ரோமாபுரி ராட்சசன் : 05

ரோமாபுரி ராட்சசன் : 05

உள்நாட்டு குழப்பம், பாம்பே சீசர் மோதல் என ரோம் கொஞ்சம் தள்ளாட எதிர்களும், ரோமையின் அடிமையாய் இருந்த நாடுகளும் குரலை உயர்த்தின‌

ரோமை சிங்கம் ஒன்று எகிப்திய மானின் பிடியில் சிக்கிவிட்டது என்ற பேச்சு வந்தப்பொழுது அவர்கள் சுதந்திர குரல் எழுப்பினர், சிங்கம் சிலிர்த்துகொண்டு ரோம் வந்தது

எதிர்ப்பு கிளம்பிய இடமெல்லாம் சிங்கமென பாய்ந்தான் சீசர், ஆப்ரிக்கா முதல் இங்கிலாந்துவரை அடித்து நொறுக்கினான், அவனை எதிர்க்க யாருமில்லை, கப்பங்கள் குவிந்தன‌

Veni Vici Vidi என ரோம் மொழியில் கம்பீரமாக சொன்னான் சீசர், ஆம் வந்தேன் கண்டேன் வென்றேன் என அதற்கு பொருள்

சரித்திரம் காணா வெற்றிகளை ரோமிற்கு காணிக்கையாக்கிய அவனை ரோம் கொண்டாடியது

குடும்பத்து மக்கள் மட்டுமல்ல, நாட்டுமக்களும் சுயநலமிக்கவர்கள். ஒருவன் எங்கிருந்தாவது கொட்டி கொண்டே இருந்தால் மகிழ்ந்துகொண்டே இருப்பார்கள்

அப்படி ரோமின் பெரும் வீரனாக சீஸர் உயர்ந்தான், ஒரு கட்டத்தில் 10 ஆண்டுகள் அவனே ஆளட்டும் என மக்களும் செனட்டும் முடிவெடுத்தார்கள்

அவனால் ரோம் வாழ்வாங்கு வாழ தொடங்கியபொழுது அவனை மன்னனாக ஏற்பதில் அவர்களுக்கு தயக்கமே இல்லை, ரோம் முடியாட்சிக்கு திரும்ப தொடங்கியது

அவனோ ரோமாபுரியினை உலகின் மிகபெரும் கலைகூடமாகவும், சொர்க்கபுரியாகவும் மாற்றிகொண்டிருந்தான்

சாலைகளை மிக பிரமாண்டமாக அமைத்தான், எல்லா சாலையும் ரோமுக்கே எனும் பொன்மொழி அவனால் உருவானது

வானுயர் கட்டங்கள், பிரமாண்ட மைதானங்கள் உருவாயின‌
, அவன் அமைத்த அஸ்திவாரத்திலே பின்னாளைய கொலோசியம் எல்லாம் எழும்பின‌

கிரேக்கம் முதல் ஆப்ரிக்கா வரை அவனால் திரட்டபட்ட அறிவு சிந்தனைகளை கொண்டு அழகான பாலம் முதல் பல முன்மாதிரி விஷயங்களை செய்தான்

அறிவுசார் விஷயங்களுக்கும் குறைவில்லை, ரோமின் சட்டதிட்டங்களை எழுதினான்

அதுதான் இன்றிருக்கும் மக்களாட்சிக்கு அடிப்படை, அதன் அஸ்திவாரத்தில்தான் இந்நாளைய சட்டங்கள் அமைந்திருக்கின்றன‌

முதல் காலண்டரை கொடுத்தவன் அவனே, ஜூலியன் காலண்டர் என்ற முறை அவன் கொடுத்தது, பின்னாளில் போப் திருத்தம் செய்து இன்றிருக்கும் காலண்டர் முறையானது

சுருக்கமாக சொன்னால் அன்று ரோமைக்கு அவன் கொடுத்த கொடைகளை எல்லாம் பின்னாளில் உலகம் எடுத்துகொண்டது

சீசரின் பொற்காலம் தொடங்கியது எங்கு நோக்கினும் அவன் புகழே தெரிந்தது, எதிரி என யாரும் இல்லா சீசரின் சிலைகள் ரோம் எங்கும் எழும்பின‌

அதன் அடியில் வீழ்த்தமுடியா கடவுள் (to be Unconqurable God) என எழுதவும் பட்டது,

ஆம் அவன் தோல்வியினை சந்திக்காதவன் என்பதாலும், அவனை அன்று தோற்கடிக்க யாரும் இல்லாததாலும் அது எழுதபட்டது

கடவுளை தவிர அவனை தோற்படிப்பார் யாருமில்லை

மறக்காமல் பாம்பேவுக்கும் சிலை எழுப்பியிருந்தான் சீசர், வீரத்தை வீரம் மதிக்கும் அல்லவா?

இந்நிலையில் டைபர் நதிகரையில் பெரும் மாளிகை கட்டினான் சீசர், அது அவனுக்காக என மக்கள் எண்ணினர், உலகை சுருட்டி ரோமின் காலடியில் போட்டவனுக்கு இது கூட இல்லை என்றால் எப்படி என அவர்களாக மகிழ்ந்தனர்

ஐரோப்பாவினை முழுக்க பிடித்து ஆப்ரிக்காவில் பாதியினை பிடித்து துருக்கி, சிரியா, பாலஸ்தீன் என வரிசையாக பிடித்து ரோமை அவ்வளவு பெரும் நாடாக ஆக்கியிருந்தான் சீசர்

அவனுக்கொரு வெற்றிவிழா நடத்தினார்கள் ரோமையர்கள், அதில் சீசர் வென்ற படைகளின் வீரர்கள்,சில மன்னர்கள், சீசருகு பணிய மறுத்தவர்கள், துரோகிகள் என எல்லோரும் சங்கிலியால் பிணைத்து இழுத்துவரபட்டனர்

அதை சீசர் கண்டுகொண்டிருந்தான், அதில் ஒரு பெண்ணும் இருந்தாள்

ஆம், கிளியோபாட்ராவிற்கு ஒரு தங்கை உண்டு, டாலமியினை கொன்ற சீசர் அவளை ரோமிற்கு இழுத்து வந்தான், அவளை சங்கிலியால் பிணைத்து இழுத்து சென்றது படை

ஊர்வலம் டாபர்மாளிகையினை கடந்தபொழுது கைகுழந்தையுடன் ஒரு பெண் அவளை பார்த்து நகைப்பதை கூட்டம் கண்டது

உற்று பார்த்தார்கள், கண்களை சுருக்கினார்கள், உரக்க கத்தினார்கள்

“இது கிளியோபாட்ரா, இங்கே எப்பொழுது வந்தாள்? அப்படியானால் சீசர் அவளை ரோமுக்கு ராணியாக்க போகின்றாரா?

சீசருக்கு மேலான முதல் அதிருப்தி அங்குதான் வந்தது

ஆயினும் பெருவிழாவினை காணவந்திருப்பாள் சென்றுவிடுவாள் என கருதினார்கள், காரணம் சீசர் பெற்றிருந்த பெயர் அப்படி

ஆம், சீசர் முதலில் தளபதியாய் இருந்தபொழுது பாம்பியோ என்பவளை திருமணம் செய்திருந்தான், அவள் ஒருநாள் மத வழக்கபடி பெண்களுக்கான பூஜை செய்து விருந்தளித்தாள், அதில் பெண்களை காண பெண் வேடமிட்டு சென்றான் புல்ச்சர் எனும் இளைஞன்

அவன் யாரை பார்க்க சென்றானோ தெரியாது, பழி போம்பியா மேல் விழுந்தது, சீசர் உறுதியாக சொன்னான்

“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும், சந்தேகம் விழுந்துவிட்டதால் விவகாரத்து செய்கின்றேன்”

ஆம் அப்படி பொதுவாழ்வில் இருந்தவன் சீசர், இதனால் கிளியோ வருகையினை சந்தேகிக்கவில்லை

ஆனால் கிளியோவோ திரும்பி செல்லவில்லை, பல மில்லியன் மதிப்புள்ள முத்துக்களை ஓயினில் ஊறவைத்து குடிக்கின்றாள் ரோமையின் செல்வம் அவளால் சீரழிகின்றது என்ற செய்திகள் வர ஆரம்பித்தன‌

செல்வ செழிப்பான ரோம், தனி பெருமையுள்ள ரோம் , மாபெரும் சாம்ப்ராஜ்யமான ரோமின் பணம் எகிப்து நாட்டுக்காரியால் சீரழிக்கபடுகின்றது என்ற செய்தியும் வந்தது

செனட்டில் முணுமுணுப்பு தொடங்கியது ஆயினும் சீசரின் அற்புதமான ஆட்சி முன்னால் அது அடங்கியது

சீசரோ உலகையே வென்றவன் நான், ரோமை வீரர்களுக்கு வெற்றி கொடுத்து பொன்னும் கொடுத்து பெரும் கவுரவம் கொடுத்தவன் நான், உலகின் மிக சிறந்த ராணுவம் என்னுடையது, ரோம் வாழவேண்டுமே தவிர ரோம் மக்களின் எதிர்ப்பு பொருட்டே அல்ல என்பது போல் இருந்தான்

ஆனால் அவன் ஆட்சி அற்புதமாக இருந்தது

கிளியோபாட்ராவோ உலகின் மிக விலை உயர்ந்த விஷயங்களை வாங்குவது, உலகின் மிக உயர்ந்த விருந்து, உடை என ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்

சீசருக்கு அதில் பெருமகிழ்ச்சி இருந்தது

இதுவரை சீசர் மன்னன் அல்ல, ஆட்சி அவனிடம் இருந்தது, 10 ஆண்டுகள் அவன் ஆளட்டும் என்றே அனைவரும் விரும்பினர்

ஆனால் சீசருக்கு முடிசூடும் ஆசையினை கிளியோபாட்ரா விதைத்தாள், அதற்கு அவள் கையில் எடுத்த ஆயுதம் சீசரின் தளபதி

ஆம் அன்டனி, மார்க் அன்டனி

சீசரின் படைதளபதி அவன், தீவிர விசுவாசி, சீசர் முன் குனிந்து நின்றதை போலவே கிளியோ முன்னும் விசுவாசமாக இருந்தான் ஆண்டனி

சீசரை மன்னனாக்க அவன் உதவியினை கோரினாள் கிளியோ, அவனும் ஒப்புகொண்டான்

அன்று அவன் மனதில் பெரும் அரசியாக மட்டும் இருந்தாள் கிளியோபாட்ரா

மக்கள் திரண்டிருக்கும் விழாவில் மக்கள் சீஸரை கொண்டாடும் பொழுது சட்டென முடிசூட்டி அந்த வைபவத்தை முடித்துவிடுவது பற்றியும், எதிர்ப்பு எழுந்தால் ஆண்டனி அதை அடக்குவது பற்றியும் துல்லிய திட்டமிட்டு கொடுத்தாள் கிளியோபாட்ரா

சீசர் ஆண்டுகொண்டிருக்க, கிளியோபாட்ராவும் ஆண்டனியும் சீசரை மன்னனாக்க திட்டமிட அங்கோ சிலரின் கண்கள் சீசரை சந்தேகத்தோடு பார்க்க தொடங்கின‌

அவர்களில் முக்கியமானவன் கார்ஷியஸ், காஸ்கோ புரூட்டஸ் போன்ற மற்ற செனட்டர்கள் போல சீஸருக்கு முக்கியமானவன்

நடக்கும் நடப்புகள் அவனுக்கு சரியாக படவில்லை

ஒரு மாலை பொழுதில் தன் நண்பன் காஸ்கோவுடன் பேசும் பொழுது சொன்னான்

“ரோமையர் தனிபெரும் கலாச்சாரமும் மதமும் ஆசியும் கொண்டவர்கள், கிரேக்கர் நமக்கு எதிரிகள்

கிரேக்க வம்சத்தில் வந்தவளும் , எகிப்து எனும் அடிமைநாட்டின் அரசியுமான கிளியோபாட்ரா இந்த மாபெரும் ரோமை சாம்ராஜ்யத்திற்கு அரசியானால் நம்மால் ஏற்க முடியுமா?

ரோமை ரத்தமும் கிரேக்க ரத்தமும் கலந்த வாரிசு இங்கு ஆள வரலாமா? அதை விட நாம் சாகலாமே

சீசரின் மனைவி கர்பூனியாவுக்கு ஆண் வாரிசு இல்லை, மகளின் கணவனான பாம்பேயுமில்லை

இதனால் சீசருக்கும் கிளியோவுக்கும் பிறந்த அந்த ஆண் பிஞ்சு, டைபர் மாளிகையில் வளரும் அந்த இனம்கெட்ட பிஞ்சு வருங்கால அரசராகும், சீசர் மனம் அதைத்தான் செய்யும், நாமெல்லாம் இதை காணபோகின்றோமா? சாக போகின்றோமா?

சீஸரை வீழ்த்த நம்மால் முடியுமா?”

முதன் முதலாக ரோமின் எதிர்காலம் குறித்து மனம் வெடித்து சொன்னான் கார்ஷியஸ்

ஆம் அரும்பாடுபட்டு அவர்கள் உருவாக்கிய ரோம், நாகரீக தொட்டில் என அவர்கள் பெருமையாக சொன்ன ரோம், எகிப்து கிளியோவின் கட்டிலில் காணாமல் போய்விடும் என அஞ்ச தொடங்கினர்

விஷயம் இப்படி இருக்க, சீசருக்கு முடிசூட்டும் திட்டத்தை செயல்படுத்த லுபர் கால் விழா என்ற ஒரு விழாவினை தேர்ந்தெடுத்தனர் கிளியோவும் ஆண்டனியும்

அந்த நாளும் வந்தது, சீசர் முடிசூட போகின்றான், தான் ரோமை சாம்ராஜ்ய ராணியாக முடிசூட தயாரானாள் கிளியோ

அப்படியே ஆண்டனிக்கு இன்றிருக்கும் சீசரின் இடத்தை கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தாள்,

அவனும் அந்த கனவில் இருந்தான்

அந்த லூபர் கால் விழா தொடங்கியது

(தொடரும்..)