மயில் விருத்தம் : 05
“சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
நயதுல்ய சோம வதன
துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
யாவுங் கொடுஞ்சி றகினால்
அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியா குலன்சங் குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே”
முதல் வரி இப்படி வருகின்றது
“சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
நயதுல்ய சோம வதன”
இவ்வரி “சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபி நய துல்ய சோம வதன” என பிரிந்து பொருள் தரும்
அதாவது ஒளிரூபமாய் (சோதி) இமயமலையில் (இம வேதண்ட) தோழியற் பாதுகாத்து வந்த மிகுதியான
அலங்காரம் கொண்டவளும் (அபிநய), பரிசுத்தமானவளும் (துல்ய) , சந்திரன் போல் குளிந்த ஒளி கொண்டவளுமான (சோம வதன) என பொருள்
இரண்டாம் வரி இதோ
“துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்”
இவ்வரி “துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர்” என பிரிந்து வரும்
அதாவது சிறந்த (துங்க) சூலாயுதம் ஏந்திய (த்ரிசூலதரி), எலும்பு மாலை அணிந்த (கங்காளி), சிவனை நேசிக்கும் சுந்தரி (சிவகாம சுந்தரி) உருவாக்கிய (பயந்த) ஒரே வரிசை கொண்டதுமான (நிரைசேர்)
இனி மூன்றாம் வரி
“ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
யாவுங் கொடுஞ்சி றகினால்”
இவ்வரி “ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவும் கொடும் சிறகினால்” என பிரிந்து வரும்
அதாவது பழமையானதும் நீண்டதுமான (ஆதி நெடு), மிகபெரிய பிரபஞ்சங்களையெல்லாம் (மூதண்ட அண்டம்), அவற்றை கடந்த அண்டங்களை எல்லாம் (பகிரண்டம் யாவும்) தன் பலமான சிறகினால் (கொடும் சிறகினால்) என பொருள்
நான்காம் வரி அடுத்து வரும்
“அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்”
இவ்வரி “அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே அணைக்கும் கலாப மயிலாம்” என பிரிந்து வரும்
அதாவது ஆண்மயில் தன் பேடை மயிலின் முட்டைகளை அடைகாப்பது போல அண்டங்களை எல்லாம் பாதுகாக்கும் மயில் என பொருள்.
ஐந்தாம் வரி இதோ
“நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்”
இவ்வரி “நீதிமறை ஓதும் அண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம்” என பிரிந்து பொருள் தரும்
அதாவது தர்மங்களை கொண்ட வேதங்கள் (நீதிமறை) ஓதும் அண்டத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் துத்து வணங்கும் (பரவும்) மலையாகிய (கிரி)என பொருள்
ஆறாம் வரி இதோ
“நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியா குலன்சங் குவாள்”
இவ்வரி “நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன் சங்கு வாள்” என பிரியும்
அதாவது ” நீலமலையில் பற்றற்ற கோலத்தில் நிற்கும் (நிராலம்பன்) பயமில்லாதவன் (நிர்பயன்), மானிட பாச துன்பமில்லாதவன் (நிர்வியாகுலன்) சங்கும் வாளும் கொண்ட என பொருள்
ஏழாம் வரி இதோ
மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
இவ்வரி ” மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன் மாதவன் முராரி திருமால்” என பொருள்
பெரிய சக்திமிக்க சுதர்சனம் எனும் சக்ரம் (மா திகிரி), கோதண்டம் எனும் வில் , தண்டம் எனும் கதை ஆகியவற்றை ஏந்திய மாதவனும் முராரியுமான திருமால்
இனி கடைசி வரி
“மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே”
இவ்வரி “மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன் வரமுதவு வாகை மயிலே” என பிரிந்து பொருள் தரும்
அதாவது மது மற்றும் கடைவன் என இரு அசுரர்களை ஒழித்த திருமாலுக்கும் மகாலட்சுமிக்கும் மருகனான முருகடவுளின் வரமாக நின்று உதவும் மயிலாம் என்பது பொருள்
ஆக பாடலின் நேரடி பொருள் இதுதான்
ஜோதியாய் இமய மலையின்கண் தோழியர்கள் பாதுகாத்து வந்த மிகுதியான அலங்காரம் உடையவளும் பரிசுத்தம் மிகுந்தவளும் சந்தரன் போல் தண்ணொளி வீசும் முகம் உடையவளும் சிறந்த மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தைக் கையில் கொண்டவளும் எலும்பு மாலையை அணிந்தவளும் சிவபெருமானையே எப்பொழுதும் நாடி விரும்பி இருக்கும் பார்வதி தேவி படைத்த
ஒழுங்குமுறையும் வரிசை கொண்டதுமான புராதனமானவையும் பரந்துள்ளதுமான மிகப் பெரிய பிரபஞ்ச படைப்புகளான உலகங்கள் எல்லாமும் வெளி உலகங்கள் யாவையும் வளைந்த தனது சிறகினால் ஒரு ஆண் மயில் தனது பேடை மயிலின் முட்டைகளைக் காப்பது போல், அகில பிரபஞ்களையும் பாதுகாக்கும் மயில்
(அது யாருடையது என வினாவினால்)
பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள் வர்ணிக்கும், வெளி உலகங்களில் வாழும், 33 கோடி தேவர்களும் துதித்து வணங்கும் மலையாகிய திருத்தணியில் வாழும் வேலாயுதக் கடவுள் தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன் பயமில்லாதவன், மனத் துன்பம் இல்லாதவன்
பாஞ்ச சனியம் எனும் சங்கு நாந்தகம் எனும் வாள் பெருமை மிக்க சுதர்சனம் எனும் சக்ரம் சாரகங்கம் எனும் வில், கெளமேதகம் எனும் கதை ஆகியவைகளை ஏந்தியுள்ள புயங்களை உடையவனும் மாதவனும் முராரியும் திருமாலும் மது கைடவன் என்ற இரு அசுரர்களை அழித்தவனாகிய திருமாலினுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகன், முருகவேள் குமரக் கடவுளின் வரம் அருளும் மயிலே அது
இப்படி நேரடியாக பொருள் சொன்னாலும் இந்த பாடல் பெரும் மறைபொருளை போதிக்கின்றது
புராணம் இந்த பேரண்டத்தை ஒரு முட்டையாக கருதுகின்றது, அதனை பிரம்மனின் முட்டை என்கின்றது, ஆதிபராசக்தியின் அருளில் பிரம்மன் அந்த பேரண்டத்தை படைத்தான் என்கின்றது புராணம்
இந்த பேரண்டத்தை காக்கும் மயில் என இங்கு சூசகமாக சொல்லபடுவது பரமாத்மா, இந்த பாடலில் பிரம்மனையும் திருமாலையும் சொல்லிவிட்டு சிவபெருமானை சொல்லாமல் அருணகிரிநாதர் விடும் சூட்சுமம் இதுதான்
அந்த பரமாத்மாவினை இங்கு மயிலாக கொள்ள வேண்டும்
ஜீவாத்மா பரமாத்மாவில் இருந்து பிரிவது, முருக வழிபாட்டில் மயில் ஆன்ம தத்துவமாக சொல்லபடுகின்றது
இப்பாடலில் முட்டையினை அடைகாக்கும் மயில் போல அண்டத்தை காக்கும் மயில் என சொல்வது பரமாத்மாவினையே
ஆம், ஜீவாத்மா மட்டுமல்ல பரமாத்மாவே முருகனுக்கு கட்டுபட்டவர், உலகை காக்கும் அந்த பரமாத்மா முருகனை வேண்டினால் அருள்புரிய தயாராக இருக்கின்றார், அந்த பரமாத்மாவே முருகனை சுமந்து கொண்டாடுகின்றது, முருகபெருமானின் அருளான ஞானம் பரமாத்மா வழியாக எல்லா ஆத்மாக்களுக்கும் கிடைக்கின்றது என்பது பாடலின் மறைமுக பொருளாகும்
அருமையான விளக்கம்… ஆன்மீக பதிவு என்றாலே உங்கள் பதிவை போல் வேறு யார் பதிவும் இருப்பது இல்லை. அந்த குமர கடவுளின் ஆசியால் இன்னும் பல தெய்வீக படைப்புக்களை மக்களுக்கு எடுத்து கூறிவீர்கள்