ரோமாபுரி ராட்சசன் : 03

கால் எனப்படும் பகுதி இன்றைய பிரான்ஸும் அதை சார்த்த எல்லை பகுதியாக இருந்தது, அட்டகாசமாக ஆடினான் மகா அற்புதமான போர் அது

எந்த ரோமபடையும் வெல்ல முடியாத அந்த கவுல் பகுதியினை மிக அழகாக கைபற்றிகாட்டினான் ஜூலியஸ் சீசர்

அவன் வெறும் தளபதி மட்டுமல்ல கட்டடம், கலை, இலக்கியம் இன்னும் பலவற்றில் ரோம் வீரர்களை பயிற்றுவித்திருந்தான், இதனால் ஜூலியஸின் படை காட்டுபடை அடியாளாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் அற்புத படையாக இருந்தது

ஏன் கவுல் பகுதியினை ஜூலியஸ் சீசரால் வெல்லமுடிந்தது என்றும் வென்றபின்னும் தக்கவைக்க முடிந்தது என்றும் பார்த்தால் ஆற்றுக்கு மேல் பாலம் கட்டி படையகளை வேகமாக நகர்த்தினான்

அலெக்ஸாண்டர் செய்யாத நுட்பம் இது, பல ஆறுகளை கடந்த ஏன் சிந்துநதியினையே கடந்த அலெக்ஸாண்டர் ஆற்று நீரோட்டம் குறைவதை கவனித்து சட்டென கடப்பான், அந்நாளைய வழக்கம் அது

ஜூலியஸ் சீசர் கட்டகலை வல்லுனராக இருந்ததால் அட்டகாசமாக பாலம் கட்டி படை நடத்தி கவுல் பகுதியினை தன் கைகளில் எடுத்திருந்தான்

கவுல் என்றல்ல, சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்றான் செல்வத்தை ரோம் கஜானாவில் சேர்த்திருந்தான், ரோமில் அவன் இருப்பது மிக குறைவான காலங்களே

ஒன்று அடுத்த போருக்கான ஆயத்தம் அல்லது ஏதேனும் விழா இதை தவிர பெரும்பாலும் ரோமில் அவனை காண்பது அரிது

யுத்தம் யுத்தம் வெற்றி, அந்த வெற்றியில் கொள்ளை கொள்ளையினை ரோமுக்கு அனுப்புவது அதில் ரோம் செழிப்பது என அவனின் முழு கவனமும் அதிலே இருந்தது

இந்த வருமானத்தில் ரோமாபுரி செழித்து வளர்ந்தது, பொதுவாக அடிப்படை தேவைகள் நிறைவேறி செல்வம் கொழிக்கும் நாடுகளில் கலை வளரும்

முன்பு தஞ்சையில் கலைகள் அப்படித்தான் வளர்ந்தன, பெரியகோவில் எல்லாம் கட்டபட்டது

ஜூலியஸ் சீசர் ஐரோப்பாவினை அடித்து போட்டு பறித்து வந்ததில் ரோமாபுரி செல்வசெழிப்பான நாடானது, அதனால் நிரம்ப சிந்தித்தார்கள் “நாகரீங்களின் தாய் ரோம்” என்ற அளவுக்கு அது உயர்ந்தது

சீசர் வெற்றிமேல் வெற்றி பெற்றான், இங்கிலாந்து வரை ஊடுருவினான், அவனின் கப்பல்படை அப்படி இருந்தது

இந்த கவுல் யுத்தம் நடைபெற்றபொழுது எப்படியாவது ரோமாபுரியினை கைபற்ற திட்டமிட்ட பாம்பே நயவஞ்சக திட்டம் தீட்டினான்

கவுல் யுத்தத்தில் சீசரை விட்டுவிட்டு நிர்வாக காரணங்களுக்காக ரோம் வந்திருந்தான்

மிக முக்கிய காரணம் சல்லா அப்பொழுது இல்லை, மிக தந்திரமாக அவனை தான் ரோமில் இல்லாதபொழுது தன் ஆட்களாலே கொன்றுவிட்டான் பாம்பே

சல்லா கொல்லபட்டு ரோம் திகைத்த நேரம் போர்களத்தில் இருந்து திரும்பி ஆட்சியினை கையில் எடுத்தான்

சீசரோடு எல்லா யுத்தங்களையும் நடத்தியவன் ஸ்பெயின் வரை ரோமுக்கு வெற்றி தேடிதந்தவன் , மாவீரன் சீசரின் மருமகன் என்ற நம்பிக்கையில் மக்களும் அவனை ஏற்றனர்

ஆனால் சீசரை டம்மியாக்கிவிட்டு தான் ஒருவனே மாபெரும் அரசனாக முடிசூட்டிகொள்ள தந்திரமான திட்டமிட்டான் பாம்பே, கிடைத்த வாய்ப்பினை விட அவன் தயாராக இல்லை

செனட் சபையில் தனக்கு வேண்டியவர்களை அமர்த்தினான், எல்லா இடங்களிலும் தனக்கு வேண்டியவர்களை பதவி கொடுத்து அமர வைத்தான்

உச்சமாக சீசருக்கு எதிராளியான ஒருவனை ராணுவதளபதி பட்டம் கொடுத்து பக்கத்தில் வைத்திருந்தான்

கவுல் யுத்ததில் வெற்றிபெறும் வரை சீசருக்கு இது தெரியாது, வழக்கம் போல் வெற்றி செய்தியுடன் அவன் ரோமுக்கு திரும்பும்பொழுது செய்தி எட்டிற்று

ரோம் நகரை நெருங்கும் பொழுது அவனுக்கு செய்தி சொல்லபட்டது , இப்பொழுது மன்னர் பாம்பே அது வல்ல விஷயம் மாறாக உங்களை படையினை கலைத்துவிட்டு வெறும் மனிதனாக ரோமுக்குள் வரசொல்லி உத்தரவு

உத்தரவிட்டவன் சீசரின் எதிரி, அவன் தளபதியாக உத்தரவிட்டான்

எதற்காக என கேட்டான் சீசர் “நீர் ரோமுக்கு எதிராக சதிசெய்கின்றீராம், நாட்டுக்கு ஆபத்தானவராம் உம்மிடம் ராணுவம் இருப்பது சரியில்லையாம் அதனால் பதவி பறிக்கபடுகின்றது” என பதில் வந்தது

ஆயிரம் எரிமலைகள் சீசருக்குள் வெடித்தன, நாடி நரம்பெல்லாம் மானம் கொப்பளித்தது

ரோமை தவிர எதையும் சிந்தித்தவன் கூட இல்லை சீசர், அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றான்

உற்றவன் உடனிருப்பவன் துரோகம் செய்துவிட்டால் சாதாரண மனிதன் வீழ்ந்து எழும்ப நெடுநாள் ஆகும் ஆனால் மாவீர்களுக்கு அப்படி அல்ல, நொடியில் சுதாரிப்பார்கள்

நொடியில் சுதாரித்தான் சீசர், கூடாது விடவே கூடாது தன்னையே வெற்று மனிதனாக்கும் பாம்பே இந்த மாபெரும் ரோமை ராஜ்யத்தை அதுவும் தன் மாபெரும் வீரத்தால் உருவான ரோமை என்னவெல்லாம் செய்வான்?

சீசர் மேல் அனுதாபம் கொண்ட வீரர்கள் சீசர் பின்னால் நின்றனர், பாம்பே மேல் விருப்பம் கொண்டோர் அவன் பக்கம் நின்றனர்

விளைவு மாபெரும் ரோமை ராஜ்யத்தின் படைகள் தங்களுக்குள் அடித்தன‌

பாம்பே இதை எதிர்பார்க்கவில்லை, எந்த தகப்பனும் தன் மகள் ராணியாவதை விரும்புவான் அது எந்த இரும்பு நெஞ்சுக்குள்ளும் உண்டு அப்படி சீசர் தன் மகளுக்காக தன்னை மன்னனாக ஏற்றுகொண்டு அடிமையாக இருப்பான் என்ற அவனின் கணக்கு பொய்த்தது

ரோமுக்கு ஆபத்து , தனக்கு மானபிரச்சினை என வந்த பின் மகளாவது மருமகனாவது என மார்தட்டி நின்ற சீசரை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை பாம்பே

60 நாள் சண்டையில் தன் படையினர் ஒருவரை கூட இழக்காமல் மாபெரும் வெற்றிபெற்று ரோமுக்குள் நுழந்தான் சீசர்

சீசரின் வீரத்தை நேரில் கண்டவன் என்பதாலும் தன் படைகள் தோற்றன என்பதாலும் அஞ்சிய பாம்பே புறவாசல் வழியே தப்பினான்

தலைதெறிக்க ஓடிய பாம்பே கிரீஸில் அடைக்கலமானான்

எந்த கீரீஸை சீசரோடு சேர்ந்து வென்று மாவீரனாய் கம்பீரமாய் வலம் வந்தானோ, அந்த கிரீஸில் உயிர்பிழைக்க தஞ்சமடைந்தான்

பாம்பை அடிக்காமல் விட கூடாது, பகையினை சுத்தமாக முடிக்காமல் விட கூடாது என்ற ராஜநீதி கொண்டவன் சீசர், விடாமல் அவனை துரத்தினான்

கிரீஸில் மாமனுக்கும் மருமகனுக்கும் நேரடி யுத்தம் மூண்டது, இரு பலசாலிகள் மோதிய அந்த யுத்தம் கொடூரமாய் இருந்தது

பாம்பே சீசரை கொல்வானா? சீசர் பாம்பேயினை முடிப்பானா என்ற மிக வருத்தமான எதிர்பார்ப்புடன் யுத்தம் நடந்தது

அவர்களை தடுக்கவும் யாருமிலர், யார் சொல்லியும் கேட்கும் நிலையில் அவர்களுமில்லை

ஆனால் யுத்த முடிவில் தான் மாவீரன் என நிரூபித்தான் சீசர், தோற்ற பாம்பே தனி மனிதனாய் எகிப்துக்கு தப்பி ஓடினான்

ஆம் மாவீரனாய் எந்த கடலில் பவனி வந்தானோ அதே கடலில் அனாதையாய் ஓடினான், மாமன்னனாக கொண்டாடபட்டவன் மரக்கலத்தில் தனியாக எகிப்துக்கு சென்றான்

ஏன் எகிப்த்துக்கு சென்றான், விஷயம் இருக்கின்றது அங்கு அவனுக்கு அடைக்கலம் கொடுக்க சில காரணங்கள் இருந்தன‌

எகிப்தின் நிலை எப்படி இருந்ததென்றால் வித்தியாசமாக இருந்தது

ஆம் அலெக்ஸ்டாண்டர் ஏற்படுத்திய கிரேக்க ஆட்சி அங்கு நடந்துகொண்டிருந்தது, டாலமியின் வாரிசுகள் ஆண்டுகொண்டிருந்தன, கடைசி டாலமி ஒரு உயில் எழுதி வைத்திருந்தான்

அந்த உயிலின் நகலை அன்று அசைக்கமுடியா பேரரசான ரோமின் மாவீரனான பாம்பேயிடம் கொடுத்தும் வைத்திருந்தான்

ஏன்?

உயில்படி எகிப்தில் நடக்கவில்லை என்றால் பாம்பே அதை நடத்திவைக்க வேண்டும்

உயிலில் என்ன எழுதியிருந்தான் டாலமி மன்னன்?

அவனுக்கு கிளியோபாட்ரா என்ற மூத்த மகளும் அவளுகொரு தங்கையும் அடுத்து இரு தம்பிகளும் இருந்தனர்

தன் காலத்துக்கு பின்பு மூத்தவள் கிளியோபாட்ரா மூத்த தம்பியினை மணந்து அரியணை ஏறவேண்டும் என உயில் எழுதியிருந்தான் டாலமி

அக்கா தம்பியினை மணப்பது அக்கால ரோமை ராஜ்யத்தில் வழக்கமான ஒன்று, ரத்தகலப்பு இல்லாமல் தூய ராஜரத்தம் பரம்பரை பரம்பரையாக வருமாம், இருவரும் சண்டையிட மாட்டார்களாம் இப்படி ஏக வசதிக்காக அப்படி ஒரு ஏற்பாடு இருந்தது

கிளியோபாட்ராவுக்கு அப்பொழுது வயது 18 அவள் தம்பிக்கு 11

வயது குறைவான தம்பியினை கட்டி கொண்டு அவன் சொற்படி ஆட்சி நடத்த கிளியோபாட்ரா தயாராக இல்லை, தான் தனித்து ஆள தயாரானாள்

ஆனால் இம்சை அரசன் நாசர் போல் அங்கிருந்த மந்திரி ஒருவன் அந்த 11 வயது டாலமியினை வைத்து அரசாள திட்டமிட்டான் அவனுக்கு நிலபிரபுக்கள் மதகுருக்கள் ஆசியும் இருந்தது

கிளியோபாட்ரா அரியணை ஏற அவர்கள் சம்மதிக்கவில்லை

விளைவு அங்கும் சண்டை தொடங்கியது, பெண்ணாயினும் பெரும்படை திரட்டி போரிட்டாள் கிளியோபாட்ரா ஆனால் எகிப்தின் தளபதியான அக்கிலாஸ் மற்றும் சியோஸ் முன் அவளால் தாக்குபிடிக்க முடியவில்லை, சிரியாவுக்கு படையோடு தப்பினாள்

அவளை விரட்டிவிட்டு 11 வயது டாலமிக்கு முடிசூட்டினர் எகிப்தியர், சிரியாவில் இருந்து எந்நேரமும் கிளியோ படை எடுத்துவரும் ஆபத்தும் இருந்தது

இந்நிலையில்தான் கிரீஸில் இருந்து தப்பி சைப்ரஸ் வழியாக எகிப்துக்கு வந்து அலெக்ஸ்சாண்டிரியா நகரில் இறங்க வந்தான் பாம்பே

விஷயம் எகிப்தின் தலமைக்கு சென்றது, அவர்கள் உடனே சென்று பாம்பேயினை வரவேற்கவில்லை மாறாக அவனை கப்பலிலே இருக்க சொல்லிவிட்டு இங்கே கூட்டம் போட்டார்கள்

ஆம் அவர்களுக்கு சிக்கலான நேரமது, பாம்பேயினை வரவேற்றால் சீசர் தொலைத்துவிடுவான்

பாம்பேயினை விட்டுவிட்டால் கிளியோவுடன் சேர்ந்து கொள்வான் அதன் பின் முடிந்தது விஷயம்

பாம்பே உள்ளே வந்தாலும் ஆபத்து, அவனை விரட்டிவிட்டாலும் ஆபத்து

மகா சிக்கலான நிலையில் அவர்கள் சிந்தித்தபொழுது இம்சை அரசன் புலிகேசி போல் இருந்த எகிப்தின் ராஜகுரு சியோஸ் பாகுபலி நாசர் போல் தன் கொடூர திட்டத்தை சொன்னான்

ஆளாளுக்கு அவன் காலில் விழுந்து வணங்கினார்கள், நீரே ராஜகுரு என சரண்டைந்தார்கள்

என்ன சொன்னார் ராஜகுரு?

“பாம்பேக்கு அடைக்கலம் கொடுத்தால் சீசர் விடமாட்டான், விட்டால் கிளியோ பாம்பேயுடன் சேர்ந்து இங்கு படையெடுப்பாள்

பேசாமல் சீசர் கொல்ல தேடிய பாம்பேயினை நாம் கொன்றுவிட்டால் சீசர் மகிழ்வான், நம் நண்பனாவான் அவனின் உதவியுடன் கிளியோவினை தொலைத்தேவிடலாம்

சீசரை வெல்ல உலகில் எவர் உண்டு?”

இந்த சதிதிட்டம் எல்லோராலும் ஒப்புகொள்ளபட்டு கப்பலில் இருந்த பாம்பே எனும் மாவீரனுக்கு தரையிரங்க தகவல் அனுப்பபட்டது

சீசருக்கு அவன் இழைத்த துரோகம் எகிப்தில் விதியாய் நின்றது

ஆசையாய் இறங்கினான் பாம்பே, அந்த கூட்டத்தில் பாம்பேயின் வீரன் ஒருவன் இருந்ததால் நம்பிக்கையுடன் அவர்களை நெருங்கினான்

(தொடரும்..)