ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 01
“தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம்”
இக்குறம் “தேறித் தெளினின் சிவமென்றே உள்ளுணர்வில் கூறிய பல் குணமுமாம்” என பிரியும்
யோகத்தில் மனம் ஒடுங்கி அந்த உள்ளுணர்வினை நன்றாக ஆராய்ந்து தெளிந்தால், ஓங்காரம் எனும் ஓம் எனும் பிரணவத்தில் நின்று புத்தியால் மனதை தெளியவைத்தால் ஞானிக்குரிய பலவகை குணங்களை பெறமுடியும் என்பது பொருள்
“தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி” என தன் அகவலில் அவ்வை பாடுவது இதைத்தான்
திருமந்திரம் பின்வரும் பாடலில் இதனை சொல்கின்றது
“உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாருங் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்த நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தி லிட்டதோர் பந்தருள் ளானே.”