மேட்டுபாளையத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கின்றது

மேட்டுபாளையத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கின்றது, நிலசரிவு ஆபத்து வாய்ப்பு இருந்த அந்த இடத்தில் ஒரு பணக்காரன் வளாக சுவர் கட்டியிருக்கின்றான், அது அடுத்திருக்கும் வறிய மக்கள் வீட்டை ஒட்டி இருந்திருக்கின்றது

அதை கட்டும் பொழுதே சர்ச்சை வந்திருக்கின்றது, ஆனால் ஏழைகள் என்ன செய்யமுடியும்? விதி என இருந்துவிட்டார்கள்

அந்த விதி மழைநேரத்தில் சரியாக இடிந்து அவர்கள் வீடுகள் மேல் சரிந்து 4 வீடுகளோடு 17 பேரை பலிவாங்கிற்று

இது அனுமதி வழங்கும் அதிகாரிகள் மற்றும் அந்த சுவரை கட்டிய காண்ட்ராக்டர் மீதான குற்றம் , நிச்சயம் இருவருக்கும் கொலைகுற்றசாட்டில் சிறை கிடைக்க வேண்டும், ஆனால் ஊழலில் திளைத்த சமூகத்தில் இதெல்லாம் வாய்ப்பில்லை

நாம் கவனித்துபார்க்கின்றோம், இப்பொழுதெல்லாம் காண்ட்ராக்டர் எனப்படும் ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் பெருகிவிட்டது, 4 உழைக்கும் மக்களை சுரண்டுபவன் காண்ட்ராக்டர் அவன் யாரை எல்லாமோ ஏமாற்றி கட்டுவது பில்டிங்

பெரும்பாலும் பில்டிங் காண்ட்ராக்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள், பலருக்கு அடிப்படை அறிவே இல்லை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் கலப்பட சிமெண்டும் இன்னும் பல சுரண்டலோடு கட்டினால் எப்படி இருக்கும்?

இப்படித்தான் ஆபத்து நேரத்தில் கைவிரிக்கும்

நமக்கெல்லாம் போலி மருத்துவர் மட்டும்தான் தெரிகின்றது, போலிகள் எல்லா இடத்திலும் உண்டு அது வழக்கறிஞர், பொறியாளர், ஆசிரியர் என எல்லா இடத்திலும் ஊடுருவிகிடகின்றது

கட்டுமான பொருளில் கலப்படம், கட்டுபவனுக்கு கட்ட தெரியாது என்றால் வேறு என்ன நடக்கும்?

போலி பொறியாளரும் சுரண்டல் காண்டிராக்டரும் கட்டும் பாலமும் சுவரும் இப்படி பலிவாங்குகின்றன‌

இவ்வளவு நடந்தும் அந்த சுவருக்கு உரிமையாளன் யார் என்ற செய்தி வருகின்றதா? என்றால் இல்லை, அட இடிந்து கிடக்கும் அந்த கட்டட சுடுகாடு படங்களாக வருகின்றதே அன்றி அந்த சுவரோ அவன் வீடோ படம் கூட வரவில்லை

தமிழக அநீதி இது, பணக்காரனுக்கு எல்லாம் சாத்தியம் பணம் பத்தல்ல பதினொன்று பனிரெண்டு எல்லாம் செய்கின்றது

அவர்கள் தலித் மக்கள் என சொல்வது தவறு, அவர்கள் இந்நாட்டின் ஏழை குடிமக்கள் அவர்கள் மேல் பணக்கார சமூகமும் அரசு அதிகாரிகளும் காண்ட்ராக்டர் எனப்படும் ஏமாற்றி பிழைக்கும் கூட்டமும் கொலை தாக்குதல் நடத்தி 17 பேரை கொன்றிருக்கின்றது

இந்த 17 பேரில் குழந்தைகளும் பெண்களும் ஏராளம் என்பதுதான் நெஞ்சை கனக்க செய்கின்றது

இந்த குடும்பத்துக்கு 10 லட்சம் தூக்கி கொண்டு ஒரு தலைவனும் ஓட மாட்டான், இந்த குடும்பத்தில் உள்ளவனுக்கு அரசுவேலை என ஒரு குரலும் கேட்காது

எம்மை பொறுத்தவரையில் இவர்களுக்கு பெரும் நஷ்ட ஈடாவது வழங்கி பெரும் இழப்பில் இருக்கும் மற்றவர்களையாவது வாழவைக்க வேண்டும்

தமிழகம் முழுக்க சுவர்களையும் கட்டடங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது