனும்,
பிரம்மத்தில் நிலைத்துள்ளவனுமான பிரம்மஞானி,தனக்கு இஷ்டமானதை அடைந்து அதிக மகிழ்ச்சி கொள்ளக்கூடாது.

தனக்கு இஷ்டமில்லாததை அடைந்து அதிக வருத்தமும் அடையக் கூடாது.

எவனொருவன் புறப்பொருள்களில் பற்றில்லா மனம் கொண்டு,ஆத்மாவில் சுகத்தை அடைகிறானோ,
பிரம்மத்தில் ஈடுபட்ட மனமுள்ள அம்மனிதன் அழிவில்லா சுகத்தை அனுபவிக்கிறான்.

புறப்பொருள்களால் ஏற்படும் சுகங்கள் துக்கத்திற்குக் காரணங்கள் அவை ஆதியந்தமுள்ளவை.

ஆகவே, விவேகமுள்ளவன்,அவைகளில் நாட்டம் கொள்ள மாட்டான், எவனொருவன்
சரீரத்திலிருந்து விடுபடுவதற்குமுன், இந்த ஜென்மத்திலேயே காமக் குரோதங்களால் உண்டாகும் வேகத்தைத் தடுக்கும் சக்தியுள்ளவனோ, அவனே யோகி, அவனே சுகம் பெற்ற மனிதன்.

எவனொருவன் , ஆத்மாவிலேயே சுகத்தை அடைகிறானோ,ஆத்மாவிலேயே விருப்பம் கொள்கிறானோ, மற்றும்
ஆத்மாவிலேயே ஒளி பெறுகிறானோ, அந்த யோகி தானே பிரம்மமாகி , பிரம்மானந்தத்தை அடைகிறான்.

மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும் , சந்தேகங்களை அறவே ஒழித்தவர்களும் , மனத்தைக் கட்டுப்படுத்தியவர்களும், அனைத்து பிராணிகளுக்கும் நன்மை செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்களுமான ஞானிகள் (பிரம்மானந்தமான) மோக்ஷத்தை அடைகிறார்கள்.

காம குரோதங்களை விட்டவர்களும், மனத்தை அடக்கினவர்களும், ஆத்மாவை அறிந்தவர்களுமான ஸந்நியாசிகளுக்கு , உயிரோடு இருக்கும்போதும் , மரணத்திற்குப்பின்னும் பிரம்மானந்தம் இருக்கும்.

புறப்பொருள்களை வெளியே விட்டு, பார்வையை புருவங்களின் மத்தியில் நிறுத்தி,
நாசியின் வழியாகச் செல்லும் பிராணன் ,அபானன் ,என்ற மூச்சுகளைச் சமப்படுத்தி, புலன்கள், மனம், புத்தி, இவைகளை அடக்கி ஆசை,பயம்,கோபம் இவைகளை நீக்கி மோக்ஷத்திலேயே முழு நோக்கம் கொண்ட மனிதன் எவனோஅவன் எப்பொழுதும் மோக்ஷமடைந்தவனே என்று கருத வேண்டும்.

யஜ்ஞங்களையும் தவங்களையும் அனுபவிப்பவன் நானே, அகில உலகிற்கும் ஈசன் நானே, ஸகல பூதங்களுக்கும் நண்பன் நானே , என்று என்னை இவ்வாறு அறிந்தவன் சாந்தியை அடைகிறான்..”

இதுதான் 5ம் அத்தியாயமான கர்ம சன்யாச யோகம், புரிந்து கொள்ள அவ்வளவு சிரமமே இல்லை, இதன் சுருக்கம் மிக சுலபமாக புரிந்து கொள்ள கூடியது

அனுபவமே ஞானம், அனுபவத்திலே ஆண்டவன் தெரிவான் எனும் ஒருவரியில் இந்த அத்தியாயத்தை சுருக்கலாம்

ஆம், தவம் தியானம் வழிபாடுகள் என கடவுளை தேடி ஓடி ஞானத்தை அடைபவர் ஞானிகள் அல்லது யோகிகள்,, அது சிரமானது, மிக பெரும் தவங்களை செய்ய வேண்டியது, அதிலே ஒடுங்கி அடங்கி புலன்களை ஒடுக்கி உடலை வருத்தி ஆன்மாவினை ஒளிர செய்து கடவுளை அடைவது

ரமணர் , விவேகானந்தர் போன்ற யோகிகள் ஒருவகை, அது அபூர்வ வகை

இன்னொரு வகை அனுபவத்தின் மூலம் பெறுவது , அது பட்டினத்தார் போன்ற சாயல் அது.

ஆம் அனுபவத்தில் பெறும் ஞானமே நிலைக்கும், அனுபவமின்றி வருவது ஞானமாகாது, அது ஒரு மயான வைராக்கியம் சட்டென மறைந்துவிடும்

மனதால் ஒடுங்காமல் பற்றறுக்காமல் அப்படி அறுத்துவிட்டதாக சொல்லி சந்நியாஸி என சொல்லிதிரிபவன் எளிதில் சோதனையில் விழுவான், அவனால் முழு ஞானத்தில் நிலைத்திருக்க முடியாது

நெல்மணி வயலில் விழுந்தால் முளைக்கும், அது இயல்பு, அனுபவமில்லா ஞானம் அப்படியே, மண்ணும் நீரும் மட்டவுடன் நெல் முளைவிடுவது போல, அவன் புலன்கள் வழி சிக்கி மானிடன் தன் இயல்பான லவுகீக சகதியில் சிக்குவான், ஞானம் அவனுக்கு தொலைவாகும்

ஆனால் அவித்துவிட்ட நெல்மணி முளைக்காது, காரணம் அதன் உயிர்தன்மை அகற்றபட்டது, நீரும் மண்ணும் அதை முளைக்கவைக்க முடியாது. அனுபவ ஆத்மாவில் வேகும் ஆத்மா அப்படி அவித்த நெல்லாகின்றது

அனுபவங்கள் செதுக்கி வேகவைத்த மாமுனிகளான பட்டினத்தார், பத்ருஹரியார் இன்னும் பலர் அப்படித்தான்

இதைத்தான் கண்ணன் சொன்னான் அனுபவத்தால் வரும் ஞானம் நிலைக்கும்

தியானம் தவம் என கடவுளை அடைவது ஒருவழி, லவுகீக வாழ்வில் உழன்று ஞானம் அடைவது இன்னொரு வழி. கர்மத்தின் வழி ஞானியாவது , காரைக்காலமையார் கண்ணகி கூட அவ்வழியே, ஏன் மாதவியே பின்னாளில் சந்நியாஸி கோலம் பூண்டிருந்தாள்

கடமையினை கர்மமாய் ஏற்று செய், முழு அர்பணிப்போடு செய், செய்துகொண்டே இரு , ஒரு கட்டத்தில் கடவுளை உணர்வாய், கடவுளில் கலப்பாய் அதுவே கர்மயோகம்

சோழ அரசர்கள் இதற்கு உதாரணம், போர்செய்வதும் விவசாயம் பெருக்குவதும் தம் கர்மம் என கண்டார்கள், அதை செய்து கொண்டே இருந்தார்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் கர்மத்தின் முடிவில் கடவுளை உணர்ந்தார்கள், அழியா ஆலயங்கள் உருவாயின‌

ராஜராஜசோழனின் ஆலயம் அப்படி உருவானதே

கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஆத்திகவாதிகள், இசை ஞானிகள் இன்னும் ஏராளமானோரை சொல்லலாம் தங்கள் கர்மத்தை மிக சரியாக செய்துமுடிக்கும் நிலையில் அவர்கள் கடவுளை உணர்ந்திருப்பார்கள்

அசோகன் கலிங்கபோரின் முடிவிலே அந்த கர்மத்தின் முடிவிலே கடவுளை உணர்ந்தார், கண்ணதாசன் போன்றோருக்கு அரசியல் போரில் ஞானம் வந்தது

வேட்டைக்காரனான வால்மிகிக்கு வந்தது, கண்ணப்ப நாயனாருக்கு வந்தது, கர்மத்தால் தெய்வம் வந்தது, ஞானமும் வந்தது

கர்மத்தை ஏற்றுகொள் , அதை சுமந்து செல், கர்மத்தினை சுமக்க சுமக்க தெய்வத்தை உணர்ந்து முடிவில் யோகியாவாய் என்கின்றான் கண்ணன்

ஆம் தவத்தின் முடிவல்ல, செயலின் முடிவும் கடவுளை உணர்ந்த நிலையிலே முடியும், இதை மனதால் உணர்ந்தால் இரண்டுக்கும் வேறுபாடு தெரியாது என்கின்றான் கண்ணன்

ஏன் இந்த ஏற்பாடு? அதில்தான் சிருஷ்கர்த்தா சிரிக்கின்றான்

யோகிகள் வேறுவகை, மானிட சமூகத்தின் இயல்பில் சிக்காமல் தனித்திருந்து தவமிருந்து ஞானம் பெற்று மானிடருக்கு நிலா போல் வழிகாட்டுவார்கள்

எல்லா மானிடரும் யோகியாக இருந்தால் எப்படி உலகம் இயங்கும்? எப்படி மானிட சந்திதி பெருகும்? எப்படி நியாய தர்ம சண்டை வரும்? எப்படி தன் இருப்பை தக்க வைக்கும்?

இதனால் உலக இயக்கத்துக்காக சாமான்யரையும் படைத்தது, அவர்களை கர்மாவில் உழல வைத்தது, ஆறு மலை பள்ளம் நிலம் சாக்கடை இன்னும் எங்கெல்லாமோ பாய்ந்து எதை எல்லாமோ கண்டு கடலில் விழுவது அதுதான் மானிட கர்ம யோகத்தில் கடவுளை அடைவது

மானிடன் உழைக்க வேண்டும், இந்த பூமியில் அவனுக்குரிய கடமையினை செய்ய வேண்டும், உலகை இயக்கிகொண்டே தன் கடமையினை முடித்தபொழுது ஞானம் பெற வேண்டும், இறைவனை உணர்தல் வேண்டும்

ஒரு எளியஉதாரணம் பார்க்கலாம், மானிடன் மருத்துவம் கற்று மருந்து தயாரித்து பெரும் சிரமபட்டு உயிர்காக்க போராடுகின்றான், யோகி தன் தவவலிமையினால் உயிர்காக்கின்றார்

தன்னால் காக்க முடியாத உயிரை ஒரு யோகி காக்கும்பொழுது மருத்துவன் தன் அனுபவத்தால் தெய்வத்தை காண்பான் அல்லவா? அல்லது உணர்வான் அல்லவா? அதுதான் கர்மயோகம்.

ராஜராஜ சோழன் ஆளபிறந்தான் அவனோடு ஆயிரமாயிரம் மக்கள் ஏன் பிறந்தார்கள், ஆயிரம் ஆயிரம் அடிமைகள் அவனிடம் ஏன் சிக்கினார்கள், எல்லோரையும் ஒன்றிணைத்து கோவிலை கட்ட சொன்ன சக்தி எது?

அதுதான் கர்மா

ஹிட்லர் சொன்னவுடன் ஜெர்மானியரெல்லாம் பொங்கினார்களே, அவர்களை ஒருங்கிணைத்த சக்தி எது? அதுதான் கர்மா?

யாருக்கும் வராத சிந்தனையெல்லாம் ஐன்ஸ்டீனுக்கும், நியூட்டனுக்கும் வந்ததே, அவர்களை போன்ற விஞ்னானிகளும் ஒரு கட்டத்தில் பெரும் சக்தி உண்டு என ஒப்புகொண்டார்களே அது என்ன? அதுதான் கர்மத்தில் கடவுளை காண்பது

இது குடும்பம் முதல் அரண்மனைவாசி வரை ஒவ்வொருவருக்கும் பொதுவானது

கீதையினையே எடுங்கள், இளம் வயதில் இருந்தே கவுரவரை நன்கு அறிந்தவன் அர்ச்சுணன் ஆனால் அவர்களை பொறுத்து கொண்டே இருந்தான், கவுரவர் அவர்களை கொல்லபார்த்தும் , அடிமையாய் நிறுத்தி வைத்ததும் 14 வருடம் அகதியாய் அலையவிட்டதும் அவனுக்கு மறந்துவிட்டது, பாசத்தில் கலங்குகின்றான்

கீதை உபதேசம் செய்தபின்னும் அவன் முழுக்க தெளியவில்லை, ஆனால் அபிமன்யு கொல்லபட்டபின்பே எதிர்தரப்பு மகா மகா மட்டமான அரக்க கூட்டம் என்பதை முழுக்க தெரிந்து கடைசி கட்டத்தில் தன் முழு பலத்தையும் காட்டுகின்றான்

இதுதான் அனுபவத்தால் வரும் தெளிவு

அதைத்தான் இப்பொழுது கர்மத்தால் யோகம் பெறு அர்ச்சுணா, அந்த ஞானமே நிலைக்கும் என சொல்கின்றான் கண்ணன்

இந்த அத்தியாயத்தில் கண்ணன் தெளிவாக சொல்கின்றான், தவயோகியோ கர்மத்தால் உண்டாகும் ஞானமோ அதை அடைந்த ஒருவன் எப்படி இருப்ப்பான்? அவன் எல்லாம் கடந்த ஞான நிலையில் இருப்பான், எல்லாமும் அவனுக்கு ஒன்றே

இந்தியாவில் காந்தியினையும், வள்ளலாரையும் அதற்கு உதாரணமாய் சொல்லலாம்

“கல்வி, அடக்கம் ,இவை நிறைந்த அந்தணாரிடமும், பசுவிடமும்,யானையிடமும், நாயைத் தின்னும் நீசனிடமும் அறிஞர்கள் சமமான நோக்கு கொண்டிருப்பார்கள்”

ஆம் வள்ளலாரை இதில் தயக்கமின்றி சொல்லலாம், அந்த ஞான மகான் எல்லாம் கடந்த நிலையில் இப்படித்தான் ஜோதியாக நின்றார், கடவுளை உணர்ந்த யோகநிலை என்றால் அதுதான்

பரம்பொருளை முழுக்க உணர்ந்தவர்களிடம் இந்த பக்குவம் இருந்தது, ஆதி சங்கரரிடம் இருந்தது ராமானுஜரிடம் இருந்தது இன்னும் யார் யாரிடமெல்லாமோ இருந்தது

இதைத்தான் இயேசுவும் சொன்னார் , கீதையின் வரிகளை அப்படியே சொன்னார் “எவனொருவன் தன் குடும்பத்தை விட்டு, தாய் தகப்பனை விட்டு, சொத்துக்களை விட்டு என்னை பின் தொடர்கின்றானோ அவன் பாக்கியவான்”

அதற்கு அர்த்தம் என்ன? என்னோடு சிலுவையில் சாவு என்பதா?

இல்லை, பற்றற்ற மனதோடு இரு, கொஞ்சமும் உலக விஷயத்திலும் பாச பந்தங்களிலும் சிக்கி கொள்ளாதே, அது ஒன்றே கடவுளை காணும் வழி

இதைத்தான் இந்த அத்தியாயத்தில் “தாமரை இலை நீர் போல் இரு” , அந்த பக்குவம் வரும்வரை கர்மாவினை செய், ஞானம் வரும்வரை செய் , அனுபவ கர்மத்தால் ஞானத்தை பெறு என்கின்றான்

ஆம் அனுபவம் கொடுக்கும் ஞானத்தால் கடவுளில் கலந்துவிடுதல், கர்மங்களை கடந்து அவரிடம் அடைக்கலமாகிவிடுதல் எனும் மிக உயர்ந்த யோகநிலை என்பது அதுதான்

அந்த நிலையில் அன்பு.. அன்பு. அன்பு எல்லா மாந்தரிடமும் அன்பு ஒன்றே தெரியும், எல்லா உயிரிலும் இருக்கும் தெய்வமும் தனக்குள் இருக்கும் தெய்வமும் புரியும்

புத்தன், இயேசு, நபிபெருமான், சீரடி சாய்பாபா, ரமணர் என எல்லா மகான்களின் வாழ்வும் இதைத்தான் சொல்லும், காந்தத்துடன் இணையும் இரும்பு காந்த சக்தி பெறுவது போல கடவுளின் சக்தி அவர்களுக்குள் பாய்ந்தது

சாதாரண மனிதனுக்கு ஞானம் மறைக்கபட்டிருகின்றது, புலன்களும் லவுகீக வாழ்வும் அவனை தெய்வதினை நெருங்கவிடாமல் மறைக்கின்றன, அவன் ஆத்மா மாயையில் சிக்கி இருக்கின்றது

பந்தம்,சொந்தம், பணம், ஆசை, பதவி , மோகம் அது இதுவென ஏக சங்கிலிகளில் சிக்கி கிடக்கும் மனிதனின் ஆத்மா மகிழாது, ஆத்மாவின் உண்மை தன்மை மகிழ்ந்திருப்பது, அது கடவுளில் கலந்தால் மட்டுமே சாத்தியம்

குழந்தைகளும், ஞானிகளும் மட்டுமே உலகில் மகிழ்வாக இருக்கின்றார்களே ஏன்? இருவரின் ஆன்மாக்களும் கபடற்றவை, ஒன்று இன்னும் மாசு அடையவில்லை இன்னொன்று புடம்போட்டு மாசு நீக்கபட்டது

குழந்தையாக இருந்து வளர வளர லவுகீக உலகின் நெருக்கடியில் மனிதன் மாயையில் வீழ்கின்றான், அவர் கர்மாவினை ஏற்று, எல்லாம் கடவுளுக்கே, எல்லாம் அவரின் வழிகாட்டுதல் படியே என உணர்ந்த்து செய்ய செய்ய, அவனில் “நான் செய்யவில்லை, என்னில் இருந்து ஒரு சக்தி செய்கின்றது” என்ற எண்ணம் வர வர அவனுக்கு ஞானம் வந்து அது நெருப்பாய் எரிந்து, மாயையினை கொன்று அவன் ஆத்மாவுக்கு உண்மையினை போதித்து அவனை யோகியாக்கும்

அவனுக்கு வரும் ஞானம் நிலைத்திருக்கும், ஆம் அவிக்கபட்ட நெல் முளைக்காது, பற்றற்ற தன்மை உருவாகும்

அத்தியாயத்தின் கடைசி வரிகளை பாருங்கள், “புருவத்தின் நடுவில் சிந்தையினை நிறுத்தி நாசியின் வழியாகச் செல்லும் பிராணன் ,அபானன் என்ற மூச்சுகளைச் சமப்படுத்தி எவன் மனதை அடக்கி வருகின்றானோ அவன் மோட்சம் அடைவான்

ஆம் தியானம் என்பது இந்நாட்டின் வழிபாடாய் இருந்தது, இங்கு ஒவ்வொரு தெய்வம் அமர்ந்திருக்கும் கோலமும் யோக தியான ஆசனம். சிவனாகட்டும், அய்யபனாகட்டும், படுத்திருக்கும் பெருமாளாகட்டும் எல்லாமே தியான கோலங்கள்

இன்று ஒரு கிறிஸ்தவன் இருநேரம் ஜெபிப்பதை போல , ஒரு இஸ்லாமியனும் யூதனும் ஐந்துமுறை தொழுவது போல அன்று இந்தியா எனும் ஞான பூமியில் மூவேளை தியானத்தில் அமர்வது வழக்கில் இருந்தது

அந்த தியானம் ஞானம் முதல் எல்லாமும் கொடுத்தது, பிரபஞ்சத்தை அவனில் இறக்கியது, பெரும் ஞானிகள் உருவானது அப்படித்தான்

பின்னாளில் ரமணர், விவேகானந்தர் என மிக சிலரையே கண்டோம், காரணம் அவர்கள் அந்த மாபெரும் மரபினை முயற்சித்து பார்த்தார்கள்

எல்லா சிப்பிக்குள்ளும் முத்து இருக்காது, எல்லா சுரங்களிலும் வைரம் இருக்காது, ஆனால் திறந்து பார்க்காமல் சொல்ல முடியாது

தியானம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம், அது சில மகான்களை அபூர்வமாக உருவாக்கும் ஆனால் மற்றவர்களை மனிதனாக வாழவாது வைக்கும்

இது இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய விஷயம், இது மருத்துவமும் கூட மனநலம் காக்கும் வழியும் கூட, மேற்குலகமும் விஞ்ஞானிகளும் ஒப்புகொண்ட பெரும் விஷயமும் கூட‌

மன நலமே உடல் நலத்தின் முதல்படி, மனதின் அழுத்தம் அதிகரிக்க நோயும் குழப்பமும் அதிகரிக்கும், அதை குறைக்க மருந்தில்லை சிகிச்சை இல்லை, மனம் அமைதி அடைவதே தீர்வு

அதை கொடுப்பதுதான் தியானம்..

ஆம் தியானம் மனிதனை செம்மைபடுத்தும், பிரபஞ்ச கடவுளின் குரலை அவன் மனதிலே எழுப்பும், அது அவன் கர்மத்தை அமைதியாக செய்து கடவுளை அடைய வகை செய்யும்

நடந்து செல்லும் தூரத்தை குதிரையில் ஏறினால் விரைவாக கடக்கலாம் அல்லவா? அப்படி குதிரையாக மனதுக்கு கிடைத்ததுதான் தியானம், அதை அழுத்தி சொல்கின்றான் கண்ணன்..

ஒவ்வொரு மனிதனின் அன்றாட கடமை அது, இந்துக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பயிற்சியும் அதுவே