“நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்
மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது
இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான். ‘குழந்தை, மனிதனின் தந்தை.’ குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?
ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான்.
அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.
இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான்.
அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது,
மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்”
– சுவாமி விவேகானந்தரின் முழக்கத்தின் ஒரு பகுதி