மயில் எப்படி கர்ப்பம் ஆகிறது, ராஜஸ்தான் நீதிபதி புதுவிளக்கம்

மயில் எப்படி கர்ப்பம் ஆகிறது, ராஜஸ்தான் நீதிபதி புதுவிளக்கம்
அதாகாபட்டது பசுவினை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமாம், தேசிய பறவையான மயில் பிரம்மசரிய விரதம் கடைபிடிக்குமாம் அதனால் தேசிய பறவை ஆயிற்றாம், அது இயற்கை முறையில் உறவு கொள்ளாதாம், அதனால் கிருஷ்ணன் தலையில் மயில்முடி வைத்திருந்தாராம்
அன்னாரின் ஆராய்ச்சி இப்படி போகின்றது
எப்பொழுது பிரம்மச்சாரி மயிலின் இறகினை, லீலைகளின் கண்ணன் வைத்ததாக சொன்னாரோ அப்பொழுதே அன்னாரின் உளறல் தெரிந்தது, கண்ணனுக்கும் பிரம்மசரியத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஆர்எஸ்எஸ்க்கும் குரானுக்கும் என்ன சம்பந்தமோ அப்படியே
இப்படிபட்ட அறிவார்ந்த கருத்துக்களை ஒரு நீதிபதி வைப்பதுதான் கொடுமை, ராஜஸ்தான் மக்களை நினைத்தாலே பரிதாபமாக இருக்கின்றது
ஆண்மயில் தோகை விரிப்பதும், அதனை கண்ட பெண்மயில் மயங்குவதும் இயற்கை படைப்பில் ஒன்று, அந்த ஆனந்த தாண்டவமே அற்புத அழகு
இன்னும் இந்த மகேஷ் சர்மா எனும் நீதிபதியின் ஆராய்ச்சி தேசிய மலரான தாமரை எப்படி மலர்கின்றது என்பது நோக்கி செல்லலாம், எவ்வளவு பொறுப்பான நீதிபணி?
பிரம்மச்சாரி எனும் அடையாளமா தேசிய அடையாளம் ஆக முடியும்?
மயில் பிரம்மச்சாரி அதனால் தேசியபறவை என்பவருக்கு, பசுமாடு எப்படி கர்ப்பம் ஆகும் என தெரியாதா? ஊசிபோட்டு கர்ப்பமாகும் மாட்டின் நிலை என்ன?
அல்லது ஒரு மாட்டை கண்டிப்பாக ஒரு காளையுடனா வாழ்நாள் முழுதும் சேர்க்கின்றார்கள்?
இதனை நினைத்தாலே தலை சுற்றுகின்றது, “அந்த” அடையாளத்தையா பசு மூலம் தேசிய சின்னம் ஆக்க வேண்டும்?
மண்புழு ஒன்றுதான் தன் உடலில் இருந்து தானே பெருகும் என்பார்கள், அப்படியானால் அதுதான் இனி தேசிய புழுவாக ஆகமுடியும்
பல்லிவால் உடைந்தால் தானே வளருமாம் அதனால் அது தேசிய ஆக முடியும்
இன்னும் என்னென்ன புது தேசிய அடையாளங்கள் உருவாகபோகின்றதோ தெரியவில்லை, அதுவும் நீதிமன்றங்களிலிருந்து இம்மாதிரி அடையாளம் உருவாவதுதான் கொடுமை
அடிக்கடி எதனை எல்லாமோ கண்டித்து போராடும் வழக்கறிஞர்களுக்கு இந்த அபத்தமெல்லாம் தெரியாது போல
பெரியார் ஒரு காலத்தில் சொன்னதுதான் “இந்த வடக்க உள்ள பயலுக எல்லாம் இல்லாத கட்டுகதை எல்லாம் சொல்லி பேசுவானுக, அர்த்தமே இல்லாம சட்டம், கட்டுபாடுன்னு சொல்வானுக
அவனுக கூட சேர்ந்து வாழ்றது கஷ்டமான காரியமுங்க, முடியாதுங்க, அறிவுள்ளவன் அவனுக கூட வாழமுடியாதுங்க அதுனாலதாங்க தனி நாடு கேட்கவேண்டியதா இருக்கு”
நீதிபதி மகேஷ்சர்மா பெரியாரின் அந்த வரிகளை நினைவுபடுத்துகின்றார்
மகேஷ் சர்மா என்பதே சர்ச்சை பெயரோ?, மோடி அரசிலும் அமைச்சர் மகேஷ் சர்மா உண்டு, கடுமையாக உளறியவர் இப்பொழுது கொஞ்சம் அடக்கம், அதற்குள் இந்த மகேஷ் சர்மா வந்துவிட்டார்,
இனி அடுத்த மகேஷ் சர்மா எப்பொழுது வருவாரோ?? அவர் எந்த கர்ப்ப ஆராய்ச்சியுடன் வருவாரோ தெரியாது
நம் தலையெழுத்து இவற்றை எல்லாம் சகித்துகொள்ள வேண்டும், வட இந்தியாவிலும் பல சீமான்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இந்த நீதிபதி கர்ப்ப விஷயங்கள் குறித்து பாஜக மருத்துவர்களுடன் விவாதித்துவிட்டு பேசினால் என்ன? அங்கு மருத்துவருக்கா பஞ்சம்?
தமிழிசை கூட மருத்துவர்தான்
பள்ளி சிறுவர்கள்தான் மயில் இறகு குட்டிபோடும் என நம்புவார்கள், இந்த நீதிபதி அந்த நினைப்பிலே இருக்கலாம், அவ்வளவுதான் படித்திருக்கலாம்
போலி டாக்டர், போலி வக்கீல் வரிசையில் நீதிபதிகளிலும் போலி நீதிபதிகள் இருக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது