மலேசிய தமிழ்பெண்ணுடன் முகநூல் காதல்
தேனியினை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மலேசிய தமிழ்பெண்ணுடன் முகநூல் காதல் ஏற்பட்டிருக்கின்றது, காதலாகி கசிந்திருகியிருக்கின்றார்கள்.
அம்மணிக்கு இவரை காணும் ஆசை வந்து அது ஓடிவந்திருக்கின்றது, ஏர் ஏசியா போன்ற பட்ஜெட் விமானம் தன் காதலுக்காக விடபட்டது போல, தயமந்திக்கு அன்னபறவை போல என நினைத்து அம்மணி பறந்து வந்தாயிற்று
அம்மணியினை நேரில் பார்த்த தமிழக காதலன் அரண்டு போய், அய்யய்யோ நீ குண்டாக இருக்கின்றாய் கருப்பாக இருக்கின்றாய் என சொல்லி கழன்று ஓட பார்த்திருக்கின்றான்
பொதுவாக உலகமெல்லாம் பெண்கள் ஒரே மாதிரிதான் இருக்கின்றார்கள், நாகரீக உடை அணிந்தாலும், நவநாகரீக வாழ்வு வாழ்ந்தாலும் பெண்களின் மனது ஒருவனை நினைத்துவிட்டால் அவனோடே வாழதுடிகின்றது, எல்லா சவாலையும் எடுக்க துணிகின்றார்கள்
மலேசிய பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் வித்தியாசமானது, ஐரோப்பிய நாகரீக வாழ்வில் மனதால் தமிழச்சியாக அவர்கள் சந்திக்கும் போராட்டம் வேறுமாதிரியானது. இன்னொன்று பெற்றோரை எதிர்பார்க்காத அல்லது எதிர்பார்க்க முடியாத நிலமையில் இருக்கும் சமூகம் அது, அவர்களுக்கான வாழ்வை அவர்கள்தான் தேட வேண்டும்
அம்மணி இவன் பொறுப்பானவன் என்றும் தன்னை நன்றாக பார்த்துகொள்வ்வான் என்றுமே மனதை பறிகொடுத்திருக்கின்றது, வந்தவள் சும்மாவும் வரவில்லை கழுத்தெல்லாம் நகையாக தமிழ் கலாச்சாரபடி வந்திருக்கின்றாள்
இவன் அவளை கழற்றிவிட்டு ஓடி ஓளிந்திருக்கின்றான், அந்நிய தேசத்தில் இருந்து தன்னை நம்பி வந்த பெண்ணை அவன் இப்படி நடுதெருவில் விட்டிருக்க கூடாது, பெரும் பாவம் அது
ஆனால் மனதளவில் துணிச்சலான சுதந்திரமான வளர்ப்பு என்பதால் மலேசிய அம்மணி காவல்துறையினை நாடியிருக்கின்றது, காவல்துறை இந்தியனுக்கு கடமை உணர்ச்சிகாட்டி அம்மணியினை சமரசம் செய்து விரட்டிவிட முயன்றிருக்கின்றது
அந்தபெண் பாவம், அவன் வேலை செய்த மும்பை கம்பெனிக்கே சென்று முறையிட்டு அழுதிருக்கின்றாள், கம்பெனி அவனை வெளியே தள்ளியதுடன் ஒதுங்கிற்று
அப்பெண் எங்கெல்லாமோ முட்டி கதறி இருக்கின்றாள், இவனின் பெற்றோரிடமும் வந்து காலில் விழுந்து கெஞ்சியிருக்கின்றாள், அக்குடும்பம் மனம் இறங்கவில்லை
நம்ப வைத்து அவளிடம் பழகிவிட்டு இப்படி அவன் செய்த பாவத்தை விட, கடல் கடந்து வந்து கடலளவு அவள் கண்ணீர்விட்டும் இறங்காத அக்குடும்பம் பெரும்பாவம் செய்திருக்கின்றது
அப்பெண் கூடியமட்டும் பார்த்துவிட்டு சட்டமும் அவன் குடும்பமும் கைவிட்ட நிலையில் தமிழக கட்டபஞ்சாயத்து கும்பலிடம் பணம் கொடுத்து அவனை தூக்கிவந்து தாலிகட்ட நினைத்திருக்கின்றாள்
ஆனால் அவள் தேர்ந்தெடுத்தது காமெடி கோஷ்டியாக இருந்திருக்கின்றது, அவனுகளுக்கு ஆள்கடத்தல் என்றால் என்னவென்றே தெரியவில்லை
அக்கோஷ்டியும் வெளிநாட்டு பெண் என்பதால் ஏமாற்றி பணத்தை கறந்துவிட்டு மதுரை கோவிலில் தயாராக இருக்கும் படியும் , அவனை பிடித்துவந்து கத்தி முனையில் தாலிகட்ட வைப்பதாகவும் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றது
முன்பின் கடத்தி அனுபவமில்லாததால் அவனை பின் தொடர்கின்றோம் வீட்டு முன்னால் காத்துகிடக்கின்றோம் என ஏதோ போர்வெல் அமைக்க வந்த கோஷ்டி போல் முகாம் அமைக்க விஷயம் கசிந்து போலிசில் விவகாரம் சென்றாயிற்று
ஏற்கனவே அப்பெண்ணை அதட்டி அனுப்பிய காவல்துறை இப்பொழுது கடத்தல் வழக்கையும் பதிவு செய்கின்றது
பாவம் அந்த பெண், அவள் செய்த பாவம் என்ன? அவனை நம்பியது நம்பி தன் மொத்த சம்பாத்தியத்தையும் அவனுக்காக கொண்டு ஓடிவந்தது
அவள் அவனைவிட 10 வயது மூத்தவள் என்கின்றார்கள், மலேசிய சமூக வாழ்க்கை அப்படித்தான். இங்கு பெற்றோர் பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்து வரதட்சனை கொட்டி திருமணம் நடத்துவதில்லை
மணமகன் வரதட்சனை எதிர்பார்ப்பதுமில்லை, அவரவர் உழைத்து அவரவர்க்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்வார்கள், ஆனால் படித்து உழைத்து கார் வாங்கி வீடு வாங்கிபின்புதான் திருமணம் செய்வார்கள், இதனால் 30 வயது தாண்டுவது சாதாரணம்
மலேசிய வாழ்க்கை வேறு , இந்திய வாழ்க்கை வேறு. இது தெரியாமல் ஏராளமானோர் அவர்களை அறியாமல் சிக்கிகொள்வது சோகம்..
நாம் பலரை இதுபோல பார்க்கின்றோம், வெளிநாட்டு பெண் என்றும் மேக் அப்பினை கண்டும் ஏமாந்து காதலில் விழுந்துவிடுகின்றார்கள், இன்னொரு பக்கம் வெளிநாட்டு குடியுரிமைக்கு சிக்கும் கோஷ்டிகளும் உண்டு
இப்பெண் பாவம் வாழதுடித்து ஓடிவந்திருக்கின்றது, நல்வாழ்வு தொடங்கிவிடாதா என ஏங்கி வந்திருக்கின்றது, ஆனால் நடந்தது தலைகீழ்
நிச்சயம் அப்பெண்ணின் அன்புக்கு அவன் தகுதியயற்றவன், இவ்வளவு போராடும் பெண்ணை அவன் விட்டுவிட்டான் என்றால் பெரும் தவறு செய்கின்றான் என பொருள், பின்னொரு நாளில் அவன் உணரலாம்
அப்பெண் இனியும் போராட ஒன்றுமில்லை, காரணம் திருமணம் என்பது அன்பில் தொடங்க வேண்டிய பந்தம் அதை அரிவாள் முனையில் தொடங்கினால் நிலைக்காது
அம்மணி அவர்கள் நாடு திரும்புதலே அவருக்கு நலம்
முகநூல் என்பது மாயவலை, மகா கவனமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியான சிக்கலை சந்திக்க நேரலாம்
ஆக அவனவன் முகநூலில் எவ்வளவோ சாகசங்களை செய்கின்றான், இந்த Kasi Lingam Senthil Kumar Chennaiஎன்பவர்கள் இங்கும் ஒரு மண்ணாங்கட்டியும் கிழிக்கவில்லை, இவர்களுக்கு ஏன் முகநூல் என்றுதான் தெரியவில்லை
இரண்டு பேரும் முகநூலைவிட்டு ஓடுவதுதான் முகநூலுக்கே கவுரவம்.
விஷயத்தை இருவரும் கேள்விபட்டு, பட்டினத்தாரும் பத்ருஹரியாரும் காளகஸ்தியில் முன்பொருள்நாள் புலம்பியது போல புலம்பிகொண்டிருக்கலாம்