விஞ்ஞானி,எழுத்தாளன்
தமிழகம் பெரும் அறிவு ஜீவிகளின் பிறப்பிடம் அதேநேரம் பெரும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் பிறந்த பூமி, ஜிடி நாயுடு கண்ட இந்த மண்தான், கம்பனை கண்ட தமிழகம்தான், சினிவாச ராமானுஜத்தையும் கொடுத்தது, அப்துல் கலாமினையும் கொடுத்தது
இவர்கள் எல்லாம் கலந்த ஒரு விஞ்ஞானி,எழுத்தாளன், தமிழறிஞர் ஒருவர் உண்டென்றால் நிச்சயமாக சொல்லலாம் முதலிடம் பிடிப்பவர் சுஜாதா.
ஸ்ரீரங்கத்தில் நிறையபேர் பெயர் ரங்கராஜன், கவிஞர் வாலி முதல் இவர் வரை பெயர் ரங்கராஜன், மனைவி சுஜாதா பெயரில் எழுதினார்
தமிழில் விஞ்ஞான கதை, பிரபஞ்ச கதை, கிராம கதை , அரசியல் கதை, அறிவியல் கதை , துப்பறியும் கதை என எல்லா கதைகளும் எழுதியவர் அவரே அவர் மட்டுமே.
பெங்களூர் பெல் நிறுவணத்தின் இஞ்சினியர் தான், ஆனால் அவர் தொட்டு எழுதாத விஷயம் கிடையாது, எல்லாவற்றிலும் அவருக்கொரு புரிதல் இருந்தது, ஆலோசனை சொல்லும் அறிவும் இருந்தது. எதுவும் அவருக்கு கடினமாய் இல்லை.
இந்திய நாட்டிற்கு ஒரு பொறியாளராய் அவர் ஆற்றிய சேவை மகத்தானது, இன்று நாம் பயன்படுத்தும் வாக்களிக்கும் இயந்திரத்தின் வடிவமைப்பாளர் அவரே.
கணிப்பொறி வந்த புதிதில் தமிழில் அதில் எப்படி எழுதலாம் என முதன்முதலில் சிந்தித்து தமிழுக்கான கோட் வரை சொன்னது அவரே.
சொன்னால் சொல்லிகொண்டே போகும் அளவிற்கு அவரின் அறிவார்த்த சாதனை பெரிது. நாளை வரப்போகும் விஞ்ஞான வளர்ச்சியினையும், இன்று வந்திருக்கும் தொழில்நுட்பத்தினையும் வரி வரியாக விளக்கும் அவர், பண்டைய சங்கதமிழின் இலக்கியங்களையும் மிக அழகாக பேசுவார், எழுதுவார்.
திரையுலகிற்கு அவரை இழுத்து வந்தவர் பாலசந்தர், கமலஹாசனும், ஒப்பற்ற அழகி ஜெயபிரதாவும் நடித்த நினைத்தாலே இனிக்கும் படக்கதை அவருடையது, அவரின் சாயல் தெரியும். வறுமையின் நிறம் சிகப்பு படத்திலும் அவரின் பங்கு உண்டு.
அப்பாடல்கள் உருவாகும்போது கண்ணதாசனை அருகிருந்து ரசித்தவர், இன்று அவரைபற்றி ஆயிரம் கட்டுரைகள் வந்தாலும் சுஜாதா எழுதியிருக்கும் 2 பக்கத்திற்கு ஈடாகாது.
மணிரத்னமும், ஷங்கரும் அவரை பயன்படுத்திகொண்ட இயக்குநர்கள், மணிரத்தினத்தின் படங்களில் அவரின் வசனம் மிக ரசிக்கதக்கது, அஞ்சலியோ ரோஜாவோ மனிதர் மிக அழகாக எழுதியிருப்பார்.
சங்கரின் இந்தியன் படத்தில் ஊழலுக்கு எதிரான அவரின் வசனம் மறக்க லூடியதல்ல “மேல்நாட்டில் லஞ்சம் இருக்கு, அங்கெல்லாம் வேலை செய்யாமல் இருக்கத்தான் லஞ்சம், இங்குதான் வேலை செய்யவே லஞ்சம்” என அவரின் வசனம் முக்கால பொருத்தம்.
சுஜாதாவின் மறைவில் யார் தடுமாறினாரோ இல்லையோ, மணிரத்தினம் கடுமையாக தடுமாறினார். கடல்,ராவணன் போன்ற படங்கள் தோற்கும்பொழுது மனம் அதனைத்தான் சொல்லிற்று, சுஜாதா இல்லை மனிதர் தடுமாறுகின்றார்.
ரஜினியின் ரோபோ படத்தின் மூலக்கதை சுஜாதாவுடையது, அவர் இருந்திருந்தால் அப்படம் இன்னும் நன்றாக வந்திருக்கும், ஆனால் தயாரிப்பாளருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை, மலையாள ஹனிபாவிற்கு அஞ்சலி என சொன்னவர்களுக்கு, சுஜாதாவிற்கு அஞ்சலி என சொல்ல தெரியவில்லை. அதனாலோ என்னவோ அப்படம் ரசிக்கவில்லை.
இனி அதன் அடுத்த கட்டம் வரும்போது பாருங்கள் உண்மை விளங்கும்.
தமிழகத்தில் தனக்குரிய இடம் கொடுக்கபடாமல் வஞ்சிக்கபட்ட அப்துல்கலாமிற்கு கொஞ்சமும் குறையாத கொடுமை சுஜாதாவிற்கும் நடந்தது, இங்கு அவர் தேச அபிமானி என்பது அப்துல் கலாமிற்கு ஒரு கரும்புள்ளி என்றால், திராவிட கழகங்கள் ஆளும் மாநிலத்தில் உயர்சாதியான சுஜாதாவிற்கு சில அவமானங்கள்.
கன்னடம், மலையாளம் எழுத்தாளரை கொண்டாடும், நடிகர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும், மலையாளத்தின் தகழி சிவசுப்பிரமணியும் கன்னடத்தின் கிரீஷ் கர்னாட்டும் அப்படித்தான் கொண்டாடபடுகின்றார்ஜள்.
ஆனால் தமிழகம் நடிகனை மட்டும் பார்க்கும், எழுத்தாளனை மறந்துவிடும், அப்படி மறக்கடிக்கபட்டவர்தான் சுஜாதா. இன்றும் பாருங்கள் தனஒருவன் படத்தில் அற்புதமான வசனத்தினை எழுதியிருப்பவ்ர் சுபா என யாருக்கும் இங்கு வரவேற்பில்லை, ஆனால் அடுத்தவன் வசனத்தை 10 டேக்கில் பேசும் நடிகனுக்கு கைதட்டு.
ஆயிரம் சொல்லுங்கள், தமிழ்நாட்டில் ஒரே கலாம், ஒரே சுஜாதா இருவரும் சமகாலத்தவர்கள், இருவருமே தமிழை நேசித்தவர்கள், சங்ககால இலக்கியங்களில் முத்தெடுத்தவர்கள், இருவருமே புறக்கணிக்கபட்டவர்கள்.
கழக ஆட்சிகள் இப்படிபட்டது, பிராமணனாக பிறந்துவிட்டால் வேறுமாதிரி பழிவாங்கும் மாநிலம் இது, எத்தனையோ பெரும் தமிழ்பிராமணர்கள் தமிழுக்காக உழைத்தும் அங்கீகரிக்காத மாநிலம் இது. காமராஜர்,அப்துல்கலாம் போன்ற தேசாபிமானிகளையும் கலங்க வைக்கும் மாநிலம் இது, அரசியல் அப்படித்தான்.
ஒரு ஒப்புக்காக கலைமாமணி விருது கொடுக்கபட்டது, கோவை சரளாவோ, செந்திலோ வாங்கிய அந்த விருதினை தமிழக அரசு இவருக்கும் வழங்கி திருப்திபட்டுகொண்டது.
அரசுசாரா அமைப்பான வாஸ்விக் அமைப்பு இவருக்கு வோட்டி மெசினுக்காக விருது அளித்தது, அறிவியலை மக்களிடம் சேர்த்தவர் எனும் பணிக்காக மத்திய அரசும் அளித்தது. வேறு எந்த விருதையும் மத்திய அரசும் மாநில அரசும் கொடுக்கவில்லை.
ஏன் என தெரியவில்லை, காகித தாளில் கள்ளவோட்டு போடுவதை தடுக்கவந்த மகாபாவி அல்லது துரோகி என நினைத்திருக்கலாம், பழிவாங்கி இருக்கலாம்.
கமலஹாசனுக்கு விக்ரம் படத்திலே ஏவுகனை,கம்ப்யூட்டர், அணுகுண்டு 1983ல் வகுப்பெடுத்தவர் சுஜாதா, நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினியினை காமெடியாக்கியது அவர்தான். ஆனால் கமலுக்கு பத்மஸ்ரியும், ரஜினிக்கு சமீபத்தில் பத்மபூஷனும் கொடுக்கபட்டது, இதுதான் அரசியல்.
சுஜாதா இருந்திருந்தால் கமலஹாசனின் விஸ்வரூபம் இன்னும் பெருவெற்றி பெற்றிருக்கும். கமலஹாசனின் விக்ரம் படம் தோற்றதென்றால் தமிழன் ரசனை அப்படி, அப்படம் புரியவில்லை என்றார்கள், பாக்கியராஜின் முந்தானை முடிச்சும், பாரதிராஜாவின் கடலோர கவிதைகளும் வெற்றிபெற்றது என்றார்கள், என்ன செய்ய தமிழனின் விஞ்ஞான அறிவு அப்படி.
என்னதான் சொல்லுங்கள் சுருங்க சொல்லுதலில் தனித்துவம் பெற்றவர் சுஜாதா,
ஈழபிரச்சினையினை கண்ணுக்குள் நிறுத்திய கண்ணுக்குள் முத்தமிட்டால் படத்தில் அமுதா எனும் ஈழகுழந்தை அனாதை ஆக்கபடும் போது , அந்த அபலை குழந்தையின், அகதி கூட்டத்தின் பரிதாபத்தை மிக அழகாக சொல்வார்
“யார் இவர்கள் ஒரு தீப்பெட்டி 15 ரூபாய் (புலிகட்டுப்பாடு வரிவிதிப்பு அப்படி) மண்ணெண்ணய், மருத்துவம்,மின்சாரம் எதுவுமில்லா நாட்டில்
பள்ளிகளில் யுத்த சத்தம் எதிரொலிக்கும் நெருக்கடியில் வாழ்விழந்து, வாழ வழியின்றி நடுகடலில் தவிக்கும் இவர்கள் கேட்பதெல்லாம் ஒரு குடை நிழல், தற்காலிக கருணை ஆனால் அவர்களுக்கு நாம் கொடுத்தது அகதிமுகாம் எனும் திறந்தவெளி சிறைச்சாலை” என சொன்னதாகட்டும்
பிள்ளை பாசத்தை விட்டு, பிறந்த குழந்தையினை விட்டு அவள் செல்ல காரணம் என்ன? கணவான? கடமையா? யுத்தமா? எந்த நியாயமோ என அவர் சொன்னதாகட்டும்.
தற்கொலை தாக்குதலை கண்ட குழந்தையின் பதைபதைப்பு ஆகட்டும், சிறுவர் போராளிகளை கண்ட சென்னை சிறுமியின் அனுபவமாகட்டும் பின்னி இருந்தார் சுஜாதா.
இறுதி காட்சியில் அக்குழந்தை சொல்லுமல்லவா “சென்னைக்கு வாங்க, அங்க ஆர்மி இல்ல, அங்க குண்டுவெடிப்பு இல்ல, சண்டை இல்ல எல்லோரும் அமைதியா வாழலாம்..” என சொல்லும் வார்த்தையும்,
பதிலுக்கு தாய் கண்ணீரோடு “ஒருநாளில் இங்க அமைதி வரும், கண்டிப்பா வரும், அன்று பார்ப்போம்” என கதறும் இடமாகட்டும், சுஜாதவினை தவிர யாருக்கு சாத்தியம்?
(இக்கதை சரியில்லை, இது எமது பிரச்சினை இல்லை என பிரபாகரன் இயக்குநர் மகேந்திரனிடம் சொன்னது வேறு விஷயம், அவர்கள் யாரைபற்றியும் கவலைபடாதவர்கள், அப்படித்தான் சொல்வார்கள்)
வலிகளை வலிக்கும்படி எழுதிய எழுத்தாளர் சுஜாதா, தமிழின பெரும் அடையாளங்களில் ஒருவர்.
இன்று அவரின் பிறந்தநாள் இவ்வுலகத்தின் அனைத்து பக்கங்களையும், அதனையும் தாண்டி பிரபஞ்சம் வரைக்கும் விவரித்து எழுதிய அவரைபோல் இனி யார் வருவார்.
கடவுள் எழுத்தாளனாக வராமல் அது சாத்தியமில்லை. அவர் கொஞ்சகாலம் தமிழகத்தில் பிறந்து தமிழில் எழுதி இருக்கின்றார்.
கவிதைகளில் சிறப்பு பெற்ற சுஜாதா ஒருமுறை எழுதினார்
“கடவுள் இந்த பிரபஞ்சத்தை விற்க விரும்பினால்
யாரிடம் விற்க முடியும்?
யார் வாங்கி நடத்துவார்?”
ஒப்பற்ற அறிஞனின், தமிழினம் கண்ட பேரரிஞனின் பிறந்தாளில் அவரை நினைவு கூர்வதில் தமிழராய் பெரும் பெருமை கொள்ளலாம்.
இம்மாநிலத்திற்கு தேவை வீரப்பன் மணி மண்டபம் அல்ல, வள்ளுவனை போல சுஜாதாவிற்கும் ஓர் விஞ்ஞான இலக்கிய கோட்டம், அதுதான் தேவை.
ஆனால் தமிழக அரசியலில் அப்படி ஒரு கோரிக்கை எழவே நெடுங்காலம் ஆகலாம். இது அப்படியான தமிழகம்.
அறிவாளிகளை கொண்டாடாதவரை தமிழகம் உருப்பட போவதில்லை