வாழ்க்கைக்கு தேவை தத்துவ கல்வி
“உன் மகளுக்கு இன்முகம் காட்டாதே, அவள் மணமாகி செல்லும்வரை அவள் மேல் கண்ணாயிரு, அவள் நடவடிக்கைகளை கண்காணித்துகொள், இல்லையேல் பிறர்முன்னால் நீ அவமானபட நேரிடும்
பிரம்பை கையாளாதவன் தன் மகனை பகைக்கின்றான், அவனை சிறுவயதில் இருந்தே ஞானத்திலும் முன்னோர் மொழியிலும் வளர்க்கடவாய், ஏனெனில் பிள்ளைகள் வழியாகவே பெற்றோர்கள் தன்மை உலகிற்கு அறியபடும்”
இதெல்லாம் யூதபழமொழி, சரியாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது
“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்”.
நல்ல பிள்ளைகளை வளர்த்தால் 7 பிறப்பிலும் தீமை வராது, அதையே மாற்றி செய்தால் 7 பிறப்பிலும் பழி தீராது
“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.”
தன் பொருள் என்பது ஒருவன் உழைப்பால் வருவது போல தன் பிள்ளைகள் என்பது அவன் வளர்ப்பாலே வரும்..
என பிள்ளைகளை வளர்பதை பற்றி குறளே எழுதினான் வள்ளுவன்
அதைமட்டுமா சொன்னான்?
“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.”
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும் என சொன்னான் கூடா நட்பினை பற்றி
உலக ஞான நூல்களை விடுங்கள், தமிழக பண்டை இலக்கியங்களிலே வள்ளுவனும், அவ்வையாரும் சமண முனிவர்களும் வாழ்வியல் தத்துவங்களையும் ஞானங்களையும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றார்கள்
நாகரீக கல்வி எனும்பெயரில் வாழ்க்கைக்கு தேவையான தத்துவ கல்வியினை எல்லாம் இழந்துவிட்டு இச்சமூகம் படாதபாடு படுகின்றது