மானிட தேவதை

பணிகளில் மிக பொறுமை வாய்ந்த மதிப்பு மிக்க பணி தாதியர் பணி, மிக மிக பொறுப்பு வாய்ந்த பணியும் கூட.

அதனால்தான் அது தாய்க்கு அடுத்த வார்த்தையான தாதியர் என தமிழில் போற்றபடுகின்றது,

மருத்துவமனையில் பாருங்கள், மருத்துவர் ஒரு நோயாளியினை கவனிப்பது சொற்பநேரம்தான்,

ஆனால் முழுநேரமும் உடனிருந்து மருந்துகொடுத்து , உணவு கொடுத்து அன்பாக கவனிப்பது தாதியர்கள் தான். அவர்களின் பணி இல்லை என்றால் ஒரு மருத்துவமனையும் இயங்காது, ஒரு உயிரும் பிழைக்கமுடியாது.

மிக மிக பொறுமையும் , சகிப்புதன்மையும் வாய்ந்த பணி என்பதால் அப்பணி பெண்களுக்கே கொடுக்கபடுகின்றது

தாய்மை போன்றது தாதிமை

தாதி எனும் சொல்லுக்கு இன்னொரு தாய் என பொருள். செவிலியர் எனப்படு வார்த்தையினை விட தாதியர் எனப்படும் வார்த்தைதான் அவர்களுக்கு பொருந்தும்

அப்படித்தான் ஒரு தாய் தன் குழந்தையினை உண்ணாமல் உறங்காமல் பார்த்துகொள்வது போல் நோயாளிகளை கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்கின்றார்கள்

தினமும் ஒவ்வொருவிதமான நோயாளிகளை தாய் போல் கவனித்துகொள்வது என்பது மிகபெரும் சேவை, சேவைகளில் எல்லாம் உயர்ந்த சேவை

மருத்துவர் என்பவர் ஆணிவேர் என்றால் தாதியர் என்பவர்கள்தான் சல்லி வேர். மருத்துவமனை என்பது உயரபறக்கும் பட்டம் என்றால் தாதியரே நூல்

மருத்துவமனையின் உண்மையான அஸ்திவாரமே தாதியர்கள்தான்

அந்த மாபெரும் மதிப்பும், பொறுப்பும் மிக்க தாதியர்களை இந்த தமிழ்சினிமா ஒரு மாதிரி பிம்பமாக ஆக்கி வைத்திருக்கின்றது, இது கண்டிக்கதக்கது

உண்மையில் கை எடுத்து வணங்க வேண்டிய பணி அவர்களுடையது

உலகெல்லாம் பணியாற்றும் அனைத்து தாதியர் சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

தாதியர் நாள் ஏன் கொண்டாடபடுகின்றது என்றால், அன்று ஐரோப்பாவில் ஒரு பெண்மணி இருந்தாள் அவர் பெயர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

கிறிஸ்துவிற்காக தன்னை அர்பணித்தவள், அதனால் நோயாளிகள் பால் அவள் கவனம் திரும்பியது , அதுவரை நர்ஸ்கள் என்பது தனி துறை கிடையாது

நர்ஸ் என்பது மதிப்பில்லா பணி, சமையல் முதல் கழிவறை அவர்கள்தான் பார்த்துகொள்ள வேண்டும், மற்றபடி மருத்துவருக்கு உதவுவதெல்லாம் கணக்கில் வராது

மருத்துவமனை வேலைக்காரி பெயர் நர்ஸ் அவ்வளவுதான்

புளோரன்ஸ் நர்ஸ் துறையினை உருவாக்கினார், சுத்தமே முதல் சிகிச்சை என்ற கொள்கை அவரால் உருவாக்கபட்டது. 10 பெண்களை சேர்த்து கொண்டு நர்ஸ் பணி என்றால் என்ன? என முதலில் பாடம் நடத்தியது அவர்தான்

புன்னகை பூத்த முகமும், சகிப்புதன்மை மிக்க சேவை மனப்பான்மையும் தேவை என அவரே முதலில் போதித்தார்

அப்பொழுது ரஷ்யாவிற்கும் பிரான்ஸ், பிரிட்டன், ஓட்டோமான் கூட்டணிக்கும் பெரும் போர் மூண்டது

இதில் பிரிட்டன் படைகள் துருக்கி எல்லையோரம் நின்றன, அங்கு போரில் காயபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நைட்டிங்கேல் தன் குழுவினரோடு அனுப்பபட்டார்

முதன் முதலாக நர்ஸ்கள் எவ்வளவு அவசியம் என்பதை அந்த முகாம்தான் உணர்ந்தது, அப்படி மிக கண்ணும் கருத்துமாக காயம்பட்ட‌ வீரர்களை அவர் கவனித்தார், இரெவல்லாம் கையில் விளக்கினை எடுத்து ஒவ்வொரு நோயாளியாக அவர் கவனித்தபொழுது ஆச்சரியமாக பார்க்கபட்டார்

கைவிளக்கு ஏந்திய காரிகை என அவர் பெயர் எடுத்தது அங்குதான்

நவீன நர்ஸ் முறை அந்த முகாமில்தான் உருவானது, பின் ஐரோப்பாவின் எல்லா மருத்துவமனைகளும் அதை அமைத்தன‌

நர்சுகளுக்கு ஓரளவு மருத்துவம் தெரியவேண்டும் என சில பயிற்சிகள் வழங்கபட்டன, பின் தனி பாடபிரிவு தொடங்கபட்டது

நர்ஸ் உலகை இப்படித்தான் அந்த நைட்டிங்கேல் தொடங்கி வைத்தார்

அவர் நர்சிங் படித்தவர் அல்ல, மருந்துகள் தெரியாது ஆனால் அன்பாக நோயாளிகளை கவனிக்க வேண்டும் என்ற கருணை எண்ணம் மட்டும் இருந்தது

அவர்களுக்கு வேளா வேளைக்கு மருந்து கொடுத்து, உணவு கொடுத்து தேவைகளை கவனித்து சுத்தமான சூழலை உருவாக்கி அவர்களை கவனித்துகொள்ள வேண்டும் என்ற தெய்வீக மனம் இருந்தது

அந்த பெரிய மனதும் உயர்ந்த சிந்தனையும்தான் தாதியர் எனும் தாய்மை உலகத்தை தொடங்க செய்தது.

இன்றிருக்கும் கோடான கோடி நர்ஸ்களுக்கு அவரே மூலம். நோயாளி மருந்தினால் மட்டுமல்ல அன்பான கருணையான கவனிப்பாலும் சுகம்பெறுவான் என்பதே அவரின் போதனை, தத்துவம்,கொள்கை

அந்த மாபெரும் பெண்மணியின் பிறந்த நாளே நர்ஸ் தினம் என கொண்டாடபடுகின்றது

வளரட்டும் அவர்கள் பணி, வாழ்த்துக்கள்

மருத்துவ வானில் அவர்களே கருணைமழை பொழிந்துகொண்டிருக்கின்றனர், அந்த கருணையாலே பல்லாயிரகணக்கான நோயாளிகள் நலம் பெற்று கொண்டிருக்கின்றனர்

அந்த மானிட தேவதைகளுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்

இன்று நோயாளிகளுக்காக கைவிளக்கு ஏந்திய அந்த காரிகையின் நினைவுநாள்

மானிட குலம் உள்ளமட்டும் மானிடருக்கு நோயும் பிணியும் கிசிச்சையும் அவசியம் அதில் தாதியர் சேவை தொடர்ந்து கொண்டே இருக்கும்

அதில் நைட்டிங்கேல் வாழ்ந்துகொண்டே இருப்பார், தன்னலமற்றவருக்கு மரணமே இல்லை என்பது அதுதான்.