லட்சுமிபாய் கேல்கர்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்”

விவேகானந்தரால் உந்தபட்ட மகாகவி பாரதி பெண்கள் பாரததிருநாட்டுக்கு உழைக்க வரவேண்டும், அவர்க சக்தியாய் எழவேண்டும் என‌ பாடியபாடல் இது, அந்த வரிகளோடுதான் அந்த அன்னையினை வணங்கி தொழுது தொடங்க வேண்டும்

இன்று இந்தியாவில் பலத்த மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கலாம், பெண்கள் உயர்பதவி அலங்கரிக்கலாம், பழங்குடிபெண் ஜனாதிபதியாகலாம், கிராமபுற பெண்களுக்கும் மகளிர் சுய உதவி குழு என நம்பிக்கை கொடுக்கபட்டிருக்கலாம், பெண்கள் வாழவும், சமூகத்தில் தனித்துநிற்கவும்,அரசியலிலும் சமூகத்திலும் பெரும் அடையாளம் பெறவும் ஆயிரம் வழிகள் திறக்கபட்டு பெண்கள் உயர்ந்து நிற்கலாம்

தாழ்த்தபட்ட பெண் முதல் எல்லா இன மத பெண்களும் இந்தியர் எனும் வகையில் பெரும் உயர்வு அடைந்து நிற்க அந்த மாதரசிதான் காரணம்

இன்று இந்திய பெண்ணுரிமையும் பலமும் இன்னும் வேர்போல அவர்கள் தாங்கி நிற்கும் சக்திக்கும் ஆதார விதை இட்டு நீர் ஊற்றிவளர்த்தவள் அவளே

அந்த விதைதான் இன்று பல்லாயிரம் ஆலமரமாக வளர்ந்து தன் நிழலாலும் வேராலும் விழுதாலும் இந்த தேசத்தை தாங்கி கொண்டிருக்கின்றது

மௌஸி ஜீ லட்சுமிபாய் கேல்கர், இந்த தேசத்தின் தாயாக நின்றவள். இன்றிருக்கும் பலமான பாரத்தின் அஸ்திபாரத்தில் அவள் இட்ட கல் வலுவானது

ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக இந்திய மகளிரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய வாழ்வு அவளுடையது, வந்த வழி தெரியாமல் செல்லும் வழி தெரியாது, அவள் வாழ்வினை படிக்காமல் இந்தியா சரியான திசைக்கு செல்ல முடியாது

அவள் 1905ல் நாக்பூரில் பிறந்தவள், பெற்றோரான பாஸ்கர் ராவும் , யசோதாபாயும் இட்ட பெயர் கமல். அந்த பெண்குழந்தை இந்திய வரலாற்றை மாற்றும் என யாரும் அன்று நினைத்திருக்க முடியாது

அந்த வீட்டில் பாலகங்காதார திலகரின் “கேசரி” பத்திரிகை தவறாமல் வரும், எழுதவும் வாசிக்கவும் கற்ற அந்த சிறுமி அந்த பத்திரிகையால் ஈர்க்கபட்டாள், தேசத்தின் நிலையும் அதன் விடுதலையின் அவசியமும் “சுயராஜ்யாவின்” தேவையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது

அவளுக்கு அந்த சிறுவயதிலே விவேகானந்தரும்,வீர சிவாஜியும் ,ராமதாசரும்,ஜீஜாபாயும், தாராபாயும், அகல்யா ராணியும் அறிமுகமானார்கள் அவர்களோடுத்தான் அவள் வளர்ந்தாள்

அப்படி வளர்ந்தவளால் நாக்பூர் அருகிருந்த மிஷனரி பள்ளியில் படிக்கமுடியவில்லை, பாரத தர்மம் அல்லாத இதிகாச வேர்களில்லாத, இந்தியாவின் தாத்பரியமும் அறமும் இல்லாத அக்கல்வியினை அவளால் கற்கமுடியவில்லை

மேல்நாட்டு வரலாறும் திரிக்கபட்ட இந்நாட்டு வரலாற்றையும் கற்க விருப்பமில்லாத அவள் பள்ளியினை விட்டே வெளியேறினாள், திலரும் இன்னும் இந்திய விடுதலை தலைவர்களும் அவளுக்கு ஆசிரியரானார்கள்

தந்தை அரசுபணியாளர் எனும் வகையில் அவளுக்கு நாட்டு நடப்பும் பக்தியான இந்துகுடும்பம் எனும் வகையில் இந்திய தத்துவங்களும் முழுவதுமாக பரிட்சயமாயின‌

14 வயதிலே பசுவதைக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு பொதுவாழ்க்கையில் காலடி வைத்தவள் அவள், பேச்சு எப்படி கூட்டத்தை வசீகரிக்கும், முழக்கங்கள் மக்களை எப்படி ஒன்றுசேர்க்கும், மக்களை எப்படி திரட்டவேண்டும் என்பதெல்லாம் 15 வயதிலே அத்துபடியாயின‌

அவள் திருமணம் செய்யவேண்டிய காலமும் வந்தது, வரதட்சனை வாங்குபவனை திருமணம் செய்யமாட்டேன் முன்பின் தெரியாமல் காசுக்காக திருமணம் செய்பவனிடம் என்ன அன்பு இருக்கும் என அவள் வாதிட்டதில் திருமணம் தள்ளி போனது

அந்நேரம் கொடும் பிளேக் நோய் அப்பக்கத்தை தாக்கியபொழுது சமூக சேவகியாக நின்று பல மக்களை காத்துகொண்டிருந்தாள், அவளின் அர்பணிப்பு அப்பொழுதே நோக்கபட்டது அப்பொழுது அவளுக்கு 14 வயது இருக்கலாம்

அவள் குடும்பம் அந்த கொள்ளை நோய் மீட்பு பணியில் முன்னணியில் இருந்தது, அந்த நேரம் அவளின் அர்பணிப்பு ஆச்சரியம்தரும் வகையில் இருந்தது, சமூக அக்கறை அவளுக்கு இயல்பாய் இருந்தது

திருமணத்துக்கு அவள் பல காரணங்களை சொல்லி தப்பி வந்தாலும் மனைவியினை இழந்தவரும் வார்தா நகரை சேர்ந்த வழக்கறிஞரும் இரு குழந்தைகளின் தகப்பனுமான புருஷோத்தமன் கேல்கரை அவளால் மறுக்கமுடியாதபடி அவர் வரதட்சனை வாங்காமல் மாறாக கொடுத்து திருமணம் செய்ய தயாரானார்

விதி அவளை சம்மதிக்க வைத்தது, ஆனால் வார்தாவில்தான் அவள் வாழ்வு மாறபோகின்றது என்பது அவளுக்கே தெரிந்திருக்காது

அந்த புருஷோத்தமன் ராவினை திருமணம் செய்து கமல் எனும் அந்த மங்கை லஷ்மிபாய் என பெயர் மாற்றி கொண்டாள், லஷ்மிபாய் கெல்க‌ர் என்றானாள்

அந்த கெல்க்ர் வழக்கறிஞர் என்பதால் மேல்நாட்டு நாகரீகம் அவரில் கலந்திருந்தது, கோட் சூட் அணிதல், நுனிநாக்கு ஆங்கிலம், கிளப் கலாச்சாரம், குரூப் டான்ஸ் என அவர் அந்த நாகரீகத்தில் திளைத்தார், ஆனால் திலகராலும் விவேகானந்தராலும் வளர்க்கபட்ட அவளால் அந்த நாகரீகத்துக்கு மாறமுடியவில்லை
இன்னொன்று அக்குடும்பமும் ஆணாதிக்க குடும்பமாய் இருந்தது

இதனால் அந்த இடங்களை தவிர்த்து கேல்கரின் இரு மகள்களை இந்திய நாகரீகத்தில் புடவையும்திலகமும் இதிகாசமுமாக வளர்த்தாள், அவளுக்கும் குழந்தைகள் பிறந்தன எண்ணிக்கை மொத்தம் நான்கை கடந்தது, கூட்டுகுடும்பம் எனும் வகையில் அவள் பெரிய குடும்பத்தின் பல குழந்தைகளை வளர்த்தாள்

ஆனால் இந்துதர்மத்தில் வளர்த்தாள், கீதையும் இதிகாசங்களும் சிவாஜி விவேகானந்தர் போன்றோரின் வாழ்வும் பாடங்களாயின‌

இந்நிலையில்தான் போராட்டம் திலகரின் கரங்களில் இருந்து காந்தி கரங்களுக்கு வந்தது, காந்தி தனிபெரும் தலைவரானார், தேசம் அவரை நம்பியது லட்சுமிபாயும் கொஞ்சமும் யோசியாது அவரை பின்பற்றினார்

அதுவரை குஜராத்தின் சபர்மதி ஆசிரத்தில் இருந்த காந்தி சிறைக்கு சென்று திரும்பியபொழுது தன் ஆசிரமம் இந்தியாவின் நடுவில் இருக்கவும் வட இந்தியா தென் இந்தியாவினை சரியாக அணுகும்படி இருக்கவும் இடம் தேடினார் , ஜம்லானி பஜாஜ் அவரை வார்தாவுக்கு அழைக்க அங்கு வந்து சேவாகிராமம் அமைத்து அமர்ந்தார் காந்தி

இது ஏப்ரல் மாதம் 1934ல் நடந்தது

23 வயதான லட்சுமிபாய் அதில் உற்சாகமாக கலந்துகொண்டாள், ராட்டை நூற்பது ராமாயணம் படிப்பது, காந்திய கொள்கையினை விளக்குவது, என காந்தியுடன் நேரடி தொடர்பில் இருந்து நாட்டுசேவை செய்தாள் அது அவளுக்கு விருப்பமானதும் கூட‌

இந்த ஆங்கில எதிர்ப்பு அவள் கணவன் புருஷோத்தமன் கேல்கருக்கும் அவர் குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை என்றாலும் மிக திறமையாக குடும்பம், குழந்தைகள், வீடு கூடவே நாடு என சரியாக வலம் வந்தாள் லட்சுமிபாய்

அப்பொழுது இரு விஷயங்கள் அவளுக்கு சோர்வை கொடுத்தன முழுக்க தளர்ந்தாள்

முதலில் காந்தியின் கொள்கைகள் அவளுக்கு அழற்சியினை கொடுத்தன, காந்தி தன்னை இந்து என சொன்னாலும் முழு இந்துவாக வாழாதது, ஜின்னா மிகபெரிய கிளர்ச்சியினை தொடங்கியிருந்தாலும் காந்தி கண்டிக்காதது, கிலாபத் இயக்கத்தை காந்தி மவுனமாக கவனித்தது என சர்ச்சைகள் வெடித்தன‌

சாவர்க்கர் விவேகானந்தர், வீரசிவாஜி என முழங்கியபொழுதும் காந்தி அவர்களையெல்லாம் மறக்கடித்தது, சாவர்க்கரை கவனியாமல்விட்டதெல்லாம் அவளை வருத்தம்கொள்ள செய்தன‌

காந்தியின் போக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என கோருகின்றதே தவிர எதிர்கால இந்தியா இந்துதர்மத்திலும் அதன் தாத்பரியத்திலும் அமையவேண்டும் என்ற கொள்கை காங்கிரஸிலோ காந்தியிடமோ இல்லை என்பதை அறிந்தாள்

நேருவின் மேல்நாட்டு மோகம், இந்து அடிப்படை, இந்திய பாரம்பரியம் இல்லாலா காந்தியின் குழப்ப அரசியல் அவளை வேதனை கொள்ள வைத்தன, வீரசிவாஜியினை கூட காந்தி மறக்கடிக்க முயல்வதையும் விவேகானந்தரின் போதனைகளை கூட அவர் மவுனமாக புறக்கணிப்பதையும் அவளால் உணரமுடிந்தது

காந்தியின் தொடர்புகளை அவள் குறைத்துகொண்டு குழம்பிய நேரம் அவள் கணவன் புருஷோத்தம்ன் ராவ் கெல்கரும் காசநோயால் மரணமடைந்தார்

அப்பொழுது வயது அவளுக்கு 26

அந்நிலையில் குடும்பம், ஏகபட்ட குழந்தைகள், நிர்வாகம், நிலம், விவசாயம் என அவள் வாழ்வு மாறிற்று ஆனாலும் அடிமனதில் தேசத்தின் நெருப்பு எரிந்துகொண்டே இருந்தது

அந்த 26 வயதில் ஏகபட்ட பெண்களை சந்தித்தாள், கணவனை இழந்தபெண்கள்., ஆதரவற்றோர், ஏழைபெண்கள், தெருவோர வியாபார பெண்கள் என ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கலும் அதனை மதமாற்ற சக்திகள் பயன்படுத்தும் தந்திரமும் அவளுக்கு புரிந்தது

பொதுவாக இந்திய பெண்கள் சக்திமிக்கவர்கள், பக்திமிக்கவர்கள், சவால் கூட கூட அவர்களின் போராட்டமும் பலமும் பெருகும், எப்படிபட்ட சவாலையும் சந்திப்பார்கள்

ஆனால் அவர்களுக்கு வழிகாட்டவோ, தைரியம் கொடுத்து கைபிடித்து நடத்தவோ யாருமில்லை என்றால் திசைமாறுவார்கள், தன் சக்தி உணரா யானை போல லவுகீக சமூக சங்கிலியில் அடைபட்டு கிடப்பார்கள்

இந்த பெண்களின் வாழ்வுக்கும் அவர்கள் தொலைத்துவரும் பாரத தர்மத்தையும் மதத்தையும் கலாச்சாரதை காக்கவும் என்ன செய்யலாம் என திட்டமிட்டாள்

காரணம் பெண் என்பவள் பெரும் சக்தி, கணவனின் துணையாகவும் குழந்தையின் தாயாகவும் அவளே திகழ்கின்றாள், எல்லா ஆண்களும் வீட்டில் இருந்து உருவாவார்கள், வீட்டில் என்ன எண்ணமும் கலாச்சாரமும் தத்துவமும் போதிக்கபடுமோ அதுதான் ஆண்மகனை உருவாக்கும்

பெண் பாரத தர்மத்தை மறந்தாலோ இந்திய கலாச்சாரத்தை மறந்தாலோ ஒரு குடும்பமே திசைமாறும் , இப்படி பல குடும்பம் திசைமாறினால் சமூகம் திசைமாறும் பாரதம் தன் பெருமையினை இழக்கும் என்பது அவளின் கவலையாயிற்று

கோபுரத்தில் புறா தனிமையில் இருந்து கோபுரத்தின் எதிர்காலம் பற்றி கவலையோடு அழுவது போல் சிந்தையில் மூழ்கியிருந்தாள்

அப்பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகி வளர்ந்தது, தன் மகன்கள் உள்பட‌ சிறுவர்கள் அந்த அமைப்பில் இருப்பதையும் அவர்கள் நாட்டுபற்றும் பாரத கலாச்சாரத்தில் சிறந்திருப்பதையும் அந்த அமைப்பு இனம் சாதிகடந்து நாட்டுபற்று ஒன்றையே வலியுறுத்துவதை அறிந்து அந்த இயக்கத்தை தேடி அதன் தலைவரை சந்தித்தாள்

ஆம், அந்த ஆர்.எஸ்.எஸ் நிறுவணர் ஹெட்கோவரை நேரடியாக சந்தித்தாள்

உண்மையில் அவள் மனம் இளமையில் இருந்து எந்த கொள்கையில் வளர்ந்ததோ அதைத்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செய்துகொண்டிருந்தது, தாயினை தேடும் குழந்தைபோல மிக மகிழ்ச்சியுடன் அதனில் இணைய சென்றார்

ஆனால் அது ஆண்களுக்கான இயக்கமாக இருந்ததால் ஹெட்கோவர் மிகவும் தயங்கினார், எனினும் அவளின் அறிவினை அறிய சில கேள்விகளை கேட்டார்

“பெண்களால் இதெல்லாம் முடியும் என கருதுகின்றீர்களா?

பெண்கள் இல்லாமல் எதையும் யாரும் சாதிக்கமுடியாது என்பதுதானே நம் தர்மத்தின் போதனை, நம் பெரும் இதிகாசங்களே பெண்களை மையமாக வைத்துத்தானே தர்மத்தை போதிக்கின்றது

திரவுபதியின் சக்தி இன்றி பாண்டவர் உண்டா, சீதையின் ஆத்ம பலமின்றி ராமன் உண்டா? பெண்கள் தான் தர்மத்தை நிலைநிறுத்தும் நாடகத்தின் முக்கிய பாத்திரம் என்பதை சொன்னதே நம் தர்மம் அல்லவா?

பெண்ணே இங்கு ஆண்களை இயக்குவாள், பெண்ணே ஆண்களை நல்ல வழியில் உருவாக்கி வளர்ப்பாள், பெண்களாலே இங்கு தர்மம் தளைக்கும்

கண்ணனை யசோதா அப்படி வளர்த்தாள், ராமனை கோசலை அப்படி உருவாக்கினாள், பரதனின் பெரும் குணத்துக்கு காரணம் அவள் அன்னை வளர்ப்பு

நம் தர்மம் பெண்களை போற்ற சொன்ன மதம், பெண்கள் வேராக இருந்து சமூகம் எனும் பெரும் மரத்தை உருவாக்க சொன்ன மதம், அதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தால் அன்றி இங்கு மாற்றம் வராது

நம் பெண்கள் அறியாமையிலும் ஏழ்மையிலும் சிக்கியிருக்கின்றனர், நம் வீரசிவாஜி தொடங்கிய சுதந்திரபோர் வெள்ளையன் கையில் சிக்கி நாம் ஐரோப்பமயமாகின்றோம், நம் தர்மம் அழிவில் இருக்கின்றது

மொகலாயர் நம்மை ஆண்டாலும் இந்நாட்டு செல்வம் இங்கேதான் சுற்றியது ஆப்கனுக்கு செல்லவில்லை அதனால் நம் மதம் ஓரளவு காக்கபட்டது, இன்று ஆங்கிலேயன் பகிரங்கமாக நம்மை சுரண்டி அவர்கள் தேசத்துக்கு தங்கமாக கொண்டு செல்கின்றான்

இங்கு வெள்ளையன் உருவாக்கிய‌ அந்த ஏழ்மையிலும் வறுமையிலும் நாம் கல்வி இழந்தோம், பெருமை இழந்தோம், வேலைக்கும் வாழ்வுக்கும் அவனை நம்பி நம் தர்மம் காக்கும் வழியும் இழந்தோம், இன்னும் இழந்தால் நம் தர்மமும் கலாச்சாரமு முற்றிலும் அழியும், இனியும் தாமதிக்க கூடாது” என வாதிட்டாள்

அவளின் பேச்சும் கனவும் ஆசையும் நாடு, மக்கள் என சுற்றிவருவதை கண்டு அதிசயித்த ஹேட்கோவர், நடைமுறை சிக்கலை விளக்கினார், அதுவரை பொறுமையாக கேட்ட லட்சுமிபாய் மெல்ல கேட்டாள்

“உங்கள் சங்கம் விவேகானந்தர் வழியில்தானே செயல்படுகின்றது?

நிச்சயமாக இங்கு ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் விடுதலை கிடைக்காது, அப்படி கிடைத்தாலும் உண்மையான விடுதலையாக இருக்காது, போராட்டம் தொடரும். இந்து ஆன்மீக எழுச்சித்தான் பாரத்தத்தின் உண்மையான விடுதலை என சொன்னார் அல்லவா?

ஆமாம்

சரி பெண்களை பற்றி என்ன சொன்னார்?

நீங்களே சொல்லுங்கள்

இந்த பாரதம் எனும் சக்திவாய்ந்த கழுகு பறக்க ஆண் பெண் எனும் இரு சிறகுகள் தேவை, ஒரு சிறகை மட்டும் வைத்துகொண்டு பாரத கழுகு பறக்கமுடியாது என சொன்னாரா இல்லையா?

அதுதானே அவர் சீடர் நிவேதிதாவை தொட்டு தென்னாட்டில் பாரதியின் பெண்விடுதலை கவிதையாக ஒலித்தது,நாடெல்லாம் சுற்றிவருகின்றது, அந்த கனவை நனவாக்க வேண்டாமா?”

அதை கேட்டவுடன் கைதட்டி வரவேற்று அவளை வணங்கினார் ஹெட்கோவர், அவரின் ஆலோசனைபடி பெண்கள் ஆர்.எஸ்.எஸ் அமைக்கபட்டது

அது தன்னிச்சையானது ஒரே கொள்கை எனினும் தலமை வேறானது, சுருக்கமாக சொன்னால் இரு தண்டாவளங்களாக அது தேசத்தை தாங்க தன்னை அமைத்து கொண்டது

பெண்களுக்குக்கான ஆர்.எஸ்.எஸ் எனும் ராஷ்ட்ர‌ சேவிகா சமிதி உருவானது இப்படித்தான், 1936ல் ஒரு விஜயதசமியில் இது தொடங்கபட்டது

நாக்பூரிலும் வார்தாவிலும் பெண்களுக்கான ஷாகாக்கள் திறக்கபட்டன, பெண்களுக்கான கொள்கையும் கோட்பாடுகளும் வகுக்கபட்டன

வீடு வீடாக தேடி சென்று பெண்களை சந்தித்து தங்கள் கொள்கையினை சொன்னார் லட்சுமிபாய், பெண்கள் ஆதரவு குவிந்தது

கோவில்களிலும், திருமண வீடுகளிலும், இன்னும் மக்கள் கூடும் இடமெல்லாம் உறுப்பினர்கள் சேர்க்கபட்டார்கள், இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்தது

இந்திய இதிகாசம், பகவத்கீதை,இந்திய கலாச்சாரம் என பண்டைய மரபுகள் போதிக்கபட்டது, பாரத தர்மம் போதிக்கபட்டது, வரலாறு போதிக்கபட்டது

பெண்கள் அன்றாடம் பத்திரிகை வாசிப்பதும், நாடு உலக சமூக நிலமைகளையும் அறிந்துகொள்வது அவசியமானது

பண்டைய இந்துமன்னர் கதைகள் போதிக்கபட்டது, சீதையும் பாஞ்சாலியும் கொண்டாடபட்டார்கள், பெண்களின் மகத்துவமும் அருமையும் பெருமையும் போதிக்கபட்டது

ஜீஜாபாய், தாராபாய், அகல்யாபாய், ஜான்சிராணி என எல்லோரின் வீரமும் பாடலாக பாடமாக பரப்பபட்டது, மெல்ல மெல்ல அந்த சுயராஜ்யா நெருப்பு பற்றி எறிந்தது

பாரதியாரின் பாடல்களும் மொழிமாற்றம் செய்யபட்டு பாடபட்டன‌

விவேகானந்தரின் போதனைகளும் வாழ்வும் தவமும் ஒவ்வொரு பெண் மனதையும் தொட்டது அது கணவனிடமும் பிள்ளைகளிடம் நெருப்பாக இறக்கபட்டது

வார்தாவில் அன்றிருந்த சிக்கல் பெண்களுக்கான பள்ளி இல்லை, அவர்களுக்கான பள்ளியும் மகளிர் பள்ளியும் லட்சுமிபாயால் ஏற்படுத்தபட்டது

பெண்களுக்கு சைக்கிள் நீச்சல் போன்ற பயிற்சிகளும் வழங்கபட்டன‌

தேசமெங்கும் கிளைகள் வளர்ந்தன, லட்சுமிபாய்க்கு பொறுப்பு கூடிற்று, அவள் பம்பரமாக சுழன்றாள்

இந்நேரம் அவளின் மூத்தமகளின் மரணம் நிகழ்ந்தது, இரு வாரங்களில் அதை தாண்டி களத்துக்கு வந்தாள் அந்த தேசத்தின் தாய்

இயக்கத்தின் தலைமகள் என்பதால் மூத்த பெண்களை அழைக்கும் “மௌசி அவளின் அடைமொழியாயிற்று, “மௌஸி ஜி லட்சுமிபாய் கெல்கர்” என்றானார்

மகளிருக்கும் கலாச்சாரமும் தேசபற்றும் மட்டும் முக்கியமல்ல அவர்களின் வாழ்வாதாரமும் முக்கியம் என உணர்ந்த அவள் பெண்கள் பல தொழில்களை செய்ய வழிசெய்தாள் இன்று காணும் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் அங்குதான் உருவாயிற்று

பாரத தர்மம், கல்வி, சுய வேலைவாய்ப்பு என பெண்களை மிக சரியான வழிக்கு திரட்டியது அவரின் பயிற்சி முகாம்கள், காந்தியின் போராட்டத்துக்கு இந்த சுயராஜ்யா பெண்களே வலுசேர்த்தார்கள், அதில்தான் 1942க்கு பின் பெரும் சக்தி காந்திக்கு கிடைத்தது

பெரும் சக்தியாக எழுத இந்த சமிதிக்கு சிக்கல் 1945ல் பாகிஸ்தான் கோரிக்கை வலுவடைய தொடங்கியபொழுது வந்தது, மெல்ல மெல்ல சிந்து பஞ்சாப் வங்க மாகாணங்களில் எதிர்ப்பு வந்தது

அதுவும் தேசம் உடைந்தபொழுது இந்து மகளிர் நிலை பாகிஸ்தானில் மோசமாயிற்று, கற்பழிப்பும் கொலைகளும் அன்றாடமாயின‌

அந்த கொடும் நேரத்தில் உயிருக்கு துணிந்து பாகிஸ்தானுக்குள் சென்று பஞ்சாபிலும் சிந்துவிலும் கராச்சியிலும் இருந்த இந்து பெண்களை குஜராத் வழியாக இந்தியா அழைத்துவந்து ஆதரவளித்து இடம் கொடுத்து பெரும் சேவை செய்தார் லட்சுமிபாய்

அவரின் அந்த சேவையும் துணிச்சலும் தன்னிகரில்லாதது, இன்று நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும்விஷயம், இன்று ஆப்கானிஸ்தானில் ஒரு இந்துபெண் நுழைந்து இந்துக்களை அழைத்துவருவது எப்படியோ அப்படிபட்ட சாசகம் அது

அதனை தொடர்ந்து காந்தியின் மரணமும் அதனால் ஆர்.எஸ்.எஸ் இயக்க தடையும் விழுந்தது, பெண்களின் சமிதியும் காரணமே இன்றி தடைசெய்யபட்டது

அந்நிலையிலும் திருமண வீடுகள், கோவில் விழாக்கள், சமூக விழாக்கள், நினைவாஞ்சலி, தேசாபிமான கூட்டம் என மிக அழகாக சங்கத்தை இயக்கினார் மவுஷி

மவுஷி எட்டு கரம் கொண்ட துர்க்கையினை உருவாக்கினார் அதன் ஒரு கரம் காவி கொடி, இன்னொரு கரம் கீதை, இன்னொரு கரம் வாள், இன்னொரு கரம் நூல், தேச நெருப்பு, என எட்டு முக்கிய விஷயங்களை கொண்டிருந்தது

காந்தி கொலைக்கு பின் சில வருடங்களில் தடை நீக்கபட்டு புதுபொலிவுடன் சங்கத்தை இயக்க தொடங்கினார் மவுஷி

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸின் பாராமுகம் இருந்தாலும் அவர் கலங்கவில்லை, அவரின் ஷாகாக்கள் பெருகின‌

அங்கு வந்தே மாதரம் கட்டாயமாயிற்று, இந்திய இலக்கியமும் வேதமும் இதிகாசமும் தர்மமும் பாடமாயிற்று, யோகாசனம் போன்றவை பயிற்சியாயிற்று

எதிர்கால இந்தியா அங்குதான் போதிக்கபட்டது

அகல்பாய்க்கு அவரால் நாக்பூரில் மண்டபம் எழுப்பட்டது, தேசமெல்லாம் பெண்களிடம் இந்து தர்மமும் தேசாபிமானமும் மெல்ல மெல்ல சேர்க்கபட்டன‌

“சேவிகா” எனும் பத்திரிகை மராட்டிய மொழியில் வந்து பின் எல்லா மொழியிலும் “ராஷ்ட்ர ஷேவிகா” வரவைக்கபட்டது

நாடெங்கும் ஷ்ரிஜீவன் விகாஸ், ஸ்ரிவித்யா நிகேதன் என கல்வி நிலையங்கள் பெருகின, அதில் விவேகானந்தரே இறங்கி வந்து போதித்தார்

இந்த இயக்கம் கொடுத்த மாறுதல்தான் வடகிழக்கில் மதமாற்றத்தை தடுத்து இன்று அவை பாஜக ஆளும் மாநிலமாக இந்திய மாகாணமாக நிலைக்க வழிசெய்தது

இந்த இயக்கம் உருவாக்கிய வாரிசுகள்தான் இன்று ராமர்கோவிலை கட்டி, காஷ்மீரை இணைத்து வலுவான பாரதத்தை உருவாக்கி நிற்கின்றார்கள்

இந்த இந்துபெண்கள் எழுச்சித்தான் காங்கிரஸ் இந்திரா போன்ற பெண்களை களமிறக்க காரணமும் ஆயிற்று

இன்று பார்பனரான நிர்மலா சீத்தாராமனும் பழங்குடி பெண்ணான முர்முவும் சமூக நீதிபடி இந்தியர்களாக சரிக்கு சமம் அமர்கின்றார்கள் என்றால் அதுதான் சமிதியின் வெற்றி

சுஷ்மா சுவராஜ் எனும் இரும்பு பெண்ணும் சுமித்ரா மஹாஜன் போல பெரும் அடையாளங்களும் வந்தார்கள் என்றால் அதுதான் சமிதியின் வெற்றி.

இன்று பாஜக பலமாக அமர்ந்திருக்கின்றது என்றால் அதுதான் இந்த சமிதியின் வெற்றி, நாளை தமிழகம் ஆன்மீக பூமியாக மலரும் என்றால் அதற்கு காரணமாக தன் முகம் காட்டாமல் உழைக்கும் ஏகபட்ட பெண்கள் கொண்ட இந்த அமைப்பு நிச்சயம் காரணமாக இருக்கும்

அந்த பெண் அன்று தனிஒருத்தியாக இந்த அமைப்பை தொடங்காவிடால் ஒரு இறக்கையினை மட்டும் அசைதத கழுகாக இந்தியா வீழ்ழ்ந்திருக்கும்

விவேகானந்தர் சொன்ன இன்னொரு இறகாக இப்பெண்மணி பெண்களை திரட்டி இயக்கியபின்பே பாரத கழுகு இதோ உயர பலமாய் பறக்கின்றது

அந்த மாபெரும் மகராசிக்கு, பாரத தாய்க்கு இன்று பிறந்தநாள்

நிச்சயம் பாரதமாதா விருது என்றொரு விருது வழங்கி, பாராளுமன்றத்தில் சிலை திறந்து வணங்கவேண்டிய தெய்வமகள் அவள், கங்கை பூமிக்கு வந்தது போன்ற வரம் அவள்

அவள் மட்டும் வந்திராவிட்டால் பாரதம் எனும் சீதாதேவிக்கு விடுதலை சாத்தியமாய் இராது, இந்த ஆன்மீக விடுதலை கிடைத்திருக்காது, அவளின் இயக்கமே உந்துசக்தியாக இருந்து விடுதலையினை சாத்தியமாக்கின்ற்று

அவள் வரலாறும் போதனையும் ஒவ்வொரு இந்துபெண்ணும் கற்கவேண்டிய ஒன்று, அவளின் போராட்டம் ஜீஜாபாய்க்கும் அகல்யாபாய்க்கும் கொஞ்சமும் குறைந்ததுமல்ல‌

மாத்ரு தத்துவம் (உலக தாய்மை பேணுதல்) கர்த்த தத்துவம் (சமூகத்தை நல்லவிதமாக உருவாக்கல்) , நேத்ரு தத்துவம் (தலமை பதவி வளர்த்தல்) என மூன்று அடிப்படை கொளையுடனும் பாரத தர்மம் , தேசாபிமானம் கொண்டு செயல்படும் அந்த இயக்கம் இன்று சுமார் ஆறாயிரம் கிளைகளோடு வளர்ந்து நிற்கின்றது

முழுக்க பெண்களுக்கான் இந்த கிளைகள் ஞானபோதனை, தேசாபிமானம், தேசத்தின் எதிர்காலம் முதல் போர்கலை, ஆரோக்கியம் என எவ்வளவோ கற்றுதந்து நல்ல தேசமங்கையரை உருவாக்குகின்றது

இந்தியா முழுவதும், சமயம், சாதி, இனம் பாராது ஏழை மகளிர்க்கு தொண்டு புரிய 475 மையங்களை இந்த அமைப்பு நடத்துகின்றது, இதில் கல்வி முதல் நிதி ,தொழில்வரை எல்லா வாய்ப்புக்களும் உண்டு

“இந்திய பெண்கள் எங்கள் தேசத்தின் ஆத்மாக்கள், அவர்கள் தாங்கள் யாரென உணர்ந்து, பாரத பெருமை அறிந்து, அறியாமையில் இருந்து வெளிபட்டு தேசத்துக்காய் உழைக்க தொடங்கும்பொழுது எங்கள் பூமி புது எழுச்சி பெறும், அந்த எழுச்சி கால காலத்துக்கும் நிலைத்து நிற்கும்” என சுவாமி விவேகானந்தர் சொன்னது அவளால் நிறைவேறிகொண்டிருக்கின்றது

அந்த ஒற்றைபுறாதான், கோபுரத்தில் தனித்திருந்த கோபுரபுறாத்தான் வழிதவறிய புறாக்களையெல்லாம் அழைத்து கோபுரத்தில் அமர்த்தியது

அந்த ஒரு தேனிதான் ஆயிரகணக்கான தேனிகளை உருவாக்கி பாரதம் காத்தது

யானை கூட்டத்துக்கு தலமை ஏற்கும் மூத்த பெண்யானை போல தேசத்தின் பலத்தை மிக பெரிதாக வளர்த்து காட்டியவள் அவள்

1978ல் தான் இறக்கும் தருவாயில் அவள் சொன்ன வார்த்தைகள்தான் அவளின் கனவின் பிரமாண்டத்தை சொன்னது

“இந்நாட்டில் பெண்கள் எல்லா வகையிலும் ஆண்களுக்கு ஈடாக தேசத்துக்கு உழைக்க வேண்டும், அவ்வகையில் பெண்கள் மட்டும் நிறைந்த ராணுவம் ஒன்று அமையவேண்டும், அதை அமைக்காமல் என் வாழ்வு முடிகின்றது என்பதுதான் வேதனை”

அவளின் கனவு நிச்சயம் ஒருநாள் ஈடேறும், பெண்கள் ராணுவம் இஸ்ரேலில் இருப்பது போல இங்கும் அமையும்

தேசத்தின் தாய்க்கு, பாரதத்தின் ஒரு சிறகினை உயரவைத்த அந்த அவதாரத்துக்கு, பெண்களின் சக்தியினை உணர்ந்து வழிகாட்ட வந்த தேவதைக்கு பாரத்தின் ஒவ்வொரு மகனும் மகளும் தலைசாய்த்து அவளுக்கு மிக பிடித்த வந்தே மாதரம் பாடலை பாடியபடி அஞ்சலி செலுத்துகின்றார்கள்

கூடவே பாரதியின் வரிகளும் அவளுக்காய் அழுகின்றன‌

“போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ”