விளையாட்டும் இந்த உலகில் முக்கியமல்லவா?
தங்க மங்கை கோமதி தமிழ்நாடு திரும்பிவிட்டார் ஆயினும் அரசு பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை
இந்திய பெண்கள் ஹாக்கி அணியினையே கண்டுகொள்ளாத மத்திய அரசு வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை
பழனிச்சாமி அரசு சம்பிரதாயத்துக்கு ஏதோ சொன்னது
திமுக 10 லட்சம் பரிசு கொடுத்திருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது, தமிழக காங்கிரசும் பரிசு அறிவித்திருக்கின்றது
நடிகர்கள் உட்பட அந்த சமூகம் அமைதி, தொழிலதிபர் உலகமும் கனத்த அமைதி
கோமதியின் கதையினை திரும்பிபார்த்தால் வலிக்கத்தான் செய்கின்றது
கடும் வறுமை, அந்த வறுமையிலும் விடாபிடியாக விளையாடி போராடியிருக்கின்றார்
ஓரளவு வென்று வேலையில் அமரும்பொழுது தந்தைக்கு புற்றுநோய் , இவருக்கு காலில் அடி என பலத்த தடங்கல்
இவரின் பயிற்சியாளரின் மரணமும் அவரை புரட்டி போட்டிருக்கின்றது.
இன்னொரு பெண் என்றால் முடங்கியிருப்பார், ஆனால் கடும் பயிற்சியும் முயற்சியும் கொண்ட கோமதி விளையாடி ஜெயித்திருக்கின்றார்
அம்மணி பல விஷயங்களை சொல்லும்பொழுது வழக்கம் போல தமிழ்நாட்டு விளையாட்டுதுறை பல்லிளித்து கிடப்பது தெரிகின்றது
இங்கு அப்படித்தான், விளையாட்டு என்பது அரசு வேலைக்கு என்பதை தாண்டி யாரும் யோசிப்பதில்லை , விளையாட்டுக்கு சம்பிரதாய செலவு என்பதை தாண்டி யாரும் யோசிப்பதுமில்லை
ஆனால் விளையாட்டை நேசிப்பவர்கள் வேலை கிடைத்ததோடு நிற்பதில்லை
அவர்கள் தங்களையும் தங்கள் திறமையினையும் நிரூபிக்க போராடுகின்றார்கள்
கோமதி அப்படி போராடுகின்றார், பல உதவிகள் தற்காலிகமாக கிடைக்கலாம் ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு வேலை வேண்டும் என விரும்புகின்றார்
பழனிச்சாமி அரசு அதை பரீசிலித்தால் நல்லது
நல்ல விளையாட்டு வீரர்கள் விளையாட்டை மனமார நேசிப்பார்கள், பயிற்சியும் விளையாட்டும் அவர்களுக்கு உணவும் சுவாசமும் போன்றது
எந்த ஒரு கட்டத்திலும் உண்மையாக அதை நேசிப்பவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டே இருக்கும் , காலம் தவறிய அங்கீகாரம் கிடைக்கலாம்
எனக்கு ஒரு வகுப்பு தோழன் இருந்தான், நெல்லைமாவட்டம் திருமலாபுரத்துக்காரன்
அந்த மண் விளையாட்டுக்கு பெயர்போனது, நல்ல விளையாட்டு வீரர்கள் உருவாவர்கள் , அப்படியே அரசு வேலைக்கு செல்வார்கள் அத்தோடு பலர் அதிலே நின்றுகொள்வார்கள்
ராஜிவோடு திருப்பெரும்புதூரில் இறந்த ராஜகுரு என்பவரும் அந்த ஊர்காரரே
அந்த ஊரை சேர்ந்தவன் Ramachandran lakshmanan , இரு வருடங்கள் பள்ளியில் அவன் என் வகுப்பு, சுமார் படிப்பு ஆனால் விளையாட்டில் கெட்டி
அவனுக்கு அப்பொழுதே எல்லா விளையாட்டும் சாதாரணமாக வந்தது, ஈட்டி எறிதலும் உயரம் தாண்டுதலும் அவனுக்கு அசாத்தியம்
15 வயதில் அவன் மாநில அளவில் விளையாடி பெரிசு பெற தொடங்கியபொழுது ரஷ்ய போல்வால்ட் வீரர் கலக்கிகொண்டிருந்தார்
செர்ஜி புப்கா, 35 முறை உலக சாதனை படைத்தவர் 1994ல் அவர் தாண்டிய 6.14மீ உயரத்தை இன்றுவரை யாரும் மிஞ்சமுடியவில்லை.
ஆம் அவரின் சாதனை 6.14 மீட்டர்
ஆனால் இவரோ அப்பொழுதே 5.70 மீட்டர் வரை அனாசயமாக போல்வாட்டில் தாண்டிகொண்டிருந்தார்
உறுதியாக சொல்லலாம் நல்ல பயிற்சியாளர் கண்ணில் அவன் பட்டிருந்தால் இல்லை தமிழகத்தில் மிக பெரும் தடகள வசதிகள் இருந்திருந்தால் அவனால் பெரும் பிம்பமாக உருவாகியிருக்க முடியும்
விவசாயி மகனுக்கு யார் உண்டு? என்ன உண்டு?
ஆனாலும் போராடினான் , அனுதினமும் உண்பானோ இல்லையோ கண்டிப்பாக விளையாடுவான்
அதில் ராணுவத்தில் வேலையும் கிடைத்தது, சென்னை ரெஜிமென்டில் இருந்தார். ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேறினான். அவன் வெளியேறினானே அன்றி விளையாட்டு அவனிடம் விடைபெறவில்லை
காலம் அவனை கனடாவுக்கு நகர்த்தியது, அங்கும் விளையாட்டினை தொடர்ந்தான், கனடியருக்கு அவன் ஆச்சரியமாக தெரிகின்றான்
இன்று கனடாவில் 40 வயதை நெருங்கும் அவனுக்கு மிகபெரிய விளையாட்டு ரசிகர் கூட்டம் இருக்கின்றது, சீனியர் வீரராக பங்குபெற்று பதக்கங்களை குவிக்கின்றான்
இளவயதிலே நல்ல பயிற்சி பெற்றிருந்தால் அவனால் ஒலிம்பிக் பதக்கங்களை குவித்திருக்க முடியும் என கனடியர் நம்புகின்றனர்
சிறுவயதிலே அவன் கனடா வந்திருந்தால் அவன் கனடா சார்பாக உலக தடகளத்தில் பங்குபெற்று விருது வாங்கியிருப்பான் என அவர்களே ஒப்புகொள்கின்றார்கள்
ஆம் தடகளத்திலும் ஒலிம்பிக்கிலும் முன்னணியில் நிற்கும் அந்த கனடியர்கள்
நெல்லை மாவட்டத்தின் பிந்தங்கிய கிராமத்தின் மகனை அத்தேசம் விளையாட்டுக்காக கொண்டாடுகின்றது
இப்பொழுதும் அனுதினமும் விளையாட்டுகளில் பங்குபெறுகின்றன் , பலமுறை பதக்கத்தோடு படமெல்லாம் பதிவிடுவான்
அவனை நினைத்தால் மனதில் ஒரு வலிவரும், அசாத்திய விளையாட்டு வீரன் அவன். இங்கிருக்கும் அரசியலும் விளையாட்டு என்றால் ஒருவித புறக்கணிப்பும் அவன் சர்வதேச வீரனாவதை தடுத்தன
அவனுக்கு உதவுவாரும் யாருமில்லை, நிச்சயம் நல்ல உதவிகள் பெற்று, நல்ல பயிற்சியாளர் அமைந்து திறமையான பயிற்சி பெற்றிருந்தால் செர்ஜி பூப்கா சாதனை எலலம் அவனால் உடைக்கபட்டிருக்கும்
பன்முக விளையாட்டு வீரனாக அவன் உருவாகியிருப்பான், விதி அவனை சீனியர் விளையாட்டு வீரனாக கனடாவில் உலாவவிட்டு பார்த்துகொண்டிருகின்றது
விளையாட்டை மனமார சுவாசித்ததால் அவனுக்கான அங்கீகாரம் கனடாவில் கிடைத்திருக்கின்றது
கோமதிக்கும் அதே அங்கீகாரம் தோகாவில் கிடைத்திருக்கின்றது, உறுதியாக சொல்லலாம் அவருக்கு நல்ல பயிற்சியும் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் அவரால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்
இன்னும் எத்தனை கோமதியும் ராமகிருஷ்ணனும் வறுமையின் பெயராலும் உதவ யாருமின்றியும் ஆனால் விடா முயற்சியுடன் விளையாட்டை நேசித்து இந்த பரிதாபத்திற்குரிய தமிழ்நாட்டில் சுற்றிவரலாம்
நல்ல வீரர்கள் இங்கு எக்காலமும் உண்டு ஆனால் அவர்களை அடையாளம் கண்டு பயிற்சியும் வசதியும் செய்து கொடுத்து கை தூக்கிவிடத்தான் யாருமில்லை
பள்ளி, கல்லூரி , பொறியியல், மருத்துவ கல்லூரி என எல்லாம் தனியாருக்கு கொடுத்து கல்வி வளர்க்க படும்பாட்டில் அதாவது பணம் சம்பாதிக்க தனியாருக்கு வாய்ப்பு கொடுத்து அது கல்வி புரட்சி என சொல்லும் அரசுகள் விளையாட்டும் முக்கியம் என கொஞ்சமும் நினைப்பதில்லை
விளையாட்டும் இந்த உலகில் முக்கியமல்லவா? ஆனால் இந்த ஆட்சியாளர்கள் ஏன் அதை பற்றி சிந்திப்பதில்லை
ஆம் அவர்களுக்கு கட்சியும் ஆட்சியுமே விளையாட்டு எனும் பொழுது தனி விளையாட்டு எதற்கு என எண்ணிவிட்டார்களோ என்னமோ
கோமதி சாதித்துவிட்டு இன்னும் சாதிக்க தயாராகின்றார்
இதை எல்லாம் கனடாவில் இருந்து அமைதியாக பார்த்துகொண்டிருக்கும் ராமசந்திரன் என்ன நினைப்பனோ தெரியாது
ஆனால் விளையாட்டையும் இந்த மண்ணயும் மனமார நேசிக்கும் அவனுக்கு மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் ஒருவித வலியும் வந்துதான் போகும்