பாரத சமூகத்தின் ஞானவழி உங்களுக்கு புதுவாழ்வு கொடுக்கும்!

ஐரோப்பாவினையும் அமெரிக்காவினையும் கண்ணீரோடு உற்று பார்க்கின்றோம்

அவர்களின் வலிமை மிக்க போர்கப்பல்கள் அவசர மருத்துமனைகளாகின்றன, மற்றவரை பார்த்த மாத்திரமே அசர வைக்கும் வளத்தின் அடையாளமான விமான நிலையம் மூடபட்டு கிடக்கின்றது

அவர்களின் சாலைகள் சுத்தமாக துடைக்கபட்டிருகின்றன‌

உலகை அதிரவைக்கும் சகல வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கங்கள், ஆர்வாரமும் ஆர்பரிப்பும் கேட்ட மைதானங்கள் கொரோனா முகாம்களாகிவிட்டன‌

சூரியனை எட்டும் நூறுமாடி கட்டங்களில் இருந்து கொண்டு உலகை சுரண்டுவது எப்படி என்றும் அடுத்த 200 ஆண்டுகளுக்கு ஐரோப்பா உச்சத்திலே இருப்பது எப்படி என்றும் திட்ட கூட்டத்தை காணவில்லை , எல்லாம் பூட்டு

கார் என்பது ஒருவனின் சமூக அடையாளம் என சொல்லிகொண்டிருந்த கம்பெனிகள் உயிரே பெரிது என மூடபட்டிருகின்றன‌

அவர்களின் ஆயுத தொழிற்சாலை எல்லாம் மருந்தும் கவசமும் தயாரிக்கும் இடங்களாயிற்று, விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் மனிதனை காப்பது எப்படி என திரும்பியாயிற்று

தேவர்களுக்கு நிகரானவர்கள் என மல்லுகட்டிய அந்த கூட்டம், இன்னும் உயிர் ஒன்றே எங்களால் படைக்க முடியவில்லை என மல்லுகட்டிய கூட்டம் மல்லாக்க கிடக்கின்றது

குடி மையங்கள் மூடல், யாரும் யாருடனும் ஊர் சுற்றலாம், விடிய விடிய கூத்து கட்டலாம் என்றெல்லாம் ஆடாது ஆடிய கூட்டம் அமைதியாய் அமர்ந்திருக்கின்றது

ஆலயம் எங்கும் பிணங்கள் அவற்றுக்கான பூஜைகள்

தெருவெங்கும் மவுனம், மருத்துவ மனையெங்கும் ஓலம்

எல்லாம் எம் சக்தி என நினைத்திருந்தோம், எம்மை மீறி ஏதோ உண்டு மனிதன் ஒரு கருவி என உணர்ந்துவிட்ட சமூகம் அமைதியாய் சிந்திக்கின்றது

எதை நோக்கி ஓடினோம், எதற்காக விஞ்ஞானம் வளர்த்தோம், எதற்காக சகல துறையிலும் இரவு பகலாய் வளர்ந்தோம்?

நோக்கம் ஒன்றுதான், மக்கள் வாழவேண்டும், எல்லா வசதியும் பெற்று வாழவேண்டும்

அதில்தான் உலகை சுரண்டினோம், அதில்தான் அடாது செய்தோ, ஏ உலகமே எங்களை போல் வாழு என சவால்விட்டோம்

இந்த பூமி எங்களுக்காக என்பதாலும் வாழதொடங்கிவிட்டோம் என்பதற்காகவும் விஞ்ஞானம் வசபட்டு விட்டதற்காகவும் ஆடிய ஆட்டம் என்ன?

கடவுளை மறந்து அவனை விண்வெளியிலும் தெரியவில்லை என்றோம், பணம் ஒன்றே பிரதானம் அது மக்களை காக்கும் என்றோம்

இதோ கொட்டி கிடக்குது பணம், உலகெல்லாம் இருந்து சுரண்டபட்ட கொள்ளை பணம், ஆனால் அது எதை காத்தது?

இந்த மாபெரும் ராணுவம் எதை காத்தது? வானெல்லாம் சுற்றிய கலன்கள் எதை காத்தது?

ஏவுகனைகளும் கப்பலும் நீர்மூழ்கியும் எதை காத்தது

எதை நோக்கி ஓட தொடங்கி எதில் வந்து நிற்கின்றோம்? எல்லாம் மாயை? எல்லாம் சும்மா?

நொடியில் அழிந்துவிடும் உலகுக்கா ஆடினோம்? நொடியில் சீட்டுகட்டாய் சரியும் இந்த வசதியான வாழ்வுக்காகவா ஓடினோம்

அப்படியானால் எது நிஜம்?

ஏ விரக்தி கண்ணீரோடு ஓய்ந்திருக்கும் மேலைநாட்டு வர்க்கமே இங்கே வா, உண்மையினை நாங்கள் சொல்கின்றோம்

ஒரு காலத்தில் இன்று நீங்கள் வைத்திருக்கும் எல்லா வசதிகளையும் பன்மடங்கு அனுபவித்த பூமி இது

இங்கு வான்வெளி சாஸ்திரம், விமானம், மாபெரும் ஆயுதங்கள் இன்னும் என்னவெல்லாமோ இருந்தன, இங்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வாழ்வின் ஒரு துளியினை கூட நீங்கள் வாழ்ந்திருக்க முடியாது

அவ்வளவு அறிவும் தெளிவும் இயற்கையினையே கட்டுபடுத்தும் ஆற்றலும் இங்குள்ள முன்னோருக்கு இருந்தது

அவர்கள் வாழா வாழ்வில்லை, சுற்றா கிரகம் இல்லை, அவர்களிடமில்லா ஆயுதங்களெல்லாம் யாரிடமும் இருந்ததில்லை, உங்களின் மொத்த ஆயுதமும் அவர்களின் வல்லமையான ஆயுத முனைக்கு கூட வராது

அப்படி பெருவாழ்வு வாழ்ந்த இனம் ஒரு கட்டத்தில் உண்மை உணர்ந்தது, எதுவும் நிலையற்றது எல்லாம் சும்மா என உணர்ந்து கொண்டது

அறிவின் கடைசி எல்லை வரை சென்ற அச்சமூகம் இறைவனை அடைவதே உன்னத முடிவு , கடைசி ஞானம் என சொல்லி கங்கை கரையில் அமர்ந்திருந்தது

எல்லாம் அனுபவித்து முடித்து விளைவுகளை தெரிந்து சகலமும் வெறுத்த ஒரு இனத்தினைத்தான் நீங்கள் காட்டுமிராண்டி அறிவில்லாதவர்கள் என்றீர்கள்

சகலமும் அனுபவித்து வெறுத்து கடந்த ஞான சமூகத்தையே சாமியார் கூட்டம் என்றீர்கள்

வெந்த பதார்த்தம் அமைதியாயிருக்கும், புடம் போட்ட தங்கம் குளிர்ந்திருக்கும், ஞானமிக்க சமூகம் அமைதியாய் இருக்கும்

ஆனால் உங்கள் ஆர்ப்பாட்மென்ன, ஆர்பரிப்பு என்ன, கொக்கரிப்பு என்ன?

நாங்கள் சொல்வதே கடவுள், நான் சொல்வதே வாழ்வு, நான் சொன்னதே அறிவு, நான் கண்டதே பணம் நான் சொல்வதே உலகம் என்றீர்கள்

இதோ என்னாயிற்று?

இப்பொழுது ஞானம் பெற்றுகொண்டிருக்கின்றீர்கள், அனுபவிக்கும் வரையே வசதியும் வாழ்வும் பணமும் கனவு

வாழ்ந்து சலித்த பின் எல்லாமே வேதாந்தம், இது வேதாந்த பூமி

எல்லா ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் அதிரவைக்கும் கொண்டாட்டமும் உற்சாகமும் மயான அமைதியிலே முடியும் என்பதை உணர்ந்து முடிவினை முதலிலே ஏற்றுகொண்ட தர்மம் இது, அதன் ஞானம் அப்படி

எல்லா சத்தமும் அமைதியில் முடிகின்றது, அந்த அமைதி ஞானத்தின் தொடக்கம். கங்கைகரை ஞானியர் கூட்டம் கண்ட முடிவு இது

இப்பூமி வாழ்ந்து முடித்து பக்குவபட்ட ஞான பூமி, அதன் ஞான அனுபவங்கள் கொட்டி கிடகின்றன, பிரபஞ்சத்தின் முன் எல்லாம் தூசு ஆடும் ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் போர் முழக்கமும் எல்லாமும் வீண் என என்றோ சொன்ன பூமி இது

அதன் புராணங்கள் வெறும் கற்பனை அல்ல, இன்று நீங்கள் காணும் மனோநிலையினை என்றோ சொன்ன நடந்த காட்சிகள், அதன் வேதங்கள் உபநிஷங்கள் எல்லாம் கற்பனை அல்ல அவை ஞானத்தின் திறவு கோல்கள்

அதன் இதிகாசங்கள் உங்களின் பெரும் வாழ்வினை விட பன் மடங்கு விஞ்ஞானத்திலும் வசதியிலும் வாழ்ந்த காட்சிகள் , உங்களுக்காவது இப்பூமியின் பொருட்களும் விஷயங்களும் ஒத்துழைத்தன, அவர்களுக்கோ பிரபஞ்சமே முழு ஒத்துழைப்பு கொடுத்ததென்றால் அவர்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும்?

ஆனால் முடிவென்ன? அவர்கள் முடிவில் கண்டது உண்மை ஞானம்

நீங்கள் பக்குவத்தின் முதல்படியில் இருக்கின்றீர்கள், இன்னும் பக்குவபட பாரதத்தின் ஞானமரபினை நாடுங்கள்

வாழ்வின் அர்த்தமும் நோக்கமும் முடிவும் உங்களுக்கு விளங்கும், தெளிந்த மனம் உங்கள் சோகங்களை கரைக்கும், பாரத சமூகத்தின் ஞானவழி உங்களுக்கு புதுவாழ்வு கொடுக்கும்