விவேகானந்தரின் ராமபிரான்
சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் பெருமையினை கேட்போர் மனம் உருகச் சொன்னார், அந்த உரை மஹா ஞானமானது, பரிபூரண ஞானிக்கு மட்டுமே சாத்தியமானது.
“ஓ உலகத்தீரே, எங்களுக்கு இரு இதிகாசங்கள் இரு கண்கள் போன்றவை, அந்த இதிகாசங்கள் எங்கள் உயர்ந்த வேத வடிவின் வடிவங்கள்.
வேத நெறிகளை வாழ்க்கை முறையாக வாழ்வது எப்படி, தர்மப்படி அறத்தின்படி வாழ்ந்து பின் முக்தி அடைவது எப்படி என்பதை போதிப்பவையே எங்கள் இதிகாசங்கள்.
எங்களது தெய்வங்கள் அடிக்கடி எங்களிடையே வந்து வேதங்களின் பண்புபடி வாழ்ந்து வழிகாட்டி செல்லும், அப்படி ராமனும் கண்ணனுமாக எங்கள் தெய்வங்களை நாங்கள் கண்டோம், தெய்வங்களே எங்களுக்கு மானுடராய் வந்து வழிகாட்டி சென்ற பெரும் தர்மம் எங்களுடையது.
எங்கள் மதத்தில் அவர்கள் ராமனும் கண்ணனுமாக வந்து வழிகாட்டுவார்கள், அந்த ராமனின் வாழ்வினை சொல்வதுதான் ராமாயணம்.
அந்த ராமாயணத்தின் நாயகன் எங்கள் ராமபிரான்.
ஓ உலகத்தீரே, எங்கள் மாபெரும் ஞானவாழ்வையும் எங்கள் மதம் சொல்லும் உன்னத நெறிகளையும் எங்கள் ஞானபாரபரியத்தையும் புரிந்துகொள்ள நீங்கள் எங்கள் ராமனை அறிந்துகொண்டால் போதும்.
இராமபிரான் எங்கள் புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர், அறநெறிகளின் சின்னம் அவர்.
அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராமபிரானைத் தருகிறார் எங்கள் வால்மீகி முனிவர்.
அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராமபிரானை வருணிக்கிறார்.
ராமனை போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும், ஆழமாக இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதிபடச் சொல்லுவேன், வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும், நீங்கள் இன்னும் ஒரு ராமனைக் காணவே முடியாது.
அவன் ஒப்பற்றவன். வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்.
அன்பு அவனிடம் கடல்போல் வானம்போல் இருந்தது, ஏன் அவனை நீலநிறமாக சொன்னோம் என்றால் அவன் வான்போல் கடல்போல் பரந்த கருணை உள்ளவன்.
அவன் எல்லா உயிர்களையும் நேசித்தான். தன் உயர்ந்த ஞானகுருக்கள் மேல், தன் தந்தை தாயார்கள் மேல் கொண்ட அதே அன்பை முன்பின் தெரியாத படகோட்டியிடம் காட்டினான், காட்டின் வானரங்களிடமும் காட்டினான்.
பெரு ஞானியர் முதல் மிகமிக இழிவானவர்கள் வரை அவனால் எளிதாக ஒரே போல் அரவணைக்க முடிந்தது, கொடிய எதிரிக்கும் கடைசி நொடியில் வாய்ப்பளித்து அவன் திருந்தி விடமாட்டானா என அன்புவைத்து அவகாசம் கொடுத்து அனுப்பிய மகா அன்பு அவனுடையது.
அவனைபோல் பூமியில் மட்டுமல்ல மூவுலகிலும் ஒருவனை நீங்கள் காணமுடியாது. அவன் அன்பும் கருணையும் அப்படியானது.
ஓ உலகத்தீரே, ராமன் எங்கள் அடையாளமானவன், எங்கள் நாட்டின் ஆதாரச் சின்னமானவன்.
நாங்கள் அவன் காட்டிய வழிபடியே ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு கணவனும் ஒவ்வொரு அரசனும், ஒவ்வொரு வீரனும், ஒவ்வொரு சீடனும் நடக்கவேண்டும் என போதிக்கின்றோம், அவன் காட்டிய வழியிலேயே ஒரு ஞானசமூகம் அமையும் என அமைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்த ராமனை நாங்கள் ஆலயத்தில் காண்போம், நூல்களில் காண்போம், வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் “ராமா ராமா” என சொல்லிக் கொள்வோம்.
எங்கள் குருக்கள் அவனை பேசுவார்கள், எங்கள் மாணவர்கள் அவனை படிப்பார்கள், எங்கள் ஊரின் ஆன்மீகவாதிகள் அவனையே போதிப்பார்கள்.
எங்கள் கலைஞர்கள், கூத்தாடிகள், நாடகக்காரர்கள் என எல்லோருமே அவனை போற்றிக் கொண்டே இருப்பார்கள்.
எங்கள் நாட்டின் மன்னர்கள் அவன் பெயரில் உறுதி எடுப்பார்கள், எங்கள் மத திருமணம் கூட அவனை முன்னிட்டே நடக்கும், எங்கள் போர்களும் வாழ்வும் அவன் காட்டிய வழி.
அவன் எப்படி கருணையானவன் என்றால் அவன் வாழ்ந்து சென்ற பின்பு கூட அவனின் கருணை ஒரு பெரும் கொள்ளைக்காரனை, வேட்டைக்காரனை, கொலைகாரனை கரைய வைத்தது.
மானுடமே அஞ்சும் அந்த மாபெரும் கொலைகாரன் ராமனை படித்தபின் ராமனில் கரைந்தான், அந்த நொடியில் அவனுக்குள் இருந்த மிருகம் மறைந்து தெய்வாம்சம் வந்தது.
ராமனின் அன்பு அவனை ஆட்கொண்ட நேரத்தில் அவன் வால்மீகி என்றானான், அழியா காவியம் ராமனுக்கு படைத்தான்.
எங்கள் ராமன் அழிவில்லாதவன், அவன் அன்பு எக்காலமும் கடல் போல் எங்கும் நிறைந்திருக்கின்றது, அவன் எங்கள்பால் கொண்ட அன்பு ஒன்றாலே எங்கள் தேசம் இயங்குகின்றது.
அவன் காலம் தோறும் எங்களை தன் அன்பால் ஆட்கொள்கின்றான், எங்களோடு இருந்து எங்களை நடத்துகின்றான், எங்கள் தேசத்தை அவனே ஒருங்கிணைக்க வைத்து காக்கின்றான்.
எல்லா காலமும் அவன் அன்பு எங்களோடு உண்டு, அவனின் அன்பே எங்களையும் எங்கள் இந்து சமூகத்தையும் இயக்குகின்றது, காலமெல்லாம் அந்த அன்பான ராமன் எங்களோடுதான் இருப்பான்.
காலத்துக்கேற்ற ஒருவர் மூலம் அவனே எங்களை நடத்துகின்றான், அதனை நாங்கள் மனமார கண்டுகொண்டே இருக்கின்றோம், தலைமுறை தோறும் அதைக் காண்போம்.
அவன் எங்கள் அரசர்களை தொடுவான், கவிஞர்களை கலைஞர்களை தொடுவான், வீரர்களை தொடுவான், ஞானியரைத் தொடுவான், எங்கள் தேசத்தின் எல்லா பக்கமும் அவனே ஒவ்வொரு வடிவில் வருவான்.
யுகம் யுகமாய், காலம் காலமாய் அவன் ஒவ்வொருவர் வடிவில் தன் அன்பினால் எங்களை ஆட்கொள்ள வருவான், காலம் காலமாய் அவன் அன்பான ஸ்பரிசத்தை நாங்கள் உணர்ந்து கொண்டே இருப்போம்.
ராமன் என்பவன் ஒளி, ராமன் என்பவன் ஞானம் , ராமன் என்பவன் அன்பு, ராமன் என்பவன் எங்களுக்கு ஞான வழிகாட்டிய தெய்வம்.
மானுட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்துக்கும் இலக்கணம் எழுதி அதை வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றவன் அவன், அந்த வழியில் நடக்கும் சமூகத்துக்கு நீதிமன்றமோ, காவலோ, சட்டவிதிகளோ, சிறைச்சாலையோ அவசியமில்லை.
ராமன் ஒருவன் போதும், அவன் திருவடிகள் போதும்.
ராமன் இருக்கும் இடத்தில் காமம் இல்லை, அநியாயங்கள் இல்லை, அதர்மம் இல்லை, கோபமோ, குரோதமோ எதுவுமில்லை.
அவை எல்லாம் இருக்குமிடம் ராமனுமில்லை, இரவும் பகலும் ஒன்றாக இருக்க முடியாது.
ஓ மானுடரே, உலகில் எங்காவது செருப்புக்கள் ஆட்சி செய்து பார்த்ததுண்டா? எங்கள் நாட்டில் ராமனின் செருப்புக்களே அரியணையில் இருந்ததென்றால் அவன் பெருமையினை அதைவிட எப்படி விளக்கமுடியும்?
ராமன் எங்களின் ஞான தகப்பன், சீதை எங்கள் பெண்களின் குலவிளக்கு. ராமன் சீதை வரலாற்றின் வழிகாட்டலில்தான் எங்கள் தேசமே நிலைத்து நிற்கின்றது.
எங்கள் நாட்டில் ஏகப்பட்ட இனம் இருக்கலாம், மொழி இருக்கலாம், சில கலாச்சார வேற்றுமைகள் கூட இருக்கலாம் ஆனால் ராமன் ஒருவனே.
எங்கள் பாரத நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அவன் ஏதோ ஒரு வடிவில் உண்டு, காலவெள்ளத்தில் வேற்றுமதத்துக்கு அடித்து செல்லப்பட்டோரில் கூட அவர்களை அறியாமல் அவன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றான்.
எங்களை ஒரே தேசமாக இணைப்பவன் அவனே, இந்தியாவின் ஆதர்சனம் அவனே, ஆனால் நான் உறுதியாக சொல்கின்றேன் அவன் எங்களுக்கானவன் மட்டுமல்ல அவன் உலகுக்கானவன்.
இந்துக்கள் தர்மக் கொடிநாட்டி ஆட்சி செய்யும் போது ராமன் உலகெல்லாம் கொண்டாடப்படுவான், அதே இந்துக்கள் நான்கு பேராக சுருக்கப்பட்டாலும் அவர்கள் நடுவில் ராமன் வாழ்ந்து கொண்டிருப்பான், அவன் இந்திய தர்மத்தில் முழுக்க கலந்த நாயகன் எங்கள் ராமன்.
அன்பார்ந்தவர்களே, எங்கள் ராமன் உங்களுக்கு தெரியாதவனாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவன் உலகம் அறியாத ஒருவன் என நீங்கள் கருதிவிடக் கூடாது.
அவன் உலகெல்லாம் கொண்டாடப்பட்டவன், ஒவ்வொரு 500 வருடமும் இந்த உலகில் ஆன்மீக அலையும், பொருளாதார அலையும் மாறி மாறி எழும்.
பொருளாதார அலை போர்களை கொடுக்கும், போரின் முடிவு ஒரு அமைதியும் தேடலும் கொடுக்கும் அப்போது ஆன்மீக அலை எழும்.
ஓ உலகமக்களே, சபையோரே, உலக மத நெறிகளை முன்னிட்டு இங்கு கூடியிருக்கும் பெரியோரே, நான் எங்கள் காவி உடை இந்து சாமியார்களில் ஒருவனாக, எங்கள் வேதநெறி வாழ்வுகளில் தவங்களில் நம்பிக்கை உள்ள ஒருவனாக , எங்கள் ஞானபெரும் பாரம்பரியத்தில் ஒருவனாகச் சொல்கின்றேன்.
அந்த 500ம் ஆண்டு பொருளாதார அலை ஓயும் தருவாயில் இருக்கின்றது, இனி மிகப்பெரிய ஆன்மீக அலை எழும்பும், அந்த அலையின் உச்சத்தில் நீங்கள் எங்கள் ராமனை காண்பீர்கள்.
இன்று நான் சொல்வது ஒரு ஏழை காவி இந்து சன்னியாசியின் குரலாக, அழுக்கடைந்த நோய்பிடித்த அறியாமை மிகுந்த பாம்புகளின் தேசத்தின் சன்னியாசியின் குரலாக உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால் ஆன்மீக அலை எழும்போது எங்கள் மதப்பெருமையினை உலகம் உணரும், எங்கள் ராமனை, கண்ணனை உலகம் கொண்டாடும், அன்று உலகெல்லாம் அவன் அறியப்படுவான், வணங்கப்படுவான்.
ஆன்மீக அலை உலகை ஆக்கிரமிக்கும் போது எங்கள் ராமனை உலகின் ஒவ்வொரு தேசமும் சூரியனை காண்பது போல் காணும், சூரியனை யாரும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதை போல எங்கள் ராமனை நீங்கள் தானாகவே புரிந்து கொள்வீர்கள். அவன் எல்லோரையும் தன் அன்பால் அரவணைப்பான்”.
(1893ல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை இது.
அப்போது இந்தியா ஏழை தரித்திர நாடாக அறியப்பட்டிருந்தது, இந்துமதம் அறியாமையும் பாமரத்தன்மையும் இன்னும் பலவகை இழிவுகளும் கொண்ட மதமாக உலகெங்கும் ஐரோப்பியரால் நம்ப வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் காலங்களில் முதல் முதல் இந்து உணர்ச்சி குரலை சுவாமி விவேகானந்தர்தான் அமெரிக்காவில் எழுப்பினார், இருளில் கிடந்த அந்த மதத்துக்கு ஞான வெளிச்சத்தை அங்கே காட்டினார்.
இன்று அமெரிக்காவில் இந்துக்களின் பெரும் ஆலயம் அமைத்திருக்கின்றன, ஏகப்பட்ட இந்துக்கள் அங்கு இந்துமதத்தை தாங்கி நிற்கின்றார்கள், அமெரிக்கர்கள் பலர் அம்மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த விஷயமாக இந்துமதம் மாறிக் கொண்டிருக்கின்றது.
இந்த 1893ல் இந்துக்கள் அயோத்தியில் ராமனின் ஆலயம் வேண்டி தங்கள் 400ம் ஆண்டு போராட்டத்தை பிரிட்டிஷாருடன் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சுவாமி ஆற்றிய உரை இது, இன்று அதே அமெரிக்காவில் அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கின்றது.
விவேகானந்தர் எப்படிப்பட்ட மகா தீர்க்கதரிசி, பரிசுத்தமான இந்துஞானி என்பதை உணரும் நேரம், கைகள் அவரை நோக்கி தொழுது, கண்ணீர் தானாக வடிக்கின்றது.
அயோத்தி ராமர்கோவில் துலங்கும் நேரம் விவேகானந்தரின் நினைவுகளைப் போற்றி அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரைக்காக பெருமையுடன் நன்றி சொல்ல வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமையாகின்றது.
மகா ஆச்சரியம் என்னவென்றால் ராமனின் பெருமைகளை அவர் உரைக்க அமெரிக்கா செல்ல உதவியது “ராமநாதபுர” மன்னன், ரகுநாத தொண்டைமான்.
அவர் சென்ற வழி ராமர் பாலத்தை தொட்டபடி சென்றது, அமெரிக்காவில் இருந்து சுவாமி பாரதம் திரும்பியபோது கால் வைத்த இடம் தனுஷ்கோடி.
இன்னும் தேசமெங்கும் அவர் பட்டினியாய் சுற்றியபோது, ஏ சோம்பேறி சன்னியாசியே உழைத்து சாப்பிடாமல் இப்படி பட்டினி கிடந்தால் எப்படி? தெய்வத்தை விடு உழைத்து சாப்பிடு என மேல்நாட்டவரும் இந்தியர் பலரும் அவரை மிக மோசமாக நகையாடிய போது பல ஆச்சரியங்கள் அவருக்கு நிகழ்ந்தன.
யாரோ ஒருவர் வந்து உணவு கொடுப்பார், காசு கொடுப்பார், கனவில் ராமன் வந்து உங்களை ஆதரிக்கச் சொன்னார் எனச் சொல்லியபடி பணிவார்கள்.
ஆளில்லா ரயில் நிலையம், காசு இல்லாத சந்தைகள், இரக்கம் இல்லா மேல்தட்டு மக்களின் நடுவில் இப்படி ராமனால் அவர் ஆச்சரியமாக வழி நடத்தபட்ட சம்பவம் உண்டு.
அது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடந்தது.
ஆக சுவாமி விவேகானந்தர் ராமனின் பரிபூரண அருள்பெற்று அவரின் சீடராகத்தான் இந்த பெரும் காரியத்தை அன்றே செய்தார் என்பதற்கு இன்னும் சான்றுகள் அவசியமோ?
அது ராமனோடு ஒரு காலத்தில் வாழ்ந்த ஆத்மா, மகாஞான ஆத்மா. அது நம் காலத்தில் விவேகானந்தராய் வந்த இந்து ஞானவழிகளை போதித்து சென்றது, காரிருளில் விடிவெள்ளியாய் நம்பிக்கை கொடுத்துவிட்டுச் சென்றது.
ராமர் ஆலய திறப்பு கொண்டாட்டத்துக்கு தயாராகும் நேரம், இந்த ஞான ஆத்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கித்தான் தொடங்க வேண்டும்.
அந்தக் கால்கள் இந்தியாவுக்குள் மட்டுமல்ல, உலகெல்லாம் இந்துமதத்தை விதைத்து வைக்க தேய தேய நடந்த கால்கள், தேய்ந்தே போன கால்கள்.
அந்த கால்கள் பூமியில் பட்ட முதல் அவதார தினத்தில் அவரை வணங்கி தேசம் கம்பீரமாகச் சொல்கின்றது.
“ஜய் ஸ்ரீராம், ஜய் ஸ்ரீராம், ஜய் ஸ்ரீராம்”
“ராமபிரான் வாழ்க, சீதாபிராட்டி வாழ்க, அனுமன் வாழ்க..
அவர்களோடு எங்கள் ஞானவீரனும் வாழ்க”