பகவத் கீதை‍ – 9

Image may contain: 2 people

அர்ஜூனா இந்த “ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்” எனும் யோகங்களில் சிறந்த யோகத்தை உனக்கு போதிக்கின்றேன், இதனை ரகசியமாக அனுதினமும் பின்பற்றி வந்தால் பெரும் பலன் அடைவாய்.

ஆசையற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை லவுககீக உலகின் தத்துவத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.

இந்த ராஜவித்தை, ராஜரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, கண்ணெதிரே காணுதற்குரியது. செய்தற்கு மிக எளிது, அழிவற்றது.

மனதால் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமல் மீண்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.

நானோ எல்லா வடிவிலும் நான் இவ்வுலகை முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே உலகின் எல்லா சக்திகளும நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என் நிலை.

அர்ஜூனா சக்திகள் என்னுள் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்கு பார், சக்தி பூதங்களைத் தாங்குகின்றேன் ஆனால் நான் அவற்றுக்குள் இல்லை, என் ஆத்மாவில் பூத / சக்தி சிந்தனை இயல்கிறது.

எங்கும் சுழல்வதும் பெரும் சக்தியுமான காற்று, எப்படி எப்போதும் வானில் நிலைபெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்து கொள்.

உலக முடிவில் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கற்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.

என் சக்தியில் உறுதிகொண்டு மீட்டு மீட்டும் உலக‌ தொகுதி, உயிர்தொகுதி முழுதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.

என்னை அத்தொழில்கள் கட்டுபடுத்தாது, அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன்போல் அமர்ந்திருக்கிறேன்.

என் மேற்பார்வையில் “சக்தி” சராசர உலகங்களைப் பெறுகிறாள், சக்திகளுக்கெல்லாம் ச்க்தி கொடுப்பது நானே, சக்தி மூலம் நானே, இந்த ஏதுவால் உலகம் சுழல்கிறது. (சக்தி, இயற்கை(Nature) என்ற சொற்கள் ஒரே பொருளுடையன..)

மானிட உடல் சுமக்கும் அறிவிலிகள் என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரம நிலையை அவர்கள் அறிந்திருக்கவில்லை

வீணாண ஆசையுடையோர், வீண் செயல் செய்வோர், கேடு கெட்ட அறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான மயக்க சக்திகளுக்கு உட்பட்டிருக்கின்றனர்.

மகாத்மாக்கள் தெய்வீக இயல்பைக் கைக்கொண்டு ஒரே சிந்தனையில் என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறான்.

அர்ஜூனா கடுமையான‌ விரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் என்னில் நிலைத்திருக்கின்றார்கள். வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள்.

அர்ஜூனா நானே ஹோமம், நானே யாகம், நானே மருந்து, நானே மந்திரம் நானே நெய், நானே நெருப்பு, நானே ஆகுதி

அர்ஜூனா இந்த உலகத்தின் தகப்பன் நான், இதன் தாய் நான், இதைத் உருவாக்கியவன் நான், இதன் இதன் சகலமும் நான், இதை தூய்மையாக்குவதும் நான், எல்லா வகை வேதமும் நான்.

நான் வெப்பம் தருகிறேன், மழையை நான் கட்டிவிடுகிறேன். நான் அதனைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா! இங்கு கண்ணுக்கு தெரிவதும் நான், கண்ணுக்கு தெரியாததும் நான்

யாகங்களின் பலன் பெற்றோர், பாவமகன்றார், வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேண்டி வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவ லோகத்தை அடைந்து வானுலகில் சுகமான போகங்களைத் துய்க்கிறார்கள்.

விரிவாகிய வானுலகிலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

அர்ஜூனா வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் தீமையை நான் பொறுப்பேன், அவர்களை மன்னிப்பேன். அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், என்னையே தொழுகின்றனர்.

தேவர்களை வழிபட்டால் தேவலோகம் அடைவர், பித்ருக்களை வழிபட்டால் பித்ருகளை அடைவர், யடைவார்; பூதங்களை வழிபட்டால் அதையே அடைவர், அப்படி என்னை வேட்போர் என்னை எய்துவார்.

ஒரு இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் எவனாயினும் அதையும் அவனையும் நான் ஏற்றுகொள்வேன்

அர்ஜூனா நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஹோமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே! கடவுளுக்கர்ப்பணமென்று செய்.

இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய், என்னையும் பெறுவாய்.

அர்ஜூனா, நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால், என்னை அன்புடன் வழிபடுவோர் உள்ளத்தில் நான் வருவேன்

அர்ஜூனா மிகவும் கொடிய நடையோனாயினும், வேறு வழியில் செல்லாமல் என்னை வழிபடுவோன் நல்லவன் அவ‌ன் விரைவிலே என்னை அடைவான்

பாவிகளென்னைப் பணிவாராயினும் ,மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.
அப்படி யிருக்கத் தூய்மையார்ந்த அந்தணரும் ராஜரிஷிகளும் என்னை காணமுடியாதா என்ன?

அர்ஜூனா நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய். உன் மனத்தை எனக்காக்கிவிடு; பக்தியை எனக்காக்கு, என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.

இப்படி தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்”

இந்த ஒன்பதாம் அத்தியாயத்தின் சுருக்கம் இதுதான்

“அர்ஜூனா, பிரபஞ்சம் பூவுலகமெல்லாம் எங்கும் நிறைந்திருப்பவன் நானே, எல்லா சக்திக்கும் ஆதாரம் நானே. எல்லா சக்திக்கும் ஆதாரமான நான் அவற்றில் சிக்குவதில்லை

என்னை உணராதவன் நரகம் எனும் பூலோக லவுகீக வாழ்வில் விழுவான், அறிந்தவன் அதில் சிக்குவதில்லை

இந்த உலகில் தேவர்களை தொழுதால் தேவரை அடைவர், பூத உலகை வணங்கினால் அவர்களை அடைவர் ஆனால் அவர்கள் மறுபடி மறுபடி பிறப்பர்

அர்ஜூனா யாகத்தின் பலனும் நான், நெருப்பும் நான், நெய்யும் நான், செய்பவனும் நான், பலன் கொடுப்பவனும் நான். யாகத்தின் மூலம் என்னை அடைய நினைப்பவன் சொர்க்கத்தை அடைவானே அன்றி என்னை அடையமாட்டான்

எதிர்ப்பார்ப்புள்ள யோகமும், யாகமும் அதன் புண்ணிய பலனான சொர்க்கத்தை வழங்கும் ஆனால் அந்த பலன்கள் தீர்ந்தபின் அவன் மறுபடியும் பிறப்பான்

எவனொருவன் முழு அன்போடு என்னை தேடி எனக்காக வாழ்வானோ, என்னையே தியானிப்பானோ அவன் என்னையே அடைவான்

எனக்கு பெரும் யாகம் பிடித்தமானது அல்ல, முழு பக்தியுடன் ஒரு இலை, ஒரு சொட்டு நீர் கொடுத்து என்னை நேசிப்பவனுக்கு நான் ஓடிவந்து முழு பலனும் அளிப்பேன்

அர்ஜீனா மிக மிக கடுமையான வழியாயினும் முழு பக்தியோடு என்னை தேடிபவன் நல்லவன், அவனை நான் அரவணைப்பேன்

பாவிகளும், சூத்திரரும், வைசியரும் (அதாவது தொழில்படி கடவுளை தேடாதவர்) கூட என்னை முழு மனதுடன் தேடினால் அவர்களுக்கு மோட்சம் அளிப்பேன், அதே நேரம் என்னை தேடாத அந்தணன் கடமைக்கு பிரார்த்தித்து முழு மனதில்லாமல் யோகம் செய்தால் அவனுக்கு தென்படமாட்டேன்

முழு பக்தியும் அர்பணிப்புமே என்னை அடைய வழி”

இதே கீதையின் கருத்துத்தான் ஒரு மானிடன் தொழிலில் வெற்றிபெற ஒரேவழி, அவன் ஏற்றுகொண்ட கர்மத்தில் முழு மனதுடன் ஒன்றியிருத்தல் வேண்டும்

இந்த கீதையின் கருத்தே எல்லா ஆன்மீக வழிகள் அனைத்திலும் காணகிடைகின்றன “உன் கடவுளாகிய எனக்கு முழு ஆன்மோவோடும் முழு மனதோடும் அன்பு செய்ய கடவாய்” என்கின்றது பைபிள்

அது இந்த அத்தியாய சுருக்கத்தை இன்னும் தெளிவாக சொல்கின்றது பைபிள் “ரத்த பலியும் உயிர்பலியும் வேண்டாம், உன் மனதை எனக்கு ஒப்புகொடு” என சொல்கின்றது

திருமூலர் இந்த வரியினை இன்னும் அழுத்தமாக சொல்வார் “மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்”

ஆம் பெரும் யாகங்களும், ரத்த பலிகளும், இடையறா மந்திரங்களும் எது செய்தாலும் முழு அர்பணிப்போ முழுவதுமான கடவுளின் மேலான தேடலோ இல்லா முயற்சி பலனற்றது, அது தற்காலிக பலனை கொடுக்கலாமே தவிர நித்திய பலனை கொடுக்காது

சர்வ நித்தியமாக கடவுளை அடைய முழு மனதோடு அவனை தேட வேண்டும், அப்பொழுது ஆயிரம் பாத்திரம் நெய் ஊற்றி யாகம் நடத்துவதை விட ஒரு சொட்டு நீர் அவனுக்கு பெரும் சந்தோஷமாக கொடுக்கும்

இது கண்ணப்ப நாயனார் கதை முதல் வால்மீகி கதை என ஏகபட்ட இடங்களில் காணலாம், ஆம் மந்திரமோ வழிபாடோ, சாத்வீக முறையோ, குலமோ, பிறப்போ எதுவும் அவனுக்கு தேவையில்லை, அந்த பரம்பொருளுக்கு தன்னை முழுமனதோடு தேடும் பக்தனே உகந்தவன்

ஆம் மிகசுருக்கமான தத்துவம் இதுதான்

நீ எதை செய்தாலும் முழு மனதோடு கடவுளிடம் ஒப்படைத்து செய், அது செயலோ, உணவோ, தொழிலோ பிரார்த்தனையோ எதுவோ, எதை செய்தாலும் முழு மனதோடு , முழு அர்பணிப்போடு தெய்வத்திடம் சரணடைந்துவிட்டு செய் , அது முழு பலனை தரும்

சட்டங்களும், பிராமண்டமும், நீண்ட நாள் தவமும், அனுதின வழிபாடும் கொடுக்காத நித்திய மோட்சத்தை, நிம்மதியினை, கடவுளின் கருணையினை. மிக மிக ஆத்ம சுத்தியோடு முழு மனதோடு கடவுளிடம் ஒப்படைக்கும் காரியம் கொடுக்கும்