ரோமாபுரி ராட்சசன் : 04
ரோமாபுரி ராட்சசன் : 04
பாம்பே நம்பிக்கையாய் கரையில் இறங்கினான், காரணம் எகிப்தின் செப்டிமியஸ் மற்றும் பிலிப்பும் நின்றுகொண்டிருந்தனர் கூடவே ராஜகுரு சியோஸ் தன் ஆட்களோடு நின்றிருந்தான்
மாவீரனான தன்னை அதுவும் எகிப்து மன்னரே வணங்கி உயில் எல்லாம் கொடுத்து மதித்த தன்னை எகிப்து கைவிடாது என அவர்களை தழுவ சென்றான் பாம்பே
ராஜகுரு சியோஸை நோக்கி அவன் விரிந்த கரங்களோடு செல்ல, அவன் முதுகில் கோடாரியினை தாக்கினர் கயவர்கள், ஆயுதமற்ற நிலையிலும் போராட துணிந்தான் பாம்பே அவன் வீரனல்லவா?
தன் ஆளான, தான் எகிப்தில் நிறுத்தி வைத்திருந்த ஆட்களில் ஒருவனான செப்டிமியஸிடம் இருந்த வாளை கேட்டான், செப்போனியசும் அருகில் வந்தான், வந்தவன் தன்னை காப்பான் என பாம்பே புன்னகைத்த தருணத்தில் அவன் வயிற்றிலே வாள் சொருகினான் செப்டிமியஸ்
எத்தனையோ களம் கண்ட மாவீரன் இறுதியாக சொன்னான் “இந்த துரோக கொடுங்காலத்தை என்னால் வெல்ல முடியவில்லை” சொல்லிவிட்டு சரிந்தான்
நம்பிக்கையாய் வந்தவனை கொன்றுவிட்டு தங்கள் அரசியல் கணக்கை தொடங்கியது எகிப்தின் டாலமி கூட்டம்
பாம்பேயின் தலை தனியாக எடுக்கபட்டது, அவன் உடலை பாம்பேயின் ஊழியன் பாம்பேயின் தலையற்ற உடலை அலெக்ஸாண்டிரியா கடற்கரையில் தகணம் செய்தான்
உலகையே அதிரவைத்த, எத்தனையோ களம் கண்டு மாவீரனாய் வலம் வந்த, பிரிட்டன் முதல் எகிப்துவரை தன் பெயரை சொன்னாலே அலற வைத்த பாம்பே அங்கு அனாதையாய் தகணம் செய்யபட்டான்
அலெக்ஸாண்டிரியா கடல் அந்த சம்பத்திற்கு சாட்சியாய் இன்றும் அலைவீசுகின்றது
அங்கோ பாம்பேயினை வெறிபிடித்த சிங்கமாய் தேடிகொண்டிருந்தான் சீசர், பாம்பேயினை இழுத்துவந்து ரோம் கோட்டை கொடிமரத்தில் கட்டி வைத்து அடிக்க அவன் கரம் துடியாய் துடித்தது
பாம்பே எகிப்துக்கு தப்பிய விஷயம் தெரிந்ததும் படையோடு கிளம்பினான் சீசர், நைல் நதி தொட்டு எகிப்தை அடைந்தான்
பாம்பே அரசனோடு அரசனாக இருந்தாலும் சரி, மக்களோடு மக்களாக இருந்தாலும் சரி இழுத்து வாருங்கள் என உத்தரவிட்டான்
சீசர் வந்த விஷயம் அறிந்ததும், அவனிடம் நற்பெயர் பெற்று கிளியோவினை ஒழிக்க வழிதேடிய கயவர் கூட்டம் அவனை அணுகியது
மாவீரன் சீசருக்கு மாபெரும் பரிசு கொண்டுவந்திருப்பதாக சொல்லி அந்த சிறியபெட்டியினை திறந்தான் தியோடஸ் என்பவன்
அதை பார்த்ததும் அலறினான் சீசர், எந்த களத்திலும் கலங்காத அவன், எத்தனையோ யுத்தங்களின் லட்சகணக்கான பிணங்களை மிக எளிதாக தாண்டி சென்ற சீசர் அந்த பெட்டி திறக்கபட்டதும் கலங்கி அழுதான்
ஆம் அதில் பாம்பேயின் தலை இருந்தது
ஆத்திரத்தில் பொங்கிய சீசர் கத்தினான், அவனின் மறுபக்கத்தை அன்றுதான் வரலாறு உணர்ந்தது
இவனை கொல்லவா தேடினேன், கொல்ல வேண்டும் என்றால் எனக்கு களத்திலே கொல்ல தெரியாதா?
அவன் வீரன், மாவீரன். அவனை தோற்கடித்து ரோமில் கட்டிவைத்து நானே மாவீரன் என காட்ட தேடினேனே தவிர, அவனை கண்டிக்க தேடினேனே தவிர கொல்ல தேடுவேனா?
என்னோடு களம் கண்டு, ஏராளமான போர் நடத்தி ரோமிற்காய் உழைத்த எங்கள் டைபர் நதி வீரனையா கேவலம் எங்களுக்கு அடங்கி நடக்கும் எகிப்து கொன்று போட்டது?
பாம்பேயின் தலைக்கு உங்களை மதிக்கும் ஈனன் என்றா எங்களை நினைத்தீர்கள்?
பாம்பே கிடைத்தால் என்னிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், மாறாக ரோமை குடிமகனை எங்கள் தலைமகனை கொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது”?
என சீறியபடியே தியோடஸின் தலையினை கொய்தான்
கொய்தவன் சும்மா இருக்கவில்லை, எகிப்தையும் அதன் அரசையும் தரைமட்டமாக்க உத்தரவிட்டான்
எகிப்து கலங்கியது, சீசர் பாம்பே மேல் இவ்வளவு அன்பானவன் என தெரியா எகிப்தின் ராஜகுரு கலங்கினார், ஆனால் தப்ப வழியில்லை
பாம்பேயின் உடலை தகணம் செய்த அந்த நம்பிக்கைகுரிய பணியாள் பிலிப் சீசரிடம் உண்மையினை சொன்னான்
பாம்பேயினை கொன்ற கொடியவர்களை கொடூரமாக கொன்றொழித்தான் சீசர், ரோமை எதிர்ப்பவர்களின் கதி இதுதான் என சொல்லி சொல்லி பகைமுடித்தான்
அதற்கு பின்பே பாம்பேயின் தலையினையும் தகனம் செய்து எஞ்சிய எலும்பினையும் மிக மரியாதையாக நாட்டுக்கு அனுப்பிவைத்தான்
எகிப்து மேல் தீராத கோபம் அவனுக்கு இருந்தது, அதை முழுக்க அழிக்கும் முடிவில் இருந்தான், எனினும் ராஜதந்திரத்தில் ஊறியவன் அல்லவா?
எகிப்தால் ரோமாபுரிக்கு என்ன லாபம் என திட்டமிட்டான்? வற்றா நைல் நதியும் அதனால் விளையும் தானியமெல்லாம் தங்கமாக மாறும் எகிப்தால் பெரும் லாபம் விளையும் என கணக்கிட்டான்
பிரிட்டனில் இருந்து தொடங்கும் ரோமை சாம்ராஜ்யம் எகிப்து வரை நீள்வதாக அறிவித்தான்
டாலமி மன்னனை தன் அடிமையாக்குவதா இல்லை பாம்பேயுடன் மேலே அனுப்புவதா என சீசர் சிந்தித்துகொண்டிந்த வேளை அவன் முன் ஒரு பேழையினை கொண்டுவந்தார்கள்
பேழையில் இருப்பது மன்னருக்கு காணிக்கை என்றான் பணியாள்
பேழையினை திறந்தான் சீசர், உள்ளே இருந்தது அவனின் விதி என அவனுக்கு அப்பொழுது தெரியாது
பேழையிலிருந்து ஒரு பேதை வந்தாள், அதிர்ந்து நின்றான் சீசர்
சீசர் ஒன்றும் சுத்தமான பிரம்மச்சாரி அல்ல, ரோமில் இருந்தது முதல் ஸ்பெயின் கவர்னாக இருந்தகாலம் வரை அவன் ஆடிய ஆட்டம் அதிகம்
களத்தில் ஆடிய அளவு அவன் கட்டிலிலும் ஆடியிருகின்றான்
அதுவும் ஸ்பெயினில் அவன் தன் காதலிகளுக்காக செலவிட்டது 20 லட்சம் பவுண் என்கின்றது வரலாறு
ஆம், எத்தனையோ பெண்களை , பேரழகிகளை சந்தித்து பழகி ஆடி தீர்த்துவிட்டு கடந்து சென்ற சீசர் அங்கு அதிர்ந்து நின்றான்
பேழையிலிருந்து மெல்ல வெளிவந்தாள் கிளியோபாட்ரா
கிரேக்க வம்சத்து அழகி அவள், ரத்த கலப்பில்லாமல் அலெக்ஸாண்டரின் தோழன் டாலமி காத்து வந்த 13ம் தலைமுறை வாரிசு அவள்
பன்மொழி அவளுக்கு தெரியும் , ராணுவம் தெரியும் , அழகு கலை குறிப்பு முதல் ராஜநீதிவரை அவளுக்கு அத்துபடி
தென்னிந்திய சந்தணமும் தூத்துகுடி முத்தும் அவளை எந்நாளும் அலங்கரித்தன என்க்கின்றது வரலாறு
மெல்லிய எகிப்து உடையில் சீராக தலைவாரி, தகுந்த ஒப்பனையுடன் சீரான நகைகளுடன் ஒளிவீசும் முகத்துடன் அவள் சீசரை நோக்கி சென்றாள்
அசந்து போய் நின்றான் சீசர், அவளின் முகத்தை அவனால் கடக்க முடியவில்லை
மெல்ல சென்ற கிளியோ, அவனை வணங்கி நின்றாள், மெல்ல சொன்னாள் “இதோ சீசரின் அடிமை”
அவள் அப்படி சொல்வதற்கு முன்பே அவளுக்கு அடிமையானான் சீசர்
ஒருவரை பார்த்து அவன் விழிகளை வைத்தே அவனை எடைபோடுவதில் கில்லாடி கிளியோ, சீசர் தன்னிடம் வீழ்வதை அறிந்த மறுநொடி அவளாக ஆசனத்தில் அமர்ந்தாள்
சீசருக்கு தயக்கம் ஏதுமில்லை
கண்கள் சந்தித்தன, இதயம் இணைந்தது. சீசரின் இதயத்தில் உதித்தது உண்மையான காதலும் மயக்கமும்
ஆனால் கிளியோவின் மனதில் இருந்தது மாபெரும் வஞ்சக திட்டம்
முதலில் அவள் திட்டம் என்னவென்றால் சீசரை வளைத்து போட்டு அவன் உதவிகொண்டு டாலமியினை அடித்துவிரட்டி எகிப்தினை ஆள்வது
அடுத்து இதோ கிழட்டு சிங்கமான சீசர் சொல்லிகொண்டிருப்பதை தலை கீழாக செய்வது
அதாவது பிரிட்டனில் இருந்து எகிப்துவரை ரோமை பேரரசு என சீசர் சொல்வதை , எகிப்து பேரரசு நைல் நதிகரையில் தொடங்கி ரோமின் டைபர் நதிகரை கடந்து பிரிட்டனின் தேம்ஸ் வரை பரவிற்று என சொல்வது
ஆம் ரோமை பேரரசின் மாபெரும் சக்தி சீசர், இப்பொழுது ஒரே சக்தி அவனே
அவனை அடைந்து ஆக்கிரமித்துவிட்டால் மொத்த ரோமுக்கும் நாமே ராணி
இப்படித்தான் திட்டமிட்டாள் கிளியொபாட்ரா, அரசியல் என்பது இப்படியான தந்திரங்களிலும் தனக்கு எது லாபமோ அதை கொடுக்கவேண்டியதை கொடுத்து பெறுவதிலுமே இருக்கின்றது
சுத்தமான கிரேக்க ராஜதந்திர ரத்தம் ஓடிய கிளியொபாட்ரா, 20 வயதே நிரம்பிய பாட்ரா சீசர் தன்னிடம் கட்டுபட்டு கிடக்க சகல வித்தைகளையும் காட்டினாள்
கிடைக்க வேண்டியது ஆட்சி, அதற்கு எல்லாவித ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் உடலும் காதலும் கூட அரசியல் களத்தில் ஆயுதமே என்பதே அவளின் நம்பிக்கையாக இருந்தது
எத்தனையோ அழகிகளை கடந்துவந்த சீசருக்கு அவளை கடக்க முடியவில்லை
விளைவு கட்டளைகளை அவள் பிறப்பித்தாள், சீசர் செயல்படுத்தினான்
முதல் கட்டளை டாலமியினை அடித்துவிரட்டிவிட்டு கிளியோவிற்கு முடி சூடுவது, அதை செவ்வனே செய்தான் சீசர்
முதல் கட்டளை டாலமியினை அடித்துவிரட்டிவிட்டு கிளியோவிற்கு முடி சூடுவது, அதை செவ்வனே செய்தான் சீசர்
காதல் விளையாட்டில் ஒரு மகவும் பிறந்தது , அக்குழந்தையினை தூக்கொண்டு அலெக்ஸாண்டிரிய நகரில் இருந்த அலெக்ஸாண்டர் சிலைக்குமுன் சீசரோடு வந்தாள் கிளியொபாட்ரா
அலெக்ஸாண்டர் 33 வயதில் உலகை வென்றார், நான் 53 வயதாகி பாதிதான் வென்றேன் என அலுத்துகொண்டான் சீசர்
மனதில் ஆயிரம் திட்டபடி வஞ்சக வார்த்தைகளை தேன் தடவி சொன்னாள் பாட்ரா
“சிங்கமே நீங்கள் அலெக்ஸாண்டராக ஆகமுடியாது, ஆனால் அலெக்ஸாண்டருக்கு ராஜ்யம் அமைத்து கொடுத்த மன்னனாக ஆகமுடியும் அல்லவா?
பெரும் பேரரசை அமைத்து நம் மகனை அரசனாக்குங்கள், அலெக்ஸாண்டர் பெறாத வெற்றிகளை அவன் பெறட்டும்”
தன் மனதின் திட்டத்தை அட்டகாசமாக வாய்பினை பயன்படுத்தி சொன்னாள் கிளியோ, அதில் வீழ்ந்தான் சீசர்
மகனே மாபெரும் ராஜ்யத்தை உனக்கு தருகிறேன் என சொல்லிவிட்டு ரோமிற்கு விரைந்தான்,
ஆம் அவன் அப்படித்தான் எந்த கன்னியும் அவனை அடக்கிவிட முடியாது ரோமை அவன் அவ்வளவு நேசித்தான்
இப்பொழுது மகனையும் நேசித்தான், மாவீரன் ஒருவன் தேசபணி மறந்து ரத்தபாசத்தில் விழுந்த நேரமிது
சீசர் எகிப்தில் கிளியொபாட்ராவின் வலையில் சிக்கிவிட்டானெ ரோமைக்கு ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் விடுதலை குரல் கேட்டது, அதை அடக்கி கொண்டிருந்தான் சீசர்,
அவன் மனதில் ரோம் மட்டுமே அப்பொழுது இருந்தது
ஆனால் சாகச பெண்ணும் சனியும் ஒன்றல்லவா? பிடித்தால் விடுமா?
காலம் பார்த்து ரோமின் அரசியாக திட்டமிட்டாள் கிளியோ
பாம்பேயின் விதி எகிப்தில் முடிய சீசரின் விதி எகிப்தின் அரண்மனையில் சிரிக்க தொடங்கியது
சீசரோ ரோமில் தன் கனவுகளை நிறைவேற்ற தொடங்கி இருந்தான், அவனுக்கு வலதுகரமாக நின்றான் ஆண்டனி
ஆம் மார்க் ஆண்டனி
(தொடரும்..)