முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம்.
சென்னை வானகரத்தில் அமைந்திருக்கின்றது மச்சக்கார முருகன் ஆலயம், போரூர் தொழில்பேட்டைக்கு அருகில் வானகர மேட்டுப்பக்கம் இது அமைந்திருக்கின்றது.
இந்த ஆலயத்தின் துவக்கம் முருகப்பெருமானின் அவதார காலத்தில், அதாவது வள்ளி திருமணத்தில் இருந்து துவங்குகின்றது. வள்ளியினைத் திருமணம் செய்ய வந்த முருகன் அவள்மேல் காதல் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வந்து கொண்டிருந்தான்.
அவன் முதியவர் வேடத்தில் வருவான், வேடன் வேடத்தில் வருவான், இன்னும் பல வேடங்களில் வந்தாலும் வள்ளி அவனைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டாள். எப்படி அவளால் இது முடிந்தது என முருகப்பெருமான் கேட்க அவன் வலது கன்னத்தில் இருந்த மச்சத்தை காட்டி இதைவைத்து என வள்ளி சொன்னாள்.
அந்த மச்சத்தோடு வந்த முருகன் நினைவாக எழும்பிய ஆலயம் இது, அதனால் மச்சக்கார முருகன் ஆலயம் என்றுமாயிற்று.
சாமுத்திரிகா லட்சணம் சொல்வது என்னவென்றால் வலது பக்க கன்னத்தில் நாசிக்கு நேர் எதிராக மச்சம் கொண்ட ஆண் வசீகரமிக்கவன், ஈர்ப்பு மிக்கவன், அதே நேரம் பொறுப்பும் கடமை உணர்வும் அன்பும் கொண்டவன் என்கின்றது.
முருகப்பெருமான் இப்படிக் கன்னத்தில் மச்சம் கொண்டு வள்ளியினைச் சந்திக்கச் சென்றார் என்பது அந்தக் கோலத்தில் அவள் அவனிடம் மயங்கினாள் ஈர்க்கப்பட்டாள் என்பதைச் சொல்கின்றது.
இந்த முருகன் கோலமும் அந்த ஈர்ப்பைத் தரும், முகத்து மச்சம் அதுவும் இடப்பக்க மச்சம் ஒரு வசீகரத்தைக் கொடுத்து கண்கள் வேறுபக்கம் திரும்பாதபடி கட்டிவைக்கும், இந்த முருகன் சிலை தத்துவம் அப்படியானது.
ஆன்மீக ரீதியாக இந்த ஆலயம் சொல்லும் தத்துவம் இங்கு வழிபடும் பக்தனை முருகன் தன்னில் ஏற்றுக்கொண்டு, வசீகர புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்கின்றார் என்பது.
லௌகீகமாக இந்த முருகன் யோகத்தைத் தருவார், இவரைத் தரிசித்தபின் தொட்டதெல்லாம் துலங்கும், ஒருவகையில் வீட்டில் எல்லோரும் கொஞ்சும் குழந்தைக்குக் கன்னத்தில் பொட்டுவைத்து மகிழ்ந்து அதனைச் செல்வமாகக் கொண்டாடும் அந்த மரபின் தொடர்ச்சி.
மிக மிக தொன்மையான காலத்தில் இருந்தே இங்கு வழிபாடு உண்டு, எனினும் இதனை எடுத்துக் கட்டியவர் டாக்டர் வரதராஜன் எனும் மருத்துவர், இவர் வடபழனி கோவிலின் பெரிய பக்தர், அந்த மூன்று சித்தர்களுடன் தன்னை இணைத்து கொண்டவர், அவர்கள் உத்தரவுப்படியெ இக்கோவிலைக் கட்டித் திருபணிகளை முடித்தார்.
இக்கோவில் முருகன் மச்சகார முருகன் என அழைக்கப்படுவாரே தவிர அதற்கான ஆதாரமில்லை, அந்நேரம் அபிஷேகத்தின் போது வலது கன்னத்தில் சிகப்பு நிற மச்சத்தை முருகனே காட்டக் கண்டவன் அனைவரும் அப்படியே பணிந்து மச்சக்கார முருகன் என அவரை ஏற்றுக் கொண்டார்கள், அப்பெயரும் சாட்சியோடு நிலைத்துவிட்டது.
முருகன் வள்ளியினை மணம் செய்ய உதவியவர் விநாயகப்பெருமான் என்பதால் இங்கு அவர் மிக விசேஷம். அதுவும் அவர் இங்கு அன்னை சக்தியின் தன் தாயின் அம்சமாக ஸ்ரீசக்கர விநாயகராக அருள் பாலிகின்றார். காரணம், இவருக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது அதனல் இது மிகச் சக்திமிக்கது.
இவரை வணங்கி மச்சக்கார முருகன் சந்நதியை அடையலாம். இடுப்பில் கை வைத்தபடி நின்ற திருக்கோலத்தில் காட்சிதரும் முருகனின் வலது கன்னத்தில் மச்சம் இருக்கிறது. வரத ஹஸ்தம் காட்டி நிற்கின்றார் வேலன்.
திருமாலுக்குக் காலடி தரிசனம், அம்பாளுக்கு வலது கர அபய தரிசனம், சிவனிடம் நெற்றிக்கண் தரிசனம், விநாயகரிடம் உள்ளங்கால் தரிசனம் பிரசித்தி என்பது போல் இந்த மச்சக்கோலம் காண்போர் அனைவருக்கும் பிரசித்தியானது.
அடுத்துத் தட்சிணாமூர்த்தி, வானத்தீஸ்வரர், நாகர், கோபால கிருஷ்ணர் , சனீஸ்வரர், சீத மற்றும் லட்சுமண சமேதராய் ராமன். அவருக்கு நேரே அனுமன் சந்நதி எனப் பல உண்டு.
இங்குள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பிரசித்தி, அவர் காலத்தின் அதிபதி என்பதால் காலம் உருவாக்கும் கடன் சுமையினை அவரே தீர்த்தும் வைப்பார், விஷ்ணு துர்க்கை சந்நிதி இன்னும் சக்தி மிக்கது.
ஆலயத்தில் பின்பக்கத்தில் கோசாலை உண்டு, நந்தவனம் உண்டு. மிக அழகாக இயற்கை குழலில் அமைக்கப்பட்ட ஆலயம் இது.
இந்த ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றி முருகனைப் பணிந்தால் திருமண யோகம் கைகூடும். சில மாதங்களுக்குள் அந்த வரம் கிடைக்கும், நோய்கள் தீரும். வாழ்வின் எல்லாக் குறைகளும் நீங்கி யோகமான வாழ்வு கிடைக்கும். முருகன் உங்கள் வீட்டில் குழந்தையாய்க் கொண்டாடப்படுவான். இது சத்தியம்.
அடுத்த ஆலயம் நடுபழனி ஆலயம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் அருகே பெருங்கரணை கிராமத்தில் அழகிய ஆலமரங்கள் சூழ ஒரு சிறிய குன்று உண்டு. அதன் பெயர் கனகமலை, இந்தக் கனகமலையில் அமைந்திருக்கும் அற்புத ஆலயம் இது.
மலேஷிய பத்துமலை முருகனைப போல் மிகப்பெரிய சிலை கொண்டிருக்கும். மலை அடிவாரத்தில் இருக்கும் முருகப்பெருமானின் பாதங்களை வணங்கி படியேறினால் முதலில் இடும்பன் சுவாமி சந்நதியையும், அதன் எதிரில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சந்நதியையும் காணலாம். அவர்களை வணங்கியபடி மேலேறினால் அங்குக கணபதி, தத்தாத்ரேயர் சந்நதிகளை வணங்கி கடந்து சென்றால் அங்கு முருகப்பெருமான் அழகுற வீற்றிருப்பார்.
மரகதக் கல்லாலான ஸ்ரீ தண்டாயுதபாணி, கண் கவரும் வெள்ளி மயில் தோகை பின்புலத்தில் விரித்திருக்க, கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருள் வழங்குகின்றார்.
பழனியில் நிற்கும் அதே தண்டாயுதபாணி கோலத்தில் அவர் முழு ஆசி வழங்குகின்றார்.
ஆலய மஹா மண்டபத்தின் இடது புறத்தில், வள்ளி தெய்வானையுடன் ஷண்முகப் பெருமான் காட்சி தருகிறார். வலது புறம் விநாயகர், பிரம்மா உண்டு.
இது தவிர ருத்ரன் வடிவமான தத்தாத்ரேயர், லக்ஷ்மி, நாக தத்தாத்ரேயர், சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகாலக்ஷ்மி ஆகியோரையும் தரிசிக்கலாம். வேறு எங்கும் இந்தக் காட்சி இல்லை.
இங்கு நாகசிலை வேப்பமரத்தின் அடியில் உண்டு, சரவணப் பொய்கை உண்டு, அதன் அருகே ருத்ராட்ச மண்டபம் உண்டு. அங்கு ஆறுமுகசாமி மயில்மேல் காட்சியளிப்பார். அங்கு அறுபடை வீடுகளின் புடைப்பு சிற்பமும் உண்டு.
இக்கோவில் மகா தொன்மையானது, ஆனாலும் இப்பக்கம் அந்நிய ஆட்சியில் பல ஆலயங்கள் அழிந்தது போல் இதுவும் சிதலமடைந்து அடையாளமற்று போனது. அதனை மீள உருவாக்கியர் முத்துசாமி சித்தர்.
அவர்தான் எங்கிருந்தோ வந்து இந்த இடத்தில் முருகன் உண்டு எனத தவமிருந்தார், முருகனையும் மக்களுக்குக் காட்டி ஆலயம் எழும்ப முழுக் காரணமாயிருந்தா, அவராலே இந்த ஆலயம் எழும்பிற்று, முருகனுக்கு அருமையான ஆலயம் அமைத்துத் தந்த அவர் இங்குதான் சமாதி அடைந்திருக்கின்றார்.
அப்படியே இங்கு அந்த சித்தரின் சீடரான மொறப்பாக்கம் சுவாமிகளின் சமாதியும் உண்டு.
இங்கு முத்துசாமி சித்தரின் வரலாற்றைச் சொல்லாமல் இருக்கமுடியாது. அவரின்றி இந்த ஆலயமில்லை, அவர் பொள்ளாச்சி பக்கம் இருந்தவர், அவர் கனவில் குழந்தையாய் வந்த முருகப்பெருமான் இந்த மலையினை அடையாளம் காட்டி திருப்பணி செய்ய உத்தரவிட்டார். அப்படி இங்குத் தேடி வந்த முத்துசாமி சித்தர் மலையில் ஒரு வேலை ஊன்றித் தவமிருந்தார், அடுத்த 50 ஆண்டுகள் அவர் எங்கும் நகராமல் அமர்ந்து செய்த திருப்பணியில்தான் இந்த ஆலயம் எழுந்து நிற்கின்றது.
முத்துசாமி சித்தர் காலமாகும் முன்னால் ஒருவருக்கு அடுத்து இந்த ஆலயத்துக்குச் செய்ய அழைப்பு வந்தது, அவர் கனவில் வந்த முருகப்பெருமான் இந்த ஆலயம் முத்துசாமி சித்தர் என எல்லாவற்றையும் அடையாளம் சொல்லி அழைத்தார், அபபடி வந்த சச்சிதானந்த சுவாமிகள் நெடுங்காலம் இங்கும் திருப்பணி செய்தார்.
இப்படி மைசூரில் இருந்து சச்சிதானந்தரை இப்பக்கம் இழுத்துக் கொண்டவர் இந்த முருகன், அவரின் அபாரமான சக்தி அப்படியானது.
இந்த ஆலயத்துக்கு “நடுபழனி” எனப பெயரிட்டவர் காஞ்சி மஹான், அந்த மகா பெரியவர்.
அவர் இந்த ஆலயத்துக்கு வந்து நெடுநேரம் தியானத்தில் அமர்ந்திருந்தார், பின் கண்திறந்து “இது வடபழனிக்கும் தென் பழனிக்கும் இடையில் நடுபழனி, இங்கு முருகப்பெருமானின் அருள் அபரிமிதமாக உண்டு.
இங்கு மரகத தண்டபாணி சிலை வைத்து வழிபடுங்கள்” என்றார்.
அவரின் அருள்மொழிக்கு ஏற்ப இத்தலம் “நடுபழனி” என்றானது மரகத வடிவில் தண்டபாணி முழுகனும் எழுந்தருளினார்.
இங்குத் தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும், திருமணச் சிக்கல் குடும்ப சிக்கல் என எல்லாமும் தீரும். வாழ்வின் தடைகளெல்லாம் விலகும், பழனியில் வழிபட்ட பலனை இந்த ஆலயமும் தரும்.
இங்கு முருகப்பெருமானுக்குரிய எல்லா விழாவும் விமரிசையாக நடக்கும் , பாதயாத்திரை வரும் பக்தர்கள் ருத்ராட்ச காவடி எடுத்து முருகனை வழிபடுவது தனிச்சிறப்பு.
இங்குப் பௌர்ணமி கிரிவலம் முக்கியமானது, முக்கியநாட்களில் ஏகதசருத்ரம் மற்றும் திருப்புகழ் பாராயணத்துடன் வேல்காவடி வழிபாடு நடப்பதும் முருகன் அருளால் சிறப்பு.
சென்னை பக்கம் செல்லும்போது இந்த ஆலயங்களைத் தவறவிடாதீர்கள், மிக முக்கியமான ஆலயங்கள் இவை. அதுவும் இந்த நடுபழனி ஆலயமும், அங்கே அருள்பாலிக்கும் முத்துசாமி சித்தரும் மிகுந்த சக்தியானவர்கள் அங்கு சென்று குறைகளைச் சொல்லுங்கள். எல்லா ஞானமும் அருளும் செல்வமும் ஆரோக்கியமும் நிம்மதியும் உங்களைச் சூழும். இது சத்தியம்.