ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 08

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 08

“மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண் டங்காதி நிலை”

இக்குறள் “மயிர் முனையில் பாதி மனத்து அறிவு உண்டேல் அயிர்ப்பு உண்டு அங்கு ஆதி நிலை” என பிரிந்து பொருள் தரும்

அதாவது மயிர் முனையிலும் பாதி அளவு புள்ளியில் மனதை செலுத்தி அறிவை குவித்து தியானித்தால் அங்கு ஆதியான சிவன் நிலைகொண்டிருப்பார் என்பது பொருள்

மனதை ஒரு புள்ளியில் குவிப்பது, புலன்களை சிந்தைகளை ஒரு புள்ளியில் குவிப்பது யோகம் எனும் தியானம்

அந்த தியானத்தை மிக நுணுக்கமாக அதாவது மனம் என்பது மயிர் முனையில் பாதிளவு எனும் படி மிக மிக நுணுக்கமான புள்ளியில் அடங்கும்பொழுது அங்கு சிவன் எழுவார் என்கின்றார் ஒளவையார்

மயிர் முனையினை காண்பதும் அதில் பாதி என்பதும் வெகு சிரமமான காரியம் அல்லவா? அப்படியானால் இது சாத்தியமா என்றால் சாத்தியம்

ஆம், பரந்துவிரிந்த மனதின் ஆசையினை எண்ணற்ற எல்லையினை சுருக்கி மயிரின் முனை அளவு சுருக்கி ஒரு சூனிய நிலைக்கு கொண்டு செல்லுவதே ஒளவை சொல்லும் போதனை, மிக சூட்சுமமான தியான ஞான போதனை