பகவத் கீதை – 7
கண்ணனுக்கு மறை பொருளான ஞானத்தை விளக்கிய கண்ணன், கண்காணும் சொரூப வடிவான தன் தன்மையின் விஞ்ஞானத்தை அதாவது அவன் இருப்பின் சாட்சியினை இந்த அத்தியாயத்தில் விளக்குகின்றான்
அது “ஞான விஞ்ஞான யோகம்” எனும் 7ம் அத்தியாகமாவே வருகின்றது
கண்ணன் சொல்கின்றான் ” அர்ஜூனா என்னோடு கலந்துந்து, முழு மனத்தோடு யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு கவனமோடு கேள், நான் சொல்கின்றேன்
ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.
பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.
மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக மூல குணம், உலகமும் உலக உயிர்கள் இயங்கவுமான மூல குணங்கள் என்னில் இருந்து தோன்றுகிறது.
(பஞ்ச பூதங்கள் இன்றி உலகம் இல்லை. மனம், மதி. அகங்காரம் என்பது உயிர்கள் வாழ நடத்தும் போராட்டமும் சந்ததி பெருக்கமுமாகும், மனிதன் முதல் கொரோனா வைரஸ் வரை அனைத்துக்கும் உயிர் உண்டு, வாழ்வியல் போராட்டமும் உண்டு)
இது என் இன்னொரு வடிவம். இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலான தன்மை உண்டு, அதை தெரிந்து கொள் , அது ஜீவாத்மா, சக்தி அதனால் இவ்வுலகு உருவாக்கபடுகின்றது
எல்லா உயிர்களுக்கும் அது காரணமென்று உணர்ந்து கொள். அதனால், நான் உலக முழுமைக்கும் படைப்பும் அழிவுமாவேன்.
அர்ஜூனா, என்னைக் காட்டிலும் உயர்ந்த விஷயம் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது என்னால் கோக்கப்பட்டது.
அர்ஜூனா, நான் நீரில் சுவை, , நான் சூரிய சந்திரனின் ஒளி, எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான், உயிர்களில் மூலம் நான்
மண்ணில் தூய நறுமணமும், தீபத்து ஒளியும் நான் எல்லா உயிர்களிலும் உயிர்நான், தவம் செய்வோரின் தவம் யான்.
எல்லா உயிர்களுக்கும் நானே விதை என்பதை அறிந்து கொள். அர்ஜூனா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.
வல்லோரிடத்தே பலமும் வலிமையும் நான். ஒவ்வொரு உயிர்களிடத்தும் அதற்குரிய கடமை நான்.
சத்வ ரஜஸ் தமோ குணங்கள் என்னிடமே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. ஆனால் நான அவற்றுக்குள் இல்லை.
இந்த மூன்று குணங்களுக்குள் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலான அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.
இந்த குணங்கள் வலுவானவை, தெய்வம் போன்றவ அந்த மாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைசி அடிமட்ட வரிசை, மாயையால் அறிவினை இழந்தோரும், அசுரத் தன்மையைப் பின்பற்றி நிற்கும் மூடரால் என்னை அறிய முடியாது.
நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.
அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் விருப்பமானவன், அப்படியே அவன் எனக்கு மிகவும் உகந்தவன்.
அர்ஜூனா ஞானியரில் ஞானம் நானே
மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் நானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.
பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் ஆசைகளால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.
எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.
அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.
எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.
மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.
எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.
வந்தது, இருப்பது, இருக்க போவது ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். ஆனால் என்னை அறிந்த மானிடர் எவருமிலர்.
ஆசையாலும் அது கொடுத்த கோபத்தாலாலும் இந்த் இரட்டை மயக்கத்தால், அர்ஜூனா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன.
எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.
மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் ‘அது’ என்ற பிரம்மத்தை உணர்வர், ஆத்மஞான முழுதையும் உணர்வார்,செய்கையனைத்தையும் உணர்வர்.
உலக ஞானம், தெய்வ ஞானம், வழிபாட்டு ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்..”
இதன் விளக்கம் மிக மிக எளிதானது
அர்ஜூனா கண்ணுக்கு தெரிகின்ற பொருளும் நானே, கண்ணுக்கு தெரியாத சக்தியும் நானே
ஜடப்பொருளும் நானே, ஜடப்பொருளில் கலந்து இயக்கும் சக்தியும் நானே, உலகமும் நானே உலகை இயக்கும் சக்தியும் நானே, உடலும் நானே உடலில் இருக்கும் உயிரும் நானே
(சிவ சக்தி தத்துவம் என்பது இதுதான். ஆதார சக்தியும் இயக்கும் சக்தியும் இன்றி உலகில் எதுவும் சாத்தியமில்லை, இரண்டும் நானே என்கின்றான் கண்ணன், இதில் நானே என்பது சைவ வைணவ மோதல் அல்ல, பிரம்மம் எனும் மூல பரம்பொருள் )
கெட்டவர்கள் என்னை தேடுவதில்லை தேடினாலும் நான் கிடைப்பதில்லை, நல்லோர் நான்குவகையாளிகள் தேடுவர் அது துன்பமுற்றோர், உண்மை அறிவோர், ஏதாவது வேண்டுவோர், ஞானிகள்
இதில் ஞானி மட்டும் எதுவும் எதிர்பாராமல் என்னை தேடுவதால் நான் அவனை நேசிகின்றேன், மீதி மூவரும் பயன் எதிர்பார்க்கும் சுயநலக்காரர்கள்
சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோர் அந்த தெய்வம் கொடுக்கும் பலனை பெறுவார்கள் , ஆனால் அதன் சக்தி ஒரு எல்லைக்கு உட்பட்டது என்று அவர்களுக்கு தெரிவதில்லை
அந்த சிறுதெய்வத்தை படைத்தவனும் நானே, அதற்கு சில சக்திகளை கொடுத்தவனும் நானே, அந்த சக்தியின் மூலமும் நானே, ஞானி அதை உணர்ந்து என்னிடம் சரணடைவான் , மற்றவர்கள் அந்த சிறுதெய்வத்தை தாண்டிவரமுடியாது. என் அளவில்லா சக்தியினை காணமுடியாது
நான் காலங்களை கடந்தவன், ஆசையினை கடந்தவன், யுகம் யுகமாக நின்று கொண்டிருப்பவன். முக்காலமும் அறிந்தவன், என்னை சரண்டைந்தவன் எல்லாம் அறிந்தவனாகின்றான்
இதுதான் 7ம் அத்தியாயத்தின் சுருக்கம், காண்பன காணாதன, இருப்பன இல்லாதன, நிற்பன பறப்பன எல்லாம் நானே அவற்றின் சக்தியும் நானே. தொடக்கமும் முடிவும் இல்லாதவன் நான்
உலகம் என்பது பெரும் ஆசைகளால் சூழபட்டது அந்த கடலை கடக்க என்னிடம் சரணடைவது மட்டுமே வழி
இந்த அத்தியாயத்தை வள்ளுவன் “பிறவி பெருங்கடல் நீந்துவார்..” என ஒரு குறளிலும் “மலர்மிசை ஏகினான்..” என ஒரு குறளிலும் சுருக்கி வைத்தான்
இன்னும் பல இடங்களில் இந்த கீதை வரிகளின் தாக்கத்தை உணர முடியும்
குறள் என்ன? பைபிளில் இயேசு சொல்வார் “நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன், என்னில் சரண்டைந்தோர் பேறுபெற்றோர்”
கண்ணின் இந்த 7ம் அத்தியாயமே எல்லாவற்றுக்கும் மூல வார்த்தைகளாகும்..
ராணுவத்தார் இதே கருத்தை அப்படியே ஏற்று வீரர்களை உருவாக்கினர், “வெற்றி தோல்வி என்பதல்ல யுத்தம், அவற்றை மனதில் வைத்து யுத்தம் செய்யாதே, கடமையினை முழு ஈடுபாட்டோடு கர்மமாக செய், விளைவுகள் உனக்கனவை அல்ல
இந்த அஸ்திவாரத்தில் உருவாக்கபடுவதாலே ராணுவ வீரன் சுடு என்றால் சுடுவான், பாலம் கட்டு என்றால் கட்டுவான்
அக்காலம் முதல் இக்காலம் வரை ராணுவம் கட்டுகோப்பாக இருக்க கீதையின் வரிகள் மகா முக்கியம்
நிர்வாகவியல் இந்த அத்தியாயத்தில் இருந்து எடுத்து கொண்டது என்னவெனில் “எதிலும் உன் நலம் முக்கியம் என எண்ணாமல், தனக்கு என்ன லாபம் என எண்ணாமல் , நிர்வாகம் கொடுத்த கடமையினை கவனமாய் நிறைவாய் செய், நீ செய்யும் வேலையில் நிறுவணத்துக்கு என்ன நன்மை என மட்டும் சிந்தித்து செய், அதன் பின் பலன்கள் உன்னை தேடிவரும்
செய்யும் தொழிலும் தெய்வம் உண்டு என்பதை உணர்ந்து செய், செய்யும் வேலை எதுவானாலும் கடவுள் இட்ட வேலை என கர்மத்தை உணர்ந்து செய், பலன்களை கணக்கிடாமல் செய், விளைவு நல்லதோ கெட்டதோ பரம்பொருளே பொறுப்பு…”
சாம்ன்ய மனிதன் ஒவ்வொருவனும் இதில் இருந்து கற்றுகொள்ள வேண்டியது, இவ்வுலகின் ஒவ்வொரு துகளிலும் இறைவன் இருக்கின்றான், ஒவ்வொரு கணமும் அவனால் நகர்த்தபடுகின்றது, காணும் காணா பொருளெல்லாம் அவனே.
இது அவனின் உலகம், நாமெல்லாம் அவன் விளையாட்டு பொம்மைகள்
இதை கிறிஸ்து இயேசு தெளிவாக சொன்னார் “தந்தையே, உம் சித்தத்தின் படி ஆக கடவது”, பட்டினத்தார் சொன்னார் “நடப்பதெல்லாம் தெய்வமே உன் செயலென உணரபெற்றேன்”
அதைத்தான் ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும், எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணமிருக்கும் அது மானிட கண்களுக்கு புரியாது
அதனால் மகிழவோ, துக்கபட்டு முடங்கவோ மானிட வாழ்வில் ஒன்றுமில்லை,
ஆண்டவனின் சதுரங்கத்தில் நாமெல்லாம் எப்படி நகர்த்தபடுவோமோ அப்படித்தான் நகர்த்தபடுவோம், அதை மாற்றும் சக்தி எவனுக்குமில்லை