மருத்துவபணியில் தனியார் பணி சொர்க்கம், அரசு பணி நரகம்
முன்பொருமுறை அரசு ஆசிரியர்கள் போராடும் பொழுது வேலையில்லா ஆசிரியர்களை நியமித்து அதிரடி காட்டியது அரசு
இப்பொழுது தனியார் மருத்துவர்களை அமர வைத்து அதிரடி காட்டுமா என்றால் காட்டாது, அது அவர்களால் முடியாது
இதனால் கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றது அரசு
மருத்துவர்களும் மனிதர்களே, அவர்களும் படாதபாடு படுகின்றார்கள். தூக்கமில்லை உணவில்லை இன்னும் ஏராளமான நெருக்கடிகள் அவர்களுக்கும் உண்டு
மருத்துவ உலகம் பணக்கார உலகமாகிவிட்டது, செலவு அதிகரித்துவிட்டது என பொங்குவோர் யார் மேல் பொங்க வேண்டும்?
தவறான மருத்துவ கொள்கைகளை வைத்திருக்கும் அரசாங்கம் மீது பொங்க வேண்டும்
அரசு முறையான காரியங்களை செய்யாதபொழுது அல்லது மருத்துவத்தை தனியாரிடம் தாரை வார்க்கும் பொழுதே சிக்கல் தொடங்குகின்றது
இன்சூரன்ஸ் உதவி இன்னபிற உதவி என சமாளிக்கும் அரசுகள் தனியார் மருத்துவமனையினை கையகபடுத்தி நேரடியாகவே நல்ல சிகிச்சை கொடுக்கலாம்
ஆனால் செய்யமாட்டார்கள்
ஆக பெரும் தவறு அரசாங்கம் மேலிருக்க தனியார் மருத்துவர்களை சாடுவது தவறு
இன்றும் பாருங்கள் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லை, பழனிச்சாமி அரசு இன்னும் நியமிக்கவில்லை
30 பேரை பார்க்க வேண்டிய மருத்துவர் 300 பேரை பார்க்கின்றார், அது சில நேரம் 500ஐயும் தாண்டுகின்றது
இதெல்லாம் நல்ல சிகிச்சையினை கொடுக்குமா? இல்லை மருத்துவரே நோயில் விழமாட்டாரா?
மருத்துவர்கள் பக்கமும் பல நியாயங்கள் இருக்கின்றன
எந்த விலை உயரவில்லை?
உணவு, உடை, வீடு, பள்ளி , சினிமா டிக்கெட் என எல்லா விலையும் உயரும் நாட்டில் மருத்துவ செலவும் உயர்வது எப்படி தவறாகும்?
சரி, விஷயத்துக்கு வருவோம்
பல கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள், ஆனாலும் மனிதாபிமானமிக்க அவர்கள் அவசர சிகிச்சைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கின்றார்கள்
கவனிக்கவும் செவிலியர் பணியில் உண்டு, அதே நேரம் அவசரம் என்றால் மருத்துவரும் வருவார்
ஒரு தென்னைமரம் பல ஆண்டுகளுக்கு பயன்கொடுக்க கூடியது, அது சரிந்துவிட்டால் எத்தனையோ ஆயிரம் இளநீரும் தேங்காயும் தடுக்கபடுகின்றது என்பது பொருள்
ஒரு ஆலமரம் சரிக்கபட்டால் பல்லாயிரம் பறவைகள் அடைக்கலமின்றி அலைமறிக்க போகின்றன என பொருள்
ஒரு மலை உடைக்கபட்டால் ஏகபட்ட மூலிகைகள் அழிந்து ஏராளமான மக்கள் மருந்தின்றி அவதிபடபோகின்றனர் என பொருள்
ஒரு குளமும் கிணறும் மூடபட்டால் ஏகபட்ட மக்கள் தாகத்தால் சாக போகின்றார்கள் என பொருள்
ஆம் ஒரு மருத்துவனின் வேலை நிறுத்தம் பெரும் விளைவுகளை கொண்டுவரும், அந்த மருத்துவ சமூகத்தின் நியாயமான கோரிக்கை அங்கீகரிக்கபட வேண்டியதே
நல்ல மருத்துவன் எப்படி இருப்பான் என்பதற்கு யூதபழமொழி அழகாக சொல்கின்றது
“மருத்துவன் என்பவன் கடவுளால் அனுமதிக்கபட்டவன், ஒவ்வொரு மனிதனும் மருத்துவன் கையில் விழவேண்டிய காலம் உண்டு
பயிர்தொழில் போலவே மருத்துவமும் கடவுளால் உருவாக்கபட்டு மருத்துவனிடம் கொடுக்கபட்டிருக்கின்றது
மனிதனே, நீ அவன் கையில் விழும் நாளில் ஆண்டவரை வேண்டிக்கொள், உன்னை மருத்துவனிடம் விழ செய்பவர் அவரே என்பதை மறக்காதே
நல்ல மருத்துவனும் ஆண்டவரிடம் உனக்காக வேண்டிகொண்டே உனக்கு மருந்திடுவான்
ஆம் இது யூதரை தாண்டி மேற்காசியா முழுக்க பரவியிருந்த நம்பிக்கை
மருத்துவ உலகம் அவ்வளவு முக்கியமானது, நாட்டின் குடிமக்களை காக்கும் கடப்பாடு காவல் போல, ராணுவம் போல அவர்களுக்கும் உண்டு
அரசும் இறங்கிவரட்டும், மருத்துவர்களும் தங்கள் சேவையின் மகத்துவத்தை புரிந்துகொள்ளட்டும்
அது ராணுவம், தாய்மை, விவசாயம் போன்ற உயர்ந்த தேச சேவை அது..
ஆசிரிய பணியில் தனியார் ஆசிரியபள்ளி நரகம் அரசு ஆசிரிய பணி சொர்க்கம்
ஆனால் மருத்துவபணியில் தனியார் பணி சொர்க்கம், அரசு பணி நரகம்
இந்த வேறுபாட்டை எல்லோரும் புரிந்தால் நல்லது , மருத்துவராக விஜயபாஸ்கர் புரிந்தால் இன்னும் நல்லது