விபரீத விளம்பரத்துக்கு ஆசைபட்ட அந்த‌ நபர்

ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு தெற்கே உள்ள நகரம் சமரா, அங்கு ஒரு பெட்ரோலிய நிலையம் ஒன்று புதிதாக திறக்கபட்டிருக்கின்றது, அதன் உரிமையாளருக்கு அதை விளம்பரபடுத்த அதீதமான உத்தி ஒன்று உதித்திருக்கின்றது

மானிடன் எங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெல்லாம் இருக்கும் விஷயம் பெண்ணை ரசிப்பது என முடிவு செய்த அவர், கடை திறந்த அன்று முதல் 3 மணிநேரம் நீச்சலுடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் என விளம்பரம் செய்துவிட்டார்

பெண்கள் நீச்சலுடையில் காருக்கு பெட்ரோல் நிரப்புவார்கள் அதை காண உலகமே வரும், அட இலவசமாக அவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களிடம் கறந்துவிடலாம், விளம்பரத்துக்கு விளம்பரம், நயா பைசா செலவில்லாமல் ஏகபட்ட கூட்டம் வரும் என்றெல்லாம் கற்பனையில் மிதந்திருக்கின்றார்

நேற்று அன்னார் அறிவித்தபடி கடையினை திறந்து அக்கால தமிழகத்தின் தவமணி தேவி, பின்னாளைய சில்க் ஸ்மிதா, அட பில்லா பட நயந்தாரா போல் பெண்கள் வருவார்கள் என காத்திருந்திருக்கின்றார்

அவர் நினைப்பு பொய்யாகவில்லை காரை நிறுத்திவிட்டு பிகினி உடையுடன் பலர் வந்துகொண்டிருந்தனர், “வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி, பிகினிக்கு வெற்றி இரட்டை ஆடைக்கு வெற்றி ” என கத்திவிட்டு அவர் உற்று பார்த்தால் அவர் நெஞ்சில் ஆயிரம் எரிமலை வெடித்து அவர் கனவு கோட்டையே தகர்ந்தது, மனதில் பெட்ரோல் நிலையமே எரிந்தது

ஆம், அவர்கள் ஆண்கள்

ஆம் அவர் நீச்சலுடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் என சொல்லியிருந்தால் நீச்சலுடை பெண்களுக்கு என அறிவிக்கவில்லை

விடுவார்களா ரஷ்யர்கள்?

பட்டினத்தார் முதல் பதினாறுவயதினிலே கமலஹாசன் வரை கௌதாம்பீனி கோலத்தில் வந்து பெட்ரோல் பெற்று சென்றார்கள், சிலர் முதலாளியினை கடுப்பேற்ற பெண்களின் நீச்சலுடை அணிந்து வந்தார்கள்

வந்து, நம்ம ஊர் மொட்டை ராஜேந்திரன் பாணியில் கண்ணாடியும் நீச்சலுடையுமாய் “ஹலோ இதுவும் நீச்சல் டிரஸ்தான், எங்கப்பா பெட்ரோலு” என அள்ளி சென்றுவிட்டார்கள்

ஆச்சரியமாக ஒரு பெண்ணும் வரவில்லை

விபரீத விளம்பரத்துக்கு ஆசைபட்ட அந்த‌ நபர், முதலும் போய் பெட்ரோலும் போய் கோவணாண்டி கோலத்தில் நின்றுகொண்டிருக்கின்றார், ஆக கடைசியில் அவரையே நீச்சலுடை கோலத்தில் சந்தியில் நிறுத்திவிட்டார்கள்