பலராம ஜெயந்தி

இந்த உலகில் எந்த இனம் தாழுமோ, அந்த இனம் அவமானங்களை சந்திக்குமோ, எந்த இனத்தை அதர்மங்களெல்லாம் அடக்கி வைக்குமோ, அந்த இனத்தை பிரபஞ்சத்தின் சக்தி இறங்கிவந்து காத்து உயர்த்தும் என்பது இந்துமதம் போதிக்கும் பெரும் தத்துவம்

அப்படி அக்காலத்தில் இரு இனங்கள் மிக தாழ்ந்த நிலையில் இருந்தன, ஒன்று ஆடுமாடு மேய்க்கும் இனம், இன்னொன்று விவசாய இனம்

அந்த கொடுங்காலம் இந்த உழைக்கும் இனமெல்லாம் கடும் சிரமத்தில் இருந்த காலம், வாளெடுத்த அதிகார வர்க்கம் அக்கிரமத்தால் இவர்களை சுரண்டி ஒடுக்கி கொழுத்த காலம், அவர்களின் கண்ணீரை துடைக்க இரு பெரும் அவதாரங்கள் வந்தன‌

ஒன்று கண்ணனாக ஆடுமாடு மேய்ப்பவர்களை காக்க வந்தது, இன்னொன்று பலராமனாக உழவர்களை காக்க வந்தது

இருவரும் அண்ணன் தம்பியாக வந்தார்கள், பரம்பொருளால் ஒரே நேரம் பலவகை அவதாரங்களை எடுக்கமுடியும், தர்மத்தை காக்க அந்த பகவான் தானே கண்ணனாகவும் தன் இன்னொரு அம்சமான ஆதிஷேஷனை பலராமனாக அவதரிக்க வைத்தது

கண்ணன் ஆடுமாடு வாழவைப்பர்களை வாழவைத்து அவர்களுக்கு ராஜ்ஜியம் அமைத்து கொடுத்தது போல உழவர்களுக்கு தனி அரசு கொடுத்து காவலாய் இருந்து அவர்களை வாழவைத்தவன் பலராமன்

பலராமனின் வரலாறு சுருக்கமாக இதுதான்

பலராமன் கண்ணனுக்கு அண்ணனாக அவதரித்தவன், பெரும் வீரன் கண்ணனோடு பல போர்களை புரிந்தவன், அவன் கதாயுத சண்டையில் வல்லவன், ஒரு கட்டத்தில் எல்லா அதர்மககாரர்களை கொன்று தனி அரசு அமைத்து ஏர்கலப்பை சின்னத்துடன் பனைகொடியோடு அரசனாக ஆண்டு கொண்டிருந்தவன்

பீமனுக்கும் துரியோதனனுக்கும் அவனே கதாயுத பயிற்சி கொடுத்தான், அதனாலே மகாபாரத யுத்தத்தில் இருவருக்கும் பொதுவாக ஒதுங்கி நின்றான், கடைசியில் பீமன் துரியன் தொடையில் அடித்ததை கண்டித்து பீமனை தண்டிக்க வந்த அவனுக்கு உண்மையினை உணர்த்தினான் கண்ணன்

அதன்பின் தான் யாரென புரிந்த பலராமன் அமைதியாகி இன்னும் ஏகபட்ட உழவர்களை வாழவைத்து வைகுண்டம் ஏகினான், இன்றும் உழவருக்கு தெய்வம் அவனே” என சுருக்கமாக முடிகின்றது அவன் வரலாறு

ஒரு காலத்தில் கண்ணனுக்கு நிகராக அவனும் இந்துக்களால் இந்துஸ்தானம் முழுக்க கொண்டாடபட்டிருக்கின்றான், யாதவருக்கு கண்ணன் போல உழவருக்கு அவன் தனி அடையாளமாக நின்றிருக்கின்றான்

அப்படிபட்ட பலராம வழிபாடு இந்தியா முழுக்க இருந்திருகின்றது, தமிழகத்தில் எப்படியெல்லாம் பலராமன் கொண்டாடபட்டு வழிபடபட்டான் என்பதை பல சங்க பாடல்கள் தெளிவாக சொல்கின்றன.

திணைமாலை நூற்றம்பைது “கண்ணனின் முன்னோன்” என பலராமனை முன்மொழிகின்றது

நக்கீரன் “பனைகொடியோன்” என பலராமனை தெளிவாக தன் பாடல்களில் சொல்கின்றார், தொல்காப்பியரும் “பனைகொடி” பலராமனுடையது என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றார்

புறநானூற்று பாடலில் 58ம் பாடல் கண்ணனுக்கும் பலராமனுக்கும் எல்லா ஆலயங்களிலும் இரட்டை சன்னதி இருந்ததை தெளிவாக சொல்கின்றது

பூம்புகாரின் பெரும் புலவரான காரிகண்ணன் அந்த பாடலில் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் நெருக்கமான நண்பர்களாக இருந்ததை “கண்ணனும் பலராமனும்” என பாடி வைத்ததில் தெரிகின்றது பலராமனின் பிரசித்தி

““பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின் இனியவும் உளவோ?”” என்கின்றார்

அதாவது வெண்மை நிறமான பால்ராமன் பனனைகொடி தாங்கியிருப்பவன் அவனும் நீல நிறமான கண்ணனும் இருபெரும் தெய்வங்களாக விளங்குவதை போல பாண்டியனும் சொழனும் வீற்றிருக்கின்றார்கள் என அழகாக பாடுகின்றார் புலவர்

அதாவது கண்ணனோடு பலராம வழிபாடு இருந்ததை இங்கே குறிப்பிடுகின்றார்

நற்றிணையில் கபிலர் பலராம வழிபாட்டை தெளிவாக சொல்கின்றார், நற்றிணையில் அவர் எழுதிய 32ம் பாடல் இதோ

“மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய தோழி வாழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே” எனும் பாடல் அது

அதாவது மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது என்பது பொருள்

வாலியோன் என்பது பலராமனின் இன்னொரு பெயராகின்றது

இளம்பெரும் வழுதியார் எனும் புலவர் புறநானூற்று பாடலில் பாடுகின்றார் இப்படி

“சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை”

வேறு வேறு தொழிலை செய்யும் இருவர் என அவர் சொல்வது பலராமனையும் கண்ணனயுமாகும. மலையில் இருந்த கோவிலை அதாவது கண்ணனுகும் பலராமனுக்கும் இருந்த வழிபாட்டை சொல்கின்றார்

“ஒருகுழை அவள் மார்பில் ஒண்தார் போல ஒளிமிக”, “காதில் குழை மார்பில் சிவந்த மணலை உடைய நம்பி மூத்தபிரான் (பலராமன்)” என்கின்றது கலிதொலை

“பாலன்ன மேனியான்”, “வானுற ஓங்கிய வயங்கொளிர் பனைக்கொடி பால்நிற வண்ணன்போல் பழி தீர்த்த வெள்ளையும்ஆயரெல்லாம் சேரத்திரண்டு விளங்குகின்ற வானில் எறியும்படி ஓங்கிய ஒளிபெருகுகின்ற பாலின் நிறம் உடைய பனைக்கொடியோன்” என்பதும் கலிதொகை வரிகளே

“விறல்மிகு வலியலி பொலிபகழ் புழுதியின் நிறனுழும் வளைவாய் நாஞ்சிலோனும்” என்கின்றது பரிபாடல்

“வாய்விளங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை”, “வளையடு புரையும் வாலியோன்” எனவும் பரிபாடல் பல இடங்களில் சொல்கின்றது

பாலராமனுக்கு தமிழகமெங்கும் கோவில்கள் இருந்திருக்கின்றன, வழிபாடும் பூஜையும் இருந்திருக்கின்றது, விவசாயிகளின் தனிபெரும் தெய்வமாக காவலாக அவன் கொண்டாடபட்டிருக்கின்றான்

அவனுக்கு எந்த வரிசையில் கோவில் இருந்தது என்பதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சொல்கின்றார்

” பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”

அதாவது பிறப்பே இல்லா மகாதேவன் கோவிலும், முருகன் கோவிலும், பலராமன் கோவிலும், கண்ணன் கோவிலும், இந்திரன் கோவிலும் இருந்தன என்கின்றார்

“புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் வெள்ளை நாகர்” என்பதும் இளங்கோ வரியே

ஆண்டாள் பலராமன் வழிபாட்டை தெளிவாக பல இடங்களில் சொல்கின்றாள் “செம்பொன் கழலடி செல்வன் பலதேவனை” என்பது அவளின் தெளிவான வரி

மதுரையில் பலராமன் வழிபாடு இருந்ததை “மேழிவலனு யர்த்த வெள்ளை நகரமும்” என்ற வரி தெளிவாக சொல்கின்றது, மேழி என்றால் ஏர்கலப்பை , வெள்ளை நகரம் என்றால் பலராமனின் வெள்ளை நிறத்தை குறிப்பது

(இன்றும் தமிழ்நாட்டில் நாச்சியார்கோவில் சீனுவாசபெருமாள் கோவிலில் சங்கர்ஷனர் என்ற பெயருடன், கருவறையில் இருந்தபடி பலராமர் அருள்பாலிக்கிறார், இப்படி வெகுசில கோவில்களே பண்டைய தொடர்ச்சியாக எஞ்சியிருக்கின்றன)

கண்ணனின் மேனி கருநீலம், அவ்வகையில் கருப்பன், நீலமேகம், கார்மேகம் என கண்ணனை குறிக்கும் பெயர்கள் இன்றுவரை தமிழகத்தில் உண்டு

பலராமனின் நிறம் வெண்மை, அவனை வேண்டி அக்காலத்தில் இடபட்ட பெயர்தான் வெள்ளைச்சாமி, வெள்ளையன் போன்றவை

ஆம் வெள்ளச்சாமி என்பது பலராமனின் பெயரில் இருந்து வந்ததே

கருப்பசாமி, கருப்பன் என்பதெல்லாம் கண்ணனை குறிக்கும் பெயர்போல வெள்ளையன், வெள்ளைய தேவன்,
வெள்ளச்சாமி என்பதெல்லாம் பலராமனின் நினைவாக வந்த பெயர்களே

இப்படி பலராமனுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கியதொடர்பு உண்டு, இந்தியா முழுக்க கொண்டாடபட்ட பலராமன் தமிழகத்திலும் கொண்டாடபட்டான்

பின்னாளில் பவுத்தமும் சமணமும் இந்துக்களை குழப்பி இந்துமதத்தை சரித்து போட்டன, பின் இந்துமதம் மீண்டபொழுது சில தொடர்புகள் அற்றுபோயின அதில் பலராம வழிபாடும் ஒன்று

விவசாயிகளின் தெய்வமான அவனுக்கு தைமாதம் விழா கொண்டாடபட்டது, தமிழகத்தில் எல்லா இந்து தெய்வங்களுக்கும் விழா இருந்தது

இந்திரனுக்கு இந்திர விழா இருந்தது போல பலராமனுக்கும் விழா இருந்தது

அந்த தைமாத தொடக்கத்தில் சூரியனை வணங்கும்பொழுது விவசாயிகளின் காவலான பலராமனையும் வணங்கினார்கள் இந்துக்கள்

அவனின் ஏர்கலப்பை வைத்து அவன் கொண்டாடபட்டான், அவனின் பனைகொடியிடன் பனை பொருட்களும் வைத்து வணங்கபட்டன‌

அப்பொழுது மார்கழி நோன்பு முடிந்து அணங்கதேவன் எனும் காமதேவனுக்குமான நோன்பு காலங்களாகவும் அவை இருந்தன, இதனால் கரும்பு வைத்து வழிபடும் வழக்கமும் அன்று இருந்தது

இதுதான் தைமாதம் 1ம் தேதி கலப்பை, பனங்கிழங்கு, கரும்பு என வைத்து வழிபடும் வழமையாயிற்று

பலராமன் குழந்தை வரத்துக்கும் பெயர் பெற்றவன், பலராம வழிபாடு நல்ல ஆண்குழந்தைகளை தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாய் இருந்ததால் மார்கழி நோன்பு முடிந்து அணங்கதேவன் நோன்புக்கு வரும் பெண்கள் பலராமனையும் தைமாத தொடக்கத்தில் மறக்காமல் வழிபட்டார்கள்

(இன்றும் இந்த வழிபாடு வடக்கே உண்டு, பலராமன் ஜெயந்தியில் நல்ல ஆண்குழந்தைக்காக தவமிருக்கும் தாய்மார்கள் உண்டு)

தைமாத முதல்நாள் வழிபாடு விவசாயிகளின் காவலனான பலராமனுக்கே, விளைச்சலின் பலனை விவசாயிகளின் காவலனான அவனுக்கு படைத்து மகிழ்ந்தார்கள்

விவசாயிகளின் துயர் துடைக்க வந்த அவதாரம் அவன், விவசாயிகளை தனி அரசாக ஆள வைத்து ஏர்கலப்பையினை சின்னமாக வைத்து உயர்த்தியவன் அவனே

இப்படி பலராமனின் கொண்டாட்டமாக இருந்த பண்டிகை பின்னாளில் பவுத்த சமணத்தால் வீழ்த்தபட்டு பின் வந்த நாட்களில் வெறும் தைமாத கொண்டாட்டமாக மாறிற்று

18ம் நூற்றாண்டு மிஷனரி மடைமாற்றலில் அது “உழவர் திருநாள்” என மாறி பின்னாளில் “தமிழர் திருநாள்” எனவும் இன்று திசைமாறிற்று

உலகில் மலையாளி திருநாள், கன்னடர் திருநாள் , சிங்களர் திருநாள் என ஒருநாள் இல்லாதபொழுது தமிழனுக்கு மட்டும் ஏன் திருநாள் என யாரும் கேட்கவே இல்லை

தமிழன் உழுது உண்டான் என்றால் மற்ற இனமெல்லாம் நீரை குடித்தா வாழ்ந்தது? எல்லா இனமும் உழுதது விதைத்தது அறுத்தது உண்டது வாழ்ந்தது

ஆம், இங்கு ஏர்கலப்பையுடன் அந்த கொண்டாட்டம் வந்ததன் மூலம் பலராமன் வழிபாடே, பலராமன் வழிபாடு இங்கு பெரும் கொண்டாட்டமும் கோவிலும் சன்னதியுமாய் இருந்தது

கண்ணனுக்கு இருந்த எல்லா வழிபாடும் பலராமனுக்கும் இருந்தது

தைமாதம் விளைச்சல் காலத்தில் அவன் பிரத்யோகமாக கொண்டாடபட்டான், அவனுக்கு விவசாயிகள் செலுத்திய நன்றியே, விவசாயிகளும் எல்லா உரிமையும் சலுகையும் பெற்று வாழ அவன் அவதரித்து வந்து அரசமைத்து காத்த நன்றியே தை திங்கள் கொண்டாட்டமாகி பின் உருமாறி இப்பொழுது பொங்கல் நாளாக கொண்டாடபடுகின்றது

உலகிற்கு அச்சாரம் உழவர்கள், அவர்கள்தான் உலகின் இயக்கும் சக்திகள், அவர்கள் எல்லா உரிமையும் பெற்று வாழவேண்டும், அவர்களை உலகத்தின் அதர்ம கூட்டம் வஞ்சித்தால், வாழ உணவிடும் அவர்களை அலட்சியம் செய்து ஏமாற்றி சுரண்டினால் பரம்பொருளே இறங்கிவருவார் என சொன்ன அவதாரம் பலராமன் அவதாரம்

இன்றைய உழவர்களின் நிலை பரிதாபமானது, அன்றொருநாள் பலத்தாலும் அதர்ம வழியாலும் உழவர்கள் சுரண்டபட்டது போல இன்று விஞ்ஞானத்தாலும் இன்னும் பல மாயைகளினாலும் அவன் சுரண்டபடுகின்றான், அவனை காக்க அந்த பலராமன் மறுபடியும் வரட்டும், வந்து இந்த உழவர்களை காத்து ரட்சிக்கட்டும் என பலராமன் ஜெயந்தியில் உழவர் உலகம் பிரார்த்திக்கின்றது

உழவர்களின் தெய்வமான அவனை இன்று ஒவ்வொரு உழவனும் தொழுதல் வேண்டும், அவனை தொழ தொழ உழவர் வாழ்வு உய்யும், அக்கால உழவர் வாழ்வு அப்படித்தான் உச்சத்தில் இருந்தது

அந்த வெள்ளச்சாமி பலராமன் எனும் பரந்தாமன் எல்லோ உழவனையும் காக்கட்டும், உலகுக்கே சோறிடும் உழவனின் சிரமும் கண்ணீரும் தேவையும் உணர்ந்தவன் அவன் ஒருவனே..