ராஜாஜி

பிராமணர்களாக பிறந்துவிட்டால் தமிழகத்தில் அவன் பரிதாபத்துகுரியவன், சிங்கத்தை செந்நாய் கூட்டம் சூழ்வது போல அவனை சூழ்ந்து கடிப்பார்கள், ஆடி தீர்ப்பார்கள்

அவர்கள் எவ்வளவு அறிவாற்றல் உடையவர்களாக இருந்தாலும் ஆரியன் என விரட்டிவிடுவார்கள். அவர்களை பயன்படுத்தி பார்க்கலாம், அவனால் நாட்டுக்கு நன்மை விளையலாம், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை.

அவன் பிராமணன் என்றால் பேசகூடாது, ஆளகூடாது அவ்வளவுதான்.

காரணம் தமிழ்நாட்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது முதலில் சீர்திருத்தம், தாழ்த்பட்டோர் உரிமை இயக்கம் என ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது, அந்நாளில் பிராமணரை பெரிதும் யாரும் விரட்டவுமில்லை, நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம் அவ்வளவுதான். நீதிகட்சி, காலம் வரை அது அப்படித்தான் இருந்தது.

நீதிகட்சி உரிமை கேட்டதே அன்றி கடவுள் மறுப்பு பிராமண துவேஷம் பேசவில்லை

மரத்தின் கிளைகளை வெட்ட சொன்னால் மொத்த மரத்தையுமே வெட்ட போகின்றேன் என ஈரோட்டு ராம்சாமி தொடங்கி வைத்த பிராமண வெறுப்பு அரசியலாகி, பிராமணர்கள் என்றாலே விரட்டபடவேண்டியவர்கள் என ஒரு நிலைக்கு தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள்,

இதிலும் சிலர் ஒருபடி மேலே போய் பிராமணர் ஈழத்திற்கு எதிரி, தமிழக விரோதி என்றெல்லாம் முழங்குவார்கள், உண்மை என்ன?

படிப்பில் முண்ணணியில் நின்ற ஈழதமிழர்களை குறிவைத்து சிங்கள அரசு இயற்றியதுதான் தரபடுத்துதல் சட்டம் 1972. அதாவது சிங்களன் 40 மதிப்பெண் எடுக்கும் இடத்தில் ஈழதமிழன் 85 மதிப்பெண் எடுக்கவேண்டும், இதில் கல்வியில் ஈழதமிழர் பாதிக்கபட்டு அது மாணவர்கள் போராட்டமாகி பின் ஆயுதபோராட்டமாகி, பின் அடாவடி கும்பல்களின் கையில் சிக்கி, பின் மேதகுக்களின் கையில் சிக்கு இன்று ஒரு முடிவும் தெரியாமல் இன்று ஈழம் சுடுகாடானது.

அப்படித்தான் இட ஒதுக்கீடு, உயர்சாதி என தமிழகமும் பிராமணர்களை கல்வி மற்றும் பல விஷயங்களில் அடக்கி வைத்திருப்பது ஒன்றும் ரகசியமல்ல, ஈழ மாணவர்கள் துப்பாக்கி தூக்கினார்கள், இவர்கள் தூக்கவில்லை அவ்வளவுதான் விஷயம். அதாவது சிங்களன் செயதால் தவறு, இன வெறுப்பு.

தமிழகம் செய்தால் அது சீர்திருத்தம்.

அப்படிபட்ட தமிழகத்தில் சில பிராமணர்களின் அடையாளம் மறைக்கபட்டது, அவர்களின் புகழும் அவர்களின் தேசபற்றும் அறிவு கூர்மையும் மக்களிடம் இருந்து அப்பட்டமாக வெளியேற்றபட்டது அவர்களில் ஒருவர்தான் ராஜாஜி.

ஆளுநர், மத்திய அமைச்சர், என பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.

ஒன்றுபட்ட மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான், தமிழன் என்ன ஒரே இந்தியன் அவர்தான்.

சக்கரவர்த்தி ராஜகோலாச்சாரியார் சுருக்கமாக ராஜாஜி. பெரும் உச்சம் அந்த ராஜாஜி. சக்கரவர்த்தி என்பதால் அவர் தந்தை பெரும் அரசர் என நினைக்கவேண்டாம், அவர் தந்தை பெயர் சக்கரவர்த்தி.

சேலத்துக்காரர் பெரும் வழ்க்கறிஞர், அக்காலத்திலே இந்தியா முழுக்க பிரபலமான பெரும் பிரபலம் அவர்.

சுதந்திர போராட்ட வீரர், காந்தியுடன் போராடியவர் சிறைக்கு செல்லும் அளவு தண்டிக்கபட்டவர். பின்னாளில் காந்தி மகனுக்கு தன் மகளை மணமுடித்து சம்பந்தி ஆனவர்.

அதாவது காந்தியின் மருமகள் ஒரு தமிழச்சி.

பின்னாளில் நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் கட்சியினை விட்டு பிரிந்தவர், சுதந்திரா கட்சி என ஒன்றை நடத்தினார்.

பிரிக்கபடாத சென்னை மாகாணத்தின் முதல்வராக பணியாற்றியவர், முடிந்த வரை நல்லாட்சிதான் நடத்தினார். அவரின் பெரும் சாதனை மதுவிலக்கினை கொண்டுவந்தது, அரசு வருமானம் குறையத்தான் செய்தது, சாதுர்யமாக வரிகளை அதாவது விற்பனை வரிகளை சீரமைத்து அரசினை திடப்படுத்தினார்,

பின்னாளைய காமராஜரின் முறையான நிர்வாகத்திற்கு இதுதான் அடிப்படை.

கட்சிக்குள் எங்கு அவருக்கும் காங்கிரசாருக்கும் மோதிற்று என்றால், எது முரண்பாடு என்றால் சுதந்திரம் வாங்கியவுடன் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு எல்லாம் பல சலுகைகள் வழங்கபட்டன.

நாடு பணமின்றி தவிக்கின்றது, ஏழ்மையில் இருக்கின்றது அதனால் காங்கிரசார் இந்த சலகைகளை எல்லாம் அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நாட்டுபற்றில்தானே போராடினோம், அதற்கு ஏன் சன்மானம்? என சொன்னார் ராஜாஜி

சுதந்திரபோராட்ட தியாகி சலுகைகளில் காங்கிரசாரே அனுபவத்து வந்தனர், விடுவார்களா? நீ வழக்கறிஞன் சம்பாதித்துவிட்டீர், நாங்கள் எங்கே போவது? என்ற ரீதியில் எதிர்க்க தொடங்கினார்கள்

காங்கிரசில் ராஜாஜி அதிருப்தி கோஷ்டி உருவாகியது இப்படித்தான். ராஜாஜி சொன்னதில் தவறொன்றும் இருக்க முடியாது.

கொஞ்சம் உலகநடைமுறைகளை அறிந்தவர், பெரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். 2020ல் வரும் மாற்றத்தை அவர் 1950களில் கொண்டுவர நினைத்ததுதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

அதாவது பள்ளிகூடங்கள் இன்றளவும் வெளிநாடுகளில் காலைமுதல் மதியம் வரைதான் செயல்படும், அதன்பின் அம்மாணவர்கள் பகுதிநேரபணிகளில் ஈடுபடுவார்கள், முன்னேறிய நாடுகளில் எல்லாம் அதுதான் நிலை, அவை அழிந்துவிடவில்லை, மாறாக உச்சம் பெற்றன.

அதனை தமிழகத்திலும் கொண்டுவர நினைத்தார், அறிவித்தார். யாரடா சிக்குவார்? என அலைந்த கழகங்களுக்கு அல்வா போல மாட்டினார். அப்படியானால் மதியத்தின் பின் மாணவர்கள் என்ன செய்வார்கள்? என கேட்டனர், பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம், கைதொழில்கள் அல்லது வேறுதொழில்கள் படிக்கலாம், கல்வி மட்டும் வாழ்வாகாது என்றார்.

விடுவார்களா? கழகத்தார்.

துண்டை தலையில் கட்டிகொண்டு களமிறங்கினர், அவர்களாக ராஜாஜியின் திட்டத்திற்கு பெயர் வைத்தனர். இது குலகல்வி திட்டம், பார்பணியத்தின் விஷம், விவசாயி மகன் விவசாயி, மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்ப்பான், செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தைப்பான், அய்யகோ விட மாட்டோம், திராவிடரே எழுவீர் இந்த ஆச்சாரியாரை விரட்டுவீர் என பொங்கினார்கள்.

(ஆனால் அரசியலில் எங்களுக்கு பின் எங்கள் மகன் எனும் குல அரசியலை மட்டும் மனதிற்குள் வைத்திருந்தனர்)

பெரும் கலவரத்தில் ராஜாஜியின் சமாதானம் எடுபடவில்லை, அவர் சொன்னதற்கெல்லாம் கடும் திரிபுகள் காட்டபட்டன, அமைதியாக சொன்னார், ஒரு காலத்தில் நான் சொன்னதை உணர்வீர்கள், அதோடு அவர் தீவிர அரசியலை விட்டு வெளியேறினார்.

நிச்சயமாக அவர் பீஷ்மர் தான், ஆச்சாரியர் எனும் பட்டத்திற்கு தகுதி கொண்டவர்தான், அவரின் அறிவாற்றல் பெரிது. புத்தி கூர்மை மிக பெரிது. ஆனால் அவர் வாழ்வில் செய்த பெரும் தவறு ஒன்று உண்டு.

அது ஒரு வகையில் வேறுமாதிரியானது, அதாவது பள்ளிகள் தட்டுபாடான காலம் அது, எத்தனையோ வழக்குகளில் லண்டன் நீதிபதிகளையே மடக்கிய ராஜாஜி, குலகல்விதிட்டத்தில் திராவிட கழங்களிடம் தோற்றார், ஆனால் அவர் தோற்ற இடத்தில் படிக்காத காமராஜர் அசத்தினார், அது நேருவின் ஆசீர்வாதம். ஒரு குற்றமும் சொல்லமுடியா கல்விபணியாக அது வரலாறானது. அதை ஏனோ ராஜாஜியால் ரசிக்க முடியவில்லை.

காமராஜரோடு மோதவில்லை ராஜாஜி, நேருவுடன் மோதுவதாக எண்ணியே காமராஜரை எதிர்த்தார்

விளைவு இந்த பீஷ்மர் காமராஜரின் எதிரிகளோடு கரம் கோர்த்தார், கூட்டணிகளை கிருஷ்ண பராமாத்மா ஸ்டைலில் ஆடினார். காமராஜர் கர்ணன் தான், அவர் அப்படித்தான் ஆண்டுகொண்டிருந்தார்,

ஆனால் அவரின் தேசபற்றை தமிழர் விரோதமாக காட்டிய கருணாநிதி கும்பலுடன் கரம் கோர்த்தார் ராஜாஜி. அதாவது தன் எதிரிகளோடே கரம் கோர்த்தார்.

விளைவு கர்ணனான காமராஜரை அந்த கும்பல் வீழ்த்திகாட்டிற்று, விளைவு அண்ணாவும் விழ ஆட்சி கலைஞர் வசமாயிற்று.

திமுக அட்சியினை பிடிக்கும் என அண்ணாவே கருதா காலம், திமுக தன் பிடியில் இருக்கும் என்றுதான் ராஜாஜி கணக்கிட்டார், ஆனால் திமுகவின் பெரும் வெற்றி ராஜாஜியின் கணக்கை தவறாக்கிற்று

மதுகடைகள் திறக்கபட்டபொழுது கொட்டும் மழையில் 90 வயதில் கருணாநிதியிடம் மன்றாடினார், யாரை எங்கு எப்படி பயன்படுத்தவேண்டும் எப்போது கழற்றிவிட வேண்டும் என அவர் நம்பாத கடவுளிடமே கருவறையிலே பாடம் படித்தவர் கருணாநிதி, கேட்பாரா?

நொந்துபோனார் ராஜாஜி, நாடு சீரழியும் பாதை அவர் கண்ணுக்கு தெரிந்தது, காமராஜரை வீழ்த்தியதை எண்ணி மனம் வருந்தத்தான் செய்தார்.

புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமானவர் ராஜாஜி, ஆனால் அவரின் திட்டங்கள் எல்லாம் மிகுந்த தொலைநோக்கும் , ஆழ்ந்த அர்த்தமும் கொண்டவை. மிகபெரும் புத்திசாலி அவர்

இதனால்தான் பெரியார் கடைசிவரை அவரை தன் ஆலோசகராக வைத்திருந்தார்.

அமெரிக்கா சென்று கென்னடியின் கரங்களை பிடித்து ரஷ்யாவுடன் அணு ஆயுத பெருக்கத்தில் சண்டையிடாதீர்கள், மனுகுலத்திற்காக இருவருமே அணுகுண்டுகளை கடலில் எறியுங்கள் என சொன்னவர் ராஜாஜி

இந்தியின் அவசியத்தை எவ்வளவோ சொன்னார், வட இந்தியா ஏழ்மையிலும் கல்வியிலும் பின் தங்கி இருக்க்கின்றது, இந்தி படித்தால் வடக்கே தமிழருக்கு பெரும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எவ்வளவோ சொல்லி பார்த்தார்

இந்த சண்டாள கும்பலா கேட்கும்?

வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என ஒப்பாரி வைத்தார்கள், வடக்கின் புழுதியும் ஏழ்மையும் கண்ணால் கண்ட ராஜாஜி அந்த அசட்டு வாதங்களை கேட்டு தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார்

அவர் சுதந்திர போராட்டக்காரர்தான், ஆனால் சில இடங்களில் தன் தொலைநோக்கு பார்வையினை அழுத்தமாக வைத்தார், அதில்தான் ராஜாஜியின் திறன் அடங்கி இருக்கின்றது, அது என்ன?

“சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல, நாம் இந்த நாட்டை நாம் ஆளும்பொழுது கடுமையான சட்டமும், பெரும் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களும் நமக்கு தேவை. இல்லை என்றால் கொஞ்சநாளில் இந்த சுதந்திர போராட்ட கஷ்டம் எல்லாம் நம் மக்களுக்கு மறக்கும், அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கும், எங்கும் பிரிவினைவாதமும், லஞ்சமும், ஊழலும், மக்கள் நலம் காக்கா அரசுகளின் சுயநலமும் பெருக்கெடுக்கும்.

அப்பொழுது வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என மக்கள் வாய்விட்டுசொல்லும் காலம் வரும், அதனால்தான் சொல்கின்றேன் சுதந்திர இந்தியா பற்றியும், அதன் ஆட்சிமுறை பற்றியும் பெரும் திட்டமில்லாமல் சுதந்திரம் வாங்குவது மகா ஆபத்தானது, காலம் காலமாக மன்னராட்சியிலும் பின் பிரிட்டனிடனும் அடிமையாக வாழும் இந்நாட்டு மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவம் புரியாது, இவர்கள் நிச்சயம் அரசியல் அடிமைகளாக மாற வாய்ப்புக்கள் அதிகம்”

எவ்வளவு தீர்க்கதரிசனமான உண்மை, இப்பொழுது அதனைத்தானே பாரதம் கண்டுகொண்டிருக்கின்றது? வெள்ளையன் ஆட்சி பரவாயில்லை என சொல்லாதோர் யார்?

அரசியல் அடிமைகள் உருவாவார்கள் என கணித்து சொன்ன ராஜாஜி பிறந்த தமிழகத்தின் இன்று ஸ்டிகரோடு திரியும் அடிமைகள் எண்ணிக்கை என்ன?

இதில்தான் இந்த முத்திரையில்தான் ராஜாஜி தனித்து நிற்கின்றார், அதுவும் தமிழனாக, வாழ்த்த வேண்டிய தலைவர்தான், மறக்க கூடாதவர்.

இலக்கிய பணிகளிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது, பல நூல்களை எழுதினார். “குறை ஒன்றும் இல்லை..மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடல் அவரின் கவி முகத்தையும் காட்டும்.

வியாசர் விருந்து என மகாபாரத்தை சுருக்கி கொடுத்த ராஜாஜியின் பணி மகத்தானது, மிக அற்புதமான தமிழும் ஆழ்ந்த கருத்தும் கொண்ட அட்டகாசமான படைப்பு அது

அறிவார்ந்த எழுத்து எப்படி இருக்கும் என்பதை அதில்தான் காணமுடியும்

ஆனால் காமராஜருக்கு மட்டும் அவர் துணை நின்றிருந்தால், அந்த ஆட்சிக்கு இந்தபாடல் எவ்வளவு பொருந்தமாய் இருந்திருக்கும்? தமிழக அழிவு கொஞ்சமாவது தள்ளிபோடபட்டிருக்கும்?
ஆனால் விதி அது அல்ல.

ராஜாஜி போன்றவர்களை பார்ப்பான் என்றும், காமராஜர் போன்றவர்களை மக்கள் நலன் அறியா எருமை என்றும் விரட்டிவிட்டு, பொற்கால ஆட்சியினை திராவிடர் கழக ஏடுகளிலும், சினிமா உலகிலும் காட்டிவிட்டு, அதனை ஆட்சிக்கும் கொடுத்துவிட்டு, தமிழனை கண்ணீர் கடலில் எறிவதுதான், தமிழன் பிச்சைக்காரனாய் வாழ்வதுதான் விதி என்றால்? என்ன செய்வது?

காமராஜரும், ராஜாஜியும் என்ன செய்யமுடியும்? இனியாவது திருந்துவார்களா என்றால் சந்தணகாட்டு வீரப்பனும், அந்நிய வன்னிகாட்டு வேலப்பனும்தான் வழிகாட்ட போகின்றார்களாம்.

அதை நினைத்தால் இன்னும் பகீரென்கின்றது, கழகங்களாவது கோவணத்தோடு நிறுத்தினார்கள், அவர்கள் கோவணமின்றி புதைத்தே விடுவார்கள்.

இன்று ராஜாஜியின் பிறந்த நாள். இப்படியும் ஒரு தலைவர் இருந்திருக்கின்றார் என்பதை நினைத்துகொள்ளலாம்.

எந்த குலகல்வி என கூறபட்ட திட்டத்தால் அவர் வீழ்த்தபட்டாரோ? அந்த முறை அதாவது மதியம் வரை மட்டும் பள்ளிதிறக்கும் காலம் தொலைவில் இல்லை. பல கல்லூரிகளில் அது நடந்துகொண்டெ இருக்கின்றது, இதனை எல்லாம் 65 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னதுதான் தவறா?

காலம் பதில் சொல்லிகொண்டிருக்கின்றது, பல அரசியல் சாயம் வெளுத்துகொண்டிருக்கின்றது.

ராஜாஜி பெரும் அறிஞன், மாமேதை. அவரைபோன்றவர்களை ஏ பார்ப்பன வெறியனே என விரட்டிய தமிழகத்தில் பின் யார் வருவார்கள்

பன்னீரும் பழனிச்சாமியுமே வருவார்கள், சர்வாதிகாரியும் அவர் மகனுமே வருவார்கள்

மறக்க முடியா அந்த மாமேதைக்கு பிறந்தநாளில் உள்ளம் கனத்த அஞ்சலி.

சென்றது திரும்பும், திரும்பியது செல்லும் என்பது கால சக்கரம் சொல்லும் உண்மை.

இந்த திராவிட பொய்பிம்பங்கள் ஒருநாள் மண்ணோடு மண்ணாகும், ராஜாஜி திரும்ப வருவார்,

அந்த சாத்வீக ஞான நதி மீண்டும் வரும் நன்னாளில் இந்த மண் மாபெரும் உயரம் எட்டும், தமிழகம் தன் பொற்காலத்தை மீட்கும்

இந்நாடு அந்த மாபெரும் தேசியவாதியினை, அறிவு சுடரை அடுத்தமுறை நன்றாய் பயன்படுத்தும் , அதில் நாடு செழிக்கும்

அந்த வசிஷ்டரும் , மாபெரும் இந்திய பாரம்பரியமும், மிகபெரும் ஞானியுமான அந்த மகான் வரும் பாதையினை எதிர் பார்த்துகொண்டே அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்