நாச்சியார் திருமொழி : 1.6

வழமை போல சிறுமியர் அன்றும் மணல் வீடு கட்டிகொண்டிருந்தனர், ஆனால் திடீரென எழும் காற்றும் இடையறா இதர இடைஞ்சல்களும் அந்த மணல் வீட்டை அழித்துகொண்டே இருந்தன‌

திடீரென காற்று எழுவதும்,எங்கிருந்தோ வரும் மாட்டு மந்தைகள் அதனை காலால் மிதிப்பதுமாக அவை அழிந்துகொண்டிருந்தன, மறுமறுபடி அதனை திரும்ப கட்டி களைத்துவிட்ட சிறுமியர் ஆண்டாளிடம் வந்து முறையிட்டார்கள்

ஆண்டாளுக்கு எப்பொழுதும் கண்ணன் நினைவு, அது அன்றி அவள் சிந்திப்பது வேறு அல்ல.அந்த கண்ணனின் நினைவில் வாழ்ந்துகொண்டே இருந்தவள், அந்த மணல் வீடுகளை இடிப்பது என சொல்லி அவனை நோக்கி பாட சொன்னாள், அவளே பாடி தொடங்கினாள்

“முற்று இலாத பிள்ளைகளோம்
முலை போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ
சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம், கடலை அடைத்து
அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
சேவகா! எம்மை வாதியேல்”

(அதாவது முதுமை அடையாத சிறு பிள்ளைகள் நாங்கள். எங்கள் முலைகளும் முழுதாக வளர்ச்சி அடையவில்லை. நாங்கள் நாள்தோறும் சிற்றில் கட்டி வருகிறோம். நீயும் தினமும் வந்து அதனைச் சிதைத்து, சேட்டை செய்கிறாய். எங்களுக்கு எதுவும் தெரியாது. அறியாத பிள்ளைகள் நாங்கள். நீயோ எல்லாம் அறிந்தவன். முன்பொரு காலத்தில், பிரட்டிக்காக, கடலில் அணை கட்டி, அரக்கர் குலத்தை முற்றிலுமாக அழித்து, இலங்கையையும் தீக்கிரையாக்கிய பெரியோன் நீ. எங்களை இனிமேலும் துன்பப்படுத்த வேண்டாம் என்பது பொருள்)

பாடலை எல்லோரும் பாடினார்கள், அதன் பின் மணல் வீடு சிதையவில்லை, சிறுமிகளுக்கு மகிழ்ச்சி கூடி உற்சாகமாய் விளையாடினார்கள், ஆண்டாள் அந்த மணல் வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள்

கண்ணா.. என சொல்லி அந்த மணல் வீட்டையே நோக்கி கொண்டிருந்தவளுக்கு அந்த வீடு ஒரு கடற்கரையில் தெரிய ஆரம்பித்தது, சுகமான காற்றும் அழகான அலைகளும் இதமான காலை வெயிலுமாக அந்த கடல் அழகாக அவளுக்கு தெரிந்தது

அந்த கடலையே பார்த்து கொண்டிருந்தாள் ஆண்டாள். அந்த கடலில் இருந்து நீல நிற உருவம் ஒன்று மெல்ல எழுந்து வந்தது, வருபவன் கண்ணன் என உணர்ந்த ஆண்டாள் விழிமாற்றாமல் அவனையே நோக்கி கொண்டிருந்தாள் அவள் கண்களில் ஏக்கமும் காதலும் மகிழ்ச்சியும் மின்னிற்று

நீல நிறமேனியும் கையில் குழலுமாக வந்தான் கண்ணன், கடற்காற்றில் அவன் தலையில் சூடியிருந்த மயிலறகு அழகாக அசைந்தது

வந்தவன் அவள் அருகே அமர்ந்து கொண்டான், கடற்கரை மணலில் கை ஊன்றி மெல்ல திரும்பிகொண்டாள் ஆண்டாள்

“ஆண்டாளே, என்ன சிறுமிகளோடு பாடினாய்? சிறுமிகள் மேல் பாசம் அதிகமோ?” என்றான் கண்ணன்

“சிறுமிகளை விட உன் மேல் பாசம் அதிகம் கண்ணா, உன்னை வேறு எப்படி அழைப்பதாம்” என மெல்ல சொன்ன ஆண்டாள் அவன் கரங்களை பற்றி கொண்டாள்

“அடிக்கடி எங்கள் வீட்டை இடிக்காதே, இடிக்காதே என பாடினீர்கள். நான் இம்முறை இடிக்க வந்துவிட்டேன்” என சொல்லி சிரித்தான் கண்ணன்

“அதற்குத்தான் வந்தாயோ?” என்றவள் சட்டென முகத்தை சுருக்கிகொண்டாள்

“நீ அழைக்கத்தானே மணல் வீடுகளையே இடித்தேன்” என கண்ணன் சொன்னதும் அவள் முகத்தில் ஒரு மின்னல் வெட்டிமறைந்தது ஆனாலும் முகத்தை அப்படியே வைத்து கொண்டாள்

“ஆண்டாளே, என்ன பாடல் அது? உனக்காக பாடினாயா? சிறுமியர் சார்பாக பாடினாயா, ஒன்றும் புரியவில்லை” என அலுத்து கொண்டான் கண்ணன்

“நீ எல்லாம் அறிந்தவன் அல்லவா கண்ணா, நீயே கண்டுபிடி பார்க்கலாம்” என சொன்ன ஆண்டாள் கன்னத்தில் கைவைத்து அவனையே நோக்கி கொண்டிருந்தாள்

ம்ம்ம்ம் என்ற கண்ணன் “நானே சொல்ல வேண்டுமா” என்றபடி அவளை நோக்கினான்

“பின் என்ன கண்ணா? அது சாதாரண பாடல்

அந்த சிறுமியர் வயதால் சிறியவர்கள், அவர்களை பருவபெண்கள் என்றோ குழந்தைபெறுக்கு தக்கவாறு மணமுடித்து கொடுக்கும் வகையில் முலை வளர்ந்தவர்கள் என்றோ சொல்லமுடியாது

இன்னும் சொல்லபோனால் மங்கை பருவம் கூடா எட்டா பெதும்பைகள், பக்குவமில்லா விளையாட்டு சிறுமிகள். அவர்கள் கட்டும் மணல் வீட்டை நீ வந்து இடித்தால் எப்படி?

நீ யார்? ராமனாக வந்து பெரும் கடலையே கடந்து இலங்கைக்கு சென்று ராவணனின் கோட்டையினை இடித்து அரக்க கூட்டத்தையே ஒழித்தவன், அப்படிபட்ட பெரும் பராக்கிரமாசாலியான நீ இந்த சிறுமியர் மணல் வீட்டை இடித்தால் உனக்கு இழுக்கல்லவா” என்பதைதான் சொன்னேன் என்றாள்

அப்படியா என்ற கண்ணன் தன் வழமையான புன்னகையினை சிந்திவிட்டு “இல்லை ஏதோ இன்னும் இருக்கின்றது” என்றான்

இருந்தால் நீயே கண்டுபிடி என சொல்லிவிட்ட ஆண்டாள் புன்னகைத்தபடி காலை கட்டிகொண்டு அமர்ந்திருந்தாள்

கண்ணன் மெல்ல புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான், அந்த அழகான ராகம் ஆண்டாள் மனதை தீண்டியது

கண்ணன் இன்னும் சுகமாக அதே நேரம் ஆழமாக வாசிக்க தொடங்கினான், ஆண்டாளின் மனம் மெல்ல மெல்ல கரைந்தது

அவள் மனம் சொக்கி பரவசம் அடைவதை “கண்ணா..” என மெல்லிய வார்த்தையால் சொன்னாள்

கண்ணனின் புல்லாங்குழல் இன்னும் உருக்கமான ராகம் இசைக்க இசைக்க ஆண்டாள் ஏகாந்த நிலைக்கு தள்ளபட்டாள்

கண்ணன் விடாமல் இசைத்து கொண்டே இருந்தான்

ஒரு கட்டத்தில் மனமும் செவியும் சிந்தையும் நிரம்பியவள் “கண்ணா……..சொல்கின்றேன்” என கத்தி சொன்னவள் பேச தொடங்கினாள்

தந்திரகார கண்ணன் புன்னகைத்தபடி ம்ம்ம் சொல் என்றான்

கண்களில் நீர் விசும்ப, குரலிலே சோகம் ஓட, பெருமூச்சுவிட்டபடி பேசதொடங்கினாள், அவள் கன்னங்களும் மூக்கும் சிவக்க தொடங்கின, காதின் கம்மல்கள் ஆட சொல்ல தொடங்கினாள்

“கண்ணா, நானும் அந்த சிறுமியரை போலத்தானே உன் நினைவில் ஏதேதோ கற்பனையில் இருக்கின்றேன், அவர்கள் மணல் வீடு கட்டுவது போலத்தானே கட்டிகொண்டிருக்கின்றேன்

நான் பேதமையில்தான் இதையெல்லாம் செய்கின்றேன் என்பது எனக்கு தெரியாமல் இருக்க்கலாம் ஆனால் உனக்குமா தெரியாது?

நீ யார் கண்ணா? இவ்வுலகை காக்கும் பரம்பொருள், நீ காப்பாற்றிய பெண்களெல்லாம் பெரும் பெரும் சக்திவாய்ந்தவர்கள்

அப்படிபட்ட வல்லமையான சீதையினையே, அந்த வில்லையே ஒரு கையில் தூக்கிய பராக்கிரமசாலியான சீதையினையே நீ சென்று ராவணனின் கோட்டையினை அழித்து மீட்டவன்

அப்படிபட்ட நீ என் வாழ்க்கையில் ஏன் கண்ணா விளையாடுகின்றாய்?

சீதை சிறையிருந்தாள் நீ சென்று ஒரே முறை மீட்டு வந்தாய், இன்னும் கண்ணனாக வந்தபொழுது உன்னை நம்பியோரையெல்லாம் காத்தாய்

ஆனால் என்னிடம் மட்டும்தான் விளையாடுகின்றாய், நான் பக்குவமில்லா மானிட பிறவி அல்லவா அதனால் விளையாடுகின்றாய்

நான் உன் நினைவில் கற்பனையில் என்னவோ கோட்டைகளை கட்டுவேன், நீ வருவாய் என காத்திருப்பேன் நீ வருவாய் சென்றுவிடுவாய் அத்தோடு அந்த கனவுகளெல்லாம் அழியும், அத்தோடு நீ விடுவாயா?

மறுபடி வருவாய், விளையாட்டை தொடர்வாய், நான் உன்னால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லும்பொழுது ஓடிவிடுவாய்

கண்ணா தெய்வாம்சம் தாங்கிய சீதையினை கூட ஏமாற்றாமல் காத்தருளிய நீ, அற்ப மானிட பிறவியான என்னை ஏமாற்றலாமா?

நான் பக்குவமில்லாதவள், எது சரி எது தவறு என எனக்கு தெரியாது, நான் உன்மேல் கொண்ட ஆசை கூட சரியா தவறா இது சாத்தியமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

அதை கொண்டுதானே என்னிடம் விளையாடுகின்றாய், எனக்கு ஒரு அங்கீகாரம் நீ தரவுமில்லை அதே நேரம் என்னைவிட்டு விலகவுமில்லை

நான் சீதை அல்ல, நான் பாமா அல்ல, நான் உனக்காக அனுதினமும் காத்திருந்த ராதையும் கோதையும் அல்ல. நான் பக்குவமில்லாத தெளிவில்லாத ஒருத்தி என்னிடம் ஏன் விளையாடுகின்றாய் கண்ணா

உனக்கு எல்லாம் விளையாட்டாக இருக்கலாம், எனக்கு நீ வாழ்வு, என் உலகம், என் வானம், என் வாழ்வின் ஒரே அர்த்தம் நீ கண்ணா…..

இந்த சிறுமியரை பெரியோர்கள் காணும்பொழுது அவர்கள் மணல் வீட்டை காணும்பொழுது சிரித்து நகர்வதை போலத்தானே, மணல் வீடு அழியும் பொழுது கதறும் சிறுமியரை பெரியோர் சிரித்துகொண்டே ஆறுதல்படுத்துவது போலத்தானே இப்பொழுது சிரிக்கின்றாய்

எனக்கு பக்குவமில்லைதான், எனக்கு பெரும்வயது இல்லைதான் ஆனால் யானைக்கும் பசுவுக்கும் ஆறுதல் கொடுத்த நீ எனக்கொரு ஆறுதல் தரமாட்டாயா?

சீதைக்கும் எனக்கும் எட்டாதுதான், அவள் அளவு கடலை கடந்தெல்லாம் என்னை நீ மீட்க வேண்டாம், வா என்றால் வந்துவிடுவேனே கண்ணா, அதை ஏன் சொல்ல மறுக்கின்றாய்

எனக்கு தெரியும் கண்ணா நான் பக்குவமில்லா பேதை என்றுதானே விளையாடுகின்றாய், ஆடு கண்ணா ஆடு, உனக்கு என்னை ஏமாற்றி ஆடுவதுதான் பிடிக்குமென்றால் ஆடு, நான் வேறு என்னசெய்ய முடியும்? எனக்கு உன்னைவிட்டால் யார் உண்டு?”

சொல்லிவிட்டு அவன் மடியில் சரிந்து ஓ என அழுதாள்

கண்ணன் புல்லாங்குழலை இன்னொரு கைக்கு மாற்றி வல கையால் அவள் தலைகோதினான் “கண்ணா..” என பெருமூச்செடுத்து அழுதாள் ஆண்டாள்

“ஆண்டாளே காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை, உனக்கான நேரம் வரும்பொழுது நீ உண்மை அறிவாய்

சீதைக்கும், ராதைக்கும் என்ன இடம் உண்டோ அதற்கு ஈடான இடம் உனக்கும் உண்டு, என்னை நம்பியோர் யாரையும் நான் கைவிட்டதில்லை

நான் வருவேன் என நம்பிய சீதை மீண்டது போல் நீயும் இந்த மானிட சிறையில் இருந்து மீள்வாய்” என சொல்லி அவள் கரம்பற்றினான்

கண்ணீரை துடைத்து எழுந்த ஆண்டாள் மறுபடியும் அவனை கட்டி கொண்டு அழுதாள், கண்ணன் தனக்கே உரித்தான நிதானத்துடன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்

அவனின் கைகள் கொடுத்த அன்பான ஆறுதலில் மனம் நிறைந்த ஆண்டாள் கண்களை திறந்தாள், சிறுமியர் உற்சாகத்துடன் மணல்வீடு கட்டி விளையாடிகொண்டிருப்பதை கண்டாள், தூரத்தில் கோவிலில் சங்கொலி எழும் சப்தம் கேட்டது ஆண்டாளுக்குள் நிம்மதி குடிகொண்டது

( பரம்பொருளே பக்குவமில்லா ஆன்மாக்கள் ஏதேதோ இந்த உலகில் திட்டமிட்டு அது நிரந்தரம் என நம்பிகொண்டிருக்கின்றது, பூமியில் மானிடனின் திட்டமெல்லாம் மணல்வீடு கட்டிவிளையாடுவதற்கு சமம் என அவைகளுக்கு தெரியவில்லை

பெரும் கடல் கடந்து ராவணனின் வலுவான கோட்டையினை அழித்து அவன் அகங்காரத்தை ஒடுக்கி ஞானம் கொடுத்த நீ இந்த பக்குவமில்லா ஆத்மாக்களின் மணல் கோட்டையினை அழித்து எங்களுக்கு ஞானம் கொடுக்க எவ்வளவு நேரமாகும், அந்த ஞானத்தை உடனே அருள்வாய் என்பது பாடலின் ஞான போதனை)