பகவத் கீதை 6ம் அத்தியாயம்

Image may contain: 2 people

அர்ஜூனனுக்கு மேற்கொண்டு யோக சந்நியாச தன்மையினை போதிக்கும் இந்த ஆறாம் அத்தியாயமே “ஆத்மஸம்யம யோகம்”

கண்ணன் சொல்கின்றான், “அர்ஜூனா சந்நியாஸி என்பவன் யார்? எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே ஸந்நியாசி. அவனே யோகி .

யாகத்தில் அக்கினியைப் பற்ற வைக்காததாலோ, கர்மங்களைத் துறந்ததாலும் ஒருவன் ச‌ந்நியாசி ஆக மாட்டான்.

அர்ஜூனா., ஸந்நியாசமென்று எதைச் சொல்லுகிறார்களோ அதையே யோகமென்று அறிவாயாக.
கர்ம பலனைப் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆகமாட்டான்.

யோகநிலையில் முன்னேற விரும்பும் முனிவனுக்குக் கர்மயோகம் சாதனமாகும். யோக நிலையைப் பெற்றபின் அவனுக்கு மன அமைதியே சாதனமாகும்.

ஆத்மாவினாலேயே ஆத்மாவை உயர்த்த வேண்டும். ஆத்மாவைக் கீழ்நோக்கிச் செல்ல விடக்கூடாது, ஆத்மாவே ஆத்மாவுக்கு உறவு , ஆத்மாவே ஆத்மாவுக்குச் சத்துரு.

ஆத்மாவினாலேயே ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மாவே உறவு. ஆத்மாவை வசப்படுத்தாதவனுக்கு
ஆத்மாவே சத்துருவாகி விரோதத்தைச் செய்யும். குளிர்,வெப்பம்,சுகம்,துக்கம்,மானம்,அவமானம்,
இவைகளில் சமநோக்குடன் இருந்து ஆத்மாவை வசப்படுத்தி அமைதியாக உள்ளவன் பரமாத்ம நிலையைப் பெற்றிருப்பான்.

ஞானத்தாலும், விஞ்ஞானத்தாலும் மனம் திருப்தியடையப் பெற்றவனும், அசையாதவனும், புலன்களை வென்றவனும் , மண்ணையும்,கல்லையும்,பொன்னையும், ஒரே விதமாக மதிப்பவனுமான யோகி,
யோகம் நிறையப் பெற்றவனென கூறப்படுகிறான்.

அன்பர்கள்,நண்பர்கள்,பகைவர்கள், அசட்டையாக இருப்பவர்கள்,நடுநிலையாக இருப்பவர்கள்,
தன்னை துவேஷிப்பவர்கள்,பந்துக்கள்,சாதுக்கள், பாபிகள், இவர்கள் எல்லோரிடமும் சம நோக்குடன் இருப்பவன் உயர்ந்தவன்.

யோகியானவன்,ஆசைகளையும்உடைமைகளையும் விட்டொழித்து, மனத்தை அடக்கி , ஏகாந்தத்துடன் இருந்து கொண்டு , எப்பொழுதும் ஆத்மாவை யோகத்துடன் கூடியதாக இருக்கச் செய்ய வேண்டும்.

அர்ஜூனா தவத்தை எப்படி செய்ய வேண்டும்?

சுத்தமான இடத்தில் அசையாத ஓரு ஆசனத்தைத் தனக்காக அமைத்துக் கொள்ள வேண்டும்.
அது அதிக உயரமாகவோ,அதிக தாழ்வாகவோ இருக்கக் கூடாது.

அந்த ஆசனத்தின் முன் வஸ்திரம், அதன்கீழ் மான் தோல், அதன்கீழ் தர்ப்பங்கள், எனப் பரப்ப வேண்டும்.
பிறகு அந்த ஆசனத்தில் அமர்ந்து, மனத்தை ஒருமைப்படுத்தி, உள்ளத்தையும்,புலன்களையும் அடக்கி ,
மனத்தைச் சுத்தம்செய்வதற்காக யோகத்தைப்பயில வேண்டும்.

உடல்,தலை,கழுத்து,இவைகளை நேராகவும், அசையாமலும், நிலையாக வைத்துக் கொண்டு,
இங்கும் அங்கும் பார்க்காமல் , தன் நாசி நுனியைக் கண்களால் பார்த்துக் கொண்டு,
அமைதியான மனத்துடன், பயமற்றவனாகவும், பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாகவும் இருந்து,
மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னிடமே மனத்தைச் செலுத்தி , யோக நிலை பெற்று, என்னையே குறிக்கோளாகக் கொண்டு அமர வேண்டும்.

இவ்விதமாக , மனத்தைக் கட்டுப்படுத்தி, எப்பொழுதும் தன்னை யோகத்திலிருத்துபவனான யோகியானவன்,
மோக்ஷத்தை இறுதியாகக் கொண்டதும், என்னிடமுள்ளதுமான சாந்தியை அடைகிறான்.

அதிகமாகச் சாப்பிடுபவனுக்கு யோகம் கிடைக்காது. ஒரேயடியாக பட்டினியாக இருப்பவனுக்கும் யோகம் கிடைக்காது. அதிகமாகத் தூங்குபவனுக்கும், தூங்காமல் விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும்
யோகம் கிடைக்காது.

அளவாக ஆகாரம் புசிப்பவனுக்கும், அளவாக நடமாடுபவனுக்கும், கர்மங்களை அளவாக னுஷ்டிப்பவனுக்கும்,
அளவாக தூங்கி, அளவாக விழிப்பவனுக்கும் , யோகமென்பது துக்கத்தை நீக்கும்.

எப்பொழுது , எவனுடைய சித்தமானது நன்கு கட்டுப்படுத்தப்பட்டு , ஆத்மாவிலேயே நிலைத்திருக்குமோ,
எவன் ஸகல ஆசைகளிலும் வெறுப்பு கொள்கிறானோ, அப்பொழுது யோகி என்று சொல்லப்படுகிறான்.

சித்தத்தை அடக்கி யோகத்தைப் பயிலும் யோகியின் யோக நிலைக்கு
காற்றில்லாத இடத்தில் அசையாத ஜ்வாலையுடன் கூடிய திருவிளக்கே உவமையாகும்.

யோகப்பயிற்சியினால் அடக்கப்பட்ட சித்தமானது எங்கே விருப்பம் கொள்கிறதோ, எந்த நிலையில்
மனத்தால் ஆத்மாவைக் கண்டு அந்த ஆத்மாவிலேயே மகிழ்ச்சி கொள்கிறானோ, எந்த நிலையில்
எல்லையில்லா சுகமானது புலன்களுக்கு விஷயமாகாமல் புத்தியாலேயே அறியப்படுமென்று அறிகிறானோ,
எதில் நிலைத்தபின் அசைய மாட்டானோ, எதை அடைந்தபின் மற்றொரு லாபம் உயர்ந்ததென்று கருதமாட்டானோ, எதில் நிலைத்தபின் பெரிய துக்கம் வந்தாலும் அசைய மாட்டானோ, அதை
துக்கத்தின் சேர்க்கைக்கு எதிரிடையான யோகமென்று அறிவாயாக.

மனம் கலங்காமல் திடமாக அந்த யோகத்தைப் பயில வேண்டும். ஸங்கல்பத்தால் உண்டாகும் ஆசைகள் எல்லாவற்றையும் முற்றிலும் துறந்து , புலன்களின் கூட்டத்தை மனத்தினாலேயே எல்லாவிடத்திலிருந்தும் இழுத்து, கட்டுப்படுத்தி தைரியத்துடன் கூடிய புத்தியினால் , மெள்ள மெள்ள அடக்க வேண்டும்.
மனத்தை ஆத்மாவிலேயே நிலை நிறுத்தி வேறொன்றையும் நினைக்காமலிருக்க வேண்டும்.

நிலையாக நிற்காமல் , ஓடிக் கொண்டிருக்கும் மனதானது, எந்த எந்த விஷயங்களைத் தேடி செல்கிறதோ,
அந்தந்த விஷயங்களில் அதைச் செல்ல விடாமல் தடுத்து, ஆத்மாவுக்கு அடங்கியதாகச் செய்ய வேண்டும்.
மன அமைதியப் பெற்றவனும், ரஜோ குணம் நீங்கப் பெற்றவனும் , பிரம்மமாக ஆனவனும்,
கல்மிஷம் நீங்கியவனுமான இந்த யோகியை உயர்ந்த சுகமானது வந்தடைகிறது.

இப்படி ஆத்மாவை எப்பொழுதும் யோகத்திலிருத்திய யோகியானவன் லவுகீகம் நீங்கப்பெற்று ,
பிரம்மத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு , அதிகமான சுகத்தை எவ்வித சிரமுமில்லாமல் அனுபவிக்கிறான்.

யோகத்தில் நிலைத்தவன், ஸகல ஜீவராசிகளிலும், தான் இருப்பதையும், தன்னில் ஸகல ஜீவராசிகள் இருப்பதையும் காண்பான்.

அவன் எல்லாவிடத்திலும் சம நோக்குடனிருப்பான், எவனொருவன் என்னை எல்லாவிடத்திலும் காண்பானோ,
மற்றும் என்னிடம் எல்லாம் இருப்பதையும் காண்பானோ, அவனுக்கு நான் காணப்படாமல் இருக்க மாட்டேன்.
அவனும் எனக்குக் காணப்படாமல் இருக்க மாட்டான்.

எல்லா உயிர்களிலும் ஒரே நிலையை காண்கின்ற எவனொருவன் , எல்லா ஜீவராசிகளிலும் உள்ள என்னைத் தொழுகின்றானோ, அந்த யோகி எந்நிலையிலும் , எந்த விதத்திலும், என்னிடமே இருப்பான்.

அர்ஜுனா.. சுகமோ,துக்கமோ எதுவாக இருந்தாலும் தன்னைப் போல் எல்லோரையும் சமமாகக் காணும் யோகி உயர்ந்தவன்..”

இதை கேட்டதும் அர்ஜூனன் மெல்ல கேட்கின்றான்

“கிருஷ்ணா மனம் சஞ்சலமானது குழப்பத்தை விளைவிக்கக்கூடியது, அடங்காதது கெட்டியானது காற்றை அடக்க முடியாதது போல் அதையும் அடக்க முடியாதென்று நினைக்கிறேன்.”

க‌ண்ணன் பதிலளிக்கின்றான் , அர்ஜூனா “மனம் அடக்க முடியாதது, சஞ்சலமானதும் கூட. ஆனால்
பயிற்சியினாலும், வைராக்கியத்தாலும் அதை இழுத்து நிறுத்தி விடலாம்.

மனத்தைக் கட்டுப்படுத்தாதவனுக்கு யோகம் கிட்டாது. மனத்தை வசப்படுத்தி
உபாயத்துடன் முயற்சி செய்பவனுக்கு யோகம் கிட்டும்.”

அர்ஜூனன் மறுபடியும் கேட்கின்றான், கண்ணா “சிரத்தையுடன் யோகத்தில் இறங்கினான். ஆனால், முயற்சி போதவில்லை. அதனால் யோகத்திலிருந்து மனம் நழுவி விட்டது..

அவன் யோக ஸித்தியை அடையவில்லை. அப்படிப்பட்டவன் என்ன கதி அடைவான் ?
அவன் விவேகமற்றவனாய் பிரம்மத்தை அடையும் மார்க்கத்தில் நிலைக்காமல் , கர்ம யோகத்திலிருந்தும் ,
யோக மார்க்கத்திலிருந்தும் நழுவி சிதறிய மேகம் போல்
அழிந்து விடுவானா?

இந்த சந்தேகத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சந்தேகத்தைத் தீர்ப்பவன் உன்னைக் காட்டிலும் வேறொருவன் உண்டோ?”

மயக்கம் கொண்ட அர்ஜூனக்கு கண்ணன் பதில் சொல்கின்றான்

“இந்த உலகத்திலோ, பரலோகத்திலோ அவனுக்கு அழிவே கிடையாது. அப்பனே, நல்லதைச் செய்தவன் எவனும் துர்க்கதி அடைய மாட்டான்.

அவ்வாறு யோகத்திலிருந்து நழுவியவன் , புண்ணியம் செய்தவர்கள் அடையக்கூடிய உலகங்களில்
வேண்டிய மட்டும் பல வருஷங்கள் போகங்களை அனுபவித்து.
பிறகு சுத்தமானவர்களும், செல்வந்தவர்களுமானவர்களின் குலத்தில் பிறப்பான்.
அல்லது ஞானிகளான யோகிகளுடைய உயர்ந்த குலத்தில் பிறப்பான்.

உலகில் இத்தகைய பிறவி என்பது கிடைத்தற்கரியதாகும். அந்தப் பிறவியில் , அதற்கு முந்திய பிறவியில் இருந்த புத்தியைப் பெறுகிறான். பிறகு, யோக சித்தியை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்வான்.

அவன் முற்பிறவியில் அடைந்த அதே யோகத்தின் பயிற்சியினால் தனக்குத் தெரியாமலேயே யோகத்தின் பக்கத்தில் இழுத்துச் செல்லப்படுகிறான். யோகத்தை அடைய வேண்டுமென்ற விருப்பம் கொண்டால் மட்டுமே
அவன் சப்தப் பிரம்மத்தைக் கடந்து விடுகிறான்.

நன்றாக முயற்சி செய்யும் யோகி என்றால் , மாசுக்கள் தீரப்பெற்று ,கடந்த பல ஜென்மங்களில் தான் செத முயற்சியினால் யோக சித்தியைப் பெற்று அதன் மூலமாக பரகதியைப் அடைகிறான்.

தவ முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி, ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி,
கர்மத்தை அனுஷ்டிப்பவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி

ஆகவே அர்ஜுனா நீயும் யோகி ஆவாயாக. என்னிடம் மனத்தை ஒப்படைத்து , சிரத்தையுடன் என்னைத் தொழுபவனே எல்லா யோகிகளிலும் சிறந்த யோகியாவான் .”

கவனியுங்கள், சந்நியாசம் என்பதென்ன? நல்ல சந்நியாசியின் மனம் எப்படி இருக்கும் குணம் எப்படி இருக்கும், யோகிக்கான மனநிலை எது என்பதை மகா தெளிவாக சொல்கின்றான் கண்ணன்

மேற்சொன்ன அனைத்துக்கும் உதாரணமாக நம் முன் வாழ்ந்தவர் விவேகானந்தர். உலக சந்தோஷங்களையும் புலன்களின் மகிழ்வினையும் தள்ளிவிட்டு உதறிவிட்டு தவயோகியாக நம் கண்முன் வாழதவர், அதனால்தான் அமெரிக்கா செல்லவும் சமஸ்தானம் சமஸ்தானமாக பிச்சையெடுத்தார்

கடைசி வரை பணம், புகழ், பெண், ராஜபோகம் என அதிலும் அவர் சிக்கவில்லை, எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை, மிகபெரும் யோகிக்கான எடுத்துகாட்டாய் அவர் நின்றார்

ரமணரையும், விசிறி சாமியார் எனும் மகானையும் சொல்லலாம், உலக இன்பங்கள் எதுவும் அவர்களை தொடமுடியவில்லை , கால்முட்டிவரை குவிந்திருந்த பணமோ தங்கமோ அவர்கள் மனதை அசைக்கவில்லை, சுற்றி வந்த பெண்களை அவர்களால் வெறும் ஆன்மாக மட்டும் பார்க்க முடிந்தது

யோகிகளுக்கு எடுத்துகாட்டாக அவர்கள்தான் நிற்கின்றார்கள்

இன்று கழுத்துவரை நகை அணிந்து தங்க சிம்மானசத்தில் அமர்ந்து தனிநாடு தனிகொடி என அலைபவர்களோ, இல்லை வெறு வகை யோகிகளோ ஏன் போலிகள் என்றால் பகவானின் இந்த போதனைபடிதான்

யோகிகளுக்கான வரைமுறையினை கண்ணன் அழகாக சொல்கின்றான், யோகிக்கான தகுதியினை எடைபோடும் கல் இந்த அத்தியாயம், இந்த தராசில் நிறுத்தி பாருங்கள் யோகியினை எளிதாக எடை போட முடியும்

பகவான் ராமன் இதில் சரியாக இருந்தான், அவனுக்கு யோக மனம் இருந்தது

அவனுக்கு கழுகும் ஒன்றுதான் குரங்கும் ஒன்றுதான், அனுமனும் ஒன்றுதான், விபீஷனும், லக்குவனும் ஒன்றுதான்

அயோத்தி அரசும் ஒன்றுதான், கிட்கிந்தா காடும் ஒன்றுதான். எல்லாவற்றையும் ஒரே சிந்தையில் கண்டவன் அவன், ஒரே வரிசையில் வைத்து பார்த்த உயர்ந்த மனம் அவனுடையது, அதுதான் யோகம், அதுதான் யோக நிலை

வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய வள்ளலாருக்கும் அந்த யோக நிலை கைகூடியது

இந்துமதத்தின் மகா பெரும் பாரம்பரியங்கள் அது ஆதிசங்கரரோ, வித்யாதாரரோ யாரையும் எடுத்து பாருங்கள் இந்த உண்மை புரியும், அவர்கள் முழு ஆத்மஸம்ய‌ யோகத்தில் கலந்திருந்தார்கள்

மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தும் அந்த தியான நிலையினை அவன் அர்ஜூனனுக்கு போதிக்கின்றான், எப்படி அமர வேண்டும், எந்நிலையில் எப்படி அமர்ந்து தியானிக்க வேண்டும் என அழகாக போதிக்கின்றார்

இதை படித்தவன் பல ஆயிரங்களையோ லட்சங்களையோ கொடுத்து தியான நிலையம் ஓடமாட்டான், நல்ல யோகியும் பல ஆயிரம் பெற்று அதை சொல்லிகொடுக்கமாட்டான், அப்படி செய்தால் அது வியாபாரம்

நல்ல இந்து தேட வேண்டிய தியான வழி, இந்த 6ம் அத்தியாயத்திலே இருக்கின்றது, அதற்காக மான் தோல் தர்ப்பை எல்லாம் அவசியமில்லை, காலமாற்றத்தில் ஒரு கோரைப்புல் பாய் போதும், மனமே முக்கியம்

கண்ணன் சொல்வது போல் அமர்ந்து சிந்தையினை நெற்றியில் நிறுத்தினால் யோகம் கிட்டும்

ஆனால் அதில் ஒரு விஷயம் முக்கியம், நான் யோகம் பயின்று ஞானியாவேன், மூன்றாம் கண்ணை திறப்பேன், மூவுலகங்களையும் கடப்பேன் எனும் எதிர்ப்பார்ப்பில் செய்ய கூடாது, அப்படி செய்தால் பலன் இருக்காது

நான் தவமிருப்பேன் தியானமிருப்பேன் ஆத்மாவில் சிந்திப்பேன் என அமர்ந்தால் போதும், பள்ளத்தை நோக்கி ஓடிவரும் வெள்ளம் போல் ஞானம் ஓடிவரும்

தன்னை தாழ்த்தும் பூமிக்கு நீர் வருவது போல தன்னை தாழ்த்தி தன்னை உருக்கும் மனிதனுக்கு பகவான் அருளும் ஞானமும் தானே ஓடிவரும்

இதைத்தான் கண்ணன் சொல்கின்றான்

அர்ஜூனன் மேலும் கேட்கின்றான், அவன் சாமாயனாக நம்மில் ஒருவனாக கேட்கின்றான்

“கண்ணா, மனம் கடுமையானது குரங்கும் கடலும் போன்றது, அதை ஒடுக்க முடியாது. அதை அடக்க முயன்று யோகத்தில் அமரும் மனிதன் தோல்வியுற்றால் அது பாவம் அல்லவா? ஒன்றை தொடங்கிவிட்டு இடையில் விட்டால் அது சாபம் அல்லவா? இதை விளக்குவாயா?”

கண்ணன் சொல்கின்றான் “அர்ஜூனா தொடங்குவது மானிட கடமை விளைவிப்பது என் கடமை, ஒரு வேளை இப்பிறவியில் அவன் அதை இடையில் விட்டாலும் அடுத்த ஜென்மத்தில் அவனை யோகம் இழுக்கும், அவன் ஞானமடைந்து என்னை அடைவான், முற்பிறவியின் தொடர்ச்சி அன்றி ஞானம் அடைதலும் யோகநிலை அடைவதும் சாத்தியமில்லை”

ஆம் தவமும் யோகமும் முன் ஜென்ம தொடர்ச்சி , இதை வள்ளுவன் கூட சொல்வான், அதற்கு அர்த்தம் என்னவெனில் தியானம் தொடங்குவோம் இந்த பிறப்பில் யோகம் கிடைத்து பகவானை உணர்ந்து பரமார்த்மாவில் கலந்தால் நல்லது , இல்லை அடுத்தபிறவியில் அதை செய்து யோகம் அடையலாம்

அது வரை பிறப்பெடுத்து கொண்டே இருக்கவேண்டுமே அன்றி மோட்சம் சாத்தியமே இல்லை, இதைத்தான் சொல்கின்றான் கண்ணன்

இதில் ஒரு வரியினை கவனியுங்கள், ” அர்ஜூனா சுகமோ,துக்கமோ எதுவாக இருந்தாலும் தன்னைப் போல்
எல்லோரையும் சமமாகக் காணும் யோகி உயர்ந்தவன்”

ஆம், பைபிளில் இயேசு சொல்வார் அல்லவா? கட்டளைகளிலெல்லாம் பெரிய கட்டளை எதுவென்றால் நான் சொல்கின்றென் “உன்னை போல் பிறறை நேசி..”

ஆம் மிகபெரும் யோகம் இதுதான், இயேசு மிகபெரும் யோகியாய் இருந்தார் என்றால் இப்படித்தான்

இயேசுவும் இந்த பற்றற்ற வாழ்வினைத்தான் மனதைத்தான் போதித்தார், அவரின் மலைபொழிவு எனும் புகழ்பெற்ற போதனை கீதையின் யோக போதனையினை அப்படியே பிரதியெடுகின்றது

“என்னை பின்செல்ல விரும்புவன் தன்னை மறந்து தன் உறவை மறந்து வரட்டும்” என சொல்வது யோக நிலைகான அழைப்பே

தன் சீடர்களை போதிக்க அனுப்பும் பொழுதும் “பணமும் உணவும் வைத்திருக்க வேண்டாம்” என சொல்லி அனுப்புகின்றார், ஆச்சாரமான பணக்கார யூதன் தான் யூத சட்டங்களை பெரிதும் பின்பற்றி வருவதால் மோட்சம் உறுதியா என கேட்டபொழுது “உன் சொத்துக்களை ஏழைக்கு கொடு, பணக்காரனுக்கு மோட்சத்தில் இடமில்லை” என ஓடவிரட்டியவர் இயேசு

இன்று கண்ணனின் கீதை சொல்லும் யோக நிலையினை தள்ளிவிட்டு யோகிகள் என சிலஇந்து சந்நியாஸி கழுத்து நிறைய நகைபோட்டு தங்க சிம்மாசனத்தில் அமர்வதும், காணிக்கை கொடு என கிறிஸ்தவர்களை அந்த போதக கும்பல் மிரட்டுவதெல்லாம் யோகமோ ஞானமோ அல்ல‌

அவர்கள் பெற்று கொண்டிருப்பதெல்லாம் சாபம், பெரும் சாபம்

உண்மையான யோக நிலையினை கண்ணன் விளக்கியிருக்கின்றான், அதை நாமும் முடிந்தவரை விளக்கியிருக்கின்றோம், உண்மை யோகிகளை நீங்களே கண்டறியலாம்

தியானம் எனும் நிலையில் ஆத்மாவினை யோகத்தில் செலுத்த கண்ணன் சொன்னபடி முதல் அடியினை நீங்கள் எடுத்து வையுங்கள்,, உங்களுக்கான குருவினை பரம்பொருள் தானாய் அனுப்பி வைக்கும்

அந்த ஞானகுரு சல்லி காசு வாங்கமாட்டார், வேறு எந்த எதிர்பார்ப்பும் வைக்கமட்டார், சூரியனை போல் மழை போல் உங்களுக்கு ஞானமழை பொழிந்துவிட்டு செல்வார், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆத்மாவில் அம்மழை பொழிந்ததும் ஞானபயிர் தானாய் செழித்து முளைக்கும்

காசோ பணமோ எதிர்பார்ப்பவன் நல்ல குருவுமல்ல, காசு கொடுத்தால் யோகம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவன் நல்ல ஆத்மதேடல் கொண்டவனும் அல்ல

இருவருமே குருடர்கள், குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது

நல்வழியினை கீதையில் கண்ணன் காட்டுகின்றான்,

இந்த 6ம் அத்தியாயத்தில் காட்டுகின்றான் அதன் வழி நடங்கள், ஞான ஒளி தானாய் தெரியும். உங்களால் ஆத்ம யோகத்தில் தேற‌ முடியாவிட்டால் கண்ணனே உங்களை தேடி நல்ல குரு வடிவில் வரும், அது சத்தியம், நிச்சயமான சத்தியம்

இதைத்தான் கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கபடும் என்றார் இயேசு, தரபடும் வரை கேளுங்கள், திறக்கும் வரை தட்டுங்கள் என்பது அவர் சொன்ன தத்துவம்

அப்படி கண்ணன் சொன்னபடி தியானத்தில் தேடுங்கள், தேடிகொண்டே இருங்கள், நிச்சயம் யோகம் வரும் என்றேனும் ஒரு நாள் வரும், இல்லையேல் இன்னொரு பிறவியிலாவது வரும், செயலை மட்டும் தொடங்குங்கள்,

விதைப்பது நம் வேலை விளைவிப்பது மழையின் வேலை

ஏதாவது ஒரு மேகம் வடிவில் அவன் நிச்சயம் வருவான்…ஞானமழை பொழிவான்