வம்பிழுக்கும் ஒரு சீன நண்பர்….
ஒரு சீனன் வம்பிழுத்துகொண்டே இருக்கின்றான். அடிப்படையில் அவன் நல்லவன் ஆனால் படுபயங்கர ஸ்ட்டிரிட் பேர்வழி, வேலை தவிர ஏதும் தெரியாது . அதுதான் அவனுக்கும் எனக்கும் சிக்கல்
நாம் ஒன்று கேட்டால் அவன் ஒன்று சொல்வான் இருவரும் பேசினால் செவிடர்கள் பேசியது போலவே இருக்கும் , இருக்கும் டென்சனில் பல இடங்களில் உரசிகொண்டே இருக்க்கின்றது
மனிதனை எங்கு அடிக்கலாம் என்றால் ஒரு வழியும் இல்லை. அந்த அளவு வேலையிலும் மற்ற பழக்க வழக்கங்களிலும் சுத்தம்
எந்த பலம் என்றாலும் ஒரு பலவீனம் இருக்குமல்லவா? ஆம், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
ஏன் என்றால் இங்கு அப்படித்தான். அவனை போல ஏராளமானோர் 30 மற்றும் 40 வயதை கடந்து அவர்கள் போக்கில் இருக்கின்றனர்
காரணம் மிக எளிது, அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எனக்கு ஏற்ற துணையினை இன்னும் கண்டுபிடிக்கவில்லை , கிடைத்தால் குடும்ப வாழ்க்கை இல்லாவிட்டால் சந்நியாசி கோலம்
அவரவர் வாழ்க்கையின் முடிவு அவர்கள் கையில் என்பதில் மிக தீவிரமாக இருக்கின்றார்கள். பெற்றோர்களிடம் கேட்டால் அவர்கள் வாழ்க்கை அவர்களே முடிவு செய்யட்டும் என வழிவிடுகின்றார்கள்
இவர்களோ படிக்குமிடம் அல்லது பணியிடம் என பழகி பார்க்கின்றார்கள், பிடித்தால் தொடர்கின்றார்கள், நன்கு பழகிய பின் இது நமக்கு சரிவரும் என்றால் திருமணம் செய்கின்றார்கள்
வேலை பளு எல்லோருக்கும் நிரம்ப இருப்பதால் வெட்டியாக குட்டி சுவரில் அமர்ந்து சைட் அடிப்பது, பஸ்டாண்டில் நின்று சிகரெட் குடிப்பது , பேருந்து கரையோரம் யார் அமர்ந்திருக்கின்றார் என பார்ப்பது எல்லாம் முடியாத விஷயம்
காரணம் அவர்கள் பணத்தின் பின்னால் ஓடவேண்டி இருக்கின்றது, பெற்றோர் உடன்பிறந்தோர் துணையின்றி சொந்த சம்பாத்தியத்தில் வீடு, கார் என வாங்கி நானும் இச்சமூகத்தில் குடும்பமாய் வாழ தகுதியுள்ளவன் என காட்டும் அவசியம் இருக்கின்றது, அதனால் ஓடிகொண்டே இருக்கின்றார்கள்
யாரும் யார் தோள்மீதும் இல்லை, வாடகை காலிலும் நிற்கவில்லை
அந்த பரபரப்பான வாழ்க்கையில் பழகுவதற்கு ஒரு துணை கிடைக்கும் பட்சத்தில் பழகுகின்றார்கள், பொருந்தினால் கல்யாணம் (இல்லாவிட்டால் ராகுல்காந்தி கோலம்..)
அதற்கு கவுசல்யாவின் தந்தை போல யாரும் அருவா தூக்குவதுமில்லை, வாழ்த்திவிட்டு சென்றுவிடுகின்றார்கள்
யாரையும் நம்பி யாரும் இல்லாமல் இருப்பதும், அதீத பாசம் வைத்து ஒரு பந்த சங்கிலியில் மாட்டிகொள்ளாமலும் இருப்பது நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கத்தான் செய்கின்றது
இவனிடம் கேட்ட பொழுதும் இதனையே சொன்னான், “திருமணம் என்பது வாழ்க்கை. எனக்கான துணையினை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அப்படி யாரும் கிடைத்தால் பழகி பார்க்கலாம். சரிவந்தால் திருமணம் செய்யலாம்..”
நமக்கு சட்டென மண்டைக்குள் மின்னல் வெட்டியது, திட்டம் தயாரானது,” படுபாவி பயலே உன்னை எப்படி பழிவாங்குகின்றேன் பார்..” என மனதிற்குள் மெதுவாக சொல்லிவிட்டு “இந்திய பெண் ஓகேயா” என்றேன்
“வெரிகுட், அவர்கள் மிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள், கணவனை தெய்வமாக மதிப்பவர்கள் என கேள்விபட்டிருக்கின்றேன் ஆனால் எனக்கு யாரும் தெரியாதே..” என்றான்
“எனக்கு தெரியுமே, மிக அழகான அறிவான பெண் ஒருவர் இந்தியாவில் இருக்கின்றார், உனக்கு கிடைத்தால் வரம்..” என்றேன், மனிதர் உற்சாகமாகிவிட்டார்
“நடக்குமா?” என்றார் ஏக்கத்துடன்
“நடக்கும் பார்க்கலாம்..” என்றேன், மனிதர் முகம் பிரகாசமானது
சிக்கிவிட்டான், இனி இவனை மொத்தமாக ஓங்கி ஒன்னரை டன் வெயிட்டில் அடித்தாக வேண்டும், அவனால் ஏற்பட்ட மொத்த கோபத்தையும் இவனுக்கு திருமணம் செய்து வைத்து தீர்க்க வேண்டும்
அதனால் Devi Somasundaram என்பவரை இவனுக்கு எப்படியாவது கட்டி வைத்துவிட்டால் வாழ்வின் மிக பெரிய பழிவாங்கலை முடித்த திருப்தி ஏற்படும் ,
அதனை விட இவனுக்கு பெரும் தண்டனை ஏது?
அவள் அடிக்கும் அடியில் இவன் மூதாதையர் வாழ்ந்த சீனாவிற்கே ஓடிவிடமாட்டானா?