மயில் விருத்தம் : 10

மயில் விருத்தம் : 10

“நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்
குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்
தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.

முதல்வரி இப்படி வருகின்றது

“நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா”

இவ்வரி “நிராசத விராசத வரோதய பராபரன் நிராகுலன் நிராமய பிரான்” என பிரிந்து பொருள் தரு,

அதாவது மூன்று முக்கிய குணங்களில் ஒன்றான ராஜத (ரஜோ) குணம் அற்றவன் (நிராசத), ரஜோ குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன் (விராசத) , அடியோருக்கு வரமருள்பவன் (வரோதய), மூலமானவன் (பராபர), மன வருத்தமில்லா மகிழ்ச்சியான (நிராகுல) நோய் இல்லாத (நிராமய) தலைவன் (பிரான்)

இரண்டாம் வரி இதோ

“னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்”

இவ்வரி “நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி நிலாவிய உலாச இதயன்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது பாவம் செய்தவர்களும் அறமில்லாதவர்களும் தன்னுடன் சேராதினால் (நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான்) பரிசுத்தமான தர்மத்தில் இருப்பவன் (நெறி நிலாவிய உலாச இதயன்)

அறமிலான் நெறியிலான் நில்லாது எழுதலால் … தர்ம நெறி
அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால்,

அடுத்து மூன்றாம் வரி

“குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்”

இவ்வரி ” குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல் குராநிழல் பராவு தணிகைக்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது “குரா மரங்கள் நிறைந்திருக்கும் அருள் விளங்கும் (விராவு உமிழ்) தேவலோக (அமரா) ஒளிவீசும்படி அமர்ந்த (இது குராமரங்கள் நிறைந்த திருவிடைகழி ஆலயத்தை குறிப்பது) குராநிழல் நிறைந்த தணிகை (திருத்தணி)” என்பது பொருள்

நான்காம் வரி இப்படி வரும்

“குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்”

இவ்வரி ” குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய குலாவிய கலாப மயிலாம்”

பெரும் மலைகளிலும் (குலாசலம்) பூமியெங்கும் (சராசரம்) நடமாடிய (உலாவிய) அழகான (கலாப) மயில் எது என்றால்

ஐந்தாம் வரி இதோ

“புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்”

இவ்வரி “புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன்” என பொருள்தரும்

அதாவது திரிபுரம் எரித்த சிவனின் மகன் (புராரி குமரா), பரமனுக்கே குருவானவன் (குருபரா) என வணங்குவோருக்கு நல்ல வரங்களை தருபவன் (வரோதய) பழைய முராரி எனும் அசுரனை கொன்ற விஷ்ணுவின் மருமகன் (புராதன முராரி மருமகன்)

ஆறாம் வரி இதோ

“புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்”

இவ்வரி “புலோமசை சலாமிடு பலாசன வலாரி புக லாகும் அயி லாயுதன் நெடும்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது பழங்களை உண்ணும் கிளி போன்ற இந்திராணியினால் (புலோமசை) வணங்கபடும் (சலாமிடு) இந்திரனுக்கே சரணாகதி அளித்த வேலாயுதன் (வலாரி புகலாகும் அயிலாயுதன்)

இனி ஏழாம் வரி

“தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்”

இவ்வரி ” தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வல சாதனன் விநோத சமரன்” என பிரிந்து பொருள் தரும்

நீண்ட பூமியின் கண் போன்ற மகைகளில் வாழும் (தாராதல) வேடர்களின் குலத்தின் சூரியனை போல (கிராதர்கள் குல ஆதவ) அழகான (அபிராம) வலிமை கொண்டவன் (வலி சாதனன்) விநோதமாக போர்புரிபவன் (விநோத சமரன்)

கடைசி வரி இதோ

“தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே”

இவ்வரி “தடாரி விகடாசுரன் குடாரி இத படா திகழ் ஷடாநநன் நடாவு மயிலே. ” என பிரிந்து பொருள்தரும்

அதாவது கிரவுஞ்ச மலையினை அழித்தவன் (தடாரி) சூரபத்மனை ஒழித்தவன் (விகடாசூரன்) கோடாரி கொண்டு பிளந்தவன் (குடாரி) நன்மையும் மகிழ்ச்சியும் அளிக்கும் ( இதபடா திகழ் ஷடாநநன்) முருகபெருமானின் மயிலே அது

ஆக பாடலின் பொருள் இதுதான்

மூன்று குணங்களில் ஒன்றான ராஜோ குணம் அற்றவன், ரஜோ குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவன், பரமேஸ்வரன், மன வருத்தம் இல்லாதவன், ‘

நிர்’ + ‘அமயம்’ (நோய்), நோய் இல்லாதவன், தலைவன், தர்ம நெறி அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால், நன்நெறி பூண்டு ஒழுகி மனக்களிப்புடன் எப்போதும் இருப்பவன், குரா மரங்களில் தோன்றி, கலந்து வெளிப்பட்டு விளங்கும், பருத்த அடிமரத்தின் கீழ், (திருவிடைக்கழியில்) சானித்தியத்துடன் விளங்குபவன், ஒளி வீசும், குரா மரங்களின் நிழலில், படர்ந்திருக்கும், திருத்தணிகை முதலிய சிரேஷ்டமான மலை முதல், பூவுலகெங்கும், களிப்புடன் திரிந்து, குலாவுகின்ற தோகை மயில்

(அது யாருடையது என வினாவினால்)

திரிபுரமெரித்த சிவ பெருமானின் மைந்தா, சிவ குருமூர்த்தியே, என்று துதித்து வணங்கும், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குபவன், பழம் பெரும் கடவுளானவரும், ‘முரன்’ என்ற அசுரனைக் கொன்றவரும் ஆன திருமாலின் மருமகன், (பழங்களையே உண்டு வாழும்) கிளி போன்ற இந்திராணியால், வணங்கப்படுகின்றவன், இந்திரனுக்கு சரணாகதி அளித்த வேலாயுதக் கடவுள்

நீண்ட பூமியின் கண் உள்ள மலைகளில் வாழும், வேடுவர்களின் குலத்திற்கு சூரியனைப் போல், மாப்பிள்ளையாகிய பேரழகன், வலிமையை சாதித்தவன், போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன், மலையான கிரவுஞ்சத்தை அழித்தவன், தொந்தரவுசெய்து வந்த சூரபத்மாவை, கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன், நன்மையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆறுமுகப் பெருமான், செலுத்துகின்ற மயிலே தான் அது.

இந்த பாடலில் மேலோட்டமாக பல வரிகளை முருகனின் சிறப்புக்களை சொன்னாலும் மிக நுணுக்கமாக பெரும் ஞான போதனையினை செய்கின்றார் அருணகிரி நாதர்

ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் எனும் முக்குணங்களை பற்றி இந்து தத்துவ நூல்கள் பேசும், இந்தமூன்று குணங்களையும் ஒழிப்பதே பெரும் ஞானம்

தாம்ச குணத்தை ரஜோ குணத்தாலும் ரஜோ குணத்தை சத்வ குணத்தாலும் ஒழித்து கடைசியில் சத்வகுணத்தோடு பகவானிடம் முழுக்க சரணடைந்து தான் ஒன்றுமில்லை என உணர்ந்து கலப்பதே உன்னத ஞானம்

முருகபெருமான் அந்த ஞானவடிவு என சொல்லும் அருணகிரியார், முருகனை சரணடைந்தால் அந்த ஞானம் எளிதாக வரும் என்கின்றார்

முருகன் பரிசுத்தமானவர் அதனால் அங்கு பாவமும் அதர்மமும் கெட்ட விஷயங்களும் கொஞ்சமும் இல்லை, அந்த முருகனை வணங்கினால் ஆத்மாவிடம் இருக்கும் கெட்டதெல்லாம் அகலும் அதாவது மாயை நீங்கி ஞானம் பெருகும் என்கின்றார்

அடுத்து குரா மரங்களை பற்றி அதிகம் ஏன் சொல்கின்றார் என்றால் குராமரம் ஞானத்தின் அடையாளமாக கருதபடும், வால்மிகீ ஒரு குராமரத்தின் அடியில்தான் ஞானம் பெற்றான் என்பது புராண செய்தி

குராமரம் ஞானத்தின் அடையாளமாதலால் அது முருகபெருமானின் விஷேஷ தல விருட்சமாகும்

அகத்திய மகரிஷிக்கு முருகன் ஞான உபதேசம் அருளியது இந்த மரத்தின் கீழ். குருந்த மலை முருகன் கோவில் என அது இன்றும் கோவையில் உண்டு

இப்பாடலில் சொல்லபடும் திருவிடைகழி ஆலயத்தின் குமாரசிவ ஆலயத்தின் தலமும் குரா மரமே
ஸ்ரீராகு பகவான் குரா மரத்தின் கீழ் தவம் செய்து முருகப் பெருமான் அருள் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

திருஆவுடையார் கோவில் என்னும் பெரியகோவிலின் ஸ்தல விருட்சம் குருந்த மரம். இந்த குருந்த மரத்தின் கீழ் தான் திருமாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்தார்.

இப்படி ஞான அடையாளமாக விளங்கும் குருந்தமரத்தினை தல விருட்சமாக கொண்ட ஸ்தலங்களை வணங்கினால் ஆத்ம ஞானம் கிடைக்கும் , அந்த தலங்கள் ஞானத்தை அருளும் என்கின்றார் அருணகிரியார்

முருகனின் புகழை ஞானர்த்தமாக பாடுகின்றார் பட்டர், அவர் இந்திராணிக்கு வாழ்வளித்தவன் என்கின்றார். இந்திராணியும் இந்திரனும் தேவலோகத்தை குறிப்பவர்கள் , வானவருக்கே வாழ்வளித்த அந்த குமரன் மானிடருக்கு வாழ்வளிக்க மாட்டானா? என்பது அவர் மறைமுகமாக சொல்லும் நம்பிக்கை வரி

வேடவர்க்கு சூரியன் என சொல்லவருவது சமூகம் ஒதுக்கி வைக்கும் கடும் போக்குடைய வேடவர்க்கே அவன் அவர்களை வென்று நல்வழி கொடுத்தவன்,யாராலும் வெல்லமுடியா சூரனை பிளந்தவன் என்பது முருகன் எப்படிபட்ட அசுரமனம் படைத்தோருக்கும் மீட்பு கொடுத்து தன்னோடு அணைத்து கொள்பவன் என பொருள்

மேற்சொன்னோர் எல்லாம் ரஜோ குணத்திற்கு எடுத்துகாட்டானவர்கள்

ஆக பாடலின் அதிசுருக்கம் என்னவென்றால் முருகனை பணிந்தால் ரஜோ குணம், தமோ குணம் ஒழியும் சத்வ குணம் எனும் சாத்வீக குணம் எழும், அந்த குணம் முக்தி நோக்கி ஞானத்துடன் அழைத்து செல்லும், முருகனின் அருள் முழு ஞானமும் முக்தியும் வழங்கும் என்கின்றார் அருணகிரி நாதர்