மனோரமா

மனோரமா

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள்
சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை
மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று பெயரிட்டுகொண்டவர் மனோரமா.
இயற்பெயர் கோபிசாந்தா, தஞ்சாவூர் அருகே பிறந்தவர், குடும்பம் வறுமையில் சிக்க பின் பள்ளத்தூரில் குடியேறிய குடும்பம் அது, 12 வயதிலே நாடக கம்பெனிகளில் நடிக்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில் இவர் பெயர் பள்ளத்தூர் பாப்பா.
வைரம் நாடக சபாவில் மனோரமா எனும் பெயரில் நடித்துகொண்டிருந்த இவர், நடிப்பு திறமையினால் பெரும் நாடகங்க‌ளில் நடிக்க வைக்கபட்டார்,
பெரும் நடிகர்கள் என்றால் அண்ணாவின் நாடகங்கள், கலைஞரின் நாடகங்களில் எல்லாம் அவர்களோடு நடித்தார்.
அந்தகாலங்களில் அண்ணா,கலைஞர் எல்லாம் நாடகம் போடுவார்கள், திராவிட கருத்துக்கள் கடுமையாக எதிரொலிக்கும்,
இருவருமே மிக சிறந்த நாடக ஆசிரியர்,வசனகர்த்தா எல்லாவற்றிற்கும் மேல் மிகசிறந்த நடிகர்கள், அதாவது நாடகத்தில் மட்டும் நன்றாக நடிப்பவர்கள் என மிக அழுத்தமாக சொல்லிகொள்கிறேன்.
பின்னாளில் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கையில் அறிமுகமானார் மனோரமா, அதுதான் முதல்படம்.
அதன்பின் தமிழக படங்களிலும், தெலுங்கு படங்களிலெல்லாம் நடித்தார், ஒரு சிங்கள மொழிபடத்திலும் அவர் நடித்த செய்தி உண்டு, ஆனால் படம் வரவில்லை.
ஒரு நடிகைக்கு தேவை குரலசைவு, முகபாவம் எல்லாவற்றிற்கும் மேல் உடல்மொழி, இந்த மூன்று விஷயங்களிலும் சந்தேகமே இல்லாமல் முதல் இடம் மனோரமாவிற்கு.
தமிழ் திரையுலகம் மகா விசித்திரமானது, அதுவும் ரசிகர்கள் மிக கண்டிப்பானவர்கள். ஒருவர் ஒரு வேடத்தில் மிக பிரமாதமாக நடித்தால் அவர் அந்த வேடத்திற்காக ஒதுக்கிவைக்கபடுவார். எம்ஜிஆரின் வாள் சண்டை, சிவாஜி கணேசனின் அழுகை,மோகனின் மைக் , ராமராஜனின் பசுமாடு என அது மிக பெரிது, அப்படியே மிக சிறந்த வில்லன் நடிகராகான ரஜினிகாந்தும் ஹீரோவாகவோ வைக்கபட்டார்.
அப்படி மனோரமாவும் நகைச்சுவை நடிகை என குறிக்கபட்டாலும், எல்லா வேடங்களிலும் நடித்து தான் மிகசிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். அவர் இருக்கும் காட்சிகளில் அவர் மட்டும்தான் தெரிவார், அப்படித்தான் தில்லானா மோகனம்பாளில் சில இடங்களில் சிவாஜிகணேசனையும் மிஞ்சினார்,
எம் ஆர் ராதாவிற்கு பின் அது மனோரமாவிற்கு மட்டும் சாத்தியம்.
சோ ராமசாமி, நாகேஷ், எம் ஆர் வாசு, சுருளிராஜன் என அக்கால கட்டத்தில் அவர் கொடுத்த காமெடி காட்சிகளாகட்டும், பின்னாளில் சின்னதம்பி, சின்ன கவுண்டர் போல கொடுத்த குணசித்திர வேடமாகட்டும், விசு படங்களின் பாத்திரமாகட்டும், பின்னாளைய பாட்டி வேடங்களாகட்டும், அவர் தனித்து நின்றார்.
உலகில் 90 சதவீத சினிமா நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு மகா சோகம் நிறைந்தது, அதிலும் 95% தமிழக நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு சந்தோஷமாக அமைவதில்லை, அதற்கு மனோரமாவும் விதிவிலக்கு அல்ல, சந்தித்த சவால்கள் ஏராளம்.
ஆனாலும் அந்த கவலைகள் எல்லாம் தன் திரைவாழ்வினை பாதிக்காமல் பார்த்துகொண்டார், தடுமாறிய இடமென்றால் வடிவேலு போல அரசியல் பிரச்சாரத்தில் மாட்டியது, ஆனாலும் சீனியர் அல்லவா? மீண்டு வந்துவிட்டார்.
கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்தவர், 5 முதல்வர்களோடு பணியாற்றியவர், 100 பாடல்களை சொந்தமாக பாடிய ஒரு பாடகி, 4 தலைமுறை நடிகர்களுடன் போட்டியிட்டு நடித்த ஒரு மிக சிறந்த நடிகை என அவருக்கு பல முகங்கள் உண்டு.
பத்திரிகையாளர் சோ மிக சிறந்த நகைச்சுவை நடிகர், அவரின் பல காட்சிகள் நெஞ்சைவிட்டு அகலாதவை, அவருடன் மனோராமா சொந்த குரலில் பாடி ஆடிய “ஜாம் பஜார் ஜக்கு” , “கைபடாத ரோசாப்பூ” போன்ற பாடல்களெல்லாம் சென்னை மொழிவழக்கினில் இருவரும் பின்னி எடுத்த படங்கள்.
ஒரு நடிகன் நல்ல நடிகன் என்றால், தங்களின் பாதிப்பைனை அடுத்த தலைமுறையினரிடம் பதிய வைக்கவேண்டும், ஒரு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும், சிவாஜி கணேசன், சந்திரபாபு, எம் ஆர்ராதா போன்றோர் அதனைத்தான் செய்தனர், பின் ரஜினிகாந்தும் அதனையே செய்தார், நடிப்பால் பாதித்தார்.
ஆனால் தமிழக நடிகைகளில் அப்படி சாதித்த ஒரே நடிகை மனோரமா மட்டுமே, பல நடிகைகள் தன் நடிப்பினை பின் தொடருமாறு அவர் பாதித்திருந்தார்.
இன்றுசின்னதிரை நாடகங்களிலும், திரையியுலகிலும் சில நடிகைகள் மனோரமாவின் இடத்தினை பிடிக்க படாதபாடு பட்டுகொண்டிருப்பது ஒன்றும் பரம ரகசியம் அல்ல,
இதுதான் மனோரமாவின் வெற்றி, மாபெரும் வெற்றி.
இன்று அந்த அற்புத நடிகையின் நினைவு நாள் நாள்
இன்றும் திரைபடங்களில் பாட்டி வேடத்தில் “சாப்டியாய்யா ” என அவர் வந்து நிற்கும்பொழுது, பலருக்கு தங்கள் பாட்டி நியாபகம் வராமல் போகாது
அவ்வளவு உருக்கமான பாசம் நிறைந்த குரல் அது. அன்னை, அண்ணி, பாட்டி என எல்லா குடும்ப உறவுகளுக்கும் தன் நடிப்பால் தனி இடம் பெற்று கொடுத்தவர்.
“மன்மத லீலை” பட வெற்றிவிழா, மேடையில் கண்ணதாசன் சொன்னார், ” பாலசந்தர் எத்தனையோ நடிகைகளை அறிமுகபடுத்தினார், என்னால் மனோரமாவினை மட்டும்தான் அறிமுகபடுத்த முடிந்தது”
பாலசந்தர் சொன்னார், ” நான் ஆயிரம் நடிகைகளை கொண்டு வந்தாலும், அது நீங்கள் கொண்டுவந்த ஒரே ஒரு மனோரமாவிற்கு ஈடாகுமா?”
ஆயிரம் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் பாலசந்தருடையது, அது நிதர்சனமான உண்மையும் கூட.
தமிழகத்தை ஆண்ட ராணிகளில் மங்கம்மா மறக்க முடியாதவர் என்பது போல, திரையுலகினை ஆண்ட பெண்களில் மனோரமா என்றுமே மகாராணி
இன்று அவரின் நினைவு நாள், அந்த அற்புதமான நடிகைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

[ October 10, 2018 ]

Image may contain: 2 people, people smiling, closeup