முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலாநல்லூர் கந்தசாமி கோவில் மற்றும் மயிலம் முருகப்பெருமான் ஆலயங்கள்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலாநல்லூர் கந்தசாமி கோவில் மற்றும் மயிலம் முருகப்பெருமான் ஆலயங்கள்.

முருகப்பெருமானின் வடிவங்கள் மொத்தம் பதினாறு, எல்லா முருகன் ஆலயங்களும் இந்த 16 வகையான அருள் வழங்கும் கோலத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

ஞானசக்திதரர் கோலம் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.

ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி பெரும் ஆனந்தம் அருள்பவர்.

கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். இந்திரனை வென்று பிணிமுகம் எனும் தேவலோக யானைமேல் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோலம் அது.

கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.

குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும்.

சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

தாரகாரி : ‘இவரை வழிபட்டால் உலக மாயைகளில் இருந்து விடுபடும் வழி கிடைக்கும்.

சேனானி: இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிக்கிடைக்கும். பொறாமை நீங்கும்.

சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு எல்லா வகை செல்வம் மற்றும் நல்ல உணர்வுகளைத் தருபவர்.

பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சிப் பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சிக் கிட்டும். பெரும் ஞானம் உருவாகும்.

வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.

பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும்.

சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.

சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம் தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

இந்தப் பதினாறு வகை அருட்கோலங்களில் அபூர்வமானது பிரம்மசாஸ்தா முருகன் வடிவம், மிகச் சில ஆலயங்களே இந்த அருள்கோலத்தில் அமைந்துள்ளன‌.

பிரம்மசாஸ்தாவாக முருகன் கையில் கமண்டலமும் ஜெபமலையும் ஏந்தி நிற்கும் அந்தக் கோலம் சக்திவாய்ந்தது, அதன் மூலம் பிரம்மனை முருகப்பெருமான் தண்டித்த நொடியில் இருந்து துவங்குகின்றது, ஓம் எனும் பிரணவமந்திரத்துக்கான பொருளை பிரம்மதேவன் மறந்ததால் முருகப்பெருமான் அவரைச் சிறையில் இட்டான், ஓம் எனும் நாதமே படைப்பின் தத்துவம் அந்தத் தத்துவமே அறியாத பிரம்மன் எப்படிச் சரியான படைப்பினைச் செய்யமுடியும் என ஆத்திரமடைந்த முருகப்பெருமான் அவனைத் தண்டித்தான்.

பிரம்மன் சிறையில் இருந்த நேரம் படைப்புத் தொழில் நடக்காமல் தடைபட்டது, படைப்புத் தொழில் இல்லை என்றால் காத்தல் அழித்தல் எனப் பல வகையான பணிகளைச் செய்யும் தேவர்களுக்கு பணி இருக்காது இது உலக இயக்கத்தைப் பாதிக்கும்.

அதனால் முருகப்பெருமானே பிரம்மனின் பணியினை நின்று செய்தான், சாஸ்தா என்றால் ஆட்சி செய்பவர், நிலை நிறுத்துபவர் ஆதார சக்தி எனப் பொருள், பிரம்மனின் இடத்தை முருகப்பெருமான் நின்று தாங்கியதால் அவன் பிரம்மசாஸ்தா எனும் பெயரும் பெற்றான்.

இந்தக்கோலம் சாதாரணம் அன்று. பிரம்மனின் எழுத்தை மாற்றி எழுதுவான் முருகப்பெருமான் அதாவது ஒருவன் தலைவிதியினையே மாற்றி எழுதும் வடிவம் முருகப்பெருமானுக்கு உண்டு. இந்தப் பிரம்மசாஸ்தா வடிவ முருகன் ஒருவனின் வாழ்வை தலைகீழாக மாற்றி புதுவாழ்வு தருவான் என்பதைச் சொல்லும் தெய்வீக வடிவம்.

இந்த வடிவில் முருகபெருமான் அருள்வழங்கும் ஆலயத்தில் ஒன்று வயலாநல்லூர் கந்தசாமி ஆலயம், சென்னை திருவள்ளூர் அருகே பட்டாபிராம் பகுதியில் சோரஞ்சேரி எனும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது, அதன் இன்னொரு பெயர் வயலா நல்லூர்.

இந்த ஆலயம் மாபெரும் வரலாற்றின் சாட்சியினைச் சொல்வது.

அதாவது இன்று சாக்கடை நதி அசுத்த நதி என அது மாறிவிட்டாலும் அன்று அது புண்ணிய நதி, அதன் கரையோரம் சுமார் 144 ஆலயங்கள் இருந்தன, பாலி நதி என அது தேவாரத்தில் சம்பந்த பெருமானால் பாடப்பட்டது.

அந்தக் கூபம் (ஆழமான) எனும் நதியோரம் இருந்த சிறப்பான ஆலயங்களில் இதுவும் ஒன்று, மிகப் பழமையான இந்த ஆலயம் மிகப் பெரிதாக இருந்தது, இந்தச் சிலை அதன் சாட்சியாக 7 அடி உயரத்தில் இருக்கின்றது, மிக உயரமான மூலவர் சிலைகளில் இதுவும் ஒன்று.

காலவோட்டத்தில் கூவநதி கரையின் பிரதான ஆலயமெல்லாம் சரியும் போது இந்த ஆலயமும் பெருவாரி அழிந்து காணாமல் போனது, எஞ்சிய வெகுசிறிய பாகம் இந்த மூலவர் சிலையோடு கிடைத்தது, அது ஆதித்த சோழன் காலத்தில் வெகு பிரசித்தியாக வழிபடப்பட்ட முருகன் இவர் என்பதைக் கல்வெட்டு சாட்சியாக‌ச் சொன்னது.

இன்னும் சக்திமுத்தரேஸ்வரர் கோவில், துர்காதேவி கோவில் எனச் சில இதே வயலாநல்லூரில் எஞ்சியிருக்கின்றன‌.

எங்கெங்கோ அகழாய்வு நடத்துபவர்கள் கூவநதி கரையோரம் சரியாக ஆய்வு செய்தால் 200க்கும் மேற்பட்ட ஆலயங்கள் துலங்கும், இந்த ஆலயம் அதற்குச் சாட்சியாக நிற்கும் ஒரு சிறிய ஆலயம்.

சென்னை பக்கம் செல்லும்போது பட்டாபிராம் அருகிருக்கும் இந்தப் பிரம்மசாஸ்தா திருக்கோல முருகனை தரிசிக்க மறவாதீர்கள். சுமார் 7 அடி உயரத்தில் கமண்டலம் ஜெபமாலையுடன் அருள்பாலிக்கும் சாஸ்தா வேறேங்குமில்லை.

இந்த முருகனைத் தரிசித்தால் தலைவிதி மாறும், ஞானம் பெருகும், கல்வி ஞானம், தொழில் ஞானமெல்லாம் பெருகி வாழ்வின் விதியே மாறும்‌.

அடுத்த ஆலயம் மயிலம் முருகப்பெருமான் ஆலயம், திண்டிவனம் பாண்டிச்சேரி சாலையில் மயிலம் எனும் ஊரில் அமைந்திருக்கின்றது, மயிலற்சலம் எனப் பெயர்க்கொண்ட இந்தத் தலம் பின்னர் மயிலம் என்றாயிற்று.

இதன் வரலாறு முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ததில் இருந்துதுவங்குகின்றது. மயிலாக மாறிய சூரன் முருகப்பெருமானின் அருள் வேண்டி முக்தி வேண்டி இங்குத் தவமிருந்தான், அவன் தவமிருந்த வடிவம் கல்மலையாய் மயில் வடிவ குன்றாய் மாறிற்று, அவனுக்கு முருகப்பெருமான் அருள்பாலித்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டாலும் இந்த மலை அவனின் அடையாளமாய் மயிலாய் எஞ்சிற்று.

அங்குதான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இன்னொரு புராண சம்பவமும் உண்டு, தன் ஒழுங்கீனத்தால் கயிலையில் சிவனிடம் சாபம் பெற்ற “சங்குணா” எனும் பூதக்கணம் இங்கு வந்து வேண்டி முருகப்பெருமானின் அருளால் சாபம் தீர்ந்து மீண்டும் கயிலாயம் சென்றது.

பாலசித்தர் எனும் மஹான் இந்த ஆலயத்திலே வாழ்ந்து பெரும் ஞானநிலை அடைந்து முக்திபெற்றார் அவரின் சமாதி இன்றும் அங்கு உண்டு.

மயிலம் மலை மேல் ஐந்து நிலை இராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மலையடிவாரத்தில் சுந்தர விநாயகர் சந்நிதியும், அக்னி தீர்த்தமும் உள்ளது. மலை மேல் உள்ள கோயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் விநாயகர் சந்நிதியும், அதனை அடுத்து பாலசித்தரின் சந்நிதி அமைந்துள்ளது.

பால சித்தருக்கு அருகில் பிரதான கருவறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் சுப்பிரமணிய சுவாமி, ஒரு கையில் வேல் மற்றொரு கையில் சேவல் கொடியுடன் காட்சி அளிக்கின்றார். இன்னும் இரு கையின் அடையாளம் அவர் பிரம்ம சாஸ்தா என்பதை காட்டுகின்றது.

இங்குச் சூரபத்மன் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி மயில் வாகனம் அமைந்திருப்பது வேறு எங்கும் காணமுடியா விஷயம், நவக்கிரக சந்நிதி அடுத்து உண்டு.

மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் உண்டு. இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.

இந்த ஆலயத்தில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.

இரண்டாவது உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரைப் புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.

மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான். உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.

முருகப்பெருமான் வாழ்வின் எல்லாக் கட்டங்களும் இங்குச் சிற்பமாக செதுக்கப்பட்டிருப்பது மிக முக்கிய விஷயம், கந்தபுராணத்தின் பல காட்சிகள் அங்கு வடிக்கபட்டிருக்கின்றன‌.

நொச்சி மரம் அதிகமுள்ள இடம் என்பதால் அக்காலத்தில் இருந்தே இங்கு நொச்சி இலை மாலைகளே பிரசித்தி, அவை மருத்துவகுணம் அதிகம் கொண்டவை என்பதால் நோய்தீர்க்கும் பிரசாதமாகவும் இங்கு வழங்கப்படுகின்றது.

இந்தத் தலம் சாபம் போக்கும் தலம், அகங்காரத்தால் செய்யும் தவறுகளை ஆணவத்தால் செய்யப்படும் பாவங்களைப் போக்கி புதுவாழ்வினைத் தரும் தலம் இது.

புதுச்சேரி திண்டிவனம் பக்கம் செல்லும்போது இந்த மயிலம் ஆலயத்தைத் தவறவிடாதீர்கள், அந்தப் பிரம்ம சாஸ்தாவுக்கு நெய் தீபம் ஏற்றி மலர்கள் இட்டு வணங்குங்கள், சூரனுக்கும் சங்குணாவுக்கும் தலைவிதி மாறியது போல உங்கள் தலைவிதியும் மாறும், எவ்வளவு பெரிய வல்விதி என்றாலும் முருகப்பெருமான் அதை நொடியில் மாற்றி உங்கள் தலைவிதியினை நல்விதியாய் எழுதித் தந்து உடனிருப்பான். இது சத்தியம்.