மயில்விருத்தம் : 06

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்
ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்
கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

முதல்வரி இதோ

“சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்”

இவ்வரி “சங்கார காலம் என அரி பிரமர் வெருவுற சகல லோகமும் நடுங்க” என பிரிந்து வரும்

அதாவது இது இறுதிகாலமோ (சங்கர காலம்) என திருமாலும் பிரம்மனும் (அரி பிரம்மர்) இன்னும் எல்லா (சகல) உலகமும் அஞ்சி நடுங்க என பொருள்

இரண்டாம் வரி இதோ

“சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்”

இவ்வரி “சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும் சஞ்சலப்பட உமையுடன்” என பிரிந்து வரும்

அதாவது சூரியனும் சந்திரனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும் தேவலோக தேவர்களெல்லாம் சஞ்சலபடவும் என பொருள்

மூன்றாம் வரி இதோ இப்படி வரும்

“கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்”

இவ்வரி “கங்காளர் தனி நாடகம் செய்த போது அந்த காரம் பிறந்திட நெடும்” என பிரிந்துவரும்

அதாவது “அன்னை உமையாளுடன் எலும்பு மாலை அணிந்த (கங்காளர்) சிவன் சங்கார நடனம் செய்தகாலத்தில் உலகம் இருளடைந்தது போல (அந்த காரம்) என்பது பொருள்

நான்காம் வரி இப்படி வரும்

“ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்”

இவ்வரி “ககனகூட மும் மேலை முகடு மூடிய பசும் கற்றைக் கலாப மயிலாம்” என பொருள் தரும்

அதாவது விரிந்த மேல் உலகத்தின் உச்சியும் (நெடுங் ககன கூடமும்) வான உச்சியும் (மேலை முகடும்) மூடும்படியான தோகை கொண்ட மயிலாம்

ஐந்தாம் வரி

“சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்”

இவ்வரி “சிங்கார குங்கும படீர ம்ருக மத யுகள சித்ரப் பயோதர கிரித்” என பிரியும்

அதாவது பேரழகும் குங்கும நிற சாந்தும் கொண்ட (சிங்கார குங்கும படீர ம்ருக) புனுகும் கஸ்தூரியும் கலந்த (ம்ருக மத) இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட (யுகள சித்ரப் பயோதர கிரி) என பொருள்

ஆறாம் வரி இதோ

“தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்”

இவ்வரி “தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன் திருத்தணி மகீரதன் இருங்” என பிரிந்து வரும்

அதாவது தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் (தெய்வ வாரண வனிதை) வளர்க்கப்பட்ட தேவயானையின் மணவாளனாகிய (புனிதன்) மணவாளனாகிய குமரன் திருத்தணி மலையில் வாழ்பவன் என பொருள்

ஏழாம் வரி இதோ

“கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்”

இவ்வரி “கெங்காதரன் கீதம் ஆகிய சுராலயன் க்ருபாகரன் கார்த்திகேயன் இரும் கங்காதரன் “என பிரியும்

அதாவது பெரிய கங்கையில் பொறியாக மிதந்தவன் ஏழு ஸ்வரங்களுக்கும் இருப்பிடமானவன் (கீதமாகிய சுராலயன்) கருணை கடலோன் (கிருபாகரன்) கார்த்திகை பெண்களின் புதல்வன் (கார்த்திகேயன்) என்பது பொருள்

கடைசி வரி இதோ “கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே”

இவ்வரி “கீர்த்தி மா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி கிழி பட நடாவு மயிலே.” என பிரிந்து வரும்

அதாவது வலிமை மிக்க சூரர்கள் அழியவும் கிரவுஞ்சமலை பிளபடவும் போருக்கு முருகபெருமான் ஏறிவந்த மயிலே அது என பொருள்

ஆக பாடலின் பொருள் இதுதான்

நான்கு யுகங்களின் முடிவில் எல்லாம் அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று, திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும், எல்லா உலகங்களும் அச்சப்படவும், சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும்

இந்தராதி அமரர்கள் குழப்பமடையவும், உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த சிவனார், ஒப்பற்ற சர்வ சங்கார நடனம் செய்த சமயம், பிரளய இருள் மூடி இருந்தது போல், விரிந்த மேல் உலகத்தின் உச்சியும், வானத்தின் உச்சியும் மறையும்படி செய்த பெரிய பசுமையான‌ தோகையை உடைய மயில்

(அது யாருடையது என வினாவினால்)

பேரழகுடைய, குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும், கஸ்தூரியையும் புனைந்த, இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட, தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின், மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான, குமரக் கடவுள்,

திருத்தணி மலையில் வாழ்பவன், பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக ஏந்தப்பட்டவன், இசைக்கு ஆதாரமான ஏழு சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன், கருணைக் கடல், கிருத்திகை மாதர்களின் புதல்வன், வலிமை மிக்க சூரபத்மாதிகள் மடியவும், கிரவுஞ்ச மலை பிளவுபடவும், போர்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த மயிலே தான் அது.

இப்படி நேரடியாக பொருள் சொன்னாலும் இந்த பாடலின் சூட்சும போதனை கொஞ்சம் ஆழமானது

இந்த பாடல் அந்திம காலத்தில் சிக்கும் ஒருவனின் நிலமையினை சொல்வது, அந்திம நொடியில் அவன் கலங்குவதை சொல்வது

பிரம்மனும் திருமாலும் நடுங்குவார்கள் என்பது மானிட உடலில் தலையினை பிரம்மன் இருக்கும் இடமாகவும் மார்பினை திருமால் இருக்கும் இடமாகவும் சொல்வது உண்டல்லவா? அப்படி நினைவு மயங்கி இதயதுடிப்பு எகிர்வதை சொல்வது

சூரிய சந்திரர் ஒளிந்துகொள்கின்றார்கள் என்பது சூரிய நாடி சந்திரநாடி எனும் மூச்சு நிற்கும் அந்த தருணம்

தேவலோக தேவர்களெல்லாம் அஞ்சுவது என்பது இந்த சுகமான உலகைவிட்டு நீங்கும் பொழுது எழும் ஆத்ம வலி

பார்வதியோடு சிவன் நடனம் செய்தார் என்பது சிவசக்தி தத்துவத்தில் உருவான இந்த உடல் நடுங்கி குலுங்கி மரணத்தை நெருங்குவது

அதாவது ஆத்மா பிரியும் தருணம்

அந்த ஆத்மா தெய்வானையின் கணவனும் திருதணியில் வாழ்பவனும், கங்கையில் தீபொறியாய் மிதந்தவனும், ஏழு ஸ்வரங்களில் இருப்பவனும், கார்த்திகை பெண்களால் வளர்க்கபட்டவனுமானவும் சூரனை அழித்து கிரவுஞ்ச மலையினை உடைத்த முருகபெருமானால் விடுதலை அடைகின்றது, முருகபெருமான் அதன் தடைகளையெல்லாம் நீக்கி முக்தி அளிக்கின்றான் என்பது சூட்சும பொருள்

இங்கு ஏழு ஸ்வரம் என்பது உடலின் ஏழு சக்கரங்களை குறிப்பது, அந்த சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் முருகபெருமான் சக்தியாய் குடிகொண்டிருக்கின்றார் என்பது

சூரனை அழித்து கிரவுஞ்ச மலையினை தகர்த்தார் என்பது மாயையில் இருந்து ஆத்மாவினை முருகன் மீட்டான் என்பதை குறிக்கின்றது

ஆக பாடல் சொல்லும் மறைமுக பொருள் , ஞான தத்துவம் இதுதான்

முருகபெருமான் உடலின் ஆதார சக்கரங்களில் சக்தியாய் நிற்கின்றான், தவத்தின் பலனாய் யோகத்தின் பலனாய் அவன் அருள் பெறலாம்

அவன் அருள் பெற்ற ஆத்மா அந்திம காலத்தில் கலங்குவதில்லை, மார்பு அடைத்து நினைவு தப்பி மூச்சு அடங்கும் நேரம், சிந்தை கலங்கும் நேரமும் அது கலங்குவதில்லை

சுகங்கள் நிரம்பிய உலகையும் உடலையும் விட்டு நீங்கும் பொழுதும் அது அச்சமுறுவதில்லை

மாயைகளில் இருந்தும் அதன் மலைபோன்ற கட்டுகளில் இருந்து முருகபெருமானின் அருளால் அந்த ஆத்மா வெளியேறி முக்தி அடைகின்றது, மறுபடியும் பிறக்கவோ பிறவி சுழலில் அகபடாதபடியோ அல்லாமல் அது முருகபெருமானை சுமந்து முக்தி அடைகின்றது என்பது பொருள்