வடிவாய், செழிப்பாய் வாழ்க நீர் எம்மான்

எழுத்தாளர்களில் பல பிரிவுகள் உண்டு, அவர்களில் சிலரின் எழுத்துக்களே அற்புதமாக ரசனையாக அமையும்

பழம் எழுத்தாளர்களில் கி.வா.ஜா மற்றும் கண்ணதாசனின் எழுத்துக்கள் ரசனையானவை

பிற்கால சுஜாதா எழுத்தில் ஒரு இமயம், எல்லா துறைகளியும் புகுந்து எழுதிய எழுத்து ஞானி.

கலைஞரின் எழுத்துக்கள் நைல் நதி போல பழமையும் நீங்கா அழகும் கொண்டது

ஈஸி சேரில் படுத்திருந்து கதை சொல்வது போன்றது கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள், ஒருவித கிறக்க நிலைக்கு கொண்டு செல்வது பாலகுமாரனின் எழுத்து

ஜெய்காந்தனின் எழுத்து அடித்து போடும் ரகம், ரபேல் விமானத்தில் பயணிப்பது போன்ற எழுத்து அது

அந்த எழுத்தாளர் வரிசையில் அப்படியே வந்து அமர்ந்திருப்பவர் ஆசான் Pa Raghavan

நிச்சயமாக சொல்லலாம், இன்று தமிழகத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நம்பர் 1 அவரே, அவர் ஒருவரே

ஆழ்ந்த அறிவும், நண்பர்களுடன் பேசுவது போன்ற மொழிநடையும், தமிழறிவும், உலக அரசியல் அறிவும், தற்போது சமைல அறிவும் கொண்டு விளங்கும் சிகரம் அவர்.

நேற்ற்ய் அவருக்கு பிறந்தநாளாம், நாம் வணங்கும் தெய்வங்கள் அவருக்கு எல்லா நலனும் வளமும் அருளட்டும்.

எப்படிபட் எழுத்து சக்தி அது?, ஆனால் எழுதிமட்டும் வாழமுடியா தமிழகம் அவரை வர்த்தகபக்கம் தள்ளியிருக்கின்றது.

இல்லாவிட்டால் டாலர் தேசம், மாயவலை வரிசையில் இன்று ஐ.எஸ். வடகொரியா , ஈரான் , சவுதி சிக்கல், டிரம்ப் காமெடி போன்றபிரச்சினைகளை மிக அற்புதமாக தமிழுக்கு கொண்டு வந்திருப்பார்.

எவ்வளவு அற்புதமான எழுத்தாளர், ஆனால் தமிழன் நிலை என்ன?

உலக அரசியலோ, உலகளாவிய பிரச்சினைகளோ அவனுக்கு தெரியாது, ஏதோ இம்சைகளை இலக்கியம் என்பான், அதில் சர்ச்சை என அவனே சொல்வான், இதற்கு மேல் மகாபாரதம், ராமாயணம் தாண்டி அவன் விரும்புவதிலை

கள்ளத்தனமான அரசியலும், வர்த்தக சினிமாவுமே இங்கு பிராதனம் அவற்றை எல்லாம் தாண்டி போன்றவர்கள் தெரிவதில்லை

ஆனால் வானத்து சூரியனை மறைக்கமுடியாதது போல, பல இடங்களில் அவர் மின்னிகொண்டே இருக்கின்றார், சமீபத்திய யதி பொல‌

நமக்கெல்ல்லாம் வாய்ப்பு இருந்தால், கடையேழு வள்ளல் போல் அல்ல, சடையப்ப வள்ளல்போலும் அல்ல, ஆனால் அவரை ஆதரித்து பெரும் உலக நூல்களை, பல விஷயங்களை தமிழுக்கு கொடுக்கலாம்

உலகளாவிய சிந்தனைகளை தமிழனுக்கு கொடுக்கலாம், அவன் படிக்கின்றானோ இல்லையொ, ஓர் ஆத்ம திருப்தி

நிச்சயம் கொண்டாடபடவேண்டிய எழுத்தாளன் அவர், அப்படி ஒரு எழுத்தாளனை நாம் கண்டுகொள்வதில், அவரின் எழுத்துகளை சுட சுட படிப்பதில், பாரதியினை தவறவிட்ட, கண்ணதாசனை தவறவிட்ட காலங்களை மறுபடி பெற்றுகொண்டோம்

வாழ்க நீ எம்மான்

பல்லாண்டு காலம் வாழிய வாழியவே, பேலியோ அல்லது எதுவோ எதனையாவது செய்து பல்லாண்டு காலம் வாழ்க‌

ஒன்று நிச்ச்யமாக சொல்லலாம்

ஏதோ ஒரு தெய்வத்தின் அருள் அவரை நடத்திகொண்டிருக்கின்றது, இல்லாவிட்டால் இப்படிபட்ட அழியா புத்தகங்கள் சாத்தியமில்லை.

தொன்மை வாய்ந்த யூத சமூகத்தின் வரலாற்றை எழுதினார் அல்லவா? அதற்கு பைபிளை கடந்த உழைப்பு தேவை. கடும் ஆர்வமும் படிப்பும் தேவை

ஒரு யூதனை தவிர அவ்வளவு பெரும் எழுத்துசுமை யாருக்கும் சாத்தியமில்லை, ஆனால் Pa Raghavan சாதித்தார்

உண்மையில் அது யூத அல்லது கிறிஸ்தவ பாதிரி செய்திருக்கவேணடிய வேலை, அல்லது ஒரு இஸ்லாமியன் பாலஸ்தீன நியாயத்திற்காக செய்திருக்கவேண்டிய கடமை அது

ஆனால் அப்பணியினை முடிக்கும் பொறுப்பினை யூதர்களின் கடவுளான ஜெஹோவா நமது பா.ராகவனிடமே கொடுத்திருந்திருக்கின்றார்

உலக வரலாற்றில் அப்படி ஒரு புத்தகம் இனி சாத்தியமே இல்லை, சூடமேற்றி சத்தியம் செய்யலாம்.

எங்கள் அன்புக்கும், வணக்க்கத்திற்கும் உரிய அவர்கள் இன்னும் பல உயரங்களை தொட அவர் பிறந்தநாளில் மனமார வாழ்த்துகின்றோம்

அவர் இந்த சின்னதிரையில் எவ்வளவு கலைபணி செய்யட்டும், பேலியோவில் உணவுபணி செய்யட்டும் இன்னும் பல சேவைகளை செய்யட்டும் ஆனால் இன்னும் நிறைய உலக விஷயம் முதல் பல வரலாறுகளை எழுதட்டும்

அவர் எழுத வேண்டியது எவ்வளவோ உண்டு ஆட்டோமன் துருக்கி , சீஸர், நெப்போலியன் , ராபர்ட் கிளைவ்வரலாறு முதல் இன்றைய அரசியல் வரை ஏகபட்ட விஷயம் உண்டு

ஏன் இந்த பெஞ்சமின் நேதன்யாகு என்பவருக்கே தனிவரலாறு உண்டு, எகுல் ஓல்மர்ட்டுக்கு உண்டு, புட்டீனுக்கு, எர்டோகனுக்கு உண்டு

யார் எழுதுகின்றார்கள்?

இதை எல்லாம் அவர் எழுதவேண்டும்,

அவரால் மட்டுமே நயமாக எழுதமுடியும். நம்புவோம் இப்பொழுது யார் மரத்திலோ யாருக்காகவோ பாடும் அப்பறவை, ஒரு காலத்தில் தன் சொந்த மரத்தில் தன் சொந்த குரலில் பாடும்.

தேவர் மகனில் சிவாஜிகணேசன் கேட்பது போல “அய்யா நாங்க உங்களத்தான நம்பணும் .. வேற யார் இருக்கா எங்களுக்கு?”

தமிழ் எழுத்துலகின் பிதாமகனுக்கு, எம் குருநாதருக்கு, தொண்டனாய், பக்தனாய், மாணவனாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வடிவாய், செழிப்பாய் வாழ்க நீர் எம்மான்.

எழுத்தால் வாழி ஆசான்