விஷம கண்ணனே.. வாடா.. வா..

எவ்வளவு அவதாரங்கள்,மகான்கள் , கடவுளின் அம்சங்கள் இந்த உலகில் வந்து சென்றாலும் பகவான் கண்ணனின் சிறப்பே தனி

கடும் துயரிலும் பிரிவிலும் ஆபத்திலும் தொடங்கிய அவன் வாழ்வு கடைசி வரை ஆபத்தும் சோகமாகவே சென்று சோகமாகவே முடிந்தது, ஆனால் தன்னை உருக்கி ஒளிகொடுக்கும் மெழுகு போல, தன்னை வருத்தி மழைதரும் மேகம் போல அவன் தன்னை நம்பியவரை எல்லாம் காத்தான்

கம்சனின் மிரட்டலில் தொடங்கிய அவன் போராட்ட வாழ்வு காந்தாரியின் சாபத்தில்தான் கண்ணீரோடு முடிந்தது

அந்த சாபம் தன்னை நம்பிய பாண்டவருக்காக‌ அவன் வலிய வாங்கிய சாபம்.

அவன் தனிபட்ட வாழ்வெல்லாம் சோகம், பிரிவு, விரக்தி. ஆயினும் தன் புன்னகையால் அவற்றை எல்லாம் கடந்தான்

சோகங்களையும் ஆபத்துக்களையும் விளையாட்டாக சிரித்து கொண்டே கடந்த அவனை போல இனி ஒரு அவதாரம் வராது

பிறக்கும் பொழுதே ஆபத்து, வளரும் பொழுதும் ஆபத்து, நொடிக்கொரு பூதம், நாளுக்கொரு அரக்கன். ஆயினும் அவன் வெற்றிபெற்று வளர்ந்தான்

மாடுமேய்க்க சென்றால் அங்கும் சிக்கல், குளிக்க சென்றாலும் சிக்கல், அட எங்கு சென்றாலும் அவனுக்கென சில கூட்டம் வந்து அழிக்க பார்த்தது அதையும் கடந்தான்

கம்சனை கொன்றாலும் மதுராவில் அவன் வாழமுடியவில்லை, ஆயர்பாடியிலும் அவனுக்கு நிலையில்லை

பால்காரன் என்றும், மாடுமேய்க்கும் எளியவன் என்றும் எத்தனையோ இடங்களில் அவன் விரட்டபட்டிருக்கின்றான்

அவன் விரும்பிய எதுவும் அவனுக்கு கிடைக்கா வெறுப்பில் துவாரகையினை அவன் விரும்பியபடி அமைத்தான் அங்கும் அவனுக்கு நிம்மதியில்லை

ஆம் அவன் வாழ்வினை புரட்டுங்கள், எவ்வளவோ சாகசமும் தந்திரமும் இன்னும் மகா அற்புத வீரங்களை எல்லாம் காட்டினாலும் அவன் வாழ்வு அவன் விரும்பியபடி அமைதியாக இல்லவே இல்லை.

அந்த எளிய அவதாரம் எல்லா மானிடரும் படிக்க வேண்டிய விஷயம், அவனின் கீதை ஒவ்வொரு ஆத்மாவும் அறிய வேண்டிய தத்துவம்

கண்ணனின் வாழ்வு சுருக்கமாக சொல்லும் தத்துவங்கள் இவையே

எல்லா மனிதன் எவ்வளவு நல்லவனாயினும் இந்த சுயநல உலகில் சிலருக்கு கெட்டவனாகவே தெரிவான், அவனை விரும்பாத சிலரும் இருந்தே தீருவார்கள் இது விதி

அந்த விதிக்கு யாரும் தப்பமுடியாது எனினும் கடவுளின் அனுக்கிரகமும் நியாயமும் தர்மமும் உள்ளவனுக்கு வெற்றி கிடைத்தே தீரும்

ஒவ்வொரு பகைவனும் உன்னை தர்ம நெறியில் கடவுள் பக்கம் திருப்ப வந்தவன், அதாவது உனக்கு மறைமுகமாக உதவுபவன்

பகைவனே பூலோக வெற்றிக்கும், ஒரு மனிதன் கடவுள்பால் திரும்பவும் முதற்காரணம், அதனால் பகைவனோடு போராடு அவனை வெறுக்காதே.

பகைவன் என்பவன் கடவுளின் கொடிய‌ தூதனன்றி வேறல்ல..

நிழலின் அருமை வெயிலில் களைத்தால்தான் தெரியும், நீரின் அருமை தாகத்தால் வாடினால்தான் தெரியும். சோதனைகளை தாங்காமல் வெற்றியின் அருமை புரியாது

மாற்றம் மாறாதது, மாற்றத்தை விரும்பாமல் வெற்றி இல்லை

நட்பினை பெருக்கு, உரிய காலம் வரை அமைதி கொள். நேரம் வரும்பொழுது விடாதே

கட்டுண்டால் பொருத்திரு, காலம் வரும் வரை காத்திரு

கெட்டவர்கள் உன்னை ஏமாற்றினால் அச்சம் கொள்ளாதே, அவர்கள் உன்னை விரட்டினால் அவர்களின் வாழ்நாளை நீட்டித்து கொடுத்து அவர்களுக்கு உதவியிருக்கின்றாய் என மன நிம்மதி கொள்

எவ்வளவு பலவீனமானவன் என்றாலும் கடவுளை தர்மத்தை நம்பினால் நீ வாழ்வாய், எவ்வளவு பலசாலி என்றாலும் பலவான்கள் துணை இருந்தாலும் அதர்மம் நிறைந்தவனாயின் அழிவாய்

கடவுள் என்றுமே தர்மத்தின் பக்கமே நிற்பார்

இந்த உலகம் ஒரு மாய மேடை, கடமையினை செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு பலன் கொடுக்கும் முடிவு கடவுளிடமே உண்டு, பலனை எதிர்பார்தது ஏதும் செய்யாதே சஞ்சலபட்டு உடைந்தே விடுவாய்

உலகில் எதற்கும் அஞ்சாதே, பொறுப்புகளையும் சுமைகளையும் கடவுளிடம் விட்டுவிட்டு உன் போக்கில் கடமையினை செய், உரிய காலத்தில் அவனே செய்ய வேண்டியதை செய்வான்

சிற்சில இழப்புகளின்றி எந்த போரிலும் வெல்லமுடியாது இது யுத்த நீதீ

பொல்லோரின் கூட்டம் கண்டு அஞ்சாதே, அது எப்பொழுதும் பலசாலிகளாலும் முரடர்களாலுமே அமைந்திருக்கும் ஆனால் ஒவ்வொரு பலசாலி பின்னாலும் ஒரு பலவீனம் இருக்கும் அதுதான் கடவுளின் விளையாட்டு

பாரத போரை இதில்தான் நடத்தினான் கண்ணன்

ஒன்றா இரண்டா அவனின் பெருமைகள், அவதாரங்களில் சிறந்தது கண்ணனின் அவதாரம்

ஒவ்வொரு இந்திய தாயும் விரும்புவதும் அவனை போன்ற குழந்தையினையே, ஒவ்வொரு பெண்ணும் விரும்புவது அவனை போன்ற கணவனையே

ஒவ்வொரு மனிதனும் விரும்புவது அவனை போன்ற நண்பனையே, ஒவ்வொரு பக்தனும் விரும்புவது அவனை போன்ற ஆபத்பாந்தவனையே

ஒவ்வொரு மன்னனும் விரும்புவது அவனை போன்ற தளபதியினையே

ஒவ்வொரு குடிமகனும் விரும்புவது அவனை போன்ற அரசனையே

அட மாடுகள் கூட விரும்புவது அவனை போன்ற மேய்ப்பனையே, புல்லாங்குழல் கூட விரும்புவது அவனை போன்ற கலைஞனையே

அன்பு, நேசம்,பாசம், காதல், நட்பு, கடமை பக்தி, புன்னகை, நம்பியோர் நலன் காத்தல், ராணுவம், உளவு , ஆட்சி, தூது என் எல்லா வகைக்கும் அவனையன்றி யாரை உதாரணம் காட்டமுடியும்?

ராமன் ஒருவகை, கண்ணன் ஒருவகை ஆயினும் உலகில் அவர்களுக்கு சமநீதி என்பார்கள்

ஆனால் ராமன் சீரியஸான பாத்திரம், கண்ணன் என்பவர் சுவாரஸ்யமான அதே நேரம் மகா நுட்ப அறிவான பாத்திரம்

ராமர் கோவில் என சொல்லும் கோஷ்டி வம்பு செய்து கொண்டே இருக்கட்டும்

ஒவ்வொரு இந்தியனும் செய்ய வேண்டியது மனதில் கண்ணனுக்கோர் ஆலயம் கட்ட வேண்டும்

கடவுள் என பார்ப்போருக்கு அவன் கடவுள், ராஜதந்திரி என பார்ப்போருக்கு அவன் ராஜதந்திரி. ஆன்மீக குரு என பார்ப்போருக்கு அவன் ராஜதந்திரி

இன்னும் ஏராளம்

இந்த உலகில் எல்லா துறை மனிதனும் உற்று நோக்கி அந்த அவதாரத்தில் ஏதும் கற்க விரும்பினால் கற்றுகொண்டே இருக்கலாம்

வரலாறு, விஞ்ஞானம், வான்வெளி, அணு சக்தி, ஆயுத உத்தி, உயிரியல் ஆயுதம், வேதியியல், மருத்துவம், யுத்தவியூகம், உளவு, ராஜதந்திரம், ஆன்மீகம் ,உளவியல் என எல்லாவற்றிற்கும் அவனிடம் பதில் உண்டு

இப்படி ஒரு அவதாரம் உலகில் எங்கும் இதுவரை இல்லை, இனி வரவும் வாரா

அந்த மாய கண்ணனை, அழுவதற்கே பிறந்து கடைசிவரை தன் சோகத்தை தன்னில் புதைத்து தன்னை நம்பியவரை எல்லாம் காத்து, சென்ற இடமெல்லாம் தர்மத்தை நிலைநாட்டி.

மாபெரும் போதனையினை கொடுத்துவிட்டு இறுதிவரை தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்த அந்த அற்புத பிறப்பான, இத்தேசத்தின் நம்பர் 1 அடையாளமான கண்ணனை குட்டி கண்ணனாக வரவேற்க தேசம் தயாராகின்றது

“விஷம கண்ணனே.. வாடா.. வா..”