இதற்குத்தான் ஆசைபடுகின்றாரோ ஸ்டாலின் ?
திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என கூறும் பாஜக தலைவர்களை பாஜகவை வைரவிழாவுக்கு எப்படி அழைப்பது? : மு.க.ஸ்டாலின்
திமுகவினை ஒழிப்போம் என சொல்லியடித்து, கட்சியினையே உடைத்த இந்திராவுடன் கூட்டணி வைக்கவில்லையா?
மதவாதம், பண்டார கூட்டம் என அழைத்துவிட்டு பின் வாஜ்பாயின் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா?
ஓட அடிப்பதும், தேவைபட்டால் அழைத்து அணைத்துகொள்வதுமே திமுகவின் அரசியல், அது அப்படித்தான் , அதுதான் அரசியல்
திமுகவினை 1960களிலும், மிசா காலத்திலும் ஓட அடித்த, பின்னும் ராஜிவ் காலத்தில் திமுக அரசு டிஸ்மிஸ் வரை சென்ற காங்கிரசுடன் கூட்டனி வைப்பார்களாம்
காங்கிரஸ் திமுகவிற்கு செய்த அட்டகாசங்களில் 100ல் ஒரு பங்கு கூட செய்யாத பாஜகவினை அழைக்க மாட்டார்களாம்
இப்படியா செய்வார்கள்..
அதிமுகவும், திமுகவும் கூட்டணியில் நிரந்தரமானவை அல்ல, அதிமுகவிற்கு கொள்கையே கிடையாது,திமுக தன் கொள்கை மாறாமல் அரசியல் செய்யும், கூட்டணி தயக்கம் அதற்கு இருந்ததே இல்லை
டெல்லியில் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அதிமுக திமுக அரசையும், திமுக அதிமுக அரசையும் கலைக்க வைத்து தேர்தலை எதிர்கொள்ளும்
கலைஞர் அப்படி நீக்கவும் வைத்தார், நீக்கவும் பட்டார். இதுதான் தமிழக அரசியல் கடந்து வந்த பாதை.
திமுகவின் இன்றைய தேவை , அதிமுக அரசு கலைந்து தேர்தல் வரவேண்டியது, அப்படி நடந்துவிட்டால் நிச்சயம் திமுகதான் அரியணை ஏறும்.
அதுதான் அவசியமே அன்றி இப்போதைய தேவை வேறல்ல..
கலைஞராக இருந்தால் இப்பொழுது அழகாக ஆடி, ஆட்சியினை கவிழ்த்து தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு அநாசயமாக வருவார்,அதற்கு பாஜகவினை அனுசரித்து போவது ஒன்றும் தவறில்லை
மிசாவில் போட்டு அடித்த காங்கிரசுடனே சேர்ந்த திமுக, பிஜேபியினை சேர்த்தால் கொள்கை என்னாவது? மரியாதை என்னாவது என யோசிப்பது மகா விசித்திரம்
காற்றுள்ள போதே தூற்றிகொண்டு, பருவத்தே பயிர்செய்தவர் கலைஞர், வாய்புகளை அவர் தவறவிட்டதில்லை
தமிழக பாஜகவினர் பெரும் காமெடி ரகம், அவர்கள் திராவிட கழகங்களை ஒழிப்போம் என்றதால் இவர் அஞ்சுகின்றாராம்
அவர்களா? அவர்களிடம் சென்று காதில் டிரம்ப் உங்கள் கட்சி பற்றி ஏதோ சொன்னாராமே, வடகொரிய அதிபர் கூட சிரித்தாரம் என்றால் உடனே அமெரிக்காவினை ஒழிப்போம் , டிரம்பினை முடிப்போம் என கிளம்புவார்கள், அதனால் அவர்கள் அமெரிக்காவினை அழித்துவிடுவார்களா?
அவர்களை எல்லாம் பொருட்டாக நினைத்து இவர் சீரியசாக பேசிகொண்டிருக்கின்றார்
அது இருக்கட்டும், அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும், சமரசம் இல்லாமல் அரசியல் இல்லை, அங்கிள் சீமான் கட்சி போலத்தான் நடத்தமுடியும்
ஸ்டாலின் அதற்குத்தான் ஆசைபடுகின்றாரோ என்னமோ?
முன்பே சொன்னதுதான் ராஜராஜசோழனின் மகன் அவனை விட 10 அடி பாய்ந்தான், கலைஞருக்கு அந்த கொடுப்பினை எல்லாம் இல்லை