பாண்டே நித்தியானந்தாவினை பற்றி பேசும் வீடியோ
பாண்டே நித்தியானந்தாவினை பற்றி பேசும் வீடியோ வந்து கொண்டிருக்கின்றது
மனிதருக்கு அரசியல் புரியலாம், ஆனால் ஆன்மீகம் புரியாது போலிருக்கின்றது. மனிதர் நித்தி இந்து சாமி என்பதால் முட்டு கொடுக்கின்றார் என்பது தெரிகின்றது. மதம் இந்துவாக இருப்பதால் ஒருவர் இந்துமதத்தை காக்க முடியாது
நித்திக்கு சில சக்தி இருக்கின்றது என்கின்றார் பாண்டே, இதைவிட மலையாள மந்திரவாதிகள், சுடுகாட்டு சாமியார்கள் அதைவிட கடும் ஆச்சரியரிங்களை செய்வார்கள்
நித்தி நோய்களை தொட்டு குணப்படுத்துகின்றார் என்கின்றார் பாண்டே, இது இமயமலை ரிஷிகளுக்கு சாதாரண விஷயம்
ரைக்கி எனப்படும் திபெத்திய முறை முதல் இயேசுவின் வாழ்வு முதல் ஏகபட்ட முறைகளில் இதை காணமுடியும் அதை செய்வதால் நித்தி கடவுள் என்றோ அவதாரம் என்றோ இல்லை
நித்திக்கு ஏதோ தீட்சை கிடைத்திருக்கின்றது ஒரு வரம் கிடைத்திருக்கின்றது ஆனால் அதை வைத்து என்ன செய்கின்றார் என்பதுதான் விஷயம்
சங்கரருக்கு கிடைத்த ஞானம் இந்தியாவெங்கும் இந்துமதம் எழும்ப உதவிற்று, ராமானுஜருக்கு கிடைத்ததும் அப்படியே
ரமணருக்கு இடைத்த ஞானம் உலகத்தாருக்கு வழிகாட்டிற்று, விவேகானந்தாருக்கு கிடைத்த ஞானம் உலகில் இந்துமதத்துக்கு தனி இடம் பெற்று கொடுத்தது
நித்திக்கு கிடைத்த ஞானம் அரியாசனமும் தங்க நகைகளும் ஆடம்பரத்தையும் கொடுத்தது
உண்மை இந்து ஞானிகள் இப்படி அல்ல, அவர்கள் தன்மையே வேறு
இந்துமதம் அறிவியலும் ஆன்மீகமும் கலந்தது, அந்த ஞானிகளின் போதனையே உனக்கான தீர்வு உன்னிடத்தில் உள்ளது என்பதே, இந்துமதம் தியானத்திலும் தவத்திலும் தன்னிலே கடவுளை காண சொன்னது
இதை ஒவ்வொரு இந்துவும் செய்யலாம் அவதாரம் என யாரும் தேவை இல்லை
ரமணரும் விவேகானந்தரும் அதை நோக்கிய வகையில்தான் மக்களை உண்மையான இந்து தத்துவத்தில் இழுத்து சென்றார்கள்
நல்ல துறவி காற்றையும் நதியினையும் போன்றவன், அவன் எல்லாம் இறைவனால் கொடுக்கபட்டது தன் ஞானமும் அப்படியே என நம்புவான்
எவனொருவன் காசு என ஒன்றை வாங்கிவிட்டானோ அவன் தன் துறவின் பலனை ஞானத்தை விற்கின்றான் என பொருள்,
அப்படிபட்டவன் உண்மை துறவியாய் இருக்கமுடியாது
இயேசு இதை தெளிவாக சொன்னார் “இலவசமாய் பெற்றதை இலவசமாகவே கொடுங்கள்”

காசுக்கு ஆசைபட்ட கலைஞனுக்கு பொருள் சேரும், தவவலிமையினை காசாக்க நினைப்பவன் நிலைக்கமாட்டான்.
இதனால்தான் பண்டைய முனிவர்கள் அது அகத்தியர்,, விஸ்வாமித்திரர் ,துர்வாசர் முதல் ஏகபட்டபேர் பெரும் முனிவனாய் இருந்தும் அரச பதவிக்கு ஆசைபடவில்லை
பெரும் பணக்கார வாழ்வு வாழவில்லை, தன் சக்தியால் கடவுளையே அசைக்கமுடிந்த அவர்கள் சுயநலத்துக்காக அரச கட்டிலில் அமரவில்லை
அப்படி அமர்ந்தால் அதாவது சுயநலத்துக்கு தவவலிமை பயன்பட்டால் அழிவு அடுத்திருக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது, பொதுநலம் ஒன்றுக்கே பாடுபட்டு உலக அமைதி ஒன்றுக்கே உழைத்தனர்
ஆன்மீகம் என்பது மக்களை ஆத்ம ரீதியாக மீட்டெடுப்பது, விவேகானந்தர் அதைத்தான் செய்ய நினைத்தார், ஒவ்வொரு மகான்களும் அதையே செய்ய முனைந்தனர்
மாறாக நானே கடவுளின் அவதாரம் என படை கொடி சீட கோடிகளோடு வருபவன் எல்லாம் போலியே
நித்தி தொட்டு சுகபடுத்துகின்றார் என்கின்றார்கள், அது ஒருவர் பாவத்தை வாங்குவதற்கு சமம்
நல்ல யோகிகள் நெடுநாள் வாழ்வதில்லை, அடுத்தவர் கர்மாவினை வாங்கும் ஒருவன் ஏகபட்ட வழிபாடுகளையும் ஜெபங்களையும் செய்ய வேண்டும் செய்தால் ஆயுளை கொஞ்சம் நீட்டலாம்
மற்றபடி அடுத்தவர் பாவத்தை நோய் நொடியினை சுமக்கும் ஞானகுரு இந்த லோகத்தில் நெடுநாள் வாழ்வதில்லை
மிகசிறந்த உதாரணம் இயேசு அடுத்த உதாரணம் விவேகானந்தர், அதற்கு அடுத்து ரமணர்
ஏன் மகான் முகமது நபியே மாளிகையில் தங்கவில்லை, அரியாசனத்தில் வீற்றிருக்கவில்லை தனக்கு கிடைத்த இறைவனின் அருளை அம்மக்களின் நல்வழிக்கே பயன்படுத்தினார், தன்னை என்றாவது கடவுள் என சொன்னாரா?
நல்ல குருவோ இல்லை ஞான அவதாரமோ அய்யா நீ கடவுள் என சொன்னால் அவன் செவிட்டிலே அறையும், ஆம் நல்ல அவதாரம் தனக்கு மேல் ஒருவன் இருப்பதை கைகாட்டும், அவனின் செய்தியினை மட்டும் சொல்லிவிட்டு நடப்பதெல்லாம் அவன் செயல் என அமைதி கொள்ளும்
அது சர்ச்சையில் சிக்காது, ஓடி ஓளியாது, மாளிகையில் தங்காது
நல்ல ஞான குருக்களின் வாழ்வு எளிமையானது ஆனால் முடிவு கொடுமையானதுஅது தர்மத்தின் விதி.
அவர்கள் எப்பொழுதும் உண்மையாக இருப்பார்கள், எல்லா கேள்விக்கும் அவர்களிடம் பதில் இருக்கும் ஓடி ஓளிய மாட்டார்கள்
நித்தியிடம் ஒரு சக்தி இருப்பது உண்மை ஆனால் அதை வைத்து ஞானத்தை நோக்கி மக்களை திருப்பாமல் ஒருவித வசிய நிலையில் மக்களை வைத்து தன்னை தலைவனாக ஏற்க சொல்லும் சுயநலம் மிஞ்சிவிட்டது
தன் சீடர்களை அவர்களை உணரவைக்க வேண்டிய நித்தி, அதாவது அவர்களுக்குள்ளே கடவுளை தேட சொல்லும் நித்தி தன்னை கடவுள் என நம்ப வைத்துவிட்டது நிச்சயம் மோசடி
நல்ல ஆன்மீகத்துக்கு இது பொருந்தாது
விவேகானந்தர் தன் வாழ்நாளில் இந்தியா முழுக்க சுற்றினார், ஆயிரகணக்கான மந்திரவாதிகள், சித்துவிளையாட்டுக்காரர்கள் இன்னும் ஏகபட்டோரை கண்டார்
ஆனால் முடிவாக சொன்னார் “கீழ்தரமான தந்திரமான காரியங்களால் பெரும் விஷயங்களை சாதிக்கமுடியாது, ஒரு குருவாக ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் கடவுளை உணரவைப்பதே என் பணி”
ஆம் இந்துமதம் அவ்வளவு அதிசயமானது, தன் மனதால் ஒவ்வொரு மனிதனாலும் பிரபஞ்சத்தை தொடர்பு கொண்டு ஆச்சரியங்களை நிகழ்த்தமுடியும், அதற்கு தியானமும் தவமும் இன்னும் பலவும் தேவை
கடவுள் உன்னுள்ளே இருக்கின்றான் என்பது அதுதான்
மாறாக நான் கடவுள் என வரும் எல்லோரும் நம்பதகாதவர்களே
நாம் அழுத்தமாக சொல்கின்றோம் நித்திசாமிக்கு ஒரு சக்தி உண்டு, ஆனால் அதை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றார்
வரங்களை தவறாக பயன்படுத்தும் எல்லோருக்கும் பகவான் முடிவு கொடுப்பான், புராணம் முதல் இக்காலம் வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கும்
கடவுள் கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்துபவன் முடிவு , சுயநலத்துக்காக பயன்படுத்துபவன் முடிவு நன்றாய் இராது
நித்தி அந்த முடிவுக்கு தப்ப இப்பொழுதே திருந்துதல் நலம், கடவுளின் கோபம் பொல்லாதது
பாண்டேவின் இந்துமத அபிமானம் வாழ்த்துகுரியது, ஆனால் அந்த அருமையான மதத்தை நித்தி போன்ற போலிகள் காக்கமுடியும் என கருதினால் பாண்டேவினை நாம் பரிதாபமாகவே பார்க்க முடியும்
நிச்சயம் பாண்டேவின் அரசியல் அறிவு பிரமிக்க வைக்கின்றது, அவரின் மத அபிமானம் சிலாகிக்க கூடியது
ஆனால் ஆன்மீகம் பற்றி, துறவு பற்றி அவருக்கு ஆழ்ந்த ஞானம் இல்லை. அவர் நித்திக்கு முட்டுகொடுப்பது நரிக்கு புலி பல்லக்கு தூக்குவது போல காண நன்றாய் இல்லை
மனிதர் ஆன்மீகம் பற்றி அறியாமல் முட்டுகொடுக்கின்றார் போல் தெரிகின்றது, நித்தியினை விட இயமலை ரிஷிகளும், கேரள மாந்தீர்கர்களும், மலை உச்சி பழங்குடியனரின் காணி கோஷ்டிகளும் சக்தி வாய்ந்த மந்திரங்களையும் பலத்தையும் கொண்டிருப்பவை
அவைகளின் பலமும் அது கொடுக்கும் விளைவுகளும் பெரிது , ஆனால் அது மாய மந்திர வித்தை அன்றி உண்மையான ஆன்மீகம் ஆகாது
அதர்வண வேதம் தெளிவாக சொல்லுகின்றது, “பண்பட்டவன் எவனோ, உண்மையான துறவி எவனோ, முழு மனதுடன் கடவுளை தேடுபவன் எவனோ, சுயநலம் இல்லாதவன் எவனோ, உலக நன்மைக்காக தன்னை அர்பணித்தவன் எவனோ அவனை தீயசக்திகளால் நெருங்கமுடியாது, எந்த மந்திரமும் அவனிடம் பலிக்காது”
ஆம் சித்துவிளையாட்டுக்கள் வேறு இந்துமத ஆன்மீகம் வேறு. பாண்டே இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புகின்றார்
மனிதனை அல்ல, சித்து விளையாட்டுக்களை அல்ல, ஆன்மாவினை மீட்டெடுப்பதே ஆன்மீகம். அதை செய்யா யாரும் ஞானகுருவாக அமரமுடியாது. அவர்களின் பீடம் நிலைக்காது.
மந்திரவாதிகள் இஸ்லாமிலும் உண்டு புத்தமதத்திலும் உண்டு ஐரோபாவில் உண்டு, ஆப்ரிக்காவில் உண்டு, ஏன் யூதரின் கபாலா பிரிவே மகா மோசமானது
அதனால் அவர்கள் கடவுள்கள் என்றாகிவிடுமா? முடியாதல்லவா?
இந்துமதம் இதில்தான் தனித்து நிற்கின்றது, உன்னில் உன் ஆத்மாவில் கடவுளை தேடு எந்த சக்தியும் உன்னை நெருங்கமுடியாது என அது போதிக்கின்றது
அந்த ஞானவழியில் வந்தவர்களே நிலைத்தார்கள் விவேகானந்தர் போல, மீறியவர்கள் பிராமனந்தா போல் சிக்கினார்கள்.
ஆன்மாவால் வராத ஞானம் நிலைக்காது
நித்தி ஷிரடி சாய்பாபா அல்ல, மாறாக திருவண்ணாமலையில் தனக்கு கிடைத்த வரத்தை புட்டபர்த்தி சாய்பாபா போல மாற்றதுடிக்கும் ஒரு ஆசாமி
அவ்வளவுதான் விஷயம்
வரம் கொடுத்த இறைவன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருக்கின்றான், அவன் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கும்
வைத்திருக்கின்றான்
பாண்டேவுக்கு ஆன்மீகமும் உண்மையான இந்துதத்துவமும் தெரியாவிட்டால் அல்லது புரியாவிட்டால் அமைதி காக்கலாம், மாறாக நித்திக்கு முட்டுகொடுத்தால் அது அவரின் அறியாமையினையே உலகுக்கு சொல்லும்
பாண்டே ஒன்றை மனதில் வையுங்கள், இந்துமதம் யுகம் தோறும் தன்னை புதுபிக்கும். அது கடைசி சொட்டு எண்ணெயில் எரியும் தீபத்தில் இருந்து பெரும் பேரோளியாக கிளர்ந்தெழும் அதன் ஆற்றல் அப்படி
அப்படிபட்ட மாபெரும் மதத்தை நித்தி காக்க வந்திருக்கின்றார் என எண்ணினால் அது டார்ச் லைட் ஒன்றே சூரியனுக்கு நிகரானது என்பது போன்ற அறியாமை