பழமொழி நானூறு : 12

“கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால் – நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,
கனா முந்துறாத வினை”

இப்பாடல் ஒரு பெண்ணுக்கு புலவர் போதிப்பதாக அமைந்துள்ளது

அதாவது நற்குணங்கள் நிரம்பிய பெண்ணே, கல்லாத ஒருவன் நுட்பமான பொருளை உணர்ந்தாலும் அவனால் அதனை தெளிவாக கற்றோர் முன் சொல்லமுடியாது

கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை என்பது பாடலின் பொருள்

அதாவது முறையற்ற அடிப்படை கல்வி இல்லாதவர் எந்த நுட்பமான பொருளையும் பெறமுடியாது, கற்றோர் சபையில் அவனுக்கு மரியாதை இல்லை என்பது பாடலின் பொருள்

“கனா முந்துறாத வினை” என்பது அடிப்படை சிந்தனை இல்லாமல் செயலாற்ற முடியாது.

இதே பாடலை வள்ளுவன் தன் குறளிலும் சொல்கின்றார்

“அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்”

அடிப்படையான‌ நூல்களைக் கற்று கல்வியைப் பெறாத ஒருவர் கற்றறிந்த சான்றோருடன் கலந்துரையாடுவது, விளையாட்டிற்குத் தேவையான கட்டங்களை வரைந்து கொள்ளாமல் தாயக்கட்டையை உருட்ட முற்படுவதற்கு ஒப்பாகும் என்கிறார்.

“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்”

கல்லாத ஒருவர் கற்றறிந்த மேதைகள் முன்னிலையில் எல்லாம் அறிந்தவர் போல உரையாட முற்படும்பொழுது அவரது உண்மையான அறிவுத் தகுதி எளிதில் வெளிப்பட்டுவிடும் என்கிறார்.

அடிப்படை கல்வியும் முறையான பயிற்சியும் எல்லாவற்றுக்கும் அவசியம் என்பதே இப்பாடலின் உட்பொருள்