பாத பூஜை
சபரிமலை அய்யப்ப சுவாமி உலகெல்லாம் பக்தர்களை இழுக்கும் பெரும் சாஸ்தா என்பதால் மலேஷியாவிலும் அவர்களுக்கு பக்தர்கள் அதிகம்.
இயல்பாகவே மலேஷிய இந்துக்களுக்கு பக்தி அதிகம் என்பதால் இவ்வருடம் ஆயிரகணக்கான மலேசிய சாமிகள் சபரிமலைக்கு வரலாம் என்கின்றார்கள்,
அடுத்த்த இரு மாதத்துக்கான ஏர் ஏசியா விமான நிறுவணத்தின் டிக்கெட் விற்பனையும் அதை உறுதிபடுத்துகின்றது
அறை நண்பனும் சாமியாகிவிட்டான், செய்தி பார்த்தால் கூட “அமித்சாமி, மோடி சாமி, ஸ்டாலின் சாமி” என அழைக்கும் அளவுக்கு பக்தி பழமாகிவிட்டான்.
அவனுடன் ஏகபட்ட அய்யப்ப சாமிகள் தொடர்பில் இருக்கின்றன, அவர்களுக்கான பக்தி முயற்சிகளும் விரதங்களும் பிரார்த்தனைகளும் அட்சிதம் பிறழாமல் கடைபிடிக்கபடுகின்ற.
அவற்றில் ஒன்று பாத பூஜை
அதாவது வயதில் குறைந்த சாமிகள் அல்லது மற்ற பக்திமிக்கோர் வயதில் மூத்த சாமிகள் காலை மஞ்சளும் பூவும் கலந்த நீரால் கழுவி பூஜிக்க வேண்டுமாம்
பொதுவாகவே பாதபூஜை ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது, குடும்பத்தில் மூத்தவருக்கும் பெரியவருக்கும் செய்யபடும் பூஜையின் அர்த்தம் அதுவே,

இக்கால்கள் இக்குடும்பத்துக்காய் ஓடி உழைத்த கால்கள், இக்குடும்ப கோவிலுக்காக ஓடிய தேர்கால்கள் என்பதே அதன் பொருள்
ஆம் பாரத பண்பாட்டுபடி சில நாட்களில் கணவனுக்கு மனைவி செய்யும் பாத பூஜையும், தாய்க்கு மகன் அக்காலங்களில் அனுதினமும் செய்த பாத பூஜையும் இக்கணக்கே..
(அக்காலத்தில் சில இந்து குடும்பத்து மகன் தன் தாயின் கலை கழுவி அந்நீரை காலையிலே சில சொட்டு அருந்துவானாம்..)
சபரிமலை பயணத்துக்கான காலங்களில் நடைபெறும் இந்த பூஜை அவ்வரிசையே, இது குரு சாமிகளுக்கு இளம் சாமிகள் செய்வது,
மற்ற சாமிகளுக்கும் அடுத்தவர்கள் இந்த பாத பூஜை செய்யலாம் என்கின்றார்கள்
இந்த பாதபூஜை பாரம்பரியமிக்க இந்துமதத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது. ஆம் இந்த பாதங்களே கடவுளுக்காக ஓடுகின்றன, அவருக்காய் நடக்கின்றன அந்த பாதங்களை தொட்டு வணங்குவதில் புண்ணியம் உண்டு என்ற ஏற்பாடு அது
சபரிமலைகான கடும் பயணத்தில் கல்லிலும் முள்ளிலும் மிதிக்க வேண்டிய பாதங்கள் அவை, குளிரிலும், வெயிலிலும் பாறையிலும், நீரிலும் நடக்க போகும் பாதம் அவை என்பதால் அந்த பாதங்களை கண்ணீரோடும் பக்தியோடும் வணங்குகின்றனர்
சபரிமலை எனும் மகா புனிதமான சன்னிதானத்தி பதியபடும் பாதங்கள் அல்லவா? அதனால் அந்த பாதங்களுக்கு மஞ்சள் நீரும் , பூ கலந்த வாசனை நீருமாக ஊற்றி வணங்குகின்றார்கள் இந்துக்கள்
அந்த பூஜை செய்யபடும் பொழுது அவர்கள் மனம் சபரிமலை சாஸ்தாவிடம் ஒன்றிவிடுகின்றது, சாமியே சரணம் அய்யப்பா என கோஷம் ஒலிக்க செய்யபடும் பூஜை அந்த சாஸ்தாவுக்கே செய்யபடுவதாக எண்ணி மனமார செய்கின்றார்கள் அந்த பக்தர்கள்
சபரிமலைக்கு செல்லமுடியாதவர்களும் அய்யப்பனை எண்ணி செய்யும் பக்தி முயற்சி அது
இது பாரத பண்பாட்டின் அடையாளம், குருக்கள் காலில் பக்தர்கள் விழுவது அப்படியே
இக்கால்கள் பகவானுக்காக ஓடி உழைக்கும் கால்கள் எனும் நன்றியே அது
காந்தி காலிலும் நேரு காலிலும் இந்நாட்டு மக்கள் அப்படித்தான் விழுந்து வணங்கினர், ஆம் அவை தேசத்துக்காய் நடந்த கால்கள்
இதில் மானகுறைவு என்றோ, இழிவு என்றோ , அடிமைதனம் என்றோ எதுவுமில்லை. ஆன்மீகமத்தின் முதல்படியே நான் என்ற அகந்தையினை ஒழிப்பது
ஆலயத்தில் குருக்களின் காலில் விழுந்து வணங்குவது அக்குருவில் கடவுளின் சாயலை கண்டே, அந்த கால்கள் ஆலயத்துக்காக ஓடும் கால்கள் எனும் நன்றியால் மட்டுமே
இதில் சுயமரியாதை இழுக்கு, பகுத்தறிவு முழுக்கு, மூட நம்பிக்கை என எதுவுமில்லை இதெல்லாம் நன்றிகடன், மனமார செய்யும் நன்றிகடன்.
மாறாக வாக்குக்கும் சீட்டுக்கும் பதவிக்கும் கும்பிட்டு காலில் விழுவதே பகுத்தறிவும், சுயமரியாதையுமாகும்.
அய்யப்ப பக்தர்கள் விரதங்களிலும் அவர்களின் சம்பிரதாய சடங்குகளிலும் இந்துக்களின் பாரம்பரிய அறிவும் அவர்களின் பக்தியும் அதற்கான முயற்சிகளும் பல இடங்களில் தெரிகின்றன
எம்மை பொறுத்தவரையில் பாதபூஜை என்பது சரியானதே, பகவான் இயேசு கிறிஸ்துவே அதை செய்தார்
ஆம் தான் கொல்லபடும் முன் கடைசி நாளில் தன் கைகளால் தன் சீடர்களின் பாதங்களை கழுவி,, தன் உடையால் அதை துடைத்து முத்தமும் இட்டார்
இந்த பாதங்களே உலகெல்லாம் நடந்து தன்னையும் தன் உயர்ந்த கொள்கைகளையும் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க போகின்றன என என்பதை உணர்ந்து அக்காரியத்தை அவர் செய்தார்
அந்த வழக்கம் இயேசுவின் புதுமுயற்சி அல்ல, யூதரில் ஒரு வழக்கமாயிருந்தது அறிவில் சிறந்தோருக்கும் யூத ஞானிகளுக்கும் மற்ற சாமான்யர் கொடுக்கும் மரியாதை அது
இயேசுவுக்கே ஒரு பெண் அப்படி பாதபூஜை செய்த காட்சி உண்டு
அதே பூஜையினை தன் சீடருக்கும் திருப்பி செய்தார் மகான் இயேசு கிறிஸ்து, பணிவின் உச்சத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் எப்படி இருக்க வேண்டும் என செய்கையால் போதித்தார்
இன்றும் இச்சடங்கு பெரிய வியாழன் அன்று உண்டு , பாதிரிகள் செய்வார்கள், போப்பாண்டவரும் செய்வார்
யாரும் உயர்ந்தவர்கள் அல்ல, மனிதனுக்கு பணிவு வேண்டும், அதுவும் கடவுள் காரியங்களில் இருக்கும் மனிதர்களின் பாதங்கள் வணங்கதக்கவை எனும் தத்துவம் அது
அந்த உன்னத தத்துவத்தைத்தான் அய்யப்ப பக்தர்களும் குருசாமிக்கு செய்துகொண்டிருக்கின்றார்கள் ,
அய்யப்ப பக்தர்களின் கால்களுக்கு மற்றவர்களும் செய்கின்றார்கள்
தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க அரசியல்வாதி என திரியும் கால்களை விட அந்த கால்கள் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவை
அவை ஆலயத்துக்கு நடக்கின்றன, பக்தியும் ஆன்மீகமும் வளர்ந்து மானிட இனம் ஞானம் பெற நடக்க்கின்றன, அந்த பாதங்களை எவ்வளவு வணங்கினாலும் தகும். அந்த வணக்கம் அந்த பகவானை சேருமன்றி மானிடரை சேரா
சபரிமலை விரத காலங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு தத்துவத்தை போதித்துகொண்டே நகர்கின்றது, அந்த கருப்பு ஆடை தான் இயல்பான வாழ்விலிருந்தும் , கொண்டாட்ட சமூகத்தில் இருந்தும் ஒதுங்கி இருகின்றேன் என்பதை காட்டுகின்றது
அந்த பக்த கூட்டத்தையும் அதன் சடங்குகளையும் ஆழ கவனித்தால் ஏகபட்ட ஞானமிக்க விஷயங்கள் இருக்கின்றன.